Published : 09 Dec 2019 13:29 pm

Updated : 09 Dec 2019 13:30 pm

 

Published : 09 Dec 2019 01:29 PM
Last Updated : 09 Dec 2019 01:30 PM

கார்வி எனும் கருப்பு ஆடு?

karvy

சொக்கலிங்கம் பழனியப்பன்,
டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மெண்ட் பி.லிட். prakala@gmail.com

பெரும்பாலான சேமிப்பு திட்டங்களில் வருமானம் குறைந்துவிட்டதால், பெருவாரியான மக்கள் பங்குச் சந்தைகளை நோக்கி படையெடுக்கிறார்கள். தங்கத்திலும் கூட இப்போதெல்லாம் முதலீடு செய்ய யோசிக்கிறார்கள். ரிஸ்க் எடுக்க முடிந்தவர்கள் நேரடியாக பங்குச் சந்தைகளிலும், ரிஸ்க் எடுக்க முடியாதவர்கள் மாதாந்திர எஸ்ஐபி மூலமும் பங்குச் சந்தையில் இறங்கி களமாடத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், பங்குச் சந்தை மீதான மக்களின் முழு நம்பிக்கையையும் சில மோசடிகள் தகர்த்துவருகின்றன.

கடந்த ஓரிரு வாரங்களாக கார்வி ஸ்டாக் புரோக்கிங் நிறுவன மோசடி குறித்த செய்திகள் தொடர்ச்சியாக வந்தவண்னம் இருக்கின்றன. இச்செய்திகளைப்பற்றி அலசி ஆராயும்முன், கார்வி குரூப் பற்றிய சில தகவல்களை அறிந்து கொள்வோம். கார்வி 1982-ம் ஆண்டு ஹைதராபாத்தில், 5 நபர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம். அதற்கு முன்பு வரை இந்த ஐவரும் ஒரு ஆடிட்டிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.

கார்வி கடந்த 30+ ஆண்டுகளில் நிதி சேவைத் துறையில் தனது கால்களை அழுத்தமாக பதித்து, பல்வேறு நிறுவனங்களை தொடங்கியது. தற்பொழுது 19 நிறுவனங்களை உள்ளடக்கிய குழுமமாக இது திகழ்ந்து வருகிறது. தற்பொழுது நாடு முழுவதும் 30,000 ஊழியர்களையும், 900 அலுவலகங்களையும் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட 400 நகரங்களில் இதன் அலுவலகங்கள் இருக்கின்றன. அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் இதன் நடவடிக்கைகள் உள்ளன. குழுமத்தில் முன்னோடியாக கார்வி ஸ்டாக் புரோக்கிங் லிமிடெட் நிறுவனம் இருந்து வருகிறது. இந்த நிறுவனம்தான் இப்பொழுது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

என்ன நடந்தது?

கார்வியிடம் கிட்டத்தட்ட 12 லட்சம் முதலீட்டாளர்கள் நாடு முழுவதும் டீமேட் கணக்கு வைத்துள்ளனர். பங்குகள் வாங்குவதும் விற்பதும் செபியில் (SEBI - Securities and Exchange Board of India) பதிவு செய்த புரோக்கர்கள் மூலம்தான் நடக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்த புரோக்கர்களில் ஒன்றுதான் கார்வி ஸ்டாக் புரோக்கிங். பங்கு வாங்க/விற்க டிரேடிங் மற்றும் டீமேட் கணக்குகளை புரோக்கிங் நிறுவனங்கள் திறப்பார்கள். இந்த டீமேட் கணக்கில்தான் முதலீட்டாளர்கள் வாங்கிய செக்யூரிட்டிகள் (பங்குகள், பாண்டுகள் போன்றவை) இருக்கும்.

டீமேட் கணக்கு என்பது எலக்ட்ரானிக் பாதுகாப்பு பெட்டகமாகும். டீமேட் கணக்குகள் திறக்கும் பொழுது பவர் ஆஃப் அட்டார்னி ஒன்றை முதலீட்டாளரிடம் இருந்து புரோக்கர்கள் பெற்றுக் கொள்வார்கள். இந்த பவர் ஆஃப் அட்டார்னியை உபயோகித்துத்தான், நாம் விற்ற பங்கை நமது டீமேட் கணக்குக்கு எடுத்து, வாங்கியவர் டீமேட் கணக்கிற்கு மாற்றுவார்கள். பவர் ஆஃப் அட்டார்னி கொடுக்க வேண்டியது கட்டாயம் இல்லை என்றாலும், மெஜாரிட்டி முதலீட்டாளர்கள், சில சங்கடங்கள் இருப்பதால், கொடுத்து விடுவார்கள்.

