Published : 09 Dec 2019 13:12 pm

Updated : 09 Dec 2019 13:12 pm

 

Published : 09 Dec 2019 01:12 PM
Last Updated : 09 Dec 2019 01:12 PM

நவீனத்தின் நாயகன் 04: புத்தகமே உலகம்

the-book-is-the-world

எஸ்.எல்.வி. மூர்த்தி
slvmoorthy@gmail.com

ஈலானின் அம்மா... மேவுக்கு வயது 11. பள்ளிப் படிப்பு. சக மாணவர் எரல் மஸ்க்கைச் (Errol Musk) சந்தித்தார். அழகும், அறிவும் கொண்ட பெண்ணை எரல் துரத்தத் தொடங்கினார். மே, ஆர்வம் காட்டவில்லை. அடுத்த ஏழு வருடங்கள் கல்லூரியிலும் பின்தொடரல். மே நெஞ்சம் கரைந்தது.

இருவரும் அடிக்கடி சந்திப்பு, நெருக்கம். எரல், ஒரு கட்டுமானக் கம்பெனியில் எஞ்சினீயராகச் சேர்ந்தார். மேயும், ஊட்டச்சத்து ஆலோசகராகத் தொழில் தொடங்கினார். இரு வீட்டார் சம்மதத்தோடு 1970–ல், மே-யின் 22-ம் வயதில் திருமணம். ஒன்பதே மாதங்களில், மகன் ஈலான் வரவு. 1972 – மகன் கிம்பல்; 1974 – மகள் டோஸ்க்கா.

வின் பாட்டிக்கு ஈலான் செல்லம். ஜோஷுவா தாத்தாவின் சாகசங்கள், விமானப் பயணங்கள் பற்றிப் பேரனுக்குக் கதைகதையாகச் சொல்லுவார். அந்த உலகம் சுற்றும் “வாலிபர்”, தன் பயணங்களை ஏராளமான ஸ்லைடுகளாகத் (Slides) தொகுத்து வைத்திருந்தார். வின், இவற்றை அடிக்கடி சினிமா போல் காட்டுவார். சின்ன வயதில், ஈலானுக்கு ஹீரோ ஜோஷுவா தாத்தா தான்.

ஈலான் அடிக்கடி விட்டத்தை வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருப்பான். யார் கூப்பிட்டாலும், பதில் தரமாட்டான். கேட்கும் சக்தி குறைவாக இருக்கிறதோ என்று வீட்டில் சந்தேகம். டாக்டரிடம் அழைத்துப்போனார்கள். ஏகப்பட்ட பரிசோதனைகள்.

மூக்கின் பின்புறம் காதுக்கு அருகே இருக்கும் “அடினாய்ட் சுரப்பி”யால் (Adenoid Gland) வந்த பிரச்சினை என்று தீர்ப்புச் சொன்னார்கள். அறுவை சிகிச்சை செய்து, சுரப்பியை நீக்கினார்கள். கேட்கும் சக்தி அதிகமானதோ இல்லையோ, பல புதிய சிக்கல்கள் - அடிக்கடி ஜூரம், வாந்தி, உணவை விழுங்குவதில் சிரமம், காது, தொண்டை வலிகள். இத்தனையோடும் வளர்ந்தான். பிறவியிலேயே, ஈலான் வித்தியாசமான கேரக்டர்.

விளையாடும்போது திடீரென தியானத்தில் மூழ்குவது போல் மவுனமாகிவிடுவான். அருகே போய் கத்தினால்கூட உணர்ச்சியே இருக்காது. இருந்த ஓரிரு நண்பர்களும் ``இவன் லூஸ் கேஸ்” என்று முடிவு கட்டிவிட்டார்கள். தம்பி, தங்கைக்கும் கூட சந்தேகம்தான். ஈலான் கவலையே படவில்லை. நிஜ உலகத்தைவிடக் கற்பனைச் சிறகு கட்டிப் பறப்பதில் அவனுக்குக் கொள்ளை ஆசை.

ஈலான் தனிமையில் இனிமை தேடினான். அவனுக்குக் கிடைத்த ஒரு புகலிடம் – புத்தகங்கள். முதலில் காமிக்ஸ். இந்தப்படக்கதைகளில் எல்லாம், உலகை அழிக்கும் ஒரு கெட்ட சக்தி வரும். ஸூப்பர்மேன், ஸ்பைடர்மேன், அயர்ன்மேன், கேப்டன்மார்வெல் என அசகாயசூரன் வருவார். கெட்ட சக்தியைப் பறந்து, பறந்து அடிப்பார், அழிப்பார். தன்னை சூப்பர் ஹீரோ வாகக் கற்பனை செய்துகொண்டு உலகத்தைக் காப்பாற்றுவதில் ஈலானுக்கு மகா த்ரில். மனதில் இந்தக் கதைகள் ஆழமாகப் பதிந்தன. அந்தத் தாக்கத்தால், மனிதகுலத்தை அழிவிலிருந்து தான் காப்பாற்றப் போகிறோம் என்னும் நம்பிக்கை.

