Published : 08 Dec 2019 10:24 AM
Last Updated : 08 Dec 2019 10:24 AM

பெண்கள் 360: கடற்படையில் முதல் பெண் பைலட்

தொகுப்பு: ரேணுகா

பிஹாரைச் சேர்ந்த துணை லெப்டினென்ட் ஷிவாங்கி, இந்தியக் கடற்படையின் முதல் பெண் பைலட்டாகப் பொறுபேற்றுள்ளார். கடற்படையில் பெண் விமானிகளைப் பணியமர்த்துவதற்கான ஒப்புதலை அமைச்சரவை 2018-ல் வழங்கியது. அதையடுத்து கடற்படை அகாடமியில் ஷிவாங்கி விமானப் பயிற்சியில் இணைந்தார். சில மாதங்களுக்குமுன் அவர் பயிற்சியை நிறைவுசெய்தார்.

பின்னர் டிசம்பர் 2 அன்று கொச்சியில் உள்ள கடற்படைப் பயிற்சித் தளத்தில் துணை லெப்டினென்டாகத் தன் பணியைத் தொடங்கினார் ஷிவாங்கி. கடற்படையில் டார்னியர் கண்காணிப்பு விமானப் பிரிவில் அவர் பணியாற்றவுள்ளார்.

“கடற்படையில் பல்வேறு பிரிவுகளில் பெண்கள் பணியாற்றிவருகிறார்கள். ஆனால், விமானப் பிரிவில் இந்தத் தொடக்கம் மற்ற பெண்களுக்கு உந்துசக்தியாக இருக்கும் என நம்புகிறேன். எதிர்காலத்தில் கடற்படை விமானப் பிரிவில் இணையும் பெண்கள் போர் விமானங்களை இயக்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்” எனக் கூறியுள்ளார் ஷிவாங்கி.

கண்ணீரை வரவழைத்த கண்கள்

மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் தீண்டாமைச் சுவர் விழுந்ததால் உயிரிழந்த தன்னுடைய இரு குழந்தைகளின் கண்களைத் தானம் செய்துள்ளார் கூலித் தொழிலாளி செல்வராஜ். நடூர் பகுதியில் துணிக்கடை உரிமையாளர் சிவசுப்பிரமணியன் என்பவர் தன்னுடைய வீட்டைச் சுற்றி 20 அடி உயரத்திலும் 80 அடி நீளத்திலும் சுற்றுச் சுவர் கட்டியுள்ளார்.

இந்தச் சுவர் ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் குடியிருப்புக்கு அருகே அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சுவர் பலவீனமாக உள்ளது எனப் பலமுறை புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர் மழையால் டிசம்பர் 2 நள்ளிரவில் சுவர் இடிந்து அருகிலிருந்த குடியிருப்புகளின் மேல் விழுந்துள்ளது. இதனால் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

நெஞ்சை உலுக்கும் இந்தக் கொடூரச் சம்பவத்தில் தன்னுடைய இரு வாரிசுகளையும் இழந்துள்ளார் செல்வராஜ். மகள் நிவேதா கல்லூரியிலும் மகன் ராமநாதன் பிளஸ் 1-ம் படித்துவந்துள்ளனர். டீக்கடையில் கூலித் தொழிலாளியாக உள்ள செல்வராஜ் சம்பவதன்று கடையிலேயே தங்கிவிட்டார். பின்னர் தகவல் தெரிவிக்கப்பட்டு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். வாரிசுகளைப் பறிகொடுத்த நிலையிலும் தன்னுடைய குழந்தைகளின் கண்களைத் தானமாக வழங்கியுள்ளார். செல்வராஜின் இந்தச் செயல் மனித நேயத்தின் அடையாளமாக உள்ளது.

நாட்டின் முதல் திருநங்கைச் செவிலி

தூத்துக்குடி சாயர்புரம் பகுதியைச் சேர்ந்த அன்பு ரூபி, அரசு மருத்துவமனையில் பணியமார்த்தப்பட்ட முதல் திருநங்கைச் செவிலி என்ற வரலாற்றுச் சிறப்புவாய்ந்த பெருமையைப் பெற்றுள்ளார். அழகப்பா பல்கலைக்கழகத்தில் நர்சிங் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார் அன்புரூபி. பள்ளிப் பருவத்தில் தன்னைத் திருநங்கையாக உணர்ந்துள்ளார்.

பொதுவாகத் திருநங்கையாக உணரும் குழந்தைகளை ஒதுக்கும் மனப்பான்மை சமூகத்தில் உள்ளது. ஆனால், அன்பு ரூபி தான் ஒரு திருநங்கை என வீட்டில் அறிவித்தபோது குடும்பத்தினர் ஆதரவாக இருந்துள்ளனர். படிப்பு முடிந்து தனியார் மருத்துவமனையில் மூன்றாண்டுகள் செவிலியாகப் பணியாற்றிய அவர், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் தேர்ச்சிபெற்று அரசு மருத்துவமனையில் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்.

நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை

“நான் வெங்காயத்தையும் பூண்டையும் சாப்பிடுவதில்லை. அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். எங்களுடைய குடும்பத்தில் வெங்காயத்தைப் பயன்படுத்துவதற்கான அவசியமில்லை” எனக் கூறியுள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். வெங்காய விலை உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலேவின் கேள்விக்கு அளித்த பதிலில்தான் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

கற்பனைக்கும் எட்டாத வன்முறை

உத்தரப் பிரதேச மாநிலம் உனாவில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட பெண், நீதிமன்றத்துக்குச் செல்லும் வழியில் குற்றம் சுமத்தப்பட்டவர்களாலேயே தீயிட்டுக் கொல்லப்படார். 23 வயதான அவரை 2018 டிசம்பர் மாதம் ஹரீஷ் திரிவேதி, ராம் கிஷோர் திரிவேதி, உமேஷ் பாஜ்பாய், சிவம் திரிவேதி, சுபம் திரிவேதி ஆகிய நால்வரும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கினர்.

கடும் போராட்டத்துக்குப் பிறகுதான் அந்தப் பெண்ணால் இது குறித்து வழக்குப் பதிவுசெய்ய முடிந்தது. இந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெற்றுவந்த கடந்த வாரம் வியாழக்கிழமை அன்று சாட்சி சொல்வதற்காக அவர் ரேபரேலி நீதிமன்றத்துக்குப் புறப்பட்டார்.

பிணையில் வெளிவந்த இருவர் உட்பட வழக்கில் இணைக்கப்பட்ட மூவரும் சேர்ந்து அந்தப் பெண்ணைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி, மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளனர். எரிந்த நிலையிலேயே ஒரு கி.மீ. தொலைவு ஓடியுள்ளார். இறக்கும் தறுவாயிலும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x