Last Updated : 08 Dec, 2019 10:16 AM

 

Published : 08 Dec 2019 10:16 AM
Last Updated : 08 Dec 2019 10:16 AM

களம் புதிது: ஒற்றுமையை உணர்த்திய நடைப்பயணம்

“உங்களோடு நாங்களும் நடந்து வரவிரும்புகிறோம். இப்போ வயலில் வேலை இருக்கிறது. அடுத்த முறை முன்கூட்டியே சொன்னீங்கன்னா நாங்களும் வருகிறோம். தினம் தினம் வன்முறையாலும் குடியாலும் மிகவும் பாதிக்கப்படுகிறோம் என்று வயல்களில் வேலைசெய்துகொண்டிருந்த பெண்கள் உற்சாகத்துடன் சொன்னபோது மாதவிடாயால் சிறிது சோர்வடைந்திருந்த எங்கள் கால்கள் அதன் பிறகு உற்சாக நடைபோட்டன” என்கிறார் இளம் மாணவி ஜனனி.

இவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர். இவருடன் இந்தப் பகுதியில் இருந்து நான்கு இளம் பெண்கள் வன்முறைக்கு எதிராகவும் போதைக்கு எதிராகவும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நவம்பர் 25 முதல் டிசம்பர் 4 வரை வடலூர், திருவண்ணாமலை ஆகிய இரு முனைகளிலிருந்து மேற்கொண்ட நடைப்பயணத்தில் கலந்துகொண்டனர்.

இவர்களைப் போன்று கிராமங்களிலிருந்தும் நகர்ப்புறங்களிலிருந்தும் சுமார் 300 பெண்கள் இந்த நடைப்பயணத்தில் கலந்துகொண்டனர். இவர்கள் தவிர ஆங்காங்கே பகுதிவாரியாக ஒரு நாளோ சில மணி நேரமோ கலந்துகொண்ட பெண்கள் ஏராளம்.

தானாக முன்வந்து நன்கொடை அளித்த பூ விற்கும் பெண்கள், குடித்த தேநீருக்குக் காசு வாங்க மறுத்த தேநீர்க்கடைக்காரர், நன்கொடையாக அளிக்க பணம் இல்லாமல் ரஸ்க் பாக்கெட்டுகளைத் தந்த பேக்கரி கடைக்காரர், ‘படிக்கும் பெண்களுக்கு எதற்கு ஊர்வலம், கொடி, போராட்டாமெல்லாம்; நீங்கல்லாம் எங்கே உருப்படப்போறீங்க’ என்று திட்டியவர்கள் என்று இந்தப் பத்து நாட்கள் நடைப்பயணத்தில் குழுவினர் பல அனுபவங்களைச் சந்தித்தனர்.

வலிகளில் இத்தனை விதங்களா?

“என் கணவர் குடித்துவிட்டு வந்து கொதிக்கிற எண்ணெய்யைக் கையில் வீசினார். வேலைக்குப் போகமாட்டார். ஒரு பைசாகூட வருமானம் கிடையாது. பூ கட்டும் வேலையில் தினசரி 300 ரூபாய் கிடைக்கும். அதை வைத்து இரண்டு குழந்தைகளைப் படிக்க வைக்கிறேன். வீட்டையும் கவனித்துக்கொள்கிறேன். என் கணவருக்கும் சாப்பாடு போடுகிறேன். போதைக்கு எதிராக நீங்கள் நடத்தும் இயக்கம் வெல்ல வேண்டும் என்று வாழ்த்துகிறேன்”

- பூ விற்றுக்கொண்டிருந்த பெண்ணின் கையில் ஆறிய தீக்காயங்களைப் பார்த்து ஏன் என்று கேட்டபோது அவர் சொன்னது இது.

