Published : 13 Dec 2019 10:12 AM
Last Updated : 13 Dec 2019 10:12 AM

பாம்பே வெல்வெட் 13: வண்ணங்களால் வசீகரித்தவர்

எஸ்.எஸ்.லெனின்

தமிழ் சினிமா நடிகர்களில் ‘தொப்பி’ என்றதும் எம்.ஜி.ஆர் நினைவுக்கு வருவார். இதுவே இந்தி சினிமா என்றால் தேவ் ஆனந்த் ரசிகர்களின் நினைவிலாடுவார். தொப்பி மட்டுமல்ல, மேற்கத்திய பாதிப்பிலான ஆடைகள், அவற்றின் அடர்த்தியான வண்ணங்கள், கழுத்தைச் சுற்றிப்படரும் கழுத்துப்பட்டை எனப் பலதும் கலந்து, மேற்கின் இந்திய வாசலாக வலம்வருவார் தேவ் ஆனந்த்.

ஆடையில் மட்டுமல்ல அவரது திரைப்படங்கள், மற்றும் நிஜ வாழ்க்கையிலும் அந்த வண்ணங்களின் அடர்த்தியைத் தரிசிக்கலாம். ஒருங்கிணைந்த பஞ்சாபில் பிறந்த தரம் தேவ் பிஷோரிமல் ஆனந்த், லாகூரில் பட்டம் படித்து, சினிமா கனவுடன் நாற்பதுகளில் பம்பாய்க்கு வந்தார்.

‘ஹம் ஏக் ஹெய்ன்’ படத்தில் பெயரைச் சுருக்கி தேவ் ஆனந்தாக அறிமுகமானார். நடிகர் அசோக்குமார் அரவணைப்பு கிட்டியதில் பாம்பே டாக்கீஸ் தயாரிப்பான ‘ஜித்தி’ மூலம் தேவ் ஆனந்தின் வெற்றிக் கணக்கு தொடங்கியது. நாற்பதுகளின் இறுதியில் அவரைவிட அதிக ஊதியம் பெற்ற நடிகை சுரையாவுடன் இணைந்து நடித்த படங்கள் பழுதின்றி ஓடின.

ஆனால், தனி அடையாளத்துக்காகத் தவித்தார். ஆருயிர் நண்பன் குரு தத் தனது ‘சிஐடி’ படத்தின் மூலம் தேவ் ஆனந்த் என்ற நடிகனின் முழுப் பரிமாணத்தை வெளிக்கொணர்ந்தார். அதையொட்டி வந்த ‘ஹவுஸ் நம்பர் 44’, ‘ஃபண்டூஸ்’, ‘பேயிங் கெஸ்ட்’ திரைப்படங்களில் தொடங்கி தனது தனித்துவ வசன உச்சரிப்பு, உடல்மொழி ஆகியவற்றால் பெயர் பெற்றார் தேவ் ஆனந்த்.

நகர்ப்புறத்து நவீன இளைஞன்

அறுபதுகளின் இறுதியும் எழுபதுகளின் தொடக்கமும் தேவ் ஆனந்த் திரைவாழ்க்கையின் உச்சமாக இருந்தன. சம கால நடிகர்களில் சாப்ளினை நகலெடுத்த ராஜ்கபூர், சோகத்தால் ரசிகர்களை உருகவைத்த திலிப்குமார், நடனத்தில் பின்னியெடுத்த ஷம்மி கபூர் என ஆளுக்கொரு அவதாரம் தரித்திருந்தனர்.

இவர்களில் எவரும் தொடாத நகர்ப்புற இளைஞனின் நவீன வடிவத்தை தேவ் ஆனந்த் வார்த்துக்கொண்டார். அவரது வண்ணமயமான அலங்கார ஆடைகளும் உச்சரிப்பும், துடிப்பான ஸ்டைலும் அதற்குத் துணைசெய்தன. இந்திய இளைஞர்கள் மத்தியில் அறுபதுகளின் கிளர்ந்தெழுந்த மேற்கத்திய மோகமும் அதை உள்வாங்கிய உற்சவராக தேவ் ஆனந்தை வலம்வரச் செய்தன.

