Published : 07 Dec 2019 01:06 PM
Last Updated : 07 Dec 2019 01:06 PM

நடமாடும் வீடுகள்

ஹமிதா நஸ்ரின்

இரும்புப் பெட்டிகளில், வீடுகளையும் பள்ளிகளையும் அலுவலகங்களையும் மொத்த நகரையும் முதன்முதலாக யார் கண்டு உணர்ந்தார் என்று தெரியவில்லை. ஆனால், இந்தப் பார்வை புதிதானது இல்லை.

1987-ம் ஆண்டில், பிலிப் சி. கிளார்க், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கண்டெய்னர்களை, ஒரு தற்காலிக வீடாக மாற்றியமைக்கும் முறைக்கு, அமெரிக்கக் காப்புரிமை பெறப் பதிவுசெய்துள்ளார். கிளார்க்கும் மற்றவர்களும் இந்த கண்டெய்னர்களின் திறனை உணர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால், அந்தப் பார்வை, அவர்களுடைய காலத்தை மீறியதாக இருந்தது.

அமெரிக்க ராணுவத்தின் அறிமுகம்

அமெரிக்க ராணுவம், மால்கம் மெக்லியனின் கண்டுபிடிப்பைத் தவிர்க்க முடியாத போக்குவரத்துச் சாதனமாக மாற்றியது. வியட்நாம் யுத்தத்தின்போது, அமெரிக்க ராணுவம், அயல்நாட்டில் உள்ள தன் படை வீரர்கள், படைத் தளங்களுக்குத் தேவையான பொருட்களை அனுப்புவதற்கு கண்டெய்னர்களைப் பயன்படுத்தியது.

இதன் பின்புதான், சரக்குப் போக்குவரத்துக்கு கண்டெய்னர்களை பயன்படுத்தும் முறை நடைமுறைக்கு வந்தது. மேலும், ஆபத்தான தருணங்களில், இவற்றைப் பாதுகாப்பான அரண்களாக எளிதில் மாற்ற முடிந்ததால் அடிக்கடி அவசர முகாம்களாக இவைப் பயன்படுத்தப்பட்டன. கண்டெய்னர்களைக் கொண்டு கட்டப்படும் வீடுகளுக்கு, இதுவே அடிப்படையாக இருந்திருக்கக்கூடும்.

கண்டெய்னரில் அடுக்குமாடிக் கட்டிடம்

அமெரிக்காவைச் சேர்ந்த பீட்டர் டிமாரியா எனும் புகழ்பெற்ற கட்டிடக் கலை நிபுணர், 2006-ல் முதன் முறையாக, பல கண்டெய்னர்களைக் கொண்டு, இரண்டு மாடி கட்டிடத்தைக் கட்டியது மட்டுமின்றி, அது மனிதன் வசிப்பதற்குப் பாதுகாப்பானது என்று தரச்சான்றும் பெற்றார்.

2011-ல் நியூசிலாந்தில் உள்ள கிறைஸ்ட்சர்ச் நகரம், பூகம்பத்தால் உருக்குலைந்தபோது, நகரின் விரைவான மறுசீரமைப்புக்கு, அரசு இந்த கண்டெய்னர்களைத்தான் பயன்படுத்தியது. கண்டெய்னர்களைக் கொண்டு அதிவேகமாக மறு உயிர் பெற்ற, அந்தநகரில் உள்ள காசெல் வணிக வளாகம் (Cashel Mall) இந்த மாதிரியான கண்டெய்னர் வீடுகளுக்குச் சிறந்த உதாரணமாக இப்போதுள்ளது. அமெரிக்காவில், குறிப்பாக அலாஸ்காவில், இந்த கண்டெய்னர் வீடுகள் வெகுகாலமாக உள்ளன. தவிர ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, சில ஆசிய நாடுகளிலும் இவை வெகுவாகக் காணப்படுகின்றன.

மக்கள்நெருக்கம் மிகுந்த, நெதர்லந்திலுள்ள ஆம்ஸ்டர்டாம் நகரில் கைவிடப்பட்ட கண்டெய்னர்கள், தற்போது எண்ணற்ற ஏழைகளுக்கும் மாணவர்களுக்கும் தங்கும் இடமாக உள்ளன. மனிதனின் தேவைதான், எல்லாக் கண்டுபிடிப்புகளுக்கும் அடிப்படை உந்துதல். இதை யாரும் மறுக்க முடியாது. போர் வீரர்களுக்கான பாதுகாப்பு அரண்கள், போர்க் காலத்தில் நகர் மறுசீரமைப்பை எளிதாக்குதல், ஏழைகளுக்குக் குறைந்த செலவில் சொந்த வீடு என இந்த கண்டெய்னர் வீடுகள் வழியாக அடையும் பலன்கள் பல.

சுற்றுச்சூழலுக்கு உகந்த வீடுகள்

மால்கம் மெக்லியன் என்பவர் 1950-களில், கப்பலில் சரக்குகளை எடுத்துச்செல்ல கண்டெய்னர்களை (container) உருவாக்கி, போக்குவரத்துத் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தினார். ஆனால், அது கட்டிடத் தொழிலிலும்கூடப் புரட்சியை ஏற்படுத்தும் என்பதை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த கண்டெய்னர் வீடுகளின் வடிவமைப்பு, இப்போது நவீன மாகியுள்ளது.

இந்த வகை வீடுகள் மிகவும் பிரபலமடைந்துவருகின்றன. காரணம், சமீப காலமாகச் சுற்றுச் சூழல் மாசுபாடு விஷயத்தில் மக்கள் காட்டும் அதிகப்படியான அக்கறை. இந்த வகை வீடுகள் சுற்றுச் சூழலுக்கு எந்தக் கேட்டையும் விளைவிப்பதில்லை. இவ்வகை வீடுகளின் சிறப்பம்சம் என்னவென்றால், குறைந்த கால அவகாசத்தில் மக்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப, ரூ. ஒரு லட்சத்துக்குக் குறைவான செலவிலும், வீடுகளை உருவாக்கலாம். அல்லது அதிகபட்சமாகப் பல கோடி ருபாய் செலவிலும் உருவாக்கலாம்.

கலையுணர்வின்படி பார்த்தால், கண்டெய்னர் வீடுகள் தனித்துவமானவை, செவ்வகப் பரிமாணங்களைக் கொண்டுள்ள இந்த கண்டெய்னர்கள், வருங்காலத் திற்குரிய வடிவமைப்பைப் போன்ற நவீனத் தோற்றத்தையும் கொண்டுள்ளன. கதவையும் ஜன்னல்களையும் பொருத்தியவுடன், இந்த கண்டெய்னர் வீடுகள் அற்புதமான வெளிச்சம் கொண்ட வீடாக மாறுகின்றன.

பணிநிமித்தமாக, நாடோடிகள் போல் ஊர் விட்டு ஊர் பொருட்களைத் தூக்கிக்கொண்டு சென்றுகொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில், இனி நாம் பொருள்களைத் தூக்கிச் செல்ல வேண்டிய தேவையில்லை, நம் வீட்டையே நம்முடன் எளிதாகச் சுமந்து செல்லலாம். அது மட்டுமின்றி, இவ்வகை வீடுகளின் மூலம், மழையில் கரையக்கூடிய, காற்றில் பறந்துவிடக்கூடிய வீடுகளில் வசிக்கும் ஏழைகள், இனி குறைந்த பொருட்செலவில், உறுதியான நிரந்தர வீடுகளில் வசிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x