Published : 08 Dec 2019 10:28 AM
Last Updated : 08 Dec 2019 10:28 AM

களத்தில் பெண்கள்: போராட்டத்தின் வலிமையை உணர்த்திய கரங்கள்

எல். ரேணுகாதேவி

அன்றாடப் பணிகளின்போது சற்றே இளைப்பாறப் பலருக்கும் ஒரு கோப்பைத் தேநீர் கைகொடுக்கும். விளம்பரங்களிலும் நேரிலும் கண்ணுக்குப் பசுமையாகக் காட்சியளிக்கும் தேயிலைத் தோட்டங்கள், உண்மையில் அங்கே பணிபுரியும் தொழிலாளர்களுக்குச் சுமையாக மட்டுமே காட்சிதருகின்றன. குளிர் நிறைந்த காலைப்பொழுதில் ஆபத்தான மலைச் சரிவுகளின் நடுவே அட்டைகள் ரத்தத்தை உறிஞ்சும் சூழல் ஆகியவற்றுக்கு நடுவேதான் தேயிலைத் தோட்டங்களில் வேலைசெய்யும் பெண்கள் தேயிலைக் கொழுந்தைப் பறித்துக்கொண்டிருக்கிறார்கள்.

தென்னிந்திய மாநிலங்களில் தேயிலை உற்பத்தி அதிகம் நடைபெறும் பகுதிகளில் ஒன்று கேரளத்தில் உள்ள மூணாறு. இங்கு ஆண்டுக்கு சுமார் 2 கோடி கிலோ தேயிலை உற்பத்திசெய்யப்படுகிறது. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இங்கே தேயிலை உற்பத்தி நடைபெற்றுவருகிறது. இங்குள்ள பெரிய தேயிலைத் தோட்டங்களில் ஒன்றான கண்ணன் தேவன் தேயிலை நிறுவனத்துக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் தேயிலைத் தோட்டம் இருக்கிறது. இந்தத் தோட்டத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்துவருகிறார்கள். அதில் பெரும்பாலானோர் பெண்கள்.

இந்தத் தேயிலைத் தோட்டங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே வேலை செய்துவந்த பெண் தொழிலாளர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு நடத்திய ‘பொம்பிளை ஒருமை’ (பெண்பிள்ளை ஒற்றுமை) போராட்டம் தேசிய அளவில் கவனம் பெற்றது. அரசியல் கட்சிகள், தொழிற் சங்கங்களின் உதவியில்லாமல் பெண்கள் தன்னிச்சையாக ஒருங்கிணைந்து இந்தப் போராட்டத்தை நடத்தினார்கள்.

தலைமுறை தலைமுறையாய்

உழைப்புச் சுரண்டல் நடைபெறும் தொழில் துறைகளில் தேயிலைத் தோட்டங்களுக்கு முக்கியப் பங்குண்டு. இன்றளவும் ஒரு நாளைக்கு சுமார் 60 கிலோவில் இருந்து 100 கிலோ தேயிலை பறிக்க வேண்டிய கட்டாயத்தில் தொழிலாளர்கள் உள்ளனர். பல தலைமுறையாகத் தேயிலைத் தோட்டங்களில் வேலைசெய்துவந்தாலும் அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் வழங்கப்படவில்லை. தேயிலை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்குக் கட்டிக் கொடுக்கப்பட்ட பிரிட்டிஷ் காலத்து ஒண்டுக்குடித்தன வீடுகளில்தான் தற்போதும் தொழிலாளர்கள் வசித்துவருகிறார்கள்.

இவர்கள் வீட்டிலிருந்து தேயிலைத் தோட்டங்களுக்குச் செல்ல போக்குவரத்து வசதியும் இல்லாமல் மூன்று முதல் நான்கு கிலோ மீட்டர் தொலைவுவரை நடந்தே செல்கின்றனர். தோட்டத்தில் அவசரத் தேவையென்றாலும் கழிப்பறைக்குச் செல்ல முடியாத சூழல். தோட்டத்தில் வேலைசெய்யும்போது பாம்பு கடித்தாலோ ஆபத்தான உயிரினங்கள் தாக்கினாலோ உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலையே உள்ளது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மிகக் குறைவு. அதேபோல் ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் போனஸ் வெறும் ஐம்பது காசு அல்லது ஒரு ரூபாயாக மட்டுமே இருந்தது. 2015 வரை தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு இதைத்தான் போனஸ் என்று தந்திருக்கிறார்கள். இதுபோன்ற பிரச்சினைகளைப் பல தலைமுறையாகப் பொறுத்துக்கொண்டு தங்களுடைய வியர்வையாலும் ரத்தத்தாலும் மலைபூமியைத் தேயிலைத் தோட்டமாக மாற்றிய தொழிலாளர்கள் ஒரு கட்டத்துக்கு மேல் இதைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்ற முடிவுக்கு வந்தனர்.

