Published : 08 Dec 2019 10:15 am

Updated : 08 Dec 2019 10:15 am

 

Published : 08 Dec 2019 10:15 AM
Last Updated : 08 Dec 2019 10:15 AM

வானவில் பெண்கள்: ஜெயிப்பது மட்டுமே வெற்றியல்ல

the-rainbow-girls

எதிலுமே வெற்றிபெற்றவர்களைத்தான் நாம் கொண்டாடுகிறோம்; பங்கேற்பாளர்கள் குறித்து ஒருபோதும் பேசியதில்லை. ஆனால், சிலரது பங்கேற்பும் வெற்றிக்கு நிகரானதே. வாழ்க்கை நம்மைச் சக்கர நாற்காலியில் அமரவைத்துவிட்டதே என்று சோர்ந்துவிடாமல் பாரா ஒலிம்பிக்கில் களம் காணும் கனவுடன் தாய்லாந்து சென்ற இந்தியக் கூடைப்பந்தாட்ட வீராங்கனைகளின் முயற்சியே வெற்றிதான்.

தாய்லாந்தில் நவம்பர் 29 அன்று நடைபெற்ற ஆசிய ஓசியானியா உலக தகுதித்தேர்வுப் போட்டியில் (Asia Oceania zone championships) இந்திய அணிக்காக விளையாடிய 12 பெண்களும் இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள். அந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி 2020-ல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவிருக்கும் பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்கத் தகுதிபெறும் என்பதால் போட்டி மிகக் கடுமையாக இருக்கும்.

இந்தியாவும் தாய்லாந்தும் மோதிய முதல் போட்டியில் நம் வீராங்கனைகள் தோல்வியைத் தழுவினர் என்றபோதிலும், அது யானை பிழைத்த வேல் ஏந்தல் போன்ற பெருமிதத்தை வீராங்கனைகளுக்கு அளித்திருக்கிறது. காரணம், வாழ்க்கையில் எதிர்ப்படும் சின்ன சின்ன சோதனைகளையும் மன வருத்தங்களையும் கண்டு மலைத்துப்போய் உட்கார்ந்து விடுகிறவர்களுக்கு மத்தியில் எதையும் சாதிக்க ஊனம் தடையல்ல என்பதை இவர்கள் நிரூபித்துவருகிறார்கள்.

வியக்கவைக்கும் வீராங்கனைகள்

கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகளைத் தவிர மற்றவற்றைப் பலரும் கண்டுகொள்வதில்லை. பொதுவான விளையாட்டுகளுக்கே இந்த நிலை என்றால் மாற்றுத்திறனாளிகள் விளையாடும் விளையாட்டை மக்கள் எந்த அளவுக்கு வரவேற்பார்கள் என்பது புரியும். ஆனால், யாருடைய புகழுரைக்காகவும் காத்திருக்காமல் தன் போக்கில் இசைக்கின்ற குயிலைப் போல் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி பந்தைக் கூடைக்குள் போட்டு கோல் எடுப்பதொன்றே குறிக்கோளாக இவர்கள் செயல்படுகிறார்கள்.

சக்கர நாற்காலி கூடைப்பந்து பெண்கள் அணியில் இடம்பெற்றிருக்கும் கார்த்திகி படேல், இந்து, கீதா.சி, மீனாட்சி.ஜே, நிஷா குப்தா, ஜோதி.டி, ஆரத்தி. எஸ், ரேகா, இஷ்ரத், ஹிமா, சுசித்ரா ஆகியோர் தமிழகம், கர்நாடகம், டெல்லி, ஒடிஷா, உத்தராகண்ட், ஆந்திரம், ஜம்மு காஷ்மீர் என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து தேர்வாகியுள்ளனர். ஒவ்வொருவருக்கும் வலி மிகுந்த ஒரு கதையும் அதைக் கடந்துவந்த மற்றொரு கதையும் உண்டு.

மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு ஆகும் செலவு பொதுவான வீரர்களுக்கு ஆகும் செலவைவிட அதிகம் என்பதாலேயே பலர் இதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், இந்திய விளையாட்டு ஆணையமும் தன்னார்வலர் களும் சேர்ந்து சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி கூடைப்பந்து விளையாடும் இந்திய வீராங்கனைகளுக்குத் தேவை யான அடிப்படை உதவிகளைச் செய்துவருகின்றனர். இது நம் வீராங்கனைகளின் வாழ்க்கையில் முக்கியமான முன்னகர்வு.

லட்சியத்தை யார் தீர்மானிப்பது?

தற்போது இந்த அணியை வழிநடத்தும் தலைமைப் பயிற்சியாளரான கேப்டன் லூயிஸ் ஜார்ஜ், “இந்த அணியில் உள்ள சிலரைத் தவிர மற்ற பெண்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவர்கள். மற்ற விளையாட்டைப் போல் இதற்குப் போதுமான ஸ்பான்சர் கிடைக்காது. நான் இந்திய ராணுவத்தில் கேப்டனாகப் பணிபுரிந்துள்ளேன். இவர்களுக்குப் பயிற்சியளிப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

உட்கார்ந்தபடியே விளையாடுவதால் இவர்களின் கைத்திறன் அதிகமாக இருக்க வேண்டும். அதற்கேற்ப சத்தான உணவைச் சாப்பிட வேண்டும்” என்று மிக முக்கியமான கருத்தைப் பகிர்ந்துகொண்டார். காரணம் இந்தியக் குடும்பங்களில் ஆண் குழந்தைகளைவிடப் பெண் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் சரிவரக் கிடைப்பதில்லை என்பதையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்.

அணியின் கேப்டன் கார்த்திகி படேல், கார் விபத்தால் முதுகுத் தண்டு பாதிக்கப்பட்டவர். இடுப்புக்குக் கீழே கிட்டத்தட்ட செயலிழந்த நிலையில், வாழ்க்கையைச் செயலூக்கத்துடன் வடிவமைத்துக்கொண்டவர். “நான் இந்த அணியின் கேப்டனாக இருப்பதில் மகிழ்ச்சி. இந்த அணியில் உள்ள ஒவ்வொருவரும் திறமையானவர்கள். 2008-ல் நடந்த விபத்தில் எனக்கு முதுகெலும்பில் அடிபட்டது.

அதிலிருந்து என்னால் நடக்க முடியாமல் போனது. என் அம்மாவும் அப்பாவும் இறந்துட்டாங்க. எனக்கு ஒரு அக்காவும் தம்பியும் இருக்காங்க. எனக்குத் திருமணமாகி என்னுடைய கணவருடன் வாழ்ந்துவருகிறேன். நான் இங்க வந்து விளையாடுவதற்கு அவரும் ஒரு காரணம். நான் வேலைக்குச் சென்ற சில மாதங்களிலேயே எனக்கு விபத்து ஏற்பட்டது. நம் லட்சியத்தை விபத்து தீர்மானிக்கக் கூடாதில்லையா? அதனால்தான் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு காத்துக்கொண்டிருக்கிறேன்” என்கிறார் கார்த்திகி படேல்.

அரசு உதவ வேண்டும்

இந்த அணியில் தமிழகம் சார்பாகத் தேர்வாகியிருக்கும் ஒரே பெண் இந்து. “குழந்தைப் பருவத்திலிருந்தே என்னால நடக்க முடியாது. ரொம்ப ஏழ்மையான குடும்பம் எங்களோடது. எனக்குத் தமிழக அரசு உதவினால் நல்லா இருக்கும். நான் இப்போ பயன்படுத்தும் இந்தச் சக்கர நாற்காலியை நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல் ஹாசன் வழங்கினார்” என்று சொல்லும் இந்து, களத்தில் இறங்கிவிட்டால் காரியமே கண்ணாக இருக்கிறார்.

