Published : 13 Dec 2019 10:43 AM
Last Updated : 13 Dec 2019 10:43 AM

டிஜிட்டல் மேடை: மீனாவின் ஆக்‌ஷன் அவதார்!

சு.சுபாஷ்

ஒரு சர்வதேசக் கடத்தல் கும்பலை, இரண்டு பெண் புலனாய்வாளர்கள் விரட்டிப் பிடிப்பதை ஆக்‌ஷனும் காமெடியும் கலந்து சொல்கிறது ’கரோலின் காமாட்சி’ வலைத்தொடர். இந்தத் தமிழ்த் தொடரின், பத்து அத்தியாயங்கள் அடங்கிய முதல் சீசனை டிசம்பர் 5 அன்று ‘ஜீ5’ வெளியிட்டுள்ளது.

பாரிஸ் அருங்காட்சியகத்தி லிருந்து ஒரு புராதனப் பொக்கிஷம் களவு போகிறது. சர்வதேசக் கடத்தல்கார்கள் வசமிருக்கும் அதனைத் தேடி பிரான்ஸ் புலனாய்வாளர் கரோலின் புதுச்சேரி வருகிறார். அவருக்குத் துணையாக இந்தியா சார்பில் சென்னையிலிருந்து காமாட்சி என்ற சிபிஐ அலுவலர் அனுப்பப்படுகிறார். இருவரும் சேர்ந்து கடத்தல்காரர்களை விரட்டுவதும் புராதனப் பொக்கிஷத்தை மீட்பதுமே கதை.

பிரெஞ்சு அதிகாரி கரோலின், மேற்கத்திய வீச்சு நிறைந்த நவயுவதியாக வருகிறார். அவருக்கு நேர் எதிரானவர் இந்திய அதிகாரி காமாட்சி. வாரிசு அடிப்படையில் வேலைக்குச் சேர்ந்த காமாட்சி, பெயரளவில் வேலை செய்கிறார். பணியிடத்திலே தூங்கியும் வழிகிறார்.

மேலதிகாரி, மாமியார், மகள் எனச் சகலரும் அவரின் சோம்பேறித்தனத்தைக் கரித்துக்கொட்டுகிறார்கள். காமாட்சிக்கு ரோஷம் பொங்க, புதிய புலனாய்வில் புயலெனப் புறப்படுகிறார். சர்வதேசக் கடத்தல் கும்பலைத் தேடி புதுச்சேரி பயணிக்கிறார். அங்கே அவருடன் ஏழாம்பொருத்தமான பிரெஞ்சு கரோலினுடன் இணைந்து தனது பிரத்யேகத் தடுமாற்றத்தைத் தொடர்கிறார்.

ஆக்‌ஷன் கதைகளில் இருவேறு துருவங்களான கதாபாத்திரங்கள் இணைந்து செயல்படும்போது, சுவாரசியமான காட்சிகளுக்குப் பஞ்சமிருக்காது. ஆனால் அந்த வாய்ப்புகளைக் கோட்டைவிட்டு, கரோலின்-காமாட்சி திரைக்கதையில் படுத்தி இருக்கிறார்கள்.

வலைத்தொடர் கட்டமைத்த நகைச்சுவை பாணிக்குள் பார்வையாளர் ஒன்றுவதற்குப் பல அத்தியாயங்கள் ஆகின்றன. நகைச்சுவைக் கதையில் லாஜிக் பார்க்கக் கூடாது என்பதற்காக அதலபாதாள ஓட்டைகளைச் சாதாரணமாகத் தாண்டுகிறார்கள்.

வலைத்தொடரில் கால் பதித்திருக்கும் மீனா, கரோலின்- காமாட்சியின் மைய ஈர்ப்பாக வருகிறார். கொஞ்சிப் பேசுவது, மாறும் முகபாவனை என அதே பழைய மீனாவாக ஜொலிக்கிறார். பூசிய உடல்வாகுக்கென வடிவமைக்கப்பட்ட உடையலங்காரம் மீனாவின் கதாபாத்திரத்துக்குப் பொருந்தவில்லை.

அலுவலகத்திலும் குடும்பத்திலும் ஏளனத்துக்கு ஆளாகும்போது சோர்ந்துபோவது, அவப்பெயரைத் துடைத்துப் பணியில் சாதிக்கத் துடிப்பது என நடிப்பில் பரிமாணங்கள் காட்டுகிறார். பேச்சு வழக்கு உச்சரிப்பு, குடித்துவிட்டு சலம்புவது, ஆக்‌ஷன் அவதாரம் என மீனாவை நம்பியே வலைத்தொடரின் அத்தியாயங்கள் நகர்கின்றன.

கரோலினாக வரும் ஜியோர்ஜியா நடிப்பில் தத்தளித்தாலும், ஆக்‌ஷனில் தப்பிக்கிறார். சிபிஐ மேலதிகாரியாக வரும் ஒய்.ஜி.மகேந்திராவின் அனுபவத்துக்குத் தொடரில் போதிய வாய்ப்பில்லை. காமெடி போலீஸ், காமெடி தாதாக்கள் எனக் கதாபாத்திரங்கள் அனைத்தையும் நகைச்சுவையில் முக்கி எடுத்தாலும் ஒருசில காட்சிகளில் மட்டுமே காமெடி எடுபடுகிறது.

அதிலும் அந்த நகைச்சுவைக் காட்சிகள் - தொடரின் திருப்பங்கள் பலவும் சிறுவர்கள் ரசிக்கத்தக்க வகையிலேயே எடுபடுகின்றன. ஆனால், குழந்தைகள் பார்க்க வாய்ப்பின்றி, காட்சிக்குக் காட்சி மீனா உட்பட அனைவரும் வசவுமழை பொழிகிறார்கள்.

கடற்கரை - குடியிருப்பு களின் மீது பறவைப் பார்வையில் பதிவுசெய்திருக்கும் ட்ரோன் காட்சிகளில் புதுச்சேரியின் வண்ணங்கள் குளுமையாகப் பதிவாகி உள்ளன. ஒலிப்பதிவின் துல்லியமும் திரையரங்கு அனுபவத்தைத் தர முயல்கிறது.

கரோலின் - காமாட்சி வலைத்தொடரை விவேக் கண்ணன் இயக்கி உள்ளார். அத்தியாயங்களை 20 சொச்ச நிமிடங்களில் முடித்திருப்பது சிறப்பு. கடத்தப்பட்ட புராதனப் பொருளின் பின்னணியை யோசித்த அளவுக்கு இதர காட்சிகளையும் வடித்திருந்தால் வலைத்தொடர் ஈர்த்திருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x