Published : 14 Dec 2019 12:15 PM
Last Updated : 14 Dec 2019 12:15 PM

விளை முதல் விளைச்சல் வரை 13: பயிருக்கு நீர்த் தேவையும் நீர் பட்ஜெட்டும்

சொ.பழனிவேலாயுதம், பூச்சி செல்வம்

“ஆற்றங்கரை மரமும் அரசவையில் வீற்றிருந்த
வாழ்வும் வீழும், விழாது உழுதுண்டு வாழ்வதற்கு
ஒப்பில்லை கண்டீர் பழுதுண்டு பல் தொழிலுக்கு”

மேற்கண்ட அறங்கூறும் செய்யுளில் ஔவையார் பன்னெடுங்காலத்துக்குமுன் உழவுத் தொழிலின் பெருமையையும் அதை மேற்கொள்வதில் எவ்விதப் பிரச்சினையும் எழுந்ததில்லை எனவும் குறிப்பிடுகிறார். அதை வலியுறுத்துவதுபோல் ஓங்கி வளா்ந்த மரம், ஆற்றங்கரையோரம் அமைந்தாலும் ஒரு நேரத்தில் நீாின் அரிப்பால் வீழ்வது உண்டு. அரசவையில் வீற்றிருக்கும் பிரபுக்களின் நிலையும் அதுபோல்தான். ஆனால், உழவுத்தொழில் அவ்வாறில்லை. பிற தொழில்களுக்கெல்லாம் பிரச்சினைகள் பல உண்டு. வேளாண்மையில் அவ்வாறில்லை எனக் குறிப்பிட்டார். வேளாண் தொழிலின் மகத்துவத்தை உலகத்துக்கு உணா்த்தினார்.

நீர்ப் பிரச்சினை

ஆனால், இன்றுள்ள வேளாண்மைத் தொழிலில் அவ்வாறு பிரச்சினைகள் இல்லை எனக் கூற இயலுமா? அவ்வாறு பிரச்சினைகளை எதிா்கொள்ளாமல் வேளாண்மையை மேற்கொள்ள இயலுமா எனச் சொல்வது கடினம். வேளாண்மையில் பிரச்சினைகள் என்று பார்த்தால் நீர்தான் முதல் பிரச்சினையாக அமைகிறது. இயற்கை இடர்பாட்டால் மழை பொய்த்துப் போவது, வழக்கமான காலத்தில் பெய்யாமல் மழை காலம் தாழ்த்திப் பெய்வது, பருவ மழை முன்னரே தொடங்கி இடையில் நின்றுவிடுவது, பருவ காலத்தின் முதலிலும் இறுதியிலும் பேரளவு மழைபெய்து இடைப்பட்ட நாட்களில் பயிருக்குத் தேவையான பருவத்தில் மழை பெய்யாமல் இருப்பது போன்ற பல்வேறு வழிகளில் மழை நீாின் தேவையை இயற்கை நமக்கு உணர்த்துகிறது. மழைநீரைப் பொறுத்துத்தான், மானாவாாி நிலமான புன்செய் நிலமாகட்டும், தோட்டக்கால் நிலங்களில் அந்த ஆண்டு சாகுபடி பரப்பும் பயிர்த்தோ்வும் அமையும்.

மழை பொறுத்து மாறும்

மழை போதுமான அளவு உாிய காலத்தில் பருவகாலத்தின் முதற்கட்டத்தில் கிடைத்தால் அதிகமான பரப்பைச் சாகுபடிக்குக் கொண்டுவருவதும் விரும்பிய பயிரை உாிய பருவத்தில் சாகுபடிசெய்யவும் இயலும். இவற்றில் ஏதோ ஒரு வகையில் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் சூழலுக்குத் தகுந்தவாறு சாகுபடிசெய்யப்படும் பயிரும் சாகுபடிசெய்யப்படும் நிலங்களும் குறுகும். இதில் வானம் பாா்த்த பூமியில் புன்செய் சாகுபடியில் கண்கூடாகக் காணலாம்.

நீர்ப் பற்றாக்குறையின் காரணமாக நன்செய் சாகுபடியிலும் மானாவாாிப் பயிர் சாகுபடியிலும் பயிாின் தோ்வு, சாகுபடிசெய்யும் விதம்கூட மாறிவருவதும் உண்டு. இத்தகைய அாிதான நீர் வளத்தை மானாவாாியாகச் சாகுபடிசெய்யும் நிலங்களில், நன்செய் நிலங்களில், தோட்டப்பயிர் சாகுபடிசெய்யும் கிணற்றுப் பாசனப் பகுதிகளில் இந்தப் பிரச்சினைகளைச் சமாளிப்பது எப்படி? நீாின் பற்றாக்குறையை போக்க எடுக்கப்படும் மனித முயற்சிகள் என்னென்ன? அவற்றை எவ்வாறு கடைப்பிடிப்பது என்பது போன்ற கேள்விகளுக்கு விடைகூறும் ஒரு சொல்லே நீர் மேலாண்மை.

நீர் பட்ஜெட்

நீர் மேலாண்மையில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது நீர் பட்ஜெட் (நீர் வரவு செலவுக் கணக்கு). நீர் பட்ஜெட் என்ற சொல் தற்போது அதிமாகப் புழக்கத்தில் உள்ளது. நீர் பட்ஜெட் என்பது சாகுபடிக்குத் தோ்ந்தெடுக்கும் ஒரு பயிருக்கு மொத்த நீாின் தேவை என்ன? நம்மிடம் உள்ள நீாின் இருப்பு எவ்வளவு? இந்த நீாின் இருப்பு, இந்தப் பயிர் சாகுபடிக்கு முழுமையாகப் போதுமா? (அல்லது) அவ்வாறு நீாின் பற்றாக்குறை காரணமாக வழக்கமாகச் சாகுபடிசெய்யும் பயிரை மாற்றி நீர்க்குறைவான தேவையுடைய பயிரைச் சாகுபடிசெய்யலாமா என்ற கேள்விகளுக்கு விடை காண்பதே நீர் பட்ஜெட்டின் நோக்கம்.

அனைத்து வகைப் பாசன நிலங்களில் இதன் தேவை அதிகம். நீர் மேலாண்மையில் மேற்கண்ட நீர் பட்ஜெட்டின் அடிப்படையில் பயிரைத் தோ்ந்தெடுப்பது ஒரு வழி. வழக்கமாகச் சாகுபடிசெய்யும் பயிரைக் குறிப்பிட்ட நீர்ப் பற்றாக்குறை காலங்களில் கைவிடுவது, மாற்றுப் பயிர் சாகுபடியாக நீர்த் தேவை குறைவான பயிரை அந்நிலத்தின் சாகுபடிசெய்வது போன்ற உத்திகளைக் கையாண்டு நீர் மேலாண்மையை மேற்கொள்ளலாம்.

கட்டுரையாளர்கள்
தொடர்புக்கு: palani.vel.pv70@gmail.com,
selipm@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x