களம் கண்ட மூணாறு

போராட்டக் குணம் வேரூன்றியுள்ள கேரளத்தில் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து களத்தில் இறங்க வேண்டும் என முடிவெடுத்தனர். கண்ணன் தேவன் தேயிலை நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த பெண் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்தனர். 2015 செப்டம்பர் மாதம் மலைச் சரிவுகளுக்கு வந்த தேயிலைத் தொழிலாளர்கள் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்லாமல் மூணாற்றின் மையப் பகுதிக்கு வந்து தேயிலைத் தொழிலாளர்களுக்கான மருத்துவ வசதி, மழை - குளிர் காலத்தில் குடை பிடித்துக்கொள்ள அனுமதி, கையுறை, காலுறை, கழிப்பறை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டத்தைத் தொடங்கினார்கள். இதில் முதன்மையானது 20 சதவீத போனஸ், தேயிலைத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தினக்கூலியை ரூ.232-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்த வேண்டும் ஆகிய இரண்டும்தான்.

அதுவரை சுற்றுலாத் தலமாக இருந்த மூணாறு, அன்று போராட்டக் களமாக மாறியது. செப்டம்பர் மாதம் 5 அன்று தொடங்கிய இந்தப் போராட்டம் ஒன்பது நாட்கள் நீடித்தது. “எங்கள் தாத்தா, பாட்டி காலத்திலிருந்தே இந்தத் தேயிலை எஸ்டேட்டில்தான் வேலைசெய்கிறோம். நாங்களும் இங்கேதான் வேலை செய்துவருகிறோம். காலையில் ஆறு மணிக்குத் தேயிலை பறிக்கப் போனா சாயந்திரம் ஆறு மணிக்குதான் மலையில் இருந்து கீழே இறங்குவோம். ஒவ்வொரு நாளும் தேயிலைக் கொழுந்தைப் பறிச்சு முடிச்சு வீட்டுக்கு வரும்போது கை, கால்களில் அட்டைகள் ரத்தம் குடித்துக்கொண்டிருக்கும். வெறும் இருநூறு ரூவா கூலிக்காக எங்க ரத்தத்தை இந்தத் தேயிலைத் தோட்டத்துக்கு உரமா போட்டிருக்கோம்.

எஸ்டேட்காரங்க எங்களை அடிக்க மாட்டாங்க, அவ்வளவுதான். மத்தபடி எழுதப்படாத கொத்தடிமைமுறைதான். எங்களைப் போல எங்க பசங்களும் கஷ்டப்படக் கூடாது. அதுல தோட்டத் தொழிலாளர்கள் எல்லாரும் உறுதியா இருக்கோம். நியாயமாக எங்களுக்குக் கிடைக்க வேண்டிய 20 சதவீத போனஸைக் கொடுக்கணும். அதுதான் எங்க கோரிக்கை. ஒவ்வொரு வருஷமும் அரசாங்கமும் சங்கங்களும் போனஸ் தொகையை வாங்கிக் கொடுத்துடும்னு நம்பியிருந்தோம். ஆனா இனி அவங்களை நம்பிப் பலன் இல்லைன்னு நாங்களே போராட்டத்தில் இறங்கினோம்” என்கிறார் தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய கோமதி.

தொய்வில்லாமல் ஒன்பது நாட்கள் பெண்கள் நடத்திய போராட்டம், தேசிய ஊடகங்களில் முதன்மைச் செய்தியானது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் எழுப்பிய ‘பொம்பிளை ஒருமை’ என்ற முழக்கமே பின்னாளில் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் பெண்களின் சங்கப் பெயராக மாறியது. “எங்களோட தொடர்ச்சியான போராட்டத்தையடுத்து நிர்வாகம் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. 20 சதவீத போனஸ், தினக்கூலியாக ரூ. 315 கொடுக்க நிர்வாகம் ஒப்புக்கொண்டது.

அதேபோல் எட்டு மணி நேர வேலை, தொழிலாளர்களுக்கு அரசு விடுமுறை, மருத்துவ விடுப்பு, கையுறை, காலுறை, வீடுகளில் இருந்து தேயிலைத் தோட்டங்களுக்குச் செல்ல ஜீப் வசதி ஆகிய கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டன” என்கிறார் ‘பொம்பிளை ஒருமை’ அமைப்பின் செயலாளர் லிஸ்ஸி சன்னி. இந்தப் போராட்டத்துக்குப் பிறகு கண்ணன் தேவன் தேயிலை எஸ்டேட்டில் ‘பொம்பிளை ஒருமை’ சங்கம் தொழிலாளர்களுக்கான சங்கமாக மாறியுள்ளது. தற்போது இந்தச் சங்கத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

எஸ்டேட்டில் எந்தத் தொழிலாளருக்குப் பிரச்சினை என்றாலும் பொம்பிளை ஒருமை அமைப்பினர் அதற்குத் துணையாக நிற்கின்றனர். எஸ்டேட்டில் இந்த அமைப்பின் சார்பில் தற்போது 21 இடங்களில் ‘பொம்பிளை ஒருமைக் குழு’ தொடங்கப்பட்டுள்ளது. இன்றைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப தங்களுடைய தினக்கூலியை ரூ.400-ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை இந்த அமைப்பினர் எழுப்பியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x