Published : 10 Dec 2019 01:16 PM
Last Updated : 10 Dec 2019 01:16 PM

விசில் போடு 09: பசங்களின் பரீட்சை பரிதாபங்கள்

‘தோட்டா’ ஜெகன்

பரீட்சையைக் கண்டுபிடிச்சது மட்டும் யார்னு பசங்களுக்குத் தெரிஞ்சா, அதுக்கப்புறம் அவர் என்ன ஆவார்ன்னு சொல்லவே முடியாது. தேர்வுங்கிற வார்த்தையைத் தூரத்துல கேட்டாலே, டன் கணக்குல சோர்வு. காடும் காடு சார்ந்த இடம் முல்லைன்னா, இந்த ஏடும் ஏடு சார்ந்த இடம் எப்பவுமே தொல்லை. பரீட்சை பக்கத்துல வந்துட்டாலே, மகள்களைப் பெற்ற அப்பாக்கள் நினைப்பெல்லாம், எப்படியும் பொண்ணுங்க படிச்சுடுவாங்கன்னு இருக்கும். மகன்களைப் பெற்ற அப்பாக்கள் நினைப்பெல்லாம் எப்படா இவன் படிப்பான்னு இருக்கும்.

தேர்வுக்குப் பொண்ணுங்களோட ‘பிரிப்பரேஷன்’ பார்த்துப் பார்த்துக் கட்டுன வீடு மாதிரி பளிச்சுன்னு இருக்கும், பசங்க ‘பிரிப்பரேஷ’னோ அமைச்சர் வாராருன்னு முந்துன நாள் போட்ட ரோடு மாதிரி பல்லிளிக்கும். வருஷத்துல ஒரு நாள் வரப்போற பரீட்சைக்கு வருஷமெல்லாம் படிக்கிறவங்க பொண்ணுங்கன்னா, வருஷத்துலையே ஒரு நாள் படிக்கிறவங்கதான் பசங்க. ‘நாலு நாள் இருக்கு படிச்சிடலாம், நாளைக்கே படிச்சுடலாம், நைட்டுக்குள்ள படிச்சுடலாம், அட நாலு மணி நேரத்துல படிச்சுடலாம்' - இதுதான் பல்லாளதேவன் என்ற பரீட்சையைப் போர்க்களத்தில் சந்திக்கப்போகும் பெரும்பாலான பாகுபலிகளின் போர்த் தந்திரங்கள்.

டைம் டேபிள்

அரை நாள் படிச்சாலே அந்த சப்ஜெக்ட்ல பாஸாகிடலாம்னு நம்புறது, அடை மழைல எருமைய நனையவிட்டா, அது அடுத்த நாளே தமன்னா மாதிரி ரோஸாகிடும்னு நம்புற மாதிரி. கஷ்டப்பட்டா காதுல கடப்பாரையை விடலாம், அதுக்காகக் கடல் பாறையைவிட முடியுமா? ஒரு நாள் படிச்சுட்டு எக்ஸாம் போறதும், ஓவர் நைட்டுல படிச்சுட்டு எக்ஸாம் போறதும் அப்படித்தான்.

இன்னமும் சிலர் இருக்காங்க, எமகண்ட நேரம் எந்திரிக்காம இருய்யான்னு கடிகாரத்தைப் பார்த்து எமனுக்கே வார்னிங் தருவாங்க. படிக்க இவனுங்க போட்டிருக்கிற ‘டைம் டேபி’ளைப் பார்த்தா, பொதிகை டிவில பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி போடுற மாதிரியே இருக்கும்.

8-10 மணிக்கு முதல் பாடம், 10-12 மணிக்கு இரண்டாம் பாடம்னு நம்மாளுங்க போடுற மிஷனெல்லாம் கேட்கிறதுக்கு, மரங்கொத்தியோட வாயப் பொத்தி, அதோட மூக்குல முக்காபவுன்ல மூக்குத்தி மாட்டிடலாம். அணுகுண்டு டெக்னாலஜியைக்கூடப் புரிஞ்சுக்கலாம். ஆனா, இவனுங்க அலாரம் வைக்கிற டெக்னாலஜிய மட்டும் புரிஞ்சுக்கவே முடியாது. 5 மணிக்கு ஒரு அலாரம், 7-க்கு ஒரு அலாரம், 10-மணிக்கு ஒரு அலாரம்ன்னு வச்சிருப்பாங்க, கடைசில, ‘அடேய், எழுந்திரிச்சு தொலைடா’ன்னு 7 மணிக்கு அம்மா அலறுற அலாரத்துலதான் எந்திரிப்பாங்க.

