Published : 08 Dec 2019 10:20 AM
Last Updated : 08 Dec 2019 10:20 AM

முகங்கள்: கிராமங்களை ஒளிரச் செய்வதே இலக்கு

ச. மணிகண்டன்

உலக நாடுகளிடையே அதிகாரப் போட்டி நிலவிவரும் அதேவேளையில், தொழில்நுட்பப் போட்டியும் சேர்ந்துகொண்டுவிட்டது. கல்வி, சுகாதாரம், வணிகம், அறிவியல், விளையாட்டு உட்பட அனைத்துத் துறைகளிலும் தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக, வேலைவாய்ப்புக்குத் தொழில்நுட்பத் திறன் அவசியமானதாக மாறிவருகிறது. அந்த வகையில், எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) முக்கிய இடத்தைப் பெறப்போகிறது.

ஆனால், இதுபோன்ற தொழில்நுட்ப அறிவெல்லாம் கிராமப்புற மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருக்கும் நிலையை மாற்ற முயன்றுவருகிறார் சூரியபிரபா.
தொழில்முனைவோரும் ‘யூ கோட் சொல்யூசன்ஸ்’ ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் நிறுவனருமான இவர் தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர். கிராமப்புற மாணவர்களுக்குச் செயற்கை நுண்ணறிவுத் திறன் கிடைக்கும் வகையில், அவர்கள் படிக்கும் பள்ளிக்கே சென்று இலவசமாகப் பயிற்சி அளித்துவருகிறார் .

சர்வதேச அங்கீகாரம்

அமெரிக்காவை மையமாக வைத்துச் செயல்படும் ‘வுமன் இன் ரோபோடிக்ஸ்’ என்ற லாப நோக்கமற்ற அமைப்பு, ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உலக அளவில் பெண்களின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதுடன், அதில் சிறந்து விளங்கும் 30 பெண்கள் பட்டியலை, ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. 2019-ல் வெளியான பட்டியலில், இந்தியாவிலிருந்து இடம்பெற்ற ஒரே நபர் சூரியபிரபா.

“இந்தச் செயற்கை நுண்ணறிவு, நம் வாழ்க்கையில் ஏற்படுத்தப்போகும் மாற்றங்களை அறிய ஒருபுறம் ஆர்வமாக இருந்தாலும், மறுபுறம் அச்சமாகவும் இருக்கிறது. நம்மைவிட வேகமாகவும் நேர்த்தியாகவும் ஒரு நுண்ணறிவு இயந்திரத்தால் வேலைசெய்து முடிக்க முடியும். இதன்மூலம் கடினமான வேலையைக்கூடத் தொடர்ந்து செய்து முடிக்க முடியும். புதுமையும் படைப்பாற்றலும் கொண்ட வேலைவாய்ப்புகள்தான் இனி இருக்கப்போகின்றன” என்கிறார் சூரியபிரபா.

திறனற்ற மாணவர்கள்

தொழில்நுட்பம் படித்த 94 சதவீத மாணவர்கள், வேலைவாய்ப்புப் பெறுவதற்கான திறனுடன் இல்லை என்று இந்தியாவின் முன்னணித் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டெக் மஹிந்திராவின் தலைமைச் செயல் அதிகாரி குர்நானி கூறுகிறார். 2021-ல் செயற்கை நுண்ணறிவு தொடர்பான இரண்டு லட்சத்து 30 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகவிருக்கின்றன. ஆனால், 90 ஆயிரம் பேர் மட்டுமே அந்த வேலைக்கான திறன் பெற்றவர்களாக இருப்பர் என்று நாஸ்காம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

“இதற்குத் தீர்வுகாண ஏன் நாம் முயலக் கூடாது, அது ஏன் கிராமங்களை நோக்கி இருக்கக் கூடாது என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அதற்கான பதிலாகதான் இந்த ஸ்டார்ட்-அப் நிறுவனத்தைத் தொடங்கினோம்” என்று சொல்லும் சூரியபிரியா வரும்காலத்தில் உருவாகவிருக்கும் புது வகையான, அறியப்படாத வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ப நாம் மாணவர்களைத் தயார் செய்துள்ளோமா எனக் கேட்கிறார்.

