Published : 10 Dec 2019 01:03 PM
Last Updated : 10 Dec 2019 01:03 PM

ரோட்டுல பீட்டு

யுகன்

மாறும் மாறும் எல்லாமே மாறும் நம்மைக் கண்டு சிரித்தவர்களை திகைக்க வைப்போம் போவோம் எல்லோரும் வெற்றி தேடிப் போவோம் முடிவு இல்லை என்று முடிவு எடுப்போம்...

- துள்ளல் இசை பின்னணியில் ஒலிக்க இடைவெளி இல்லாமல் கோத்த வார்த்தைச் சரடுகளோடு ஒலிக்கிறது இந்த தமிழ் ராப். பிரபலமான புதிய பாடல்களையே நீட்டி, மடக்கி வெவ்வேறு தாளகதியில் கவர் வெர்ஷன்களைப் பாடுவது, பழைய பாடல்களை ‘ரீமிக்ஸ்’ வடிவில் பாடுவது எனப் புதுப்புது முயற்சிகளில் இசை சார்ந்து இளைஞர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். விளிம்புநிலை மக்களுக்கான வடிவமாகக் கானா உருவாகியிருப்பதுபோல் நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கத்து இளைஞர்களுக்கான வடிவமாக உருவெடுத்திருக்கிறது ‘இண்டிபெண்டன்ட் மியூசிக்’.

காதல், மகிழ்ச்சி, சோகம், நம்பிக்கை, நாட்டு நடப்பு என எந்தத் கருத்தையும் தங்களின் சொந்த மெட்டில் தாங்களே பாடல்களை எழுதிப் பாடும் வகை இது. இந்த வகை இசைப் பாணிக்கு மும்பை, கோவா, பெங்களூருவுக்கு அடுத்தபடியாக சென்னையிலும் ரசிகர்கள் உருவாகிவருகின்றனர்.

பஸ்கிங்

கல்லூரி மாணவர்கள், பல்வேறு பணிகளில் இருப்பவர்கள் இணைந்து ‘பீப்பிள் எக்ஸ்பிரஸிங் ஆர்ட்ஸ் கல்சுரல் எமோசன் – என்ற அமைப்பின்கீழ் ‘ரோட்டுல பீட்டு’, ‘பஸ்கிங்’ என்று பல நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றனர். ‘ரோட்டுல பீட்டு’ என்பது முறையாகக் காவல் துறையின் அனுமதி பெற்று கடைவீதிகள், வணிக வளாகங்களில் திடீரென்று தங்களின் தனிப்பாடல்களை அரங்கேற்றுவது.

‘பஸ்கிங்’ என்பது மேற்குலகில் பிரபலமாக இருப்பதுபோல பொது இடங்களில் சிறிய இசை நிகழ்ச்சிகளை எந்தவிதமான வாத்தியங்களும் இல்லாமல் சத்தங்களை உண்டாக்கிப் பாடி நிதி திரட்டும் வடிவம். `பீஸ்’ அமைப்பில் பாடல்களை எழுதிப் பாடும் ‘ராப்பர்’களில் ஒருவரான ரத்தீஷ் இசை நிகழ்ச்சிகள் குறித்துப் பேசினார்.

``மேடைதான் எல்லாருக்கும் தேவையான ஒன்றாக இருக்கிறது. நாங்கள் பின்பற்றுவது ஹிப்ஆப் கல்சரைத்தான். எங்களின் தனிப்பட்ட உணர்வுகளைப் பாட்டுகளாகப் பாடும் அதே சமயத்தில், சமூகத்தில் எங்களைப் பாதிக்கும் விஷயங்களைப் பற்றியும் பாடிவருகிறோம். ‘விடியட்டும்’ என்னும் பாடல் காவிரிப் பிரச்சினையைப் பற்றியது” என்கிறார் ரத்தீஷ்.

சொல்லிசைக் கலைஞர்கள்

`காதல் ஒரு தேவையில்லாத வேலை’ என்னும் காதலைப் பற்றி ஒரு பாடல் கவனம் ஈர்க்கிறது. ‘ராப்பு’க்கு தமிழில் சொல்லிசை என்கிறார்கள் இவர்கள். இவர்களின் குழுவில் சொல்லிசைக் கலைஞராக இருந்த சந்தோஷ், ‘சங்கன்’ என்னும் பெயரில் ஹிப்ஆப் தமிழாவோடு இணைந்து ஒரு பாடலை கொண்டுவர இருக்கிறாராம்.
“யார் வேண்டு மானாலும் பீஸ்-ல் இணையலாம்.

அடுத்து வரும் பாடலின் சப்ஜெக்ட், எல்லோரும் தப்பு பண்ணுகிறோம் என்பதைப் பற்றியது. எல்லோரும் தங்களின் தவறைச் செய்யாமல் இருந்தால், சமூகம் தானாகவே திருந்தும் என்னும் கருத்தை அடிப்படையாகக் கொண்டது. யாருடைய கருத்தையும் குறிப்பிட்டுச் சொல்லாமல் பொதுவாக நம்முடைய செயல்முறைகளில் தேவைப்படும் மாற்றங்களை வலியுறுத்துவதே ‘பீஸ்’ன் இப்போதைய கருத்தாக வைத்திருக்கிறோம்” என்கின்றனர் பீஸ் குழுவினர்.

பீஸில் பத்து ராப்பர்கள் இருக்கிறார்கள். சஞ்சய் என்று ஒரு நடனக் கலைஞர். ரெக்கார்டிங் செய்பவர், பீட் புரடியூசர், மிக்ஸிங் செய்பவர், ஒளிப்பதிவு செய்பவர், சமூக வலைதளங்களைப் பராமரிப்பவர் எனப் பலரும் இருக்கின்றனர். திரைப்படங்களுக்குப் பின்னணி பாடும் கலைஞர்களுக்கு இணையாக இல்லாவிட்டாலும் சுயாதீனக் கலைஞர்களுக்கான மதிப்பும் சமூகத்தில் அதிகரித்து வருவது இசை ரசிகர்களிடையே ஏற்பட்டிருக்கும் ஆரோக்கியமான முன்னேற்றம்.

பீஸ் அமைப்பில் இணைய: https://bit.ly/2rekexR

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x