Published : 14 Dec 2019 11:57 AM
Last Updated : 14 Dec 2019 11:57 AM

புத்தகப் பகுதி: அறியப்படாத பழங்குடிகள் 

ஆதிவாசி, காட்டுவாசி, முதுகுடி, பழங்குடி, வனவாசி, மலைமக்கள் என்று பல்வேறு பெயர்களால் அடையாளப்படுத்தப்படும் பழங்குடிகள்தாம் நம் மண்ணின் பூர்வகுடிகள்; இவர்களே நம் மூதாதையர் என்பது மறுக்க முடியாத உண்மை! பழங்குடிகள் என்றாலே, இலை தழைகளைக் கட்டிக்கொண்டு, அரைகுறை ஆடையுடன், விலங்குகளின் எலும்புகளைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு, ‘குய்யோ, முய்யோ' என்று பேசுவதும் ஆடுவதும்தான் அடையாளம் என்று நம் பொதுப்புத்தியில் திணிக்கப்பட்டுள்ளது. பொதுவெளிச் சமூகத்தினர் மத்தியில் பழங்குடிகள் குறித்துப் புனையப்பட்டுள்ள இவ்வாறான அபத்தங்களைக் களைவதே, அவர்களுக்கு ஆதரவான சமூகச் சூழலை உருவாக்குவதற்கான முதன்மைப் பணி.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள பதிமூன்று பழங்குடி இனங்களின் இனவரைவியல் கூறுகள், பண்பாட்டுத் தனித்தன்மைகள், வாழ்வியல் நெருக்கடிகள் ஆகியவற்றைப் பற்றி ஆய்வுத் தரவுகளின் அடிப்படையில் அ. பகத்சிங் எழுதிய ‘வாழும் மூதாதையர்கள்: தமிழகப் பழங்குடி மக்கள்’ நூலில் இருந்து சில பகுதிகள்:

* நீலகிரியில் உள்ள இனங்களில் கோத்தர் மட்டுமே மரபுக் கைவினைக் கலைஞர்கள். இவர்களுடைய குயவுத் தேவைக்கான களிமண் சேகரிப்பது ஒரு விழாவாக நடைபெறுகிறது. கோத்தர் இசைக் கலைஞர்கள் ஊதுகுழலையும் மத்தளத்தையும் இசைக்க, மக்கள் அனைவரும் ஊர் மந்தையில் கூடுவார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் இசைக் கலைஞர்களைப் பின்தொடர்ந்து களிமண் சேகரிக்கும் பகுதியை வந்தடைவார்கள். பூசாரியின் மனைவி முதலில் களிமண் தோண்டி அடையாளரீதியாகத் தொடங்கிவைக்க, பின்னர் அனைவரும் மண் எடுப்பார்கள். களிமண் எடுக்கும் வேலை குழுச் செயல்பாடாக மகிழ்ச்சியும் குதூகலமும் நிறைந்த ஒன்றாக அமைகிறது.

இரும்புக் கருவிகள், மரப்பொருட்கள், பானைகள், களிமண் பொருட்கள் ஆகியவற்றை மிக நேர்த்தியாகத் தயாரித்து நீலகிரி பகுதியில் வாழும் மற்ற இனத்தவர்களுக்கு இவர்கள் வழங்குகிறார்கள். கோத்தர் குறித்து ஆய்வு மேற்கொண்ட அனைவரும் அவர்களுடைய கைவினைத் திறனை மெச்சிப் பதிவுசெய்துள்ளனர். ஆண், பெண் இருவரும் இணைந்தே கைவினைத் தொழிலில் ஈடுபடுகின்றனர்; அதிலும் நுட்பமான பணிகளைப் பெண்கள் மேற்கொள்கின்றனர்.

* முதுவர்கள் மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். பாண்டியப் பேரரசில் பெரும் போர் நிகழ்ந்தபோது இந்த மக்கள் தங்கள் குழந்தைகளை முதுகில் கட்டிச் சுமந்து மதுரைக்கு மேற்கே போடி வழியாக ஆனைமலை, ஏலமலை போன்ற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்ததாகக் கருதப்படுகிறது. முதுகில் சுமந்து வந்ததாலேயே முதுவர் என்று பெயர் பெற்றனர். அதேபோல், கண்ணகி தொன்மத்துடன் இவர்கள் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள்.

