Published : 14 Dec 2019 01:34 PM
Last Updated : 14 Dec 2019 01:34 PM

வாஷ்பேசின் அமைக்கும் முன்…

ஜி.எஸ்.எஸ்.

குளியலறை என்பது அந்தக் காலத்தில் முக்கியத்துவம் இல்லாததாக இருந்தது. நாற்புறமும் சுவர் - ஓரத்தில் ஒரு குழாய் அவ்வளவுதான். பின்னர் ஷவர், வாஷ்பேசின் ஆகியவற்றுடன் கழிவறையும் இணைந்த டூ-ன்-ஒன் பாத்ரூமாகவும் அது மாறியபின் குளியலறைக் கட்டுமானம் என்பதற்கு முக்கியத்துவம் வந்து சேர்ந்தது.

தினமும் நாம் பயன்படுத்தும் வாஷ்பேசின் என்பது குளியலறையில் இருந்தாலும், வெளிப்புறம் இருந்தாலும் அது விருந்தினர்களாலும் பயன்படுத்தப்படுவது. எனவேன் அது அழகானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும்.

வாஷ்பேசினோடு இணைக்கப் படும் தண்ணீர் பைப்புகள், கழிவுநீர்க் குழாய்கள் ஆகியவை எந்தவிதத்தில் அமைகின்றன என்பதைப் பெரும்பாலும் கட்டுமான வல்லுநர்கள் தீர்மானிப்பார்கள். மற்றபடி எந்தவகை வாஷ்பேசின் தேவை என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டியிருக்கும். அதன் அளவு, வடிவம் போன்றவற்றைத் தீர்மானிக்கும்போது சில விஷயங்களை நாம் மனத்தில் கொள்ள வேண்டும்.

வாஷ்பேசின் நாம் தினமும் பயன்படுத்தக்கூடியது. எனவே, அது நடைமுறையில் எளிதாகப் பயன்படுத்தும் விதத்தில் இருக்க வேண்டும். வசதி ஒருபுறம் இருக்க, அதைப் பராமரிப்பதும் எளிதாக இருக்க வேண்டும். பலவித அளவுகளிலும், பலவித வடிவங்களிலும் வாஷ்பேசின்கள் கிடைக்கின்றன. என்றாலும் வாஷ்பேசின் என்பது அதைச் சுற்றியுள்ள பரப்போடு சரியான விகிதத்திலும் இருக்க வேண்டும்.

மிகச் சிறிய பாத்ரூமில் மிக பிரம்மாண்டமான வாஷ்பேசினை வைத்தால் அது பார்வைக்கு நன்றாக இருக்காது. இடத்தையும் அடைத்துக் கொள்ளும். மிகப் பெரிய பாத்ரூமில் மிகச் சிறிய வாஷ்பேசின் அமைத்தால் அது பயன்பாட்டுக்கு உகந்ததாக இருக்காது. எனவே, நாம் இதையும் மனத்தில் கொண்டுதான் வாஷ்பேசினைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

குழாயும், சிங்க்கும் அமையப்பெற்றுள்ள கோணம் சரியானதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அங்கு முகம் அல்லது கைகளைக் கழுவிக்கொண்டால் தரையிலோ சுவர்களிலோ தண்ணீர் பரவாமல் இருக்கும். மிக எளிமையான வாஷ்பேசின் என்பது சுவரில் தொங்குவதுபோல் அமையப் பெற்ற வாஷ்பேசின்தான். உலகெங்கும் காணப்படுவது இது. இதற்குக் கீழே எதையும் வைத்துக் கொள்வதற்கான ஏற்பாடு இருக்காது. தண்ணீர் செல்வதற்கான குழாய் மட்டுமே காணப்படும். சிறிய குளியலறைக்கு இது ஏற்றது. சுவரோடு ஸ்க்ரூ மூலம் இணைக்கப்படுகிறது இது.

சில சமையலறைகளில் பார்த்திருப்பீர்கள் சமையல் மேடைக்குச் சமமாக உள்ள ஒரு பகுதியில் வாஷ்பேசின் இருக்கும். ஒட்டுமொத்தமாக இவை அனைத்தும் ஒரே தொகுதியாகக் காட்சி தரும். இதேபோன்று ஒன்று குளியலறையிலும் இருக்கலாம்.

வாஷ்பேசினைச் சுற்றிலும் பிற பொருள்களை வைப்பதற்கான மேடை இருப்பதால் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். சோப்பு, கைகழுவும் திரவம், சிறு சிறு துண்டுகள் போன்றவற்றை இதில் வைத்துக் கொள்ளலாம். வாஷ்பேசினில் கீழ்ப்புறம் உள்ள பைப் கேபினெட்டுக்குள் மறைந்து விடும். எனவே, இது பார்வைக்கு உறுத்தலாக இருக்காது. ஆனால், இதன் காரணமாக கேபினெட்டுக்குள் உள்ள உட்பகுதியான பரப்பில் நாம் பயன்படுத்தும் பகுதி குறைந்து விடும்.