“பள்ளிக்கூடம் தொலைவாக இருக்கிறது, பட்டா வேண்டும் என்பது போன்ற எங்களின் சில பிரச்சினைகளுக்காக விழுப்புரம் தொடங்கி சென்னை வரையிலான நடைப்பயணத்தை யோசித்துக் கொண்டிருக்கிறோம். மாதர் சங்க நடைப்பயணம், எங்களாலும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையைத் தந்திருக்கிறது. எங்களுக்காகவும் சேர்த்து இவ்வளவு செய்கிறீர்களே, நன்றி” என்று சொல்லி அன்போடு கைகளைப் பிடித்துக் கொண்டார்கள் இருளர் சமூக நலச் சங்கத்தைச் சேர்ந்த பெண்கள்.

டாஸ்மாக் வேண்டாம்

புதுச்சேரியில் நடைப்பயணப் போராளிளுக்கான வரவேற்புக் கூட்டத்தில் ஒரு மூதாட்டி வந்து உட்கார்ந்துகொண்டு பெண்கள் பேசுவதைக் கவனித்துக்கொண்டே இருந்தார். பிறகு, தன்னுடைய சொந்தக் கதையைச் சொல்ல ஆரம்பித்தார். மைக்கில் பேசுவீர்களா என்று கேட்டபோது உடனே ஒப்புக்கொண்டார். “என் கணவர் குடித்தே இறந்துவிட்டார். மகன் குடி நோயாளியாகத் தெருவில் உருண்டுகொண்டிருக்கிறான்.

எனக்கு 85 வயதாகிறது. வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்றால் ஒரு டாஸ்மாக் கடையைக் கடந்துதான் போக வேண்டும். ஒருமுறை அப்படிப் போனபோது, அந்தக் கடையில் இருந்தவர்கள் நல்ல பிகரா இருக்கியேன்னு சொன்னாங்க. அங்கே இருந்த ஒரு போலீஸ்காரரிடம் சொன்னேன். எந்த ரியாக்சனும் இல்லை” என்று கண்ணீர் மல்க பேசியவர் கடைசியாக, “சாராயக்கடை வேண்டாம் வேண்டாம்” என்று முழங்கினார். கூட்டம் அப்படியே உறைந்துநின்றது.

நெகிழவைத்த பெண்கள்

இந்த நடைப்பயணத்தில் கலந்துகொண்ட பெண்கள் பல வகையினர். கார்ப்பரேட் சாமியார் ஜக்கிக்கு எதிராக மலைவாழ் மக்களின் நில உரிமைக்காக போராடுகிற முத்தம்மாள், பயணத்தில் வீர நடை போட்டு உற்சாகமாகக் கலந்துகொண்டார். கோவை பன்னிமடையில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட ஏழு வயது குழந்தையை மறந்திருக்க மாட்டோம். அந்தக் குழந்தையின் தாயும் இந்த நடைப்பயணத்தில் கலந்துகொண்டார்.

நடைப்பயணக் குழுவில் வந்த ஒரு பெண் அப்பளத் தொழிலாளி. ஒரு நாளுக்கு 175 ரூபாய் கூலி. பத்து நாள் வருமானத்தை விட்டுவிட்டு, நிர்வாகத்தோடு போராடி விடுப்பும் பெற்று பயணக்குழுவோடு வந்தார். இரண்டு மகன்கள். அதில் சின்னவன் தோசை சுடுவானாம்; தக்காளி சட்னி அரைக்கத் தெரியுமாம். ஒரு குண்டான் நிறைய மாவு அரைத்து வைத்துவிட்டு வந்திருக்கிறார். மதிய சாப்பாடு மட்டும் செய்து தரச்சொல்லி பக்கத்து வீட்டில் அதற்காக 1,000 ரூபாயைக் கொடுத்துவிட்டு நடைப்பயணத்தில் பங்கேற்றுள்ளார்.