தேசியப் பங்குச் சந்தை தனது மெம்பர்களை பொதுவாக ஆடிட் செய்யும். அவ்வாறு செய்த ஆடிட்டின் போது கார்வியில் குளறுபடிகள் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. அதை செபியிடம் ரிப்போர்ட் செய்துள்ளது. என்ன நடந்தது என்பதை இனி விரிவாகப் பார்ப்போம்.

கார்வி நிறுவனம் கிட்டத்தட்ட ரூ.2,800 கோடி மதிப்புள்ள பங்குகளை, முதலீட்டாளர்கள் கொடுத்திருந்த பவர் ஆஃப் அட்டார்னியை சட்டவிரோதமாக பயன்படுத்தி, முதலீட்டாளர்கள் டீமேட் கணக்கிலிருந்து தனது கணக்குக்கு மாற்றிக் கொண்டது.

கிட்டத்தட்ட 90,000 முதலீட்டாளர்களின் டீமேட் கணக்குகளிலிருந்து இவ்வாறு செக்யூரிட்டிகள் (சொத்துகள்) மாற்றப்பட்டுள்ளன. அவ்வாறு மோசடியாக தனது கணக்குக்கு மாற்றிய பங்குகளை அடமானமாக வைத்து, ஹெச்.டி.எஃப்.சி பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், இந்தஸ் இந்த் பேங்க், ஐசிஐசிஐ பேங்க் போன்ற நிறுவனங்களிடமிருந்து, பல நூறு கோடிகளை கடனாகப் பெற்றுள்ளது.

பஜாஜ் ஃபைனான்ஸ் மட்டும் ரூ.345 கோடியைக் கடனாக கார்விக்கு கொடுத்துள்ளது. ஐசிஐசிஐ வங்கி 642 கோடியும், இந்தஸ் இந்த் பேங்க் 132.50 கோடியும், ஹெச்.டி.எஃப்.சி வங்கி 350 கோடியையும் கடனாக கார்விக்கு கொடுத்துள்ளன. ஒரு சாமானியனிடம் ஒரு சிறிய கடனை கொடுப்பதற்கு முன்பு ஆயிரம் கேள்விகள் கேட்கும் வங்கிகள், கார்வி கொடுத்த சொத்து அந்நிறுவனத்தின் உண்மையான சொத்துதானா அல்லது மோசடி சொத்தா என்பதைக்கூட கவனிக்கத் தவறிவிட்டன! இதை கார்வியின் நிதி அறிக்கையை பார்த்தே எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

செபியின் சுற்றறிக்கைப்படி முழுவதுமாக பணம் செலுத்தப்பட்ட முதலீட்டாளர்களின் செக்யூரிட்டிகளை, அவரவரின் (உரிமையாளரின்) பெயரில் உள்ள டீமேட் கணக்கில் வரவு வைப்பது அவசியமாகும். கார்வி தற்பொழுது செய்திருக்கும் செய்கை சட்டத்துக்கு புறம்பானது. மேலும் தனது தார்மீகக் கடமையிலிருந்து தவறிவிட்டது.

எதற்காக கடன் வாங்கியது?

கார்வி குரூப்பில் பல நிறுவனங்கள் இருக்கின்றன என நாம் மேலே பார்த்தோம். அவ்வாறு உள்ள நிறுவனங்களில் ஒன்றுதான் கார்வி ரியால்ட்டி. கார்வி ஸ்டாக் புரோக்கிங்கில் கடன் வாங்கி கார்வி ரியால்ட்டி நிறுவனத்துக்கு பணம் கொடுத்துள்ளது. கார்வி ரியால்ட்டியில் பணம் என்ன செய்யப்பட்டது என்பது இன்னும் தெரியவில்லை.

மோசடி சொத்தின் நிலை?

தற்பொழுது செபி, கார்வி ஸ்டாக் புரோக்கிங்கின் செய்கைகளை முழுவதுமாக ஆய்வு செய்வதற்கு ஆணையிட்டுள்ளது. ஆய்வுகள் பல தரப்பிலிருந்தும் நடந்து வருகின்றன. ஆய்விற்குப் பிறகுதான் அப்பட்டமான உண்மைகள் விவரமாகத் தெரிய வரும். செபிதான் பங்குச் சந்தை குறித்த அனைத்துக்கும் கட்டுப்பாட்டு ஆணையமாகும். இது ஒரு அரசு அமைப்பாகும். செபி எப்பொழுதும் முதலீட்டாளர்கள் நலனை கருத்தில் கொண்டு துரிதமாக செயல்பட்டு வருகிறது.

