Published : 05 Dec 2019 01:47 PM
Last Updated : 05 Dec 2019 01:47 PM

மதுரை சோமு நூற்றாண்டு: என்ன கவி பாடினாலும்...

திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவில் மதுரை சோமு

லலிதா ராம்

கர்னாடக சங்கீதத்தில் சிறந்து விளங்கக் குரல்வளம் என்பது இருந்தே தீர வேண்டு மென்று அவசியமில்லை என்ற சம்பாஷணையில்தான், முதன் முதலில் சோமுவின் பெயர் பேசப்படுவதை நான் கேள்வியுற்றேன். சோமுவின் முதல் அகாடமி கச்சேரியைப் பற்றிய குறிப்பு, “ஸ்ரீ சோமசுந்தரத்துக்கு வெகு அபூர்வமான சாரீரம் வாய்த்திருக்கிறது”, என்கிறது. 1960-களிலும் 1970-களிலும் சோமு பாடியுள்ள பல பதிவுகள் இன்றும் கேட்கக் கிடைக்கின்றன.

அவற்றைக் கேட்கும்போது சோமுவுக்கு இயற்கையில் சாரீரம் கனமாகவும் அதே வேளை எளிதில் வளையும் (pliant) தன்மை கொண்டதாகவும், அதி துரித சஞ்சாரங்களை அநாயசமாக வெளிப்படுத்தக்கூடியதாகவும் அமைந்திருந்தது.

ஸ்ருதியில் கலந்து நின்றபோது, அது குரலா தம்புராவா என்று பிரித்துப் பார்க்க முடியாத 'அத்வைத நிலை'யை எட்டக்கூடியதாகவும் அந்தக் குரல் அமைந்துள்ளது. பாடகருக்கு கற்பனை ஒரு பெரும் வரம். மனம் நினைக்கும் தாவல்களையெல்லாம் குரல் சுஸ்வரமாகத் தழுவிக் கொள்வதென்பது அபூர்வமாக சிலருக்குத்தான் வாய்க்கும். அப்படி வாய்த்த சில கர்னாடக இசைக்கலைஞர்களுள் சோமுவும் ஒருவர் என்பதைத்தான் தரவுகள் தெரிவிக்கின்றன.

அழுகையும் சிரிப்பும்

சோமுவின் கடைசி காலக் குரலில் இருந்த கம்மலும் கரகரப்பும், ராகத்தில் தனை இழந்து கேவியபடி அவர் வெளிப்படுத்தும் ‘தாயே’, ‘குருநாதா’ போன்ற சொற்களும், அவர் பாடிப் பிரபலமாகிவிட்ட ‘என்ன கவி பாடினாலும்’ போன்ற மனத்தை உருக்கும் பாடல்களும் சோமுவின் சங்கீதம் சோக சங்கீதம் என்கிற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. அப்படிக் கருதுபவர்கள் சோமு பாடியுள்ள மோகனம், ரஞ்சனி, சங்கராபரணம், காம்போதி போன்ற ராகங்களைக் கேட்க வேண்டும்.

எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவரான சோமு, மனத்தை உலுக்கும் பிரயோகங்களின்போது கேவி அழுதது போலவே, மோகனத்தின் தைவதத்தின் சௌந்தர்யம் தாளாமல் குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பதையும் காண முடியும். சங்கராபரணத்தின் கம்பீரத்தில் திளைத்தபடி அவர் கூறும் ‘ஐயோ’-வில் சோகச் சாயலை கிஞ்சித்தும் காண முடியாது. ‘ஓ ராம நீ நாமம் எந்த ருசி’ என்று பாடும்போது அவர், ‘ருசி’ என்கிற வார்த்தையில் ஒலிக்கும் கிறக்கத்தை உணர முடியும்.

பாடல் வரிகளை சந்தர்ப்பத்துக்கு ஏற்ப சிறு மாற்றங்களைச் செய்து, கூடியிருப்பவரை சிரிக்க வைக்கும் நகைச்சுவைத் தருணங்களுக்கு எண்ணற்ற உதாரணங்களைக் கூற முடியும், சோமுவின் சங்கீதம் 'பாவ' (bhava) சங்கீதம். அதில் பலவித உணர்வுகளுக்கும் இடமிருந்தது. சோக சங்கீதம் என்பவர்களின் மனத்தை சோமுவின் குரலில் உள்ள உருக்கம் மட்டுமே வியாபித்ததால் எழுந்த தோற்ற மயக்கமிது என்றே சொல்லத் தோன்றுகிறது. நீண்ட சஞ்சாரங் களைப் பாடும்போது உடன் ஒலித்த மூச்சு சத்தத்தை பெருமூச்சாகக் காண்பதெல்லாம் இதன் நீட்சியே.

இசை எனும் குழந்தை

சோமுவின் பாணியின் மேல் வைக்கப்படும் விமர்சனம், சாஸ்திரிய சங்கீத மேடைக்குக் கொடுக்க வேண்டிய அளவு மரியாதையை அவர் கொடுக்கவில்லை என்பது. ஒரு கச்சேரியில் நீண்ட நேரத்துக்குப்பின் பாடல் ஒன்று முடிந்ததும் அரங்கத்தை விட்டுக் கிளம்பிய பெண்ணைப் பார்த்து 'ப்ரோவ பாரமா' மெட்டில், 'போறா பாரம்மா' என்று பாடியதும், அந்தப் பெண் உட்கார்ந்துவிட கூட்டமே வெடித்துச் சிரித்தது போன்ற தருணங்களும் சோமுவின் கச்சேரிகளில் உண்டு. சங்கீதத்தை ஓர் ஆன்மிக அனுபவமாக, கலைக்கும் கலைஞனுக்கு மான உறவை பக்தனுக்கும் இறைவனுக்குமான உறவாக இருக்க வேண்டும் என்பது இவர்கள் தரப்பு.

