Last Updated : 17 Aug, 2015 10:14 AM

 

Published : 17 Aug 2015 10:14 AM
Last Updated : 17 Aug 2015 10:14 AM

ஒரு கார் விற்றால் ரூ.2.52 லட்சம் நஷ்டம்

தலைப்பே ஆச்சரியமாக இருக்கும். ஆம், அமெரிக்காவைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனம் கார்களை விற்பதனால் ஒரு காருக்கு 4 ஆயிரம் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2.52 லட்சம்) நஷ்டம் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் அமைந் துள்ள டெஸ்லா மோட்டார்ஸ் இன்கார்ப் பரேஷன் நிறுவனம்தான் இத்தகைய நஷ்டத்தை சந்தித்து வருகிறது.

இந்நிறுவனத்தின் செடான் மாடல் எஸ் காரை விற்பனை செய்வதால் இத்தகைய நஷ்டம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளது.

டெஸ்லாவின் எஸ் மாடல் கார் முற்றிலும் பேட்டரியால் இயங்கும் காராகும். ஃபால்கன் பறவையைப் போன்று மேல்பகுதியில் திறந்து மூடும் கதவுகள், கம்பீரமான தோற்றம் இவையனைத்தும் கொண்ட இந்த கார் விற்பனையால் நஷ்டம் ஏற்படுகிறதென்றால் அதை நம்புவது கடினமான விஷயமாக இருந்தாலும் அதுதான் உண்மை.

கார் தயாரிப்பு என்பது அதிக மூலதனம் தேவைப்படும் தொழிலாகும். ஒரு மாடலில் கார் தயாரிப்பதென்றால் அதற்குரிய வடிவமைப்பு, அதன் இன்ஜின் செயல் திறன் உள்ளிட்ட பல அம்சங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

காரின் வடிவமைப்பு தயாரான பிறகு அதற்குரிய உதிரி பாகங்கள் அனைத்தும் ஒரே அளவினதாக இருக்க வேண்டும். அதற்கென்று பிரத்யேகமாக அச்சு (டை) தயாரிக்க வேண்டும். பிறகு முழுவதுமாக உருவாக்கப்பட்ட பிறகு அதன் செயல் திறன் சோதிக்கப்பட வேண்டும். இவை அனைத்தும் எதிர்பார்த்தபடி வந்தாலும், சந்தையில் அந்த தயாரிப்புக்கு வரவேற்பு இருந் தால் மட்டுமே வெற்றி பெறும்.

பொதுவாக புதிதாக ஒரு காரைத் தயாரிக்க அதிக முதலீடு தேவைப்படும். ஒரு மாடல் கார் தயாரிப்பதற்கு ஆகும் செலவானது, அந்த மாடல் கார் அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டு விற்பனையானால்தான் லாபம் கிடைக்கும்.

பெட்ரோல், டீசலில் இயங்கும் கார்களுக்கு எளிதில் வரவேற்பு கிடைத்துவிடும். ஆனால் பேட்டரியில் இயங்கும் கார்களுக்கு இன்னமும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைக்கவில்லை. இதற்குக் காரணம் பெட்ரோல், டீசலில் இயங்கும் கார்களில் கிடைக்கும் வேகம், விரைவுத்திறன் இதில் கிடைக்கவில்லை என்பதுதான்.

2003-ம் ஆண்டு தொடங்கப்பட்ட டெஸ்லா இன்கார்ப்பரேஷன் நிறுவனம் பேட்டரியால் இயங்கும் கார்களை மட்டுமே தயாரித்து வருகிறது.

இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பு டெஸ்லா ரோட்ஸ்டர். பேட்டரியால் இயங்கும் முதலில் தயாரிக்கப்பட்ட ஸ்போர்ட்ஸ் கார் இதுவாகும்.

இந்த நிறுவனம்தான் முதன் முதலில் லித்தியம் அயான் பேட்டரிகளை தனது காரில் பயன்படுத்தியது. ரோட்ஸ்டெர் கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 320 கி.மீ. தூரம் வரை ஓடியதால் இதற்கு மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்தது.

2008-ம் ஆண்டு அறிமுகமான இந்தக் கார் நான்கு ஆண்டுகளில் 2,250 கார்கள் விற்பனையாயின. 31 நாடுகளில் இந்தக் காரை விரும்பி வாங்கிய வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

டெஸ்லாவின் அடுத்த தயாரிப்புதான் சொகுசு மாடல் எஸ் வகை காராகும். 2009-ம் ஆண்டில் அறிமுகமான டெஸ்லா மாடல் எஸ் கார் சர்வதேச அளவில் 75 ஆயிரம் விற்பனையாகியுள்ளது. இதிலிருந்தே காருக்கு உள்ள வரவேற்பைத் தெரிந்துகொள்ளலாம்.