படக்கதைகளிலிருந்து எடுத்துவைத்த அடுத்த அடி, அறிவியல் புனைவுக்கதைகள் (Science Fiction). ஈலான் தான் படித்தவற்றுள் மிகவும் பிடித்தவையாகக் கூறும் புத்தகங்கள்; Lord of the Rings – படைப்பாளி - ஜே.ஆர்.ஆர். டோல்கீன் (J.R.R. Tolkien). Foundation, Foundation and Empire, and Second Foundation என்னும் மூன்று நூல்கள் - ஐஸக் அஸிமோவ் ((Isaac Asimov) எழுதியவை.

The moon is a harsh mistress – ராபர்ட் ஹைன்லைன் (Robert Heinlein) படைப்பு. The Hitchhiker’s Guide to the Galaxy - டக்ளஸ் ஆடம்ஸ் (Douglas Adams) உருவாக்கம். டோல்கீன் இங்கிலாந்து நாட்டு எழுத்தாளர் (1892 – 1973). ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழக ஆங்கிலப் பேராசிரியர். மாயவாத வித்தைகள், அமானுஷ்ய நிகழ்ச்சிகள், விசித்திர மிருகங்கள் ஆகியவை கொண்ட படைப்புகள் “நவீன கனவுருப்புனைவு இலக்கியங்கள்” (Fantasy) என்று அழைக்கப்படுகின்றன.

டோல்கீன், இத்தகைய இலக்கியத்தின் தந்தையாகக் கருதப்படுகிறார். த லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் (The Lord of the Rings), த ஹாபிட் (The Hobbit), தி சில் மரீலியன் (The Silmarillion) ஆகியவை இவரது மிகவும் அறியப்பட்ட படைப்புகள். த லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ், மூன்று பாகங்களும், 1,216 பக்கங்களும் கொண்டவை. 38 மொழிகளில் பெயர்க்கப்பட்டிருக்கிறது. விற்பனை – 15 கோடிப் பிரதிகள்.

கதைச் சுருக்கம்: ``ஹாபிட்” என்பவர்கள் கற்பனையான குள்ள இனத்தவர். இவர்களுள் ஒருவருக்கு, பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு மோதிரம் கிடைக்கிறது. அது உலகத்தை அழிக்கும் கெட்ட சக்தி கொண்டது. அதை அணிபவரை யாரும் பார்க்க முடியாது. எரிமலையில் போட்டுச் சாம்பலாக்க ஹாபிட்கள் முயற்சி செய்கிறார்கள்.

அதை சவ்ரான் (Sauron) என்னும் தீயசக்தி அவர்களைத் தடுக்கிறது. யார் ஜெயிப்பார்கள்? ஐஸக் அஸிமோவ் (1920 – 1992) ரஷ்யாவில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்தவர். பாஸ்ட்டன் பல்கலைக் கழகத்தின் (Boston University) உயிர்வேதியியல் (Biochemistry) பேராசிரியர். அறிவியல், விஞ்ஞானக் கற்பனைக் கதைகள் என 500 நூல்களுக்கும் அதிகமாக எழுதியவர்.

The Foundation Trilogy என்னும் 752 பக்கப் புத்தகம். 50,000 வருடங்களுக்குப் பிறகு பிரபஞ்சம் எப்படி இருக்கும் என்று கனவு காண்கிறது. செவ்வாய், சுக்கிரன் ஆகிய கிரகங்களையும், விண்மீன்களையும் உள்ளடக்கிய Galactic என்னும் பெயர் கொண்ட சாம்ராஜ்ஜியம் இருக்கிறது. பூமியிலிருந்து பல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் புலம் பெயர்ந்து வந்த மனிதர்கள் அங்கே வசிக்கிறார்கள்.

பூமியில் வசிக்கும் கணிதப் பேராசிரியருக்கு வருங்காலத்தை அறியும் அற்புத சக்தி கிடைக்கிறது. Galactic சாம்ராஜ்ஜியம் அழியப்போவது அவர் ஞானக்கண்களுக்குத் தெரிகிறது. அதற்குப் பின் 30,000 ஆண்டுகளுக்கு வரப்போவது இருட்டு, கும்மிருட்டு.

அதற்குள், மனிதகுலம் சேமித்துவைத்திருக்கும் அத்தனை அறிவுப் பொக்கிஷத்தையும் தொகுத்துப் பாதுகாக்கத் திட்டமிடுகிறார். சாம்ராஜ்ஜியம் அழிந்ததா, இல்லையா? பேராசிரியர் தன் லட்சியத்தில் ஜெயித்தாரா இல்லையா? இதுதான் கதைச் சுருக்கம்.