சர்ச்சையைக் கிளப்பிய ‘கைடு’

ஆ.கே.நாராயணின் கற்பனையூரான ’மால்குடி’யில் விளைந்த கதைகளில் ஒன்று ‘தி கைடு’. அதனைத் திரைக்கதையாக்கி ஆங்கிலம், இந்தி என ஒரே நேரத்தில் இரு மொழிகளிலும் சினிமாவாக்க ஆனந்த் சகோதரர்கள் முடிவுசெய்தனர்.

ஆங்கிலப் பதிப்பை போலந்து-அமெரிக்க இயக்குநரான தாட் டேனியலும் இந்தியை சேத்தன் ஆனந்தும் இயக்கினார்கள். தேவ் ஆனந்த்-வஹீதா ரஹ்மான் ஜோடி உட்பட ஒட்டுமொத்தப் படக்குழுவினரும் ஒரே தருணத்தில் இரு படங்களுக்குமாக உழைத்தனர். ஆனால் படப்பிடிப்புத் தளத்தில் இரு இயக்குநர்களுக்கும் இடையே முட்டிக்கொள்ள, சேத்தன் விலகிக்கொண்டார். இன்னொரு சகோதரர் விஜய் ஆனந்தை வைத்து படத்தை முடித்தார் தேவ் ஆனந்த்.

ஆங்கிலப் பதிப்பு எடுபடாது போனாலும், இந்திப் பதிப்பு வரலாறு படைத்தது. கசப்பான திருமண வாழ்க்கையில் பெண்ணுக்கு மலரும் இன்னொரு காதலை ‘கைடு’ சித்தரித்தது. படத்தின் புதுமையான கதை விநியோகஸ்தர்கள் தயங்குமளவுக்கு சச்சரவையும் கிளப்பியது.

கதை, வசனம், நடிகர்கள், ஒளிப்பதிவு எனத் தொடங்கி 7 பிரிவுகளில் ‘கைடு’(1965) திரைப்படம் ஃபிலிம்ஃபேர் விருதுகளைக் குவித்தது. தொடர்ந்து விஜய் ஆனந்த் இயக்கத்தில் தேவ் ஆனந்தின் வெற்றித் திரைப்படங்கள் வெளியாகத் தொடங்கின.

வாய்மொழியால் கிடைத்த வெற்றி

விஜய் ஆனந்த் இயக்கத்திலான ‘ஜூவல் தீஃப்’ (1967), பின்னாளில் திரைத்துறை மாணவர்களுக்குப் பாடமாகும் அளவுக்குப் பலவகையில் செறிவான அம்சங்களுடன் வெளியானது. விறுவிறுப்பான கதைத் திருப்பங்கள், சிலிர்ப்பான இசை, கூர்மையான படத்தொகுப்பு, இருக்கை நுனியில் அமரவைத்த காட்சிகள் என ரசிகர்களின் வாய்மொழி பிரச்சாரத்தால் படம் வெற்றியடைந்தது.

‘ஹிட்ச்காக் இயக்கிய ஜேம்ஸ்பாண்ட் திரைப்படம்’ என சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. பாண்ட் படங்களைப் போலவே வைஜெயந்திமாலா, தனுஜா, ஹெலன், அஞ்சு எனத் தாரகையர் சூழ படத்தில் இளமைபொங்க நடித்திருந்தார் தேவ் ஆனந்த்.

இசையும் இளமையும்

தேவ் ஆனந்த் திரைப்படங்களின் இன்னொரு அடையாளமாக இசை இருந்தது. ஆர்.டி.பர்மன் அவருக்காகவே இசையமைத்தது போலான பாடல்கள் காலம் கடந்தும் நின்றன. ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ (1971) படத்தின் ’தம் மரோ தம்’ இன்றும் இளசுகளின் விருப்பமாக எதிரொலிக்கிறது. ஹிப்பி கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட திரைக்கதையில் அதற்கு உவப்பான ராக் இசையில் ஆர்.டி.பர்மன் எக்காலத்துக்குமான பாடல்களைத் தந்திருப்பார். தேவ் ஆனந்த் இயக்கத்தில் வெளியான இந்த முதல் படம் வெற்றியடையவே, தொடர்ந்து படங்களை இயக்குவதிலும் ஆர்வமானார். ‘பேயிங் கெஸ்ட்’, ‘ஹம் தோனோ’, ‘ஜானி மேரா நாம்’, ‘டார்லிங் டார்லிங்’ போன்ற படங்கள் இசையால் ரசிகர்களைக் கட்டியாண்டன.