குரூப் ஸ்டடி

எல்லோரும் படிக்கலாம்னு ஓரிடத்தில் ஆர்வமா கூடிட்டு, நம்மளை மாதிரியே யாருமே படிக்கலன்னு ஆறுதலாகுற ‘ஹாட்ஸ்பாட்’தான் ‘குரூப் ஸ்டடி’. ‘குரூப் ஸ்டடி’ன்னு நடக்கிறது முழுக்க ‘டூப் ஸ்டடி’தான். ஓவருக்கு ஒன்பது ரன்னடிக்கனும் இருக்கிற நிலமைல டெண்டுல்கர் பேட்டிங் பண்ற மாதிரி டென்சனா கூடுற பல குரூப் ஸ்டடிங்க, அரை மணி நேரத்துல, ஒன்பது ஓவருக்கு ஒரு ரன்னடிக்கிற மஞ்சரேக்கர் டெஸ்ட் பேட்டிங் மாதிரி மாறிக் கிடக்கும்.

‘எனக்குத் தெரிஞ்சதை நான் காட்டுறேன், உனக்குத் தெரிஞ்சதை நீ காட்டு’ன்னு கூட்டணி பேச்சுவார்த்தை ஒரு பக்கம்ன்னா, ‘மதுரை மாமா சொல்லிட்டாரு, சிதம்பரம் சித்தப்பா கன்பார்ம் பண்ணிட்டாரு, கொஸ்டீன் பேப்பர் அவுட்டு, இந்த ஒரு கேள்விதான் டவுட்டு’ன்னு இயற்பியல் பரிசோதனையை உயிரியல் புத்தகத்துல தேடுற குரூப் ஒரு பக்கம்.

பசிச்சவன் தட்டைத் தேடுற மாதிரி, படிக்காதவன் பிட்டை நாடுவது தனிக்கதை. உரிச்சுப் போட்டா வெங்காயம், உடைச்சுப் போட்டா பெருங்காயம், உடம்பு முழுக்க பிட்டு வைக்கிறது அநியாயம். பிட்டு வச்சிருக்கறவன ஈஸியா கண்டுபிடிச்சுடலாம். ‘பைல்ஸ்’ ஆபரேஷன் பண்ணிட்டு பாதயாத்திரையா பழனி போற மாதிரி நடந்து வருவாங்க. எந்த பிட்டு எங்க இருக்குன்னு கண்டுபிடிக்கவே ஒரு பிட்டு வச்சிருப்பாங்க. பிட்டுக்கே ஜிபிஎஸ் வச்சு பிட்டடிக்கிற திறமைசாலிகள்தான் நம்மாளுங்க. புலி ஓடாம இருக்கத்தான் புலிக் கூண்டு; மணி ஓடுறதைக் காட்டத்தான் மணிக்கூண்டுங்கிற லாஜிக்கைப் புரிஞ்சாலே பிட் எழுதற நேரத்துல படிச்சே முடிச்சுடலாம்னு தெரியும்.

டரியலாகும் பசங்க

பார்த்தவுடனே பொண்ணுங்க முகத்துல மலர்ச்சியையும், பசங்க முகத்துல அதிர்ச்சியையும் கொண்டு வருவதுதான் கொஸ்டீன் பேப்பர். பார்த்தவுடனே ‘அனஸ்தீசியா’ தந்த மாதிரி ஒரு மயக்கமும் ‘அம்னீஷியா’ வந்த மாதிரி ஒரு தயக்கமும் தருவதுதான் கொஸ்டீன் பேப்பர்.