குளறுபடிகள் நடந்தது தெரிய வந்ததும், செபி முதல்கட்ட நடவடிக்கையாக புதிய டிரேடிங்/ டீமேட் கணக்குகளை கார்வி திறக்கக் கூடாது என உத்தரவிட்டது. மேலும் கார்வி டீமேட் அக்கவுன்டில் இருந்து சொத்துகள் யாருக்கும் மாற்றப்படக்கூடாது எனவும் ஆணை பிறப்பித்தது செபி. தேசிய பங்குச் சந்தை மற்றும் பாம்பே பங்குச் சந்தை (NSE and BSE) ஆகிய இரு நிறுவனங்களும் மற்றும் பிற சந்தை நிறுவனங்களும் கார்வி ஸ்டாக் புரோக்கிங்கின் லைசென்ஸை, முறைகேடு நடந்துள்ளதால், ரத்து செய்தன. லைசென்ஸ் இல்லாமல் புரோக்கிங் நிறுவனம் செயல்பட முடியாது. அடுத்த கட்ட நடவடிக்கையாக, செபி இதுவரை வரலாற்றிலேயே நடக்காத அளவுக்கு ஒரு உன்னதமான ஆணையைப் பிறப்பித்தது!

என்.எஸ்.டி.எல் (NSDL - National Securities Depository Limited) மற்றும் சி.டி.எஸ்.எல் (CDSL - Central Depository Services (India) Ltd.) ஆகிய இரு நிறுவனங்களும்தான் இந்தியாவில் டீமேட் கணக்குகளில் உள்ள செக்யூரிட்டீஸ் அனைத்தையும் வைத்துள்ளன. சிம்பிளாக சொல்ல வேண்டுமானால் இந்த இரு நிறுவனங்களும் எலக்ட்ரானிக் பாதுகாப்பு பெட்டகங்களை நடத்துகின்றன. இந்த இரு நிறுவனங்களிடம்தான் அனைத்து பங்குகளும், பாண்டுகளும் எலக்ட்ரானிக் வடிவத்தில் உள்ளன. செபி, என்.எஸ்.டி.எல்-ஐ, கார்வி திருடிய சொத்துகள் அனைத்தையும் உரியவர்களின் கணக்குக்கு திருப்பி வரவு வைக்குமாறு ஆணை பிறப்பித்தது.

அந்த ஆணைப்படி டிசம்பர் 02-ம் தேதியன்று என்.எஸ்.டி.எல், கிட்டத்தட்ட 83,000 முதலீட்டாளர்களின் டீமேட் கணக்குகளில் கார்வி திருடிய சொத்தை (securities) வரவு வைத்துவிட்டது. மீதி இருக்கும் முதலீட்டாளர்கள் புரோக்கருக்கு பணம் கொடுக்க வேண்டி இருப்பதால், அவர்களின் சொத்துக்களை அவர்கள் டீமேட் கணக்குகளுக்கு மாற்றவில்லை.

அவர்கள் தங்களது பாக்கியை கொடுத்ததும், மீதி உள்ள முதலீட்டாளர்களுக்கும் அவர்களது டீமேட் கணக்கில் சொத்துக்கள் வரவு வைக்கப்படும். இது சாதாரண முதலீட்டாளர்களுக்கு, ஒரு பெரிய மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி என்றே கூற வேண்டும். இதுவரை பல இடங்களில் சில்லரை முதலீட் டாளர்கள்தான் ஏமாறுவார்கள். இச்செய்கை பன்பட்டு வரும் இந்தியப் பொருளாதாரத்தைக் காண்பிக்கிறது. நமது நாடு வளர்ச்சிப் பாதையில் இருப்பதையும் காண்பிக்கிறது.

வங்கிகள் என்ன செய்தன?

செபியின் இந்த ஆணையை பார்த்து அதிர்ந்துபோன பஜாஜ் ஃபைனான்ஸ், எஸ்.ஏ.டி-இடம் (SAT - Securities and Appellate Tribunal) மேல் முறையீடு செய்தது – செபி செய்தது தவறு என்று! செபிக்கு எஸ்.ஏ.டி தற்காலிகத் தடை விதித்தது. இதைக் கண்டு ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் இந்தஸ் இந்த் ஆகிய மூன்று வங்கிகளும் எஸ்.ஏ.டி- இடம் மேல் முறையீடு செய்தன. எஸ்.ஏ.டி டிசம்பர் 4-ஆம் தேதி, முதலீட்டாளர்களின் கணக்குக்கு மாற்றிய சொத்துகளை ரிவெர்ஸ் செய்ய முடியாது என்று வங்கிகள் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் கூறியுள்ளது. மேலும் செபியை டிசம்பர் 12-க்குள் இப்பிரச்சினைக்கு முடிவான ஆணையை பிறப்பிக்குமாறு கூறியுள்ளது.

