Published : 04 Dec 2019 01:13 PM
Last Updated : 04 Dec 2019 01:13 PM

மாய உலகம்: வசந்தகால பூதம் சொல்லும் கதை

மருதன்

நான் சொல்லப்போவதும்கூட நீங்கள் ஏற்கெனவே கேள்விப்பட்ட கதைதான். ஆனாலும் அதை என் வாயால், அதாவது சம்பந்தப்பட்ட பூதத்தின் வாயால் நீங்கள் கேட்டிருக்க முடியாது அல்லவா? கூர்மையான பற்களையும் மார்புவரை தொங்கிக்கொண்டிருக்கும் நீண்ட நாக்கையும் கொண்டிருக்கும் ஒரு பூதத்தின் வாயிலிருந்து வரும் கதையைக் கேட்க வேண்டுமா என்று அஞ்ச வேண்டாம். உன்னைப் பற்றியது என்பதால் உன் விருப்பத்துக்கு நீ கதையைத் திருகிக்கொள்ள மாட்டாய் என்று என்ன நிச்சயம் என்று சண்டைக்கும் வரவேண்டாம். நான் அந்த அளவுக்கு மோசமான பூதம் எல்லாம் இல்லை.

ஓஹோ, சொக்கத்தங்கம் போலிருக்கிறது என்றும் முடிவு கட்டிவிட வேண்டாம். ஒரே ஒரு கெட்ட பழக்கம் இருந்தது என்னிடம். அதாவது, ஓர் ஆப்பிளை நீங்கள் என்னிடம் நீட்டினால் அதை வாங்கி மடக்கென்று விழுங்கிவிடுவேன். ஓர் ஆப்பிள் மரத்தை அளித்தால் உலுக்கி அத்தனை ஆப்பிள்களையும் உதிர்த்துப் போட்டு, கீழே அமர்ந்து அனைத்தையும் தின்று தீர்ப்பேன். ஆப்பிள் மரங்கள் கொண்ட தோட்டத்தைக் கொடுப்பீர்கள் என்றால் முழுவதையும் தின்றுத் தீர்ப்பேன். ஒரே ஒரு துண்டு ஆப்பிளைக்கூட ஒருவருக்கும் என் நகத்தின் நுனியால் நறுக்கிக் கொடுக்க மனம் வந்ததில்லை எனக்கு.

பூதம் என்பதால் இப்படியா என்று கேட்காதீர்கள். எனக்கும் தெரியாது. ஊரின் ஒரே பூதம் நான். என் கையால் இதுவரை எதையும் யாருக்கும் அளித்ததில்லை. யாரிடமிருந்தும் எதையும் பெற்றுக்கொண்டதும் இல்லை. ஆனால், மனித குழந்தைகள் அப்படி நடந்துகொள்வதில்லை போலிருக்கிறது. ஒரு நாள் சற்றே தாமதமாகக் கண்விழித்து சோம்பலோடு வெளியில் வந்தபோது, தோட்டம் முழுக்கக் குழந்தைகள் நிரம்பியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

ஏதோ தன் வீட்டு ஆப்பிள் மரம்போல் இயல்பாக ஏறி உட்கார்ந்துகொண்டு சில குழந்தைகள் பழங்களைச் சுவைத்துக்கொண்டிருந்தார்கள். பீச் மரக் கிளைகளில் குறைந்தது பத்துப் பேர் அமர்ந்து சத்தம் போட்டுச் சிரித்துக்கொண்டிருந்தார்கள். என் பூக்களின் வாசத்தைச் சில குழந்தைகள் குனிந்து நுகர்ந்துகொண்டிருந்தனர். சிலர் ஆஊ என்று கத்தியபடி என்னவோ விளையாடிக்கொண்டிருந்தனர்.

படாரென்று கதவைத் திறந்துகொண்டு என் கண்களை உருட்டி ஒரு கத்து கத்தினேன். அவ்வளவுதான், வீலென்று அலறியபடி எல்லோரும் ஓடிப் போய்விட்டனர். தோட்டக் கதவை நன்றாக இழுத்து மூடினேன். கையோடு ஒரு பலகையை எடுத்து வந்து, ‘அத்துமீறி நுழைபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்’ என்று எழுதி, நாக்கை நீட்டும் என் படத்தையும் வரைந்து (சுமாராகத்தான் வரைவேன் என்றாலும் இந்த முக்கியமான தகவல் பல கதைகளில் விடுபட்டுள்ளது) கதவில் தொங்கவிட்டேன்.

மறுநாளே கடும் பனிக்காலம் தொடங்கிவிட்டது. ஒவ்வாரு நாளும் கடுமை அதிகரித்துக்கொண்டே போனதே தவிர, குறைந்தபாடில்லை. மரங்களும் செடிகளும் பனி கட்டிகளாக உறைந்துகிடந்தன. உடல் முழுக்கக் கம்பளி சுற்றிக்கொண்டு கதவைத் திறந்து வெளியில் வந்தேன். ஆச்சரியம்! இடது பக்க வீட்டில் வசந்தகாலம் ஆரம்பமாகியிருந்தது. எதிர் வீட்டுத் தோட்டத்தில் கொத்துக் கொத்தாக ஆப்பிள்கள் தொங்கிக்கொண்டிருந்தன. வலது பக்க வீட்டிலும் வசந்தகாலம்.