மதுரையை எரித்த கையோடு கோபம் கொஞ்சமும் குறையாமல் கால்போன போக்கில் கண்ணகி போய்க்கொண்டிருந்தாள். அப்படிப் போய்க்கொண்டிருந்தவளைப் பல்லக்கு ஒன்றில் அமர்த்திச் சுமந்தபடி நான்கு முதுவர் குடும்பங்கள் மதுரையிலிருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. ஆனைமலை வழியாகச் செல்லும்போது கண்ணகி ‘நீங்கள் இங்கேயே இருந்துவிடுங்கள். நகர்ப்புறம் நீங்கள் வாழத் தகுதியில்லாதது. இந்த மலைதான் இனி உங்கள் வாழிடம்’ எனக் கட்டளையிட்டுவிட்டுத் தனியே சென்றதாக நம்பிக்கை கொண்டுள்ளனர்.

* சோளகர்கள் வாழும் காடு முழுக்க வனத்துறையின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. ‘சந்தனக் கடத்தல்’ வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் கால் நூற்றாண்டுக் காலம் வனத்துறையாலும் காவல் துறையின் சிறப்பு அதிரடிப்படையாலும் இவர்கள் அனுபவித்த துயரங்கள் மிகக் கொடுமையானவை. வீரப்பனோடு தொடர்புடையவர்கள், அந்தக் கூட்டத்துக்கு ஆதரவு தந்தவர்கள் உள்ளிட்ட குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டுக் காவல் துறையினரால் பெரிதும் துன்புறுத்தப்பட்டனர். பலர் எஸ்.டி.எப். முகாம்களில் சித்திரவதைக்கு உள்ளானார்கள், சிலர் காணாமல் போனார்கள், சிலர் கொல்லப்பட்டார்கள், பெண்கள் பலர் பாலியல் வல்லுறவுக்கு ஆளானார்கள்.

வீரப்பன் கொல்லப்பட்ட பிறகும் இந்த காட்டுப்பகுதியில் இறுக்கம் தொடரவே செய்கிறது. சத்தியமங்கலம் காட்டுப் பகுதி தற்போது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சோளகர்களின் வசிப்பிடங்கள் காட்டுயிர் சரணாலயத்துக்குள் வந்துள்ளன. புலிகள் காப்பகத்தைக் காரணம் காட்டிப் பழங்குடிகள் வெளியேற்றப்பட மாட்டார்கள் என்று வனத்துறை தெரிவித்தாலும், காட்டுக்குள் சோளகர்களின் சுதந்திரமான புழக்கம் நெருக்கடிக்கு உள்ளாக்கிவருகிறது. சோளகர்கள் தங்கள் காடுகளிலேயே அந்நியர்களாக மாற்றப்பட்டு, காடுகளைவிட்டு வெளியேற்றப்படும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

* தர்மபுரி மாவட்ட குருமன்ஸ் மக்களின் வரலாற்றைப் பாப்பிரெட்டிபட்டியைச் சார்ந்த சொக்கலிங்கம் இயல்பாக விளக்குகிறார்: “தர்மபுரி மாவட்டத்தில் தீர்த்தமலை அடிவாரப் பகுதிகளில் எங்கள் மூதாதை வாழ்ந்ததாகப் பெரியவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

வற்றாத நீருற்றுகள், சுனைகள் இருப்பதால் அந்தப் பகுதிகளிலேயே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தோம். ஆட்டுப் புழுக்கையைச் சேகரித்து விவசாயிகளிடம் கொடுத்து அதற்கு மாற்றாகச் சாமை, சோளம், கேழ்வரகு ஆகியவற்றைப் பெற்று பொங்கித் தின்ற எளிய வாழ்க்கை முறை குருமன்களுடையது. சப்பாணி கடகால், முல்லைவனம், மொண்டுகுழி, கூடலூர் கசவம்மா கோயில், ஆண்டியூர், வேப்பநத்தம் ஆகிய பகுதிகளில் பாரம்பரியமாக நாங்கள் வாழ்ந்துவந்ததாக எங்கள் மூத்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

காட்டுப் பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த எங்களை, ஆங்கிலேயர் வந்தபிறகு காட்டில் இருந்து விரட்டினார்கள். ஆடுகளை ஒரு இடத்தில் நிறுத்தி வளர்க்கும் வழக்கம் கொண்ட நாங்கள், காட்டில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட பிறகு விவசாய நிலத்தில் குறும்பாடுகளை மந்தையாக மேய்க்கத் தொடங்கினோம்.

