Published : 04 Dec 2019 12:54 pm

Updated : 04 Dec 2019 13:09 pm

 

Published : 04 Dec 2019 12:54 PM
Last Updated : 04 Dec 2019 01:09 PM

புதிய செயலி: எனக்காக நடை பயிலுங்கள்!

new-app

சு. கோமதிவிநாயகம்

உடல் உழைப்பு அதிகம் இல்லாத தற்போதைய வாழ்க்கை முறையில் ஆரோக்கியம் குறைந்து வருகிறது. தினமும் 40 நிமிடங்கள் உற்சாகமாக நடந்தால் நோய்கள் வருவதைத் தடுக்கலாம். ஆனால், பல்வேறு வேலைகளுக்கு இடையே நடைப்பயிற்சி சாத்தியம் இல்லாததாக மாறிவிடுகிறது.

தங்களது பெற்றோரின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த மாணவர்கள் சிலர், ’எனக்காக நடை பயிலுங்கள்; உங்கள் ஆரோக்கியம் பேணுங்கள்’ என்ற தலைப்பில் ஒரு செயலியை உருவாக்கியுள்ளனர்.

கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளியின் 7-ம் வகுப்பு மாணவர்கள் அ. இமயஹர்ஷதா, லெ.உ. மித்ராஜித், 8-ம் வகுப்பு மாணவர்கள் மு. அக்ஷய லெட்சுமி, அ. சுவீட்டி ப்ராஸ்ட், அ. நவீன், ச. அர்ஜுன் கேசவ் ஆகியோர் இணைந்து இந்தச் செயலியை உருவாக்கி உள்ளனர். கடந்த ஜூலை மாதம் நடந்த பயிற்சி முகாமில் செயலிகள் குறித்து விளக்கப்பட்டது.

“எங்களைப் போன்ற மாணவர்கள் விளையாட்டுத் தொடர்பான செயலிகளைத்தான் பதிவிறக்கம் செய்ய விரும்புவார்கள். ஆனால், நாங்கள் வித்தியாசமாக யோசித்தோம். எங்களது நலனைப் பேணும் எங்களது பெற்றோர் நலத்தில் கவனம் செலுத்த முடிவு செய்தோம்.

அதற்காக ஒரு செயலியை உருவாக்கும் எண்ணத்தை, கணினி ஆசிரியர் ஷன்மதியிடம் சொன்னோம். பள்ளி நிர்வாகத்தினரும் எங்களை ஊக்கப்படுத்தினார்கள். பள்ளி நேரம் முடிந்த பின்னர் இரவு 7 மணி வரை செயலியை முழுமைப்படுத்தும் பணியை மேற்கொண்டோம்” என்கிறார்கள் மித்ராஜித், அர்ஜுன் கேசவ், நவீன் ஆகியோர்.

“பெற்றோரை மனத்தில் கொண்டே உருவாக்கினோம். அதனால் தான் ’எனக்காக நடை பயிலுங்கள்; உங்கள் ஆரோக்கியம் பேணுங்கள்’ என்ற தலைப்பை வைத்தோம். கூகுள் ஆப்பில் சென்று பதிவிறக்கம் செய்து, அதில் இணைய முகவரி மூலம் உள்ளே செல்ல வேண்டும்.

அம்மா அல்லது அப்பா என்பதைத் தேர்வுசெய்ய வேண்டும். பின்னர் பி.எம்.ஐ. (பாடி மாஸ் இன்டெக்ஸ்), ஒரு மாதத்துக்கான உணவு கட்டுப்பாட்டு முறை வரும். ஸ்டார்ட் பட்டனை அழுத்திவிட்டு, நடக்க வேண்டும். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கணக்கிடப்படும்.

அதற்கு முன்னதாக நமது எடை, உயரம் கொண்டு பி.எம்.ஐ.யைத் தெரிந்து கொள்ளலாம். மாதத்துக்கு 4 வாரம் எனக் கணக்கிட்டு, ஒவ்வொரு வாரமும் தினமும் எத்தனை மணிக்கு என்ன சாப்பிட வேண்டும் என்ற உணவு கட்டுப்பாட்டு விளக்கப்படமும் இடம்பெற்றுள்ளது.

இதை உணவுக் கட்டுப்பாட்டு ஆலோசகர் மூலம் வடிவமைத்தோம். நாளின் இறுதியில் பெற்றோர் எவ்வளவு நடந்திருக்கிறார்கள் என்று தெரியும். இதில் ஒரு முக்கியமான விஷயம், வேலைப் பளு காரணமாக நடக்காமல் இருந்தால், ‘எங்களுக்காக நடங்கள்’ என்ற குறுந்தகவல் அறிவிப்பாக வரும்” என்று தங்களது செயலியின் முக்கியத்துவம் குறித்து மாணவிகள் இமயஹர்ஷதா, அக்ஷய லெட்சுமி, ஸ்வீட்டி ப்ராஸ்ட் விளக்கினர்.

“கூகுளில் எங்களது செயலிக்கு 4.9 நட்சத்திரங்கள் கிடைத்துள்ளது இரட்டிப்பு மகிழ்ச்சி. மற்ற செயலிகளுக்கும் எங்களது செயலிக்கும் உள்ள வித்தியாசம் நாங்கள் பெற்றோருக்காக உருவாக்கியதுதான்.

இதில் பி.எம்.ஐ., நடை கணக்கீடு, உணவுக் கட்டுப்பாடு தகவல் என வைத்துள்ளது மற்றொரு சிறப்பு. இது எங்களது முதற்படிதான். அடுத்த கட்டமாக இதை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட உள்ளோம்” என்று உற்சாகமாகக் கூறுகிறார்கள் இந்த மாணவர்கள்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

புதிய செயலிNew appநடை பயிலுங்கள்உடல் உழைப்புஆரோக்கியம்பெற்றோரின் ஆரோக்கியம்வேல்ஸ் வித்யாலயா பள்ளி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author