Published : 05 Dec 2019 01:01 PM
Last Updated : 05 Dec 2019 01:01 PM

தெய்வத்தின் குரல்: சகலருக்கும் ஏன் அத்வைதம்

நாம் செய்யவேண்டியது கர்மாவின் பலனில் ஆசையை விடுவது, அப்படி விடப் பிரயத்தனம் பண்ணுவதுதான். அதுவே மகா கஷ்டமாயிருக்கிறது. பலனை நினைக்காமல் பழைய கர்மா தீர்வதற்காகவே இப்போது சுதர்ம கர்மாவைப் பண்ணிக்கொண்டு போவது, அதனால் சித்த சுத்தி பெறுவது என்றால் லேசில் முடியவில்லை.

இப்படிப் பண்ணுவதற்கே — ஞான மார்க்கத்தில் நிதித்யாஸனம் செய்வதற்கு வழியாக அல்ல; கர்ம யோக மார்க்கத்தில் பலனில் பற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்கொண்டு வருவதற்கே — அநேக தத்துவார்த்தங்களைத் தெரிந்துகொண்டு தெளிவுபெற வேண்டியிருக்கிறது; அநேக அப்பியாசங்களைப் பயிற்சி பண்ண வேண்டியிருக்கிறது.

கடைசியில் பார்த்தால், இதெல்லாம் ஞானயோகத்தில், அதாவது அத்வைத சாதனையில் போட்டுக் கொடுத்திருக்கும் அதே படிகளாக இருக்கிறது. சந்நியாசம் வாங்கிக் கொண்டு ச்ரவண, மனன, நிதித்யாஸனம் செய்வதற்கு முந்தி அந்த சாதனா க்ரமத்தில் பல படிகள் சொல்லியிருக்கிறதல்லவா? அதெல்லாம் கர்ம யோகத்தை சரியான முறையில் அனுசரித்து முன்னேறுவதற்கும் அவசியமாயிருக்கின்றன. ஆனால் அத்தனை ஆழம் போக வேண்டாம். மேல் மட்டங்களில் நீச்சல் போட்டால் போதும் என்கிற அளவில் அவசியமாயிருக்கின்றன.

நாலாவது படிக்கிற பையனின் சரித்திர புத்தகத்திலும் மொஹஞ்சதரோவில் ஆரம்பித்து, வேதகாலம், புத்தர் காலம் மௌரியர் காலம், குப்தர் காலம், முகலாயர் காலம், வெள்ளைக்காரர் காலம் என்று எல்லா பாடங்களும் இருக்கின்றன: எம்.ஏ. இந்திய வரலாறு படிக்கிறவருக்கும் இதே பாடங்கள் இருக்கின்றன.

இரண்டுக்கும் எத்தனையோ வித்தியாசம் இருந்தாலும் அங்கே சொல்வது இங்கேயும் தேவைப்படுகிறது. அப்படித்தான் ஞானமார்க்க விஷயங்களையே கர்ம மார்க்க ஸ்கூல் பையன்களுக்கும் சிறிய அளவில் கற்றுக்கொடுக்க வேண்டியவையாக இருக்கின்றன.

சாசுவத ஆனந்தம்

சுவிட்சர்லாந்துக்குப் போய் பனியிலே சறுக்கி விளையாடுவது, ரம்மியமான மலைக்காட்சிகளை நேரில் பார்ப்பது, நமக்கு எட்டாதவையாக இருக்கலாம். ஆனால் நல்ல கலர் போட்டோவில் அதையெல்லாம் பார்த்தாலே துளியளவில் நேரில் அனுபவித்த சந்தோஷம் உண்டாகிறது.

அதோடு இப்படி பார்ப்பதே எப்போதாவது அங்கு நேரில் போகத்தான் வேண்டும் என்ற ஆசையையும் உண்டாக்கி அதைக் காரியமாக்கிக் கொள்வதற்கான முயற்சிகளில் தூண்டிவிடுகிறது. அங்கே போகலாம், போகாமலிருக்கலாம். போவதால் சாசுவதமான ஆனந்தம் நிச்சயம் கிடைக்கப் போவதில்லை. ஆனால் சாசுவத ஆனந்தம் தருகிற ஆத்ம லோகத்துக்கு யாரானாலும் போகப் பிரயாசைப் படத்தான் வேண்டும்.

போய்ச் சேருகிற காலம் எப்போதாகவோ இருந்துவிட்டுப் போகட்டும்; ஆனாலும் போகத்தான் வேண்டும். அதுதான் பிறவி எடுத்த பயன்; இனிமேல் பிறவியே இல்லை என்று பண்ணிக்கொள்கிற பெரிய பயன். அதனால்தான் அதற்கான வழியை, அதிலே ஒரு ருசியை உண்டாக்க, ஒரு படத்தில் காட்டுகிற மாதிரியாவது இப்போதே பிடித்துக் கொஞ்சம் சொல்வது.

