Last Updated : 23 Aug, 2015 03:06 PM

 

Published : 23 Aug 2015 03:06 PM
Last Updated : 23 Aug 2015 03:06 PM

பெண் எனும் பகடைக்காய்: கிராமத்து மருத்துவச்சியின் சாதனை

இப்போதெல்லாம் மருத்துவம் ஒரு மாபெரும் அவஸ்தையாகிவருகிறதோ என்று ஒரு சந்தேகம். மருத்துவத்தை விடுங்கள்; ஒரு கர்ப்பிணி தன் குழந்தையை ஆரோக்கியமாக, சுகப் பிரசவமாகப் பெற்றெடுப்பது என்பதும்கூட அரிதாகிவருகிறது.

சென்ற வாரம் நண்பர் ஒருவர் தன் உறவுக்காரப் பெண்ணொருவருக்குக் குழந்தை பிறந்திருப்பதாகத் தகவல் சொன்னார். நான் வாழ்த்து சொல்வதற்கு முன்னதாகவே ‘குழந்தை பிறந்த செய்தியைவிட நார்மல் டெலிவரி என்பதுதான் மிகப் பெரிய சந்தோஷம்’ என்றார் உற்சாகமாக. பூமிக்கு வந்திருக்கும் ஒரு புது வரவை வரவேற்பதைவிட ‘நார்மல் டெலிவரி’ என்பது எவ்வளவு பெரிய மகிழ்ச்சியைக் கொடுக்கும் விஷயமாக மாறிப்போயிருக்கிறது என்ற கவலை மனதை அரித்தது. அவர் கூறியது உண்மைதான்.

அடுத்து, இரண்டு நாட்களில் மீண்டும் ஒரு அனுபவம். ஒரு இளைய நண்பருடனும் அவரின் இணையருடனும் பேசிக்கொண்டிருந்தேன். இந்த மாதம் தங்கள் வீட்டுக்கு மூன்றாவது நபராக வரவிருக்கும் புது மலரின் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பவர்கள் அவர்கள்.

சுகப் பிரவசத்துக்குத் தடை?

நகரின் மையத்தில் குடியிருப்பு, வீட்டிலிருந்து பதினைந்து நிமிட நேரத்தில் சென்றடையும் தொலைவில் மிகப் பிரபலமான மருத்துவமனை. கருத்தரித்தது முதல் அங்குதான் அனைத்து செக் – அப், ஸ்கேன் இத்யாதிகளும். இத்தனை மாதங்களும் சுமுகமாகச் சென்றுகொண்டிருந்த அனைத்து நடவடிக்கைகளும், பிரசவ காலம் நெருங்கும் நிலையில் தலைகீழாக மாறிப்போயின. நார்மல் டெலிவரிக்காகக் காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி. சிஸேரியன்தான் செய்வோம் என்று கூறி, நாளும் நேரமும் குறித்து, மருத்துவமனையில் வந்து அட்மிட் ஆகும்படி சொல்லி விட்டார்கள். டெலிவரிக்கு இன்னும் நாட்கள் இருக்கும்போது ஏன் இந்த அவசரம்? தொடர்ச்சியாக உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, ஆரோக்கியமான உணவுப் பழக்கம் என அனைத்தையும் மேற்கொண்டுவரும் அந்தப் பெண்ணும் தனக்கு நார்மல் டெலிவரி ஆகிவிடும் என நம்பிக்கையுடன் இருக்கும்போது, மருத்துவமனை ஏன் அதை மறுக்கிறது?

இப்போது அவர்கள் நார்மல் டெலிவரிக்காக மருத்துவமனையைத் தேடியலைந்து, பக்கத்தில் எந்த மருத்துவமனையும் அவர்கள் கோரிக்கையை ஏற்காததால், 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனையைத் தேர்வு செய்திருக்கிறார்கள் அந்த இளம் தம்பதியினர். நார்மல் டெலிவரி ஆகும் என்ற உத்தரவாதத்தையும் நம்பிக்கையையும் இவர்களுக்கு அந்த மருத்துவமனை அளித்திருக்கிறது.

ஏன் இத்தனை சிக்கல்?

வீட்டுக்குப் பக்கத்திலேயே மருத்துவமனை இருந்தும் நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் தாண்டி இவ்வளவு தொலைவு பயணித்து, அலைந்து, ஏன் அவர்கள் சிரமப்பட வேண்டும்? மருத்துவமனைகள் ஏன் சுகப் பிரசவம் என்பதை ஏற்க மறுக்கின்றன? அதே நேரத்தில் பிரசவம் ஏன் இவ்வளவு சிக்கலானதாக மாறியிருக்கிறது என்ற கேள்விகள் மனதுக்குள் எழுகின்றன. தாயாகும் அனைத்துப் பெண்களுக்கும் சுகப் பிரசவமாகவே குழந்தையைப் பெற்றெடுக்கும் ஆற்றல் இயற்கையிலேயே இருக்கிறது, ஒருசில பெண்களைத் தவிர. கர்ப்ப காலத்தில் தொடர்ந்து கவனமாக இருப்பதும் உரிய ஊட்டச்சத்துகளும் மருத்துவ ஆலோசனையும் மட்டும்தான் தேவை.

முன்பெல்லாம் வீடுகளிலேயே பிரசவங்கள் பார்க்கப்பட்டன. அந்தந்த ஊரில் இருக்கும் மருத்துவச்சிகள் அந்த வேலையைச் செய்துவந்தார்கள். ஒரு சில பெண்கள் பிரசவத்தின்போது தங்கள் உயிரை இழந்த துயரச் சம்பவங்களும் உண்டு. பிரசவ கால மரணங்களைத் தவிர்ப்பதற்காகவே மருத்துவமனையை நாடினார்கள். அப்போதெல்லாம் ‘ஆயுத கேஸ்’ என்பது ஆயிரத்தில் ஒன்றாக இருந்தது. ஆனால், பாருங்கள். இப்போது நிலைமை தலைகீழாகிவிட்டது. இப்போது எங்கு பார்த்தாலும் சிஸேரியன். அந்த நிலைமையைத் தவிர்க்க உரிய சிகிச்சை அளிப்பதுதான் மருத்துவர்களின் கடமை. இப்போது கிராமங்களில்கூட ஆரம்ப சுகாதார மையங்கள் (Praimary Health Centres) உள்ளன. அங்குதான் பிரசவங்கள் நிகழ்கின்றன. சிக்கலான பிரசவம் என்னும்போது மட்டும் பக்கத்து நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனையையோ, தனியார் மருத்துவமனையையோ அவரவர் வசதிக்கேற்றவாறு அணுகுகிறார்கள். அதற்காக மருத்துவச்சியே போதுமென்று வாதாடவில்லை. சிக்கலான நேரங்களில் பல உயிர்களை மருத்துவர்கள் காப்பாற்றியிருக்கிறார்கள்.

கர்ப்பம் தரித்தது முதல் ஒரே மருத்துவமனையில் ஆலோசனைகள் பெற்று, அனைத்து சோதனைகளையும் மேற்கொண