இஸ்ரத் அக்தர், துறுதுறுவெனக் கவனம் ஈர்க்கிறார். காஷ்மீர் சார்பாக இந்திய அணிக்குத் தேர்வாகியிருக்கும் முதல் சக்கர நாற்காலி வீராங்கனை இவர். “ஆரம்பத்தில் என்னைக் காயப்படுத்திய என் கிராம மக்கள் இப்போது என்னை நினைத்துப் பெருமைப்படுவதாகச் சொல்கிறார்கள்” எனப் புன்னகைக்கிறார் இஸ்ரத்.

இந்த ஆண்டு பஞ்சாபில் நடந்த தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோதி, ஆந்திர மாநிலத்தின் பெய்லூரு கிராமத்தைச் சேர்ந்தவர். “உலகை அறிந்துகொள்ளும் வாய்ப்பை இந்த விளையாட்டு எனக்கு வழங்கியிருக்கிறது. அதை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு மேலும் உயரம் தொடுவேன்” என்கிறார் ஜோதி.

தளராத தன்னம்பிக்கை

சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி விளையாட வேண்டும் என்பதால் சக்கர நாற்காலி திறன்மிக்கதாக இருக்க வேண்டும். ஆனால், நம் இந்திய வீராங்கனைகள் பயன்படுத்தும் சக்கர நாற்காலிகள் திறன் குறைந்தவையாகவும் விலை குறைவானவையாகவும் உள்ளன.

சீனா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கொடுக்கப்படும் சக்கர நாற்காலிகள் மூன்று லட்சம் ரூபாய் வரை பெறுமானமுள்ளவை. நம் வீராங்கனைகள் 35 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சக்கர நாற்காலிகளைத்தான் பயன்படுத்துகின்றனர். அணிக்கு ஸ்பான்சர் செய்கிறவர்கள் இதுபோன்றவற்றிலும் கவனம் செலுத்தினால் வீராங்கனைகள் தங்கள் திறமையை முழுமையாக வெளிப்படுத்த ஏதுவாக இருக்கும்.

மாற்றுத்திறனாளி வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்திய சக்கர நாற்காலி கூடைப்பந்து கூட்டமைப்பை 2014-ல் தொடங்கினார் மாதவி. அவர் போலியோவால் பாதிக்கப்பட்டவர். பள்ளி இறுதியாண்டுவரை தன்னை மற்றவர்கள் சுமந்து சென்றனர் எனச் சொல்கிறார் மாதவி. “ஆரம்பத்துல விளையாட்டு மீது எனக்கு அவ்வளவா ஆர்வம் இல்ல. 2007-ல் செய்யப்பட்ட முதுகுத்தண்டு அறுவை சிகிச்சையினால என்னால நடக்க முடியாம போனது. முதுகுத்தண்டில் ஏற்பட்ட அழுத்தம் நுரையீரலைப் பாதித்து சுவாசச் சிக்கலையும் ஏற்படுத்தியது.

ஆனா, நான் சோர்வடையலை. அதன் பிறகுதான் விளையாட்டின் மீது ஆர்வம் வந்தது. நீச்சல் கற்றுக்கொண்டேன். மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழக நீச்சல் கூட்டமைப்பை 2011-ல் உருவாக்கினேன்” என்று சொல்லும் மாதவி, நீச்சலில் தேசிய அளவில தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார்.

இப்படி அனைவரும் கலகலப்பாகப் பேசிக்கொண்டிருக்க, பயிற்சியாளர் சத்தம் கொடுத்ததும் சட்டென அமைதி கவிகிறது அந்த விளையாட்டரங்கில். சக்கர நாற்காலிகளில் அமர்ந்தபடி பயிற்சியில் ஈடுபடுகிறார்கள் வீராங்கனைகள். பந்து ஒவ்வொரு கையாக மாறி கடைசியில் கூடைக்குள் விழுகிறது!


வானவில் பெண்கள்வெற்றியல்லவியக்கவைக்கும் வீராங்கனைகள்வீராங்கனைகள்லட்சியம்அரசு உதவ வேண்டும்அரசுதன்னம்பிக்கைRainbow girlsபெண்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like


More From This Category

hyundai-tucson

ஹுண்டாய் டக்சன்

இணைப்பிதழ்கள்

More From this Author