இரு சுவர்கள் சந்திக்குமிடத்தில் பொருத்தப்படும் வாஷ்பேசின் உண்டு. இதைக் கழிவறைகளில் அதிகம் காண முடியும். குறைவான இடத்தை அடைத்துக் கொள்கிறது என்பதுதான் இதன் ஒரே நோக்கம். வாஷ்பேசின் என்பது பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதுடன் அடிக்கடி பயன்படுத்துவதால் பாதிப்பு வராததாகவும் இருக்க வேண்டும். பெரும்பாலும் பீங்கானில்தான் வாஷ்பேசின் அமைகிறது. பீங்கான் துருப்பிடிப்பதில்லை. அதில் கீறல்கள் எளிதில் விழாது. ரசாயனப் பொருட்களால் அது அதிகப் பாதிப்பு அடைவதில்லை. எளிமையான பொருள்களின் மூலமே அதை நன்கு சுத்தம் செய்துவிட முடியும். வெகு காலத்துக்கு அழகாகவே காட்சி தரும்.

எனினும், பீங்கானில் உருவாக்கப்படும் வாஷ்பேசின்களை நவீன எண்ணங்களுக்கேற்ப உருவாக்குவது கடினம். ஏனென்றால், பீங்கானால் எல்லாவிதத்திலும் வளைந்து கொடுக்க இயலாது. இப்போதெல்லாம் PuddingStone எனப்படும் கூட்டுக்கலவைக் கல்லும் வாஷ்பேசின் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. இயற்கையான கல்லோடு அக்ரலிக் கோந்துகள் கலந்து இது உருவாக்கப்படுகிறது.

இது ஓரளவு வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டது. நவீன வீடுகளில் இதைப் பயன்படுத்துகிறார்கள். தொடும்போதும் மென்மையாகவும் இருக்கும். இதிலும் கீறலோ மண்படிதலோ சுலபத்தில் ஏற்பட்டு விடாது. என்றாலும் சில வகை ஸ்பெஷல் பொருள்களால் அடிக்கடி சுத்தம் செய்தால்தான் இவை அழகு கெடாமல் இருக்கும்.

வாஷ்பேசின் பயன்பாடு சிறந்ததாக இருக்க எவ்வளவு உயரத்தில் அதைப் பொருத்துகிறோம் என்பதும் முக்கியம். தரைத்தளத்திலிருந்து 85 சென்டிமீட்டர் உயரத்தில் வாஷ்பேசினின் மையப் பகுதி இருப்பது நல்லது என்கிறார்கள் கட்டிட வல்லுநர்கள். பக்கச் சுவரிலிருந்து குறைந்தது 20 சென்டிமீட்டர் இருக்க வேண்டும். வாஷ்பேசினுக்கு முன்புறம் 70 சென்டிமீட்டர் தூரமாவது இருந்தால்தான் வாஷ்பேசினை இடைஞ்சல் இல்லாமல் பயன்படுத்த முடியும்.

ஒரே அறையில் இரு வாஷ்பேசின்கள் பொதுவாக வீடுகளில் பொருத்தபடுவதில்லை. ஆனால், ஒருவேளை அப்படிப் பொருத்தினால் அவற்றுக்கிடையே குறைந்தது 25 சென்டிமீட்டராவது இடைவெளி இருக்க வேண்டும். கைகழுவும் சோப்பும், தண்ணீரும் வாஷ்பேசின் வழியாகப் பாய்கிறது என்கிற ஒரே காரணத்தால் வாஷ்பேசின் தானாகவே சுத்தமாக இருக்கும் என்ற முடிவுக்கு வரக் கூடாது. சோப் ஆங்காங்கே தங்கிவிடலாம். உணவுப் பொருள்கள்கூடத் தங்கலாம். அவற்றை அவ்வப்போது நீக்கவில்லை என்றால் அவை படிந்து இறுகி விடலாம்.

எனவே, ஸ்பாஞ்ச் மற்றும் சுத்தம் செய்யும் திரவத்தைப் பயன்படுத்தி வெதுவெதுப்பான தண்ணீரால் வாஷ்பேசினைச் சுத்தம் செய்யுங்கள். கொஞ்சம் பிளீச்சிங் பவுடரைப் போட்டால் மேலும் பளிச்சிடும். ஆனால், வண்ணங்களில் அமைந்த வாஷ்பேசின் என்றால் பிளீச்சிங் பவுடரைப் பயன்படுத்த வேண்டாம். வாஷ்பேசினில் கறை படிந்தால் எலுமிச்சம் பழச்சாற்றை ஸ்பாஞ்சில் தொட்டுத் தடவலாம். சமையலறையிலுள்ள வாஷ்பேசினுக்குள் துளையிடப்பட்ட பிளாஸ்டிக் தடுப்பை வைத்தால் அது வாஷ்பேசினுக்கும் நல்லது, அதில் பயன்படுத்தப்படும் பாத்திரங்களுக்கும் நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x