பேட்டரி கார் தயாரிப்பை ஊக்கு விக்கும் விதமாக அமெரிக்க அரசு இந்நிறுவனத்துக்கு 46 கோடி டாலர் தொகையை வட்டியில்லா கடனாக அளித்தது. இந்தக் கடனை 2013-ல் முழுவதுமாக திருப்பி செலுத்தியது டெஸ்லா. மற்ற கார் தயாரிப்பு நிறுவனங்களான ஃபோர்டு, நிசான், பிஸ்கர் ஆகியன கடன் தொகையை திரும்ப செலுத்தாத நிலையில் முழுத் தொகையையும் திரும்பி செலுத்திய பெருமை டெஸ்லாவுக்கு உண்டு.

மேம்படும் செயல்திறன்

மற்ற கார் நிறுவனங்களைப் போல தனது கார்களில் ஒரே ஒரு பேட்டரியை பயன்படுத்துவதில்லை டெஸ்லா. மாறாக ஆயிரக்கணக்கான லித்தியம் அயான் பேட்டரிகளை பயன்படுத்துகிறது. இது வட்ட வடிவிலான சிறிய அளவிலானது. வழக்கமாக லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் பயன்படுத்தும் பேட்டரியைப் போன்றது. இவை வழக்கமான பேட்டரிகளை விட எடை குறைந்ததாக இருந்ததால் காரின் செயல்திறன் மேம்பட்டுள்ளது. பேட்டரிகளில் மேற்பூச்சாக இந்நிறுவனம் பயன்படுத்திய தொழில்நுட்பம் பேட்டரிகள் எளிதில் தீப்பிடிப்பதைத் தடுத்தது. மேலும் இந்நிறுவனத்தின் பேட்டரிகள் விலை குறைவானதாக இருந்ததும் இந்நிறுவன கார்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றதற்கு முக்கியக் காரணமாகும்.

விற்பனை திட்டம்

டெஸ்லா நிறுவனம் இந்த ஆண்டு 50 ஆயிரம் முதல் 55 ஆயிரம் கார்களைத் தயாரித்து விற்க திட்டமிட்டுள்ளது. அதிக எண்ணிக்கையில் விற்பனை யாகும்போதுதான் லாபம் ஈட்ட முடியும் என்பதை இந்நிறுவனம் உணர்ந் துள்ளது. எஸ் மாடல் டெஸ்லா காரின் விலை 70 ஆயிரம் டாலராகும். எஸ் மாடல் கார்கள் மொத்தம் 6 பிரிவுகளில் வெளிவந்துள்ளன. இவற்றின் அதிகபட்ச விலை 1,06,000 டாலராக (சுமார் ரூ.68.95 லட்சம்) உள்ளது.

புதிய ரக மாடல் அறிமுகம்

அடுத்த ஆண்டு இந்நிறுவனம் விலை குறைந்த புதிய ரக மாடல் காரை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் ஆரம்ப விலை 35 ஆயிரம் டாலராக (சுமார் ரூ.22.76 லட்சம்) இருக்கும் என தெரிகிறது. இந்த காருக்கு அதிக வரவேற்பு இருக்கும் என்பதால் அடுத்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் கார்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது டெஸ்லா.

நஷ்டத்தைக் குறைக்க இந்நிறுவனம் கடந்த மாதம் தனது பிற தயாரிப்புகளின் விலையை 5 ஆயிரம் டாலர் முதல் 10 ஆயிரம் டாலர் வரை உயர்த்தியுள்ளது.

நஷ்டம் ஏற்பட்டாலும் புதிய மாடல் தயாரிப்பு, மேம்படுத்தப்பட்ட ரக அறிமுகம் ஆகிய அனைத்துப் பணி களையும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது டெஸ்லா.

நம்ம ஊரிலும் பேட்டரி கார்கள் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கின்றன. ரெவா எனும் பேட்டரி காரை முதலில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்திய பெருமை பெங்க ளூரைச் சேர்ந்த மெய்னி குழுமத் துக்கு உண்டு. இப்போது இந்த நிறுவனத்தை மஹிந்திரா குழுமம் வாங்கி பேட்டரி கார்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

டெஸ்லா கார்களைப் போன்ற செயல்திறனுடன் பேட்டரி கார்கள் குறைந்த விலையில் சந்தைக்கு வந்தால் இந்திய சந்தையில் சிறந்த எதிர்காலம் நிச்சயம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ramesh.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x