இரண்டு மார்க் அவியல், அஞ்சு மார்க் துவையல், பத்து மார்க் பொரியல்னு பொண்ணுங்க எக்ஸாம் ஹால்ல ஒரு பெரிய படையலே போடத் தயாராகும்போது, ‘தெனாலி’ கமல்போல டரியலோட உட்கார்ந்திருப்பாங்க பசங்க. புதுச் சொத்து கிடைக்கும்னு இருக்கிற சொத்தை விற்று வழக்கு நடத்தறதுக்கு, கிடைக்கிற சொத்தை வச்சு வாழ்க்கை நடத்திடலாம் என்ற வாழ்நாள் தத்துவத்தைச் சொல்லித்தரும் சம்பவம் அது.

எக்ஸாம் ஹாலுக்குப் போறவரைக்கும்தான் பசங்களுக்கு எக்ஸாம் பயம், அதுக்கப்புறம் நம்மாளுங்க பண்றதைப் பார்த்து அந்த எக்ஸாமுக்கே பயம் வந்திடும். பொண்ணுங்க விடைத் தாள்ல பிள்ளையார் சுழிதான் போடுவாங்க. பசங்க விடைத் தாள்ல பசு மாடு வந்து பேப்பர்ல சாணி மட்டும் போட்டிருக்காது, மற்றபடி வாஸ்து பூஜை, லட்சுமி பூஜை, கணபதி ஹோமம்னு ஒரு கிரகப்பிரவேசமே நடத்திடுவாங்க.

மாரியம்மன் துணை, காளியம்மன் துணை, மீனாட்சியம்மன் துணைன்னு தெரிஞ்ச கடவுள் பேரா எழுதி அதுக்கும் அஞ்சு மார்க் வாங்குன ஆளுங்கெல்லாம் இருக்கானுங்க. எழுதணும்னு முடிவு பண்ணிட்டா, பசங்களோட பேனா விடை தாள் முழுக்க டிஸ்கோ டான்ஸரா விளையாடும். ‘தம்பி, நீ வளைக்கிறதுக்கு இது ராமர் வில் இல்லப்பா, ஏற்கெனவே வளைஞ்ச வானவில்’னு எக்ஸாம் சூப்பர்வைசர் எழுப்பி விடுற வரைக்கும் எழுதுவாங்க.

வாத்தியாருக்கு நோபல்

நல்லா படிச்சுட்டு வந்த பொண்ணுங்களே நாலு அடிஷனல் பேப்பர்தான் வாங்கும், நம்மாளுங்க கத்துக்கிட்டவந்த அந்த எட்டு வரிய எழுதறதுக்குப் பத்து பேப்பர் வாங்குவாங்க. கர்ணனுக்குப் பிறகு கொடுத்துக் கொடுத்தே சிவந்தது சூப்பர்வைசர் கைகள்தான். பெல்லடிக்க போற அந்தக் கடைசி ரெண்டு நிமிஷத்துலதான் பேப்பர் முழுக்க சொல்லா அடிப்பாங்க. வளையாபதியையும் குண்டலகேசியையும் இயற்றி முடிச்சுட்டு, இன்னமும் மணியாகலயான்னு மணிமேகலை மேல கைய வைப்பாங்க.

பேஜை நிரப்ப அஞ்சு விரலும் பொக்ளைன் இயந்திரமாட்டம் மனசுல இருந்து வார்த்தைகளை அள்ளி எடுக்கும். தப்பித் தவறி அவன் எழுதுனதை அவனே திருப்பி படிச்சான்னா, தலை சுக்குநூறா வெடிக்கும். அவங்க விடைத் தாளை திருத்துற வாத்தியாருக்கு அந்த வருஷத்து ‘அமைதிக்கான நோபல்’ பரிசே தரலாம். இவ்வளவு ஏன், இவங்க விடைத் தாளைத் திருத்தற நேரத்துல ஆசிரியர்கள் நினைச்சா நாட்டையே திருத்திடலாம்.

துடைக்க துடைக்கத்தான் தங்கம் பளபளக்கும். துவைக்க துவைக்கத்தான் துணி வெளுக்கும். அது மாதிரி படிக்க படிக்கத்தான் பரீட்சை கலகலக்கும். அதுவரைக்கும் படிக்காதவங் களுக்குப் பரீட்சைனாவே வெடவெடுக்கும்.

(சத்தம் கேட்கும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு:
thinkthoatta@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x