தேவ் ஆனந்த் திரைப்படங்களில் நவீன இசைக்கு அடுத்தபடியாகக் கவர்ச்சிகரமான நாயகியர், ரசிகர் உள்ளத்தை ஆக்கிரமித்தார்கள். ‘ஜுவல் தீஃப்’ அதற்கு உதாரணம். ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ திரைப்படத்தில் அவர் அறிமுகம் செய்த ஜீனத் அமன் அடுத்த பத்தாண்டுகளில் பாலிவுட்டின் அதிகம் சம்பாதிக்கும் நடிகையாக உயர்ந்தார். ‘தேஸ் பர்தேஸ்’ படத்தில் தேவ் ஆனந்த் அறிமுகம்செய்த டினா மூன் பின்னாளில் டினா அம்பானி ஆனார்.

காதல் மன்னன்

நிஜ வாழ்விலும் தேவ் ஆனந்த் காதலில் கரைந்திருந்தார். அவர் சினிமாவில் அறிமுகமாகும்போது பாடகி நடிகையான சுரையா முதலிடத்தில் இருந்தார். ‘வித்யா’ திரைப்படத்தின் படகுக் காட்சியில் நீரில் மூழ்கித் தத்தளித்த சுரையாவை தேவ் ஆனந்த் மீட்டதில் இருவரும் திரைக்கு வெளியிலும் காதலைத் தொடர்ந்தனர். சுரையா வீட்டினர் திருமண ஏற்பாட்டுக்கு உடன்பட மறுத்ததால், காதல் ஜோடி நிழலிலும் நிஜத்திலும் பிரிந்தனர். சில ஆண்டுகள் கழித்து உடன் நடித்த கல்பனா கார்த்திக்கை தேவ் ஆனந்த் மணந்துகொண்டார்.

விரக்தியான சுரையா திருமணத்தை மறுத்து 75 வயதுவரை தனியாக வாழ்ந்தார். சுரையா, ஜீனத் அமன் உட்பட தனது காதல் கதைகள் அனைத்தையும் 82 வயதில் வெளியிட்ட ‘ரொமான்சிங் வித் லைஃப்’ என்ற சுயசரிதையில் ரசமாக விவரித்துள்ளார் தேவ் ஆனந்த். 114 திரைப்படங்கள், 64 ஆண்டு சினிமா வாழ்க்கை, பத்மபால்கே விருதுகள் என, தனது 88-ம் வயதின் மறைவுக்குச் சில மாதங்கள் முன்புவரை திரைவாழ்க்கையை விட்டு விலகாதிருந்தார் ‘பாலிவுட்டின் மார்க்கண்டேயன்’ தேவ் ஆனந்த்.

அன்று சர்ச்சைக்குரிய கதையைக் கொண்ட படமாகப் பார்க்கப்பட்ட ‘கைடு’ படம் வெளியாகாது என்ற நிலை வந்தது. அன்று மத்திய அமைச்சர் இந்திரா காந்தியுடன் சுமுகம் பேணி தேவ் ஆனந்த், படத்தை அவருக்கு பிரத்யேகமாகக் திரையிட்டுக் காட்டி அனுமதி பெற்ற சாமார்த்தியசாலி.

பின்னாளில் இந்திரா பிரதமரானபோது நெருக்கடி நிலை பிரகடனத்துக்கு எதிராகத் தீவிர அரசியலிலும் தேவ் ஆனந்த் குதித்தார். ’இந்திய தேசிய கட்சி’ எனத் தனிக் கட்சி கண்டதுடன், அடுத்து வந்த தேர்தலில் இந்திராவுக்கு எதிராக பிரச்சாரமும் மேற்கொண்டார். சில நடைமுறை பிரச்சினைகளால் கட்சியை விரைவில் கலைக்கவும் செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x