விவசாய நிலத்தில் ஆடுகளை நிறுத்தி, அதன் கழிவை நிலத்தில் கலக்கச் செய்து, அதற்கு இணையாக விளைச்சலைப் பெறும் முறைக்கு மாறினோம். இரவு குளிருக்கு அடக்கமாகக் கம்பளி எடுத்துச்சென்று ஆட்டைச் சுற்றிக் காவலுக்கு எங்கள் முன்னோர் படுத்துக்கொள்வார்கள். பின்பு மூங்கில் படலை வைத்துப் பட்டிகட்டி வளர்க்கத் தொடங்கினோம். பிறகு மெல்ல நாடோடி வாழ்க்கையைக் கைவிட்டு ஓரிடத்தில் வாழத் தொடங்கினோம்”.

* வாய்மொழி வரலாற்றின்படி மலையாளிகள் காஞ்சிபுரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ‘வெள்ளாள விவசாயிகள்’ என்றே கூறுகின்றனர். தென்னிந்தியாவின் பல பகுதிகள் இஸ்லாமியர்களின் ஆட்சி பரவியபோது நாட்டை விட்டு வெளியேறி மலையில் இவர்கள் தஞ்சமடைந்தார்கள் என்று எட்கர் தர்ஸ்டன் பதிவுசெய்துள்ளார். இவர்களுடைய குலதெய்வமான ‘கைராமன்’ முதலில் மலையில் வந்து தஞ்சமடைய, அவரைத் தொடர்ந்து பெரியண்ணன், நடுவண்ணன், சின்ன அண்ணன் ஆகிய சகோதரர்கள் முறையே கல்வராயன் மலை, கொல்லிமலை, பச்சைமலையில் குடியேறினார்கள் என்று வாய்மொழிக் கதைகள் கூறுகின்றன.

மலையாளிகள் குறித்துப் பேசுகையில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று வாச்சாத்தி வன்கொடுமையும் அதற்கு எதிரான போராட்டமும். தமிழகத்தைப் பொறுத்தவரை பழங்குடி உரிமைக்கான போராட்டத்தின் அடையாளம் ‘வாச்சாத்தி’. சமகாலத்தில் அரசு இயந்திரத்திற்கு எதிராக நடைபெற்ற பெரும் மனித உரிமைப் போராட்டம். இந்தப் போராட்டத்தின் வெற்றிக்குச் சொந்தக்காரர்கள் வாச்சாத்தி கிராம மலையாளி மக்களும் அவர்களுக்கு உறுதுணையாய் நின்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்தான்.

சந்தன மரம் வெட்டிக் கடத்தியதாகப் புனையப்பட்ட வழக்கில் விசாரணை, நடவடிக்கை என்ற பெயரில் வாச்சாத்தி கிராம மக்கள் மீது வனம், காவல், வருவாய்த் துறையினர் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டனர். மலையாளிப் பெண்களைக் கூட்டு வல்லுறவு செய்தனர்.

ஒடுக்குமுறைக்கு எதிராகத் தங்கள் உரிமையை நிலைநாட்ட சுமார் 20 ஆண்டு காலம் அந்த மக்கள் நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் போராடினார்கள். இறுதியாக 2011-ல் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் 269 பேர் குற்றவாளிகள் எனத் தண்டனை வழங்கப்பட்டது. அது முழுமையான வெற்றி இல்லை என்றாலும், எளிய மக்களின் சட்டரீதியான போராட்டத்துக்கு நம்பிக்கை அளித்த தீர்ப்பு அது.

* மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் தொதவர்கள் (தோடர்கள்), உலக அளவில் சிறப்புத் தன்மை வாய்ந்த பழங்குடிகள் என்று அடையாளப்படுத்தக்கூடிய பழங்குடி இனங்களில் ஒன்று. வெளிப்புறத் தோற்றம், உடை, சடங்குகள், வழிபாடு, ஆயர் தொழில், எருமைப் பலியிடல், திருமணம்-உறவுமுறை, பூத்தையல் கலை எனப் பல சிறப்பியல்புகளைக் கொண்டவர்கள் இவர்கள்.