இனிமேல் என்ன நடக்கலாம்?

செபி தனது முடிவில் உறுதியாக இருக்கிறது. மேலும் செபியின் ஜூன் 20, 2019 சுற்றறிக்கை இந்த விஷயம் குறித்து தெள்ளத் தெளிவாக விவரித்துள்ளது. அதன் முக்கிய் சாராம்சம்: புரோக்கர்கள் எக்காரணம் கொண்டும் முதலீட்டாளர்களின் சொத்துகளை (securities) மற்றும் பணத்தை தங்களுக்காகவோ அல்லது பிற முதலீட்டாளர்களுக்காகவோ பயன்படுத்தக் கூடாது என்பதுதான். ஆகவே வங்கிகளுக்கு சாதகமாக இருக்காது என்பதுதான் நமது கருத்து. சுதந்திர இந்தியாவில் இம்முறையாவது சில்லரை முதலீட்டாளர்கள் வென்றுள்ளார்கள் என்பது சந்தோஷமளிக்கக்கூடிய விஷயம்.

முதலீட்டாளர்கள் தங்களது டீமேட் கணக்குகளை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளலாம்?

1. உங்களது செல் ஃபோன் மற்றும் இ-மெயில் உங்கள் புரோக்கரிடம் மற்றும் டீமேட் கணக்கில் சரியாக உள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
2. பவர் ஆஃப் அட்டார்னி கொடுக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. நீங்களே தினசரி ஆப்பரேட் செய்ய முடியும் என்றால், பவர் ஆஃப் அட்டார்னி தேவையில்லை.
3. புரோக்கிங் அக்கவுன்ட் ஒரு நிறுவனத்திடமும், டீமேட் கணக்கு மற்றொரு நிறுவனத்திடமும் வைத்துக்கொள்வது மிகவும் பாதுகாப்பானது - சில சங்கடங்கள் உள்ளதைத் தவிர!
4. நீங்கள் வாங்கி விற்கும் பொழுதெல்லாம், உங்களுக்கு கான்ட்ராக்ட் நோட் அன்றே வந்துவிடுகிறதா என்று கவனித்துக் கொள்ளுங்கள்.
5. என்.எஸ்.டி.எல் மற்றும் சி.டி.எஸ்.எல் ஆகிய நிறுவனங்களிடமிருந்து மாதந்தோறும் வரும் ஸ்டேட்மென்டை நீங்கள் வியாபாரம் செய்ததுடன் ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்.
6. உங்களின் முதலீட்டுத் தொகை குறைவு என்றால், டீமேட் கணக்கு வைத்து பங்குகள் வாங்குவதைவிட, பங்குசார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது சிறந்தது மற்றும் பாதுகாப்பானது.
7. மியூச்சுவல் ஃபண்டுகளில் நீங்கள் முதலீடு செய்பவர் என்றால், டீமேட் கணக்கு அவசியமில்லை. மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளை ஃபிஸிக்கலாக (physical) வைத்துக் கொள்வது சிறந்தது.
8. ஏதும் சந்தேகமிருந்தால், செபியிடம் புகார் செய்யத் தயங்காதீர்கள்!

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு கார்வியினால் ஏதும் பாதிப்பா?

கார்வி ஃபின்டெக் என்ற நிறுவனம் பல மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு பின் அலுவலகமாக (back office) செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் ஸ்டேட்மெண்ட் தயாரிப்பது, விண்ணப்பங்களை பிராசஸ் செய்வது போன்ற செயல்களை செய்த வருகிறது.

இந்நிறுவனத்திடம் எந்தவிதமான செக்யூரிட்டிகளை மியூச்சுவல் ஃபண்டுகள் வைத்துக் கொள்ளவில்லை. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அனைத்தும் தங்களது ஃபண்டுகளின் செக்யூரிட்டிகள் அனைத்தையும் கஸ்டடியனிடம் வைத்துள்ளன. கஸ்டடியனாக பல்வேறு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.

மேலும், கார்வி ஃபின்டெக் நிறுவனத்தின் தற்பொழுதைய மெஜாரிட்டி ஓனர் (83.25%) ஜெனரல் அட்லாண்டிக் என்ற அமெரிக்க பிஇ (PE – Private Equity) நிறுவனமாகும். ஆகவே மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் கவலை கொள்ளத் தேவையில்லை.


கார்விகருப்பு ஆடுKarvyநிறுவன மோசடிகார்வி நிறுவனம்முதலீட்டாளர்கள்டீமேட் கணக்குகள்மியூச்சுவல் ஃபண்ட்Private Equity

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author