“இந்த விஷயத்தில் அதிகம் பாதிக்கப்படும் நாடு இந்தியாதான். காரணம், இங்குதான் மற்ற நாடுகளைக் காட்டிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம். அதனால், தொழில்நுட்பத் திறனின்மை பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். இதன் முக்கியத்துவத்தை அறிந்த ஆப்பிள், கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட முன்னணி அமெரிக்க நிறுவனங்கள், தங்கள் நாட்டு மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்காகப் பல்வேறு பயிற்சிகளை அளித்துவருகின்றன.

நம் நாட்டில் நகர்ப்புறங்களைக் காட்டிலும், கிராமப்புறங்களிலும் சிற்றூர்களிலும் வசிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம். வாழ்க்கையும் தொழில்நுட்பமும் இணைந்து பயணம்செய்ய வேண்டிய காலகட்டத்தில், இதனுடனான தொழில்நுட்பத் திறன் அனைத்து மாணவர்களையும் சென்றடைய வேண்டும். அதிலும் கிராமத்து மாணவரைச் சென்றடைந்தால்தான் அது முழுமைபெறும்” என்கிறார் அவர்.

கிராமப்புற மாணவனின் சாதனை

அனைவருக்கும் கல்வி சமம் என்கிறபோது, தொழில்நுட்பத்தைக் கற்க கிராமப்புற மாணவர்கள் நகரத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற நிலையில்லாமல், அவர்கள் இருக்கும் இடத்திலோ பள்ளியிலோ அறிவியல் ஆய்வகம் இருப்பதுபோல, செயற்கை நுண்ணறிவுக்கான ஆய்வகமும் அமைத்துப் பயிற்சி அளிக்க வேண்டும். இதற்கு வழக்கமான பாடமுறையாக இல்லாமல், மாணவர்களே தீர்வுகாணும் வகையில் சிறு சிறு செயல்முறைப் பாடத்திட்டமாக அமைக்க வேண்டும்.

சமுதாயத்தில் நடக்கும் மாற்றமும் முன்னேற்றமும் நாட்டின் முதுகெலும்பான கிராமங்களைச் சென்றடைந்தால்தான், அது முழுமை பெறும். நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் உறுதுணையாக இருக்கும் என்பதால் தொழில்நுட்பத் திறன் மேம்பாட்டுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். “விருதுநகர் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளியில் பயிற்சி வகுப்பு நடத்திவந்தோம். அந்தப் பள்ளி நெடுஞ்சாலையில் இருந்து 50 மீட்டர் தொலைவில் அமைந்திருந்தது. பல விபத்துகளைப் பார்த்துவந்த பள்ளி மாணவன் ஒருவனுக்கு, இதற்குத் தீர்வுகாண வேண்டுமென்ற எண்ணம் இருந்தது.

நீண்ட நாட்கள் சிந்தித்து ஓர் ஆலோசனையுடன் எங்களிடம் வந்த அவனை வழிநடத்தினோம். அது ஒரு ஸ்மார்ட் ஹெல்மெட். வாகன ஓட்டிகள் கண் அயர்ந்தால் அலாரம் அடிக்கும். இதை உருவாக்கியதற்காக, மாவட்ட அளவில் நடந்த போட்டியில் அந்த மாணவனுக்கு முதல் பரிசு கிடைத்தது. இந்த நிகழ்வுதான் கிராம மாணவர்களையும் கண்டுபிடிப்பாளர்களாக மாற்றலாம் என்ற தன்னம்பிக்கையை எங்களுக்கு அளித்தது.

மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களிலுள்ள கிராமப்புற அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த எட்டாயிரம் மாணவர்களுக்கு எங்களின் பயிற்சி சென்றடைந்துள்ளது. இவர்கள், வரும் காலங்களில் போட்டியிடப்போவது மாணவர்களுடன் அல்ல; இயந்திரங்களுடன்” என்கிறார் சூரியபிரபா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x