இன்னொரு காரணமும் உண்டு. மிகப் பெரும்பாலானவர் அத்வைத சாதனைக்கு இப்போதே அதிகாரிகளாக இல்லாவிட்டாலும் அவர்களிலும் எல்லோரும் ஒரே கீழ்ப்படியில்தான் இருப்பார்கள் என்றில்லை. கொஞ்சங் கொஞ்சம் சித்த சுத்தி, விவேகம், வைராக்கியம் உள்ளவர்கள், ஒரளவுக்கு நன்றாகவே விவேக வைராக்ய த்ரிகர்ண சுத்தி உள்ளவர்கள் என்று பல தரமானவர்கள் இங்கேயே இருக்கலாம்.

அவர்களுக்கு சாதனை கிரமத்தை தெரிந்து கொள்வதே, “நாம் இன்னும் கொஞ்சம் ப்ரயாசை எடுத்துக்கொண்டு நம்மை நன்றாகச் சரிப் பண்ணிக்கொண்டு அந்த வழியில் போக வேண்டும்” என்ற ஆர்வத்தைத் தூண்டிவிடலாம். “இப்படி ஒரு வழி” என்று சொல்வதாலேயே, அது என்ன என்று சும்மா தெரிந்துகொள்வோமே என்பதில் ஆரம்பித்து, அதில் போகத்தான் முயற்சி செய்வோமே என்று முடிவு பண்ணும் வரையில் பலதரப்பட்டவர்களுக்கு ஒரு நல்ல விஷயத்தில் கவனத்தைத் திருப்பியதாகிறது.

சன்னியாச தர்மம்

இங்கே ஒன்று முக்கியமாகச் சொல்ல வேண்டும். ஞான யோகத்தையே சாதனை என்று எடுத்துக் கொள்கிறவனுக்குத்தான் சன்னியாசாச்ரமத்தை ஆசார்யாள் சொன்னாரே தவிர, அந்த யோக்கியதாம்சம் இல்லாதவர்களும் ஆத்ம விஷயங்களைத் தெரிந்துகொண்டு கொஞ்சமாவது ஆத்ம சிந்தனையோடு இருக்கவேண்டுமென்று அவரும் அபிப்ராயப்பட்டிருக்கிறார்.

‘பால போத ஸங்க்ரஹம்’ என்று ஒரு சிறிய உபதேச நூலை அவர் அருளியிருக்கிறார். ‘ஸங்க்ரஹம்’ என்றால் சுருக்கம். ‘பாலபோதம்’ என்ற பேரே அது குழந்தைகளுக்கானது என்று தெரிவிக்கிறது. ஒரு சின்னப் பையனுக்கு அவனே கேள்வி கேட்டு ஒரு குரு பதில் சொல்வதுபோல், அந்த நூல் மூலம் ஆசார்யாள் உபதேசிக்கிறார்.
என்ன உபதேசமென்றால் பரம வேதாந்தமான அத்வைத உபதேசம்! அத்வைத வித்யையின் முக்கியக் குறிப்புகள் அவ்வளவையும் சுருக்கமாக அதில் கொடுத்து விடுகிறார்.

அத்வைத சாதனையின் அங்கங்கள் என்ன என்றும் அதிலே சொல்லியிருக்கிறார். ரொம்பப் பக்குவப்பட்டு யோக்கியதாம்சங்களெல்லாம் சம்பாதித்துக்கொண்டு, உடனே ஞான வழியைப் பயிற்சி பண்ணக் கூடியவருக்கு மட்டும்தான் அத்வைத சம்பந்தமான விஷயங்களைச் சொல்லலாமென்று ஆசார்யாள் நினைக்கவில்லை.

முடிவான பரம சத்தியமான அந்தத் தத்துவம் இன்னவென்று ஒரு அவுட்லைனாகத் தெரியாதவர்களாக யாருமே இருக்கக்கூடாது என்பதே அவருடைய அபிப்ராயமென்று தெரிகிறதல்லவா? அதில் நேராக பியற்சி செய்வதற்கு ஒருவன் இறங்குவது எப்போது வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்; ஆனால் அந்த பயிற்சி முறை — அதாவது சாதனை க்ரமம் — என்னவென்று எவரும் அறிந்திருக்க வேண்டும் என்றே அவர் நினைத்திருப்பதாகத் தெரிகிறது.

(தெய்வத்தின் குரல்
ஆறாம் பகுதி)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x