என் தோட்டத்திலோ ஒரே ஒரு மரம்கூட அசையவில்லை. ஒரே ஒரு செடியில்கூட அசைவில்லை. ஒரே ஒரு தேனீ, ஒரே ஒரு வண்டு, ஒரே ஒரு புழுவைக்கூடக் காணோம். பல வண்ணப் பறவைகள் பல இடங்களிலிருந்து திரண்டுவந்து மரக்கிளைகளில் அமர்ந்து கூச்சலிடுவது வழக்கம். இன்று ஒன்றுகூட இல்லை என்பதோடு அனைத்தும் அக்கம் பக்கம் வீடுகளுக்குச் சென்று அமர்ந்துவிட்டன. நான் வழக்கமாக நோட்டமிடும், என்னை அடிக்கடி உற்றுப் பார்க்கும் நீளமூக்கு மைனாகூட (அல்லது நீலமூக்கு மைனாவா?) இன்று எதிர் வீட்டுக்குத் தாவிவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

பசி வயிற்றைப் பிய்த்து தின்னத் தொடங்கியது. வெட்கத்தைவிட்டுப் பக்கத்து வீட்டுக்குப் போய், கேட்கலாமா? இதுவரை ஒரே ஒரு பூவாவது கிள்ளிக் கொடுத்திருப்பாயா என்று வெடுக்கென்று கேட்டால், இத்தனை பெரிய முகத்தை எங்கே வைத்துக்கொள்வது? மிகச் சரியாக அந்த நேரத்தில் கதவை யாரோ திறப்பதுபோல் இருந்தது.

ஒரு சின்னக் குழந்தை தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்தது. விளையாட வந்திருக்குமோ? வெளியில் தொங்கும் பலகையைப் பார்க்கவில்லையா? என் வலது கையை உயர்த்தி போ என்றேன். கத்துவதற்குக்கூட உடலில் வலுவில்லை. ஆனால், குழந்தை அச்சமின்றி நகர்ந்து வந்தது. அருகில் வந்ததும் தன் முதுகுக்குப் பின்னால் மறைத்திருந்த வலது கையை முன்னால் கொண்டுவந்தது. அதில் ஓர் ஆப்பிள் இருந்தது.

முதல் முறையாக என் கையை நீட்டிப் பெற்றுக்கொண்டேன். குழந்தையின் முகத்தைப் பார்த்தபடியே கடித்தேன். நாக்கு மட்டுமல்ல என் உடல் முழுவதும் அந்த ஆப்பிளைச் சுவைத்தது போலிருந்தது. குழந்தைத் தன் கையை உயர்த்தி என் கண்களில் வழிந்துகொண்டிருந்த நீரைத் துடைத்தது.

அந்த நீரின் ஒரு துளி குழந்தையின் விரலிலிருந்து கீழே சொட்டியபோது, ஒரு புல்லின் இதழ் அதைத் தாங்கிப் பிடித்துக்கொண்டது. இதழ் சிலிர்த்தது. அந்தச் சிலிர்ப்பு பக்கத்துச் செடிக்குத் தாவியவுடன், அதில் ஒரு பூ சட்டென்று பூத்தது. ஒன்றல்ல, ஓராயிரம் பூக்கள். அவ்வளவும் ஒரே நேரத்தில் பூதத்தைக் கண்ட ஆப்பிள் மரம் ஆச்சரியத்தில் கண் விரித்தபோது, அதன் உடலில் உள்ள நூறு கனிகளும் குலுங்கியாட ஆரம்பித்தன.

நான்கு மாதங்களாக வராமல் இருந்த வசந்தகாலம் நான்கு விநாடிகளில் என் தோட்டத்தை நிறைத்துவிட்டது. ஓடோடிச் சென்று பெரிய இரும்புக் கதவை அகலமாகத் திறந்தேன். கதவெங்கும் பச்சைப் பசும்கொடிகள் படரத் தொடங்கின. பலகையைக் கழற்றி வீசினேன். என்னையே பார்த்துக்கொண்டிருந்த குழந்தையிடம் குனிந்து அதன் இளஞ்சூடான கரங்களைப் பற்றிக்கொண்டேன். ‘‘இனி இது நம் தோட்டம், குழந்தை. நம் அனைவரின் தோட்டம்.”

அன்று தீண்டிய வசந்தம் இன்றுவரை என்னைவிட்டு அகலவே இல்லை. இத்தனை பெரிய பூதமாக வளர்ந்த பிறகு முதல் முறையாகக் குழந்தைகள் ஒன்றுசேர்ந்து எனக்கு ஒரு பெயரைச் சூட்டினார்கள், ‘வசந்தகால பூதம்’. ‘ஆஸ்கர் ஒயில்ட்’ என்று ஒரு வளரும் எழுத்தாளர் என் கதையை எழுதியிருப்பதாக அறிகிறேன். ‘சுயநலக்கார பூதம்’ என்று வேறு தலைப்பு வைத்திருக்கிறார். உள்ளே என்ன இருக்கிறதோ, தெரியவில்லை! குறைந்தது தலைப்பையாவது மாற்றுமாறு அவருக்குக் கடிதம் எழுதி சண்டையிடும் அனைவருக்கும் தலா ஓர் ஆப்பிள் அளிப்பேன்.

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.comஓவியம்: லலிதா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x