இதன் காரணமாகவே உள்நாட்டு, அயல்நாட்டு ஆய்வாளர்களால் அதிக அளவில் இனவரைவியல் ஆய்வுசெய்யப்பட்ட இனமாக உள்ளனர். இவர்கள் குடியிருக்கும் கிராமத்தை ‘மந்து’ என்று அழைக்கின்றனர். இவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த இந்தப் பகுதி ‘ஒத்தைகல் மந்து’ என்று அழைக்கப்பட்டு, அதுவே ஆங்கிலத்தில் ஒட்டகமண்ட் (Ootacamund) என்று மருவி, உதகமண்டலமானது. உதகைப் பகுதி தோடநாடு என்று அழைக்கப்படுகிறது.

* இருளரின் வாய்மொழி வழக்காறுகள் சிறப்பு வாய்ந்தவை. அவர்களுடைய பாடல், விடுகதைகள் அனைத்தும் அவர்களுடைய வாழ்க்கைமுறை, பண்பாடு, பழக்க வழக்கங்கள், இனவரலாற்றை வெளிப்படுத்தும் வகையில் உள்ளன. இந்தப் பாடல்கள் இருளர்களின் காதல், காமம், ஆண்-பெண் குடும்ப உறவு, சமூக முறைமைகள், வாழ்க்கைமுறை ஆகியவற்றைப் பாடுபவையாக உள்ளன.

பிறப்பு, இறப்பு, பூப்படைதல், வேளாண் பணிகள், பூசைகள் என எல்லா சூழலுக்கும் ஏற்ப பாடல்களைப் பாடுவதும், கூத்தாடுவதும் இருளர்களின் தனி இயல்பு. இருளர்களின் பாடல்கள் அவர்களுடைய பண்பாட்டை வெளிப்படுத்துவதாக மட்டுமல்லாமல், வனத்துறையினர் - பிறரால் தாங்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள், சுரண்டலை எள்ளிநகையாடும் ஒரு வகை எதிர்ப்பண்பாடாக உள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். தாங்கள் அரும்பாடுபட்டுத் திரட்டிவரும் கானகத்துப் பொருட்களை அதிகாரத்தில் உள்ளவர்கள் பறித்துக்கொள்வது பற்றி இருளர் பெண்கள் பாடுவது போன்ற பாடல்களும் உள்ளன.

* திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட மார்த்தாண்டவர்மனுக்கும், எட்டு வீட்டுப் பிள்ளைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், காணிகள் மன்னரை ஆதரித்து உதவியதற்கு ஈடாக மலைப் பகுதியில் உள்ள இடங்கள் வழங்கப்பட்டதாகச் செப்புப் பட்டயங்கள் உள்ளன. மன்னர் கொடுத்த காணிகளுக்குச் சொந்தக்காரர்கள் ஆனதாலேயே, காணிக்காரர்கள் அப்படி அழைக்கப்படுகின்றனர். இந்த மக்கள் தம் நிலவுரிமை குறித்துப் பெருமைக் கொண்டுள்ளனர்.

தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களுக்கு உரிமை கொண்டாடுவது, உணவுத் தேவைக்காக நீர்நிலைகளைக் கையாள்வது, விளைச்சலை விற்பனை செய்வது, கால்நடை மேய்ச்சல் என அனைத்து மரபு உரிமைகளுக்கும் வனத்துறையால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது; வன உரிமைச் சட்டத்தில் உள்ள விதிகளின்படி முறையிட்டாலும் பயனில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர். காணிகள் தாமாக காட்டைவிட்டு வெளியேற இத்தகையை நெருக்கடிகள் ஏற்படுத்தப்படுவதாகக் கூறுகின்றனர்.

வாழும் மூதாதையர்கள்:
தமிழகப் பழங்குடி மக்கள்
முனைவர்
அ. பகத்சிங்
உயிர் பதிப்பகம்
தொடர்புக்கு:
9840364783,
9444153558

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x