Published : 11 Dec 2019 01:05 PM
Last Updated : 11 Dec 2019 01:05 PM

டிங்குவிடம் கேளுங்கள்: இரு தீக்குச்சிகளை உரசினால் ஏன் நெருப்பு உண்டாவதில்லை?

தீக்குச்சியின் முனையில் இருக்கும் எரிபொருளும் தீப்பெட்டியின் பக்கவாட்டில் இருக்கும் எரிபொருளும் ஒன்று என்றால், இரண்டு தீக்குச்சிகளை உரசும்போது ஏன் தீப்பற்றுவதில்லை, டிங்கு?

– சே. கல்பனா, 8-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, அருங்குளம், திருவள்ளூர்.

சுவாரசியமான கேள்வி கல்பனா! மனிதர்களின் மகத்தான கண்டுபிடிப்புகளில் நெருப்பும் ஒன்று. இரண்டு கற்கள் ஒன்றோடு ஒன்று உரசும்போது உண்டாகும் உராய்வினால் வெப்ப ஆற்றல் உருவாகி, நெருப்பு உண்டாகிறது என்பதை ஆதி மனிதர்கள் கண்டுபிடித்தனர்.

இதே அடிப்படையில்தான் தீக்குச்சிகள் தயாரிக்கப்பட்டன. ஆரம்பத்தில் சொரசொரப்பான இடத்தில் தீக்குச்சியைத் தேய்த்தாலே தீப்பற்றும் விதத்தில் தயாரிக்கப்பட்டன. அது அவ்வளவு பாதுகாப்பானதாக இல்லை என்பதால், தீக்குச்சியைத் தீப்பெட்டியில் உரசும்போது நெருப்பு உண்டாகும்படி உருவாக்கப்பட்டது. தீக்குச்சி முனையில் இருக்கும் தீப்பற்றும் பொருளும் தீப்பெட்டியின் பக்கவாட்டில் இருக்கும் தீப்பற்றும் பொருளும் ஒன்றாக இல்லை.

தீக்குச்சியின் முனையில் பொட்டாசியம் குளோரைடு, கந்தகம், மாவு, பசை போன்ற பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. உரசக்கூடிய இடத்தில் சிவப்பு பாஸ்பரஸ், கண்ணாடித் தூள், பசை போன்ற பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. தீக்குச்சி முனையைத் தீப்பெட்டியின் பக்கவாட்டில் உரசும்போது, உராய்வில் வெப்பம் உண்டாகி சட்டென்று தீப்பற்றிவிடுகிறது.

ஆண் மயிலுக்கு மட்டும் அழகிய தோகை இருப்பது ஏன், டிங்கு?

– மு. மதன் குமார். 6-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பொய்யாமணி, கரூர்.

பொதுவாகவே உயிரினங்களில் ஆண் இனம் வசீகரமாகத்தான் இருக்கிறது. பெண் பறவைகளைக் குடும்பம் நடத்த அழைப்பதற்காக ஆண் இனம் கண்கவர் வண்ணங்களிலும் வசீகரமான தோற்றத்திலும் இருக்கக்கூடிய பண்பை இயற்கையாகவே பரிணாம வளர்ச்சியில் பெற்றிருக்கின்றன. வண்ணம், வலிமை, இனிமை எல்லாம் பார்த்தே ஓர் ஆண் மயிலைத் தேர்ந்தெடுத்து, பெண் மயில் குடும்பம் நடத்தி, சந்ததியை உருவாக்குகிறது, மதன் குமார்.

காகிதம் எப்படித் தயாரிக்கப்படுகிறது, டிங்கு?

– சு.சொ. லோகேஷ், 2-ம் வகுப்பு, ஸ்ரீ சாய் விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, சென்னை.

காகிதம் தயாரிப்பு அவ்வளவு எளிதான விஷயமில்லை. பைன், மூங்கில், சணல் போன்ற மரங்கள், தாவர நார்கள், பழைய காகிதங்கள் போன்றவற்றை ஊற வைத்து, அரைத்து, கொதிக்க வைத்து மரக்கூழ் தயாரிக்கப்படுகிறது. இந்த மரக்கூழில் வேதிப் பொருட்கள் சேர்க்கப்பட்டு, தண்ணீர் வடிகட்டப்படுகிறது.

இதற்குப் பிறகு 5 நிலைகள் இருக்கின்றன. ஃபார்மிங் (Forming) பகுதியில் காற்றைச் செலுத்தி, மரக்கூழில் உள்ள தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. பிரஸ் (Press) பகுதியில் ஈரமான நாரிழைகள் பெரிய உருளைகளுக்கு இடையில் அனுப்பப்பட்டு, அதிக அழுத்தத்துக்கு உட்படுத்தப்பட்டு, ஈரப்பதம் போக்கப்படுகிறது.

டிரையிங் (Drying) பகுதியில் உள்ள வெப்பமான உருளைகளின் மீது செல்லும்போது, நீர்ச்சத்து மேலும் குறைக்கப்படுகிறது. அங்கிருந்து காலண்டர் (Calender) பகுதிக்குச் செல்லும் காகிதம், இரு உருளைகளுக்கு இடையே அதிக அழுத்தத்தில் அனுப்பப்படுகிறது. அங்கே மேலும் சில வேதிப் பொருட்கள் சேர்க்கப்பட்டு, மென்மையாகவும் வலிமையாகவும் மாற்றப்படுகிறது. பிறகு ரீல் (Reel) பகுதிக்கு வரும் காகிதம், வேண்டிய அளவுக்கு வெட்டப்பட்டு பயன்படுத்தப்படும் காகிதமாக வெளியே வருகிறது, லோகேஷ்.

நீ படிப்பில் சுமார் மாணவரா, சூப்பர் மாணவரா, டிங்கு?

– எஸ். சஹானா, 8-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, சமயபுரம், திருச்சி.

இந்த ரகசியத்தை யாரிடமும் சொல்லி விடாதீர்கள், சுமார் மாணவர்தான் சஹானா.

வெளவாலுக்கும் எறும்புக்கும் கண்கள் உண்டா, டிங்கு?

– விக்னேஷ், 9-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, தோவாளை, குமரி.

பூச்சியுண்ணும் வெளவால்கள் மீயொலிகளை வைத்துப் பறப்பதால், அவற்றுக்குக் கண்கள் கிடையாது என்று அர்த்தம் இல்லை. வெளவால்களுக்குக் கண்கள் இருக்கின்றன. பொதுவாக பூச்சியுண்ணும் வெளவால்கள் இரவு நேரத்தில்தான் உணவு தேடி வெளியே செல்கின்றன.

இரவில் பார்வைத் திறன் குறைவாக இருப்பதால், மீயொலிகளை (அல்ட்ராசவுண்ட்) எழுப்பி, அந்த ஒலிகள் பொருள் மீது பட்டு எதிரொலிப்பதை வைத்து, அந்தப் பொருளுக்கான இடைவெளியை உணர்ந்து, மோதாமல் பறக்கின்றன. எறும்புகளுக்கும் கூட்டுக் கண்கள் இருக்கின்றன. இந்தக் கண்கள் மூலம் சிறப்பான பார்வைத்திறனை எறும்புகள் பெற்றுள்ளன, விக்னேஷ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x