நடைப்பயணக் குழு போளூர் பகுதிக்கு வந்தபோது நடைப்பயணத்தால் ஈர்க்கப்பட்டு அடுத்த ஏழு நாட்கள் நானும் கலந்துகொள்கிறேன் என்று நடந்து வந்தார் பி.எஸ்சி. படிக்கும் மாணவி பாலசௌந்தரி. அரியலூர் மாவட்டத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் கூலி சரியாகக் கொடுக்கவில்லை என்பதற்காகப் போராடியவர் மீது போடப்பட்ட பொய் வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டுப் பின்னர் 15 நாள் ஜாமீன் கிடைத்தது.

அந்த 15 நாட்களில் 10 நாட்களை நடைப்பயணத்தில் கழித்திருக்கிறார் ஒரு தோழி. மதுவால் பாதிக்கப்பட்டு நோயாளியாக மாறிய கணவனையும் குழந்தைகளையும் கூலி வேலை செய்து காப்பாற்றிவரும் மூன்று பெண்கள் தாமாக முன்வந்து செருப்புகூடப் போடாமல் கொட்டிய மழையையும் சுட்டெரித்த சூரியனையும் பொருட்படுத்தாமல் கலந்துகொண்டனர்.

சமூகத்துக்கான பயணம்

“நான் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவள். நான் தனிப் பெண். தனியாக வசிக்கிறேன் என்பதாலேயே வேலைக்குச் செல்லும் இடங்களில் சில ஆண்களால் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டேன். எனக்கு நீளமான முடி இருக்கும். இதுபோன்ற பிரச்சினைகளால் என் முடியைக் குட்டையாக வெட்டிக்கொண்டேன். எந்த நிறுவனத்திலும் தொடர்ந்து வேலை பார்க்க முடிவதில்லை.

பல கம்பெனிகளில் ஒரு வாரம், பத்து நாட்கள் சம்பளத்தைக்கூட விட்டுவிட்டு வேறு கம்பெனிக்கு மாறி இருக்கிறேன். என்னைப் போல் இனி எந்தப் பெண்ணும் கஷ்டப்படக் கூடாது என்பதால் என் பத்து வயது மகனைப் பக்கத்து வீட்டில் விட்டுவிட்டு இந்த நடைப்பயணத்தில் கலந்துகொண்டேன்” என்று ஒரு பெண் சொன்னபோது சுற்றியிருந்தவர்களின் கண்களில் கண்ணீர்.

நடைப்பயணம் என்பது நம் மரபில் உள்ளது. ஆண்டவனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காகக் குழுவாகவோ குடும்பமாகவோ பழனிக்கும் திருப்பதிக்கும் வேளாங்கண்ணிக்கும் நடப்பதைக் காணலாம். ஆண்டவனை நோக்கிய தனிப்பட்ட கோரிக்கைகளுக்காக நம்பிக்கையின் அடிப்படையில் நடைப்பெறும் பயணம் அது. ஆனால், இது தமிழகத்தின் ஒட்டுமொத்த பெண்கள், குழந்தைகள் வன்முறையற்று வாழ வேண்டும், பல குடும்பங்களைச் சீரழிக்கும் போதையின் கோரப்பிடியிலிருந்து தமிழகம் மீள வேண்டும் என்று அனைவருக்குமான கோரிக்கைக்காக நடைப்பெற்ற பயணம்.

இந்த நடைப்பயணத்துக்கு மாநிலம் முழுவதும் கிடைத்த வரவேற்பு நெகிழ்ச்சியடையச் செய்த அதே வேளையில், தாம்பரத்தில் நுழைந்த பிறகு சிறிது தொலைவுகூட நடக்கக் காவல் துறை அனுமதிக்கவில்லை. நமது ஜனநாயக வெளி குறைந்துகொண்டே வருகிறது. நமக்கான வெளிகளை மீட்டெடுக்க வேண்டுமானால் இத்தகைய ஒன்றுகூடலும் போராட்டங்களும் அதிகரிக்க வேண்டும்.

கட்டுரையாளர், சமூகச் செயற்பாட்டாளர்.
தொடர்புக்கு: veni0211@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x