ராபர்ட் ஹைன்லைன் (1907 – 1988) அமெரிக்க எழுத்தாளர். அறிவியல் புதினங்களின் முன்னோடிகளுள் ஒருவர். விண்வெளிப் பயணம், விண்கலன்கள் பற்றி ஆழமாக, சுவாரசியமாக எழுதியவர். The moon is a harsh mistress புத்தகத்தின் சுருக்கக் கதை - சந்திர மண்டலத்தில் 30 லட்சம் மனிதர்கள் வசிக்கிறார்கள். கிரிமினல்கள், அரசியல் காரணங்களுக்காக நாடு கடத்தப்பட்டவர்கள்.

இவர்கள் வசிக்கும் காலனி பூமியிலிருந்து நிர்வகிக்கப்படுகிறது. சந்திர மண்டலத்தார் புரட்சிக் கொடி தூக்குகிறார்கள். டக்ளஸ் ஆடம்ஸ் (1952 – 2001) இங்கிலாந்து எழுத்தாளர். பி.பி.சி. வானொலியில் The Hitchhiker’s Guide to the Galaxy என்னும் தொடர் நிகழ்ச்சி நடத்தினார். நகைச்சுவை நிறைந்த தொடருக்கு மாபெரும் வரவேற்பு. புத்தகமாக வெளியிட்டார். ஒரு கோடிப் பிரதிகள் விற்பனை.

Lord of the Rings சிறுவர்களும் படிக்கும் புத்தகம். ராபர்ட் ஹைன்லைன், ஐஸக் அஸிமோவ், டக்ளஸ் ஆடம்ஸ் ஆகிய மூவர் படைப்புகளும் சிறுவர்களுக்கானவையல்ல. இந்தப் பாதிப்பால், சந்திரனிலும், செவ்வாய், சுக்கிரன் கிரகங்களிலும் மனிதர்கள் குடியேறி வசிப்பது பற்றிய கனவுகள் எப்போதும் ஈலான் கண்கள் முன்னால் நடனமாடின.
பள்ளி 2 மணிக்கு முடியும். அவன் வீட்டுக்கு வரமாட்டான்.

உள்ளூர்ப் புத்தகக் கடைக்குப் போவான். 6 மணிக்கு அவர்கள் மூடும்வரை அங்கேதான். தம்பி கிம்பல் சொல்கிறார்,``தினமும் பத்து மணிநேரம் புத்தகங்கள் படிப்பான். விடுமுறை நாட்களில் தினமும் இரண்டு குண்டுப் புத்தகங்கள்.” குடும்பத்தில் எல்லோரும் சேர்ந்து போகும்போது, திடீரென ஈலானைக் காணாமல் தேடுவார்கள். ஏதாவது புத்தகக் கடையைப் பார்த்திருப்பான். அங்கே ஐக்கியமாகியிருப்பான்.

ஈலானின் படிப்புப் பசிக்குத் தீனி போட உள்ளூர்ப் புத்தகக் கடையாலும் முடியவில்லை. கலைக் களஞ்சியங்கள் (Encyclopaedia) படிக்கத் தொடங்கினான். இவை, பெரும்பாலும், அகரவரிசையில் தொகுக்கப்பட்டவை. தலையணை சைஸில் இருக்கும். உதாரணமாக, Encyclopdia Britannica* கலைக் களஞ்சியம், 32 புத்தகங்கள், 32,640 பக்கங்கள். இவற்றைத் தகவல் தேடலுக்காக மட்டுமே பயன்படுத்துவார்கள். புத்தகமாகப் பக்கத்துக்குப் பக்கம் படித்த ஒரே ஆள், ஈலான் மட்டுமாகத்தான் இருக்கவேண்டும்.

அதுவும், பள்ளிக்கூடம் போகும் வயதில்! மேலெழுந்தவாரியாகப் படிக்கமாட்டான். ஆழமாக. இரண்டு கலைக் களஞ்சியங்களைப் படித்து முடித்தான். அவனுக்கு ஞாபக சக்தி மிக அதிகம். ஆகவே, எதைக் கேட்டாலும், அறிவுபூர்வமாகக் கொட்டுவான். அவனே, நடமாடும் கலைக் களஞ்சியமானான். (இது ரீல் போலத் தோன்றலாம். ஆனால், முழுக்க முழுக்க நிஜம்.)

* கூகுள் தேடல் வந்தபின், Encyclopdia Britannica புத்தகம் வாங்குவோர் எண்ணிக்கை குறைந்தது. 2010–க்குப் பின் அச்சடிப்பதை நிறுத்திவிட்டார்கள். இப்போது, britannica.com என ஆன்லைனில் மட்டும். கட்டணத்தில்.

(புதியதோர் உலகம் செய்வோம்!)


நவீனத்தின் நாயகன்புத்தகமே உலகம்ஈலானின் அம்மாErrol Muskதியானம்The Hobbit

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author