சோமுவின் சங்கீதத்தை இப்படி ஒற்றைப் பரிமாணத்தில் அடைக்க முடியாது. அவர் சங்கீதத்தின்முன் பக்தனாக மண்டியிட்டு ஒரு மரியாதைக்குரிய தூரத்தில் விலகி நிற்பதைவிட, சங்கீதத்தை ஒரு குழந்தையாக பாவித்தார் என்றே தோன்றுகிறது. அந்தக் குழந்தை இறைவனாக மாறிய விஸ்வரூப தருணங்களும் அவர் கச்சேரிகளில் உண்டென்றாலும், அந்தக் குழந்தையை இறுக்கிக் கொஞ்சி, சீராட்டி, சீண்டி, அதட்டி உறவாடிய தருணங்களுக்கும் குறைவில்லை.

ரசிகருடனான பந்தம்

கச்சேரிகளின் உச்ச தருணங்களில் சங்கீத தேவதையின் உபாசகராக, ராக சௌந்தர்யத்தின் ரசிகராக சோமு வீற்றிருப்பதைக் காண முடியும். அந்த ஸ்வானுபூதியில் தன்னை இழந்த போதும், தன்னைத் தேடி அலையலையாய் திரண்டு வந்திருக்கும் ரசிகர்களை மறந்துவிடக் கூடாதென்பதில் கவனமாக இருந்துள்ளார் சோமு.

கடைசியில் பாடும் ‘மருதமலை மாமணியே’வுக்காக மட்டும் காத்திருக்கும் ரசிகனுக்குமான பாட்டாகவும்தான் சோமுவின் கச்சேரிகள் அமைந்திருந்தன. அதனால்தான் எத்தனை ஆயிரம் பேர் வந்திருந்தாலும், அங்கிருந்த ஒவ்வொருக்கும் 'சோமு எனக்காகப் பாடுகிறார்' என்கிற உணர்வை அவரால் ஏற்படுத்த முடிந்தது.

இன்னும் சொல்லப்போனால் ராகங்களில் கரைவதை சோமு எவ்வளவு முக்கியமாகக் கருதினாரோ, அதே அளவு முக்கியத்துவத்தை ரசிகர்களுக்கும் கொடுத்தார். சோமுவின் உறவினரும், அவருக்கு பலகாலம் தம்புரா மீட்டியவருமான கிருஷ்ணமூர்த்தி, “ஒருமுறை நாங்கள் பம்பாய் சண்முகானந்த சபாவுக்குக் கச்சேரிக்கு சென்றிருந்தோம்.

அதற்கு முந்தைய நாள் வித்வான் பாலமுரளி கிருஷ்ணாவின் கச்சேரி. அன்று அவர் சபா நிர்வாகிகளிடம், ‘எல்லா விளக்கையும் அணைத்துவிடுங்கள். மேடையில் இருப்பவர்கள் மீது மட்டும் வெளிச்சம் இருக்கட்டும்’, என்று கூறியுள்ளார்.

அதன்படியே கச்சேரி நடந்துள்ளது. அடுத்த நாள் நாங்கள் மேடையேறி ஸ்ருதி சேர்த்ததும் அத்தனை விளக்குகளும் அணைய ஆரம்பித்தன, விசாரித்தபோது முந்தைய நாள் நடந்ததை சபா காரியதரிசி கூறினார். அதற்கு சோமு சொன்னார், “இந்த வழி அவர் பாணிக்கு சரியா இருக்கும்.

நான் ராகத்துல ஒரு பிடி பாடினா, அதை முன்னாடி இருக்கறவங்க எப்படி வாங்கிக்கறாங்கனு பார்த்தாதான், அடுத்த பிடி எனக்குப் பாட வரும். நான் இங்க வந்து பாடணும்னா எல்லா விளக்குகளையும் போட்டு எல்லார் முகமும் தெரியறா மாதிரி வைங்க’, என்றார். அதற்கு பிறகு கச்சேரி வழக்கம்போல ஆறு மணி நேரம் நடந்தது” என்கிறார்.

சமீப காலத்தில், போதிய அங்கீகாரங்கள் கிடைக்காத கலைஞர்கள் பற்றிய பேச்சில் சோமுவின் பெயரும் இடம்பெறுவதைப் பார்க்கமுடிகிறது. அவருக்குக் கிடைக்காத விருதுகளே, சிலர் போடும் `மறக்கப்பட்ட மேதைகள்’ பட்டியலில் இடம்பெற வைக்கிறது.

எவ்வளவு பெரிய மேதை என்றாலும் ஒருவருடைய காலத்துக்குப்பின் அவரைப் பற்றி பேசக்கூடிய மாணவர்களும் ரசிகர்களும் இருந்தாலன்றி, அவர்களுடைய சாதனைகள் வெளிச்சத்தில் இருந்துகொண்டிருக்காது. வாழ்ந்த காலத்தில் சோமுவைவிட குறைந்த அங்கீகாரங்களே வாங்கிய கலைஞர் களின் பெயர் இன்றும் வெளிச்சத்தில் இருப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம். சோமு பாடியபோது கூடிய ரசிகர்களும், அவரது சிஷ்ய பரம்பரையும் இன்று மௌனமாகிவிட்டதே, அவருக்குக் கிடைக்காத பட்டங்களைவிட பெரிய அநீதி.

கட்டுரையாளர்,
தொடர்புக்கு: ramchi@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x