Published : 04 Dec 2019 12:09 PM
Last Updated : 04 Dec 2019 12:09 PM

இந்தப் பாடம் இனிக்கும் 22: பாடம் சொல்லும் பாடம் சொல்லும் நூல்கள்

ஆதி

பத்தாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலில் 'அறிவை விரிவு செய்' பகுதியில் பல நூல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்க சில நூல்கள் குறித்த விவரம்:

சிறுவர் நாடோடிக் கதைகள்,
* கி. ராஜநாராயணன், அன்னம்-அகரம்

கரிசல் பகுதி எழுத்துக்கு அடையாளம் தந்த மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் என அழைக்கப்படும் கி.ரா., மக்களின் சொல்வழக்கில் இருந்த பல கதைகளை ஆவணப்படுத்தியுள்ளார். அவர் தொகுத்து எழுதிய சிறார் நாடோடிக் கதைகளின் தொகுப்பு.

குட்டிஇளவசரன்,
* அந்த்வான் து செந்த் எக்சுபெரி

(தமிழில்: ச. மதனகல்யாணி, வெ. ஸ்ரீராம்), க்ரியா வெளியீடு இரண்டாம் உலகப் போரில் விமானியாகச் செயல்பட்டுள்ள இந்த நூலின் ஆசிரியர், மனித உலகின் அழியாத அடிப்படை குணாம்சங்களையும் அன்பின் ஆற்றலையும் கவனப்படுத்தி எழுதிய உலகப் புகழ்பெற்ற நூல்.

சிறந்த சிறுகதைகள் பதிமூன்று,
* தமிழில்: வல்லிக்கண்ணன், என்.பி.டி.

இந்தத் தொகுப்பில் 13 இந்திய மொழிகளைச் சேர்ந்த சிறந்த எழுத்தாளர்களின் சிறார் கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. சுந்தர ராமசாமியின் தமிழ்க் கதை, புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் சத்யஜித் ரே எழுதிய திகில் கதை உள்ளிட்டவையும் உண்டு.
இலவச மின்னூல்: https://bit.ly/33FiUkL

ஆசிரியரின் டைரி,
* ஜான் ஹோல்ட் (தமிழில்: எம். பி. அகிலா), யுரேகா புக்ஸ்

பரீட்சை வைத்து குழந்தைகளின் திறனை மதிப்பிடுவதை கடுமையாக எதிர்த்தவர் ஜான் ஹோல்ட். மாணவ, மாணவியருக்கு எப்படிக் கற்பிக்க வேண்டும், அவர்களை எப்படி வளர்த்தெடுக்க வேண்டும் என்பது குறித்து பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். புகழ்பெற்ற ‘How Children Fail?’ புத்தகத்தின் தமிழ் வடிவம் இது.

பச்சை நிழல்,
* உதயசங்கர், என்.சி.பி.எச்.

தண்ணீரே இல்லாத ஒரு திடலில் ஒரு புல் முளைக்கிறது. அந்தப் புல்லை இரண்டு சிறுமிகள் கவனமாகப் பார்த்துக்கொள்வதே இந்த நூலின் தலைப்புக்கதை. இதேபோல் சமூகத்தில் நிலவும் பல்வேறு விஷயங்களைப் பற்றிய கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன.

குயில் பாட்டு,
* பாரதியார்

புதுச்சேரியில் பாரதியார் வாழ்ந்தபோது ஒரு தோப்புக்கு அடிக்கடி சென்று ரசிப்பதும் ஓய்வெடுப்பதும் வழக்கம். அங்கு குயில்கள் நிறைய வரும். இதனால் உத்வேகம் பெற்று பாரதியார் எழுதியதே குயில் பாட்டு என்ற இயற்கை ரசனை அடிப்படையிலான கவிதைத் தொகுப்பு.

இலவச மின்னூல்: https://bit.ly/2OWPdpG

ஆறாம் திணை,
* மருத்துவர் கு. சிவராமன், விகடன்

உடல்நலம், உணவு ஆகிய அம்சங்கள் சார்ந்து பிரபல சித்த மருத்துவர் கு. சிவராமன் எழுதிய பிரபல புத்தகம். நாம் வாழும் உலகம், நமது உடல்நிலை பற்றி புதிய வெளிச்சத்தைத் தருகிறது.

நாற்காலிக்காரர்,
*ந. முத்துசாமி, போதி வனம்

‘கூத்துப்பட்டறை’ நவீன நாடகக் குழுவை நடத்திய மறைந்த ந.முத்துசாமி, பல்வேறு நாடகங்களை எழுதியிருக்கிறார். அரசியல்வாதிகள், தேர்தல் என நமது சமூக நடப்புகளை ஆழமான விமர்சனத்துடன் அணுகும் நாடகம் இது.

