Published : 09 Dec 2019 12:51 PM
Last Updated : 09 Dec 2019 12:51 PM

அலசல்: இலக்கை எட்டியுள்ளோமா?

அரசு ஆண்டுதோறும் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டுகிறதா என்று எப்போதாவது எந்த அரசாவது மறு பரிசீலனை செய்துள்ளதா அல்லது அறிவிக்கப்பட்ட திட்டங்களில் எத்தனை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன, எவ்வளவு திட்டங்கள் கிடப்பில் உள்ளன, நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் எந்த அளவு எட்டப்பட்டுள்ளது என்பதை அறிவிக்கின்றனவா என்பது கேள்விக்குறியே.

இது ஒருபுறம் இருக்கட்டும், நீண்ட கால அடிப்படையில் தொலைநோக்கு திட்டங்கள் மற்றும் குறிப்பிட்ட காலத்தில் இந்தியா எட்ட வேண்டிய இலக்கை எட்டியுள்ளதா என்பதும் கட்டாயம் பரிசீலிக்கப்பட வேண்டிய விஷயம்.

2000-வது ஆண்டு தொடக்கத்தில் அதாவது 21-ம் நூற்றாண்டில் அடியெடுத்து வைக்கிறோம், இந்த நூற்றாண்டுகளில் எவற்றை எட்டப் போகிறோம் என அரசு அறிவித்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளனவா என்பதை திரும்பிப் பார்க்க வேண்டிய தருணமிது.

குறிப்பாக 2020-ல் இந்தியாவின் நிலை எந்த அளவுக்கு உயர்ந்திருக்கும் என 20 ஆண்டுகளுக்குமுன் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எந்த அளவுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளன. எந்த அளவுக்கு முன்னேறியுள்ளோம் என்பதை இந்தியக் குடிமக்களாகிய நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியது கட்டாயமே. நம்மை ஆட்சி செய்யும் கட்சிகள் நாட்டையும், குடிமக்களையும் எந்த அளவுக்கு மேம்படுத்தியுள்ளன என்று பார்க்க வேண்டியதும் அவசியமே.

ஆண்டுக்கு 8% முதல் 9 சதவீத பொருளாதார வளர்ச்சி எட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த இலக்கு 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரையில் எட்டப்பட்டது. அதற்குப் பிறகு இறங்குமுகம்தான். 2020-ம் ஆண்டில் நாட்டில் முழுவதுமாக ஏழ்மை ஒழிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஏழ்மை கணிசமாக ஒழிக்கப்பட்டது. ஆனால் இன்னமும் 60 சதவீத மக்களின் தினசரி வருமானம் ரூ.200-க்கும் குறைவாக உள்ளது. மனித வாழ்நாள் காலம் உயர்த்தப்படும் என்பதில் ஓரளவு எட்டப்பட்டுள்ளது. இப்போது இந்தியர்களின் ஆயுள்காலம் சராசரியாக 69 ஆக உள்ளது. ஆனால் சீனா, பிரேசிலில் இது 75 வயதாக உள்ளது.

வேலை இல்லாத் திண்டாட்டம் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை இல்லாத் திண்டாட்டம் தற்போது தலைவிரித்தாடுகிறது. இந்தியாவில் கல்லூரி படிப்பை எட்டுவோர் விகிதம் 23 சதவீதம் மட்டுமே. இது அமெரிக்காவில் 87 சதவீதமாகவும், இங்கிலாந்தில் 57 சதவீதமாகவும், சீனாவில் 39 சதவீதமாகவும் உள்ளது. 50 கோடி மக்களுக்கு மருத்துவ வசதி கிடைக்க ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டது.

ஆனால் இன்னமும் 80 சதவீத மக்களுக்கு உரிய மருத்துவ வசதி கிடைக்காத நிலைதான் நிலவுகிறது. தகவல் தொழில்நுட்பத் துறை மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு என்ற இலக்கைக் காட்டிலும் 30 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. அத்துடன் ஐடி சார்ந்த துறைகளில் 80 லட்சம் பேர் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனர். விமான பயணிகளின் எண்ணிக்கை 2000-வது ஆண்டில் 1.4 கோடியாக இருந்தது. இது 10 மடங்கு அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டது. 2010-ல் பயணிகளின் எண்ணிக்கை 1.4 கோடியாக உள்ளது.

உலக நாடுகளில் மனித வளம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியா 157-வது இடத்தில் உள்ளது. ஆனால் நமீபியா இந்தியாவை விட முன்னேறியுள்ளது. அமெரிக்கா 27-வது இடத்திலும், சீனா 44-வது இடத்திலும் உள்ளன.
நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்கும் காரணிகளில் நகர்மயமாதல் முக்கியமானது. ஆனால் இந்தியாவில் கிராமப்புற மக்கள் தொகைதான் அதிகம்.

2000-வது ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஆண்டுகால இலக்கில் இன்னமும் எட்ட வேண்டிய தூரம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் 2024-ல் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயரும் என்ற பிரதமரின் இலக்கை நான்கு ஆண்டுகளில் எட்டிவிட முடியுமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x