காலம், ஸ்டீவன் ஹாக்கிங்
* (தமிழில்: நலங்கிள்ளி), எதிர் வெளியீடு

தலைசிறந்த அறிவியலாளர் ஸ்டீவன் ஹாக்கிங். அறிவியல் கோட்பாடுகள் மட்டுமின்றி, அந்தக் கோட்பாடுகளை சாதாரண மக்களையும் ஈர்க்கும் வகையில் அவர் எழுதிய புகழ்பெற்ற புத்தகத்தின் தமிழ் மொழியாக்கம் இந்த நூல்.

என் கதை,
* நாமக்கல் கவிஞர், சந்தியா பதிப்பகம்

சத்யாகிரகப் போராட்டத்தை ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ என்று சிறப்பித்துப் பாடியவர் நாமக்கல் கவிஞர் என்று அழைக்கப்படும் வெ. ராமலிங்கம். அவருடைய தன்வரலாற்று நூல்.

நாம் ஏன் தமிழ் காக்க வேண்டும்,
* சேதுமணி மணியன், செண்பகம் வெளியீடு தமிழ்ப் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்ற இந்த நூலின் ஆசிரியர், தமிழ் வளர்ச்சி-பாதுகாப்பை மையமாகக்கொண்டு செயல்பட்டுவருபவர். நம் தாய்மொழியான தமிழ் ஏன் முக்கியம் என்பதைத் தெளிவுபடுத்துகிறது இந்தக் குறுநூல்.

வேருக்கு நீர்,
* ராஜம் கிருஷ்ணன், தமிழ் புத்தகாலயம்

1969-ல் காந்தி பிறந்த நூற்றாண்டு கொண்டாடப்பட்டபோது, அன்றைய சமூகத்தில் அவருடைய கொள்கைகள் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன என்று ஆராய்கிறது இந்த நாவல். சாகித்ய அகாடமி பரிசும் பெற்றிருக்கிறது.

இலவச மின்னூல்: https://bit.ly/33DOYFq

திருக்குறள் தெளிவுரை,
* வ.உ.சிதம்பரனார், வ.உ.சி. நூலகம்

கப்பலோட்டிய தமிழராகத்தான் வ.உ.சியை நமக்கெல்லாம் தெரியும். அவர் ஓர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். அதிகம் அறியப்படாதது, முக்கியத்துவம் வாய்ந்தது வ.உ.சி. எழுதியுள்ள திருக்குறள் தெளிவுரை.

நாட்டார் கலைகள்,
* அ.கா. பெருமாள், கோமளா ஸ்டோர்

பிரபல நாட்டுப்புறக் கலை ஆய்வாளரான அ.கா. பெருமாள், பேராசிரியர் நா. ராமச்சந்திரனுடன் இணைந்து எழுதிய ‘தமிழக நாட்டார் நிகழ்த்துக்கலைகள்’ என்ற நூலை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் வெளியிட்டுள்ளது. இந்த நூலும் முக்கியமானது.

ஆசிரியரைக் கவர்ந்த நூல்

பத்தாம் வகுப்புத் தமிழ் பாடநூலில் தரப்பட்டிருக்கும் 'அறிவை விரிவு செய்' நூல்களில், தனக்குப் பிடித்த நூல் குறித்து திருவிடைமருதூர் தி.ஆ. மேல்நிலைப் பள்ளித் தமிழாசிரியர் சே. ஜெயசெல்வன் பகிர்ந்துகொள்கிறார்:

இயல் இரண்டில் 'கேட்கிறதா என் குரல்?' என்ற பாடம் இடம்பெற்றுள்ளது. இதை நடத்தியபோது உயிரினங்கள் ஏன் அழிந்து வருகின்றன, பறவையினங்கள் எப்படியிருக்கின்றன என்று மாணவர்களுடன் கலந்துரை யாடினேன்.

அப்போது, பல பறவையினங்களை நாங்கள் பார்த்ததே இல்லை, அவை எங்கே போயின என்று மாணவர்கள் கேட்டார்கள். ச. முகமது அலி எழுதிய ‘அதோ அந்தப் பறவை போல’ (வாசல் வெளியீடு) நூலை கவனப்படுத்தினேன்.

இந்த நூல் அறிவியல் பார்வையுடன் எளிய நடையில், பறவையியலை அறிமுகப்படுத்துகிறது. செயற்கை உரம் போன்ற சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் நாம் நோய்களுக்கு உட்படுகிறோம்.

பறவையினங்களும் அழியத் தொடங்கியுள்ளன. இயற்கையும் மனித வாழ்க்கையும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவை என்று விளக்கியபோது, மாணவர்களிடம் ஒருவித ஏக்கம் கவிந்திருந்ததை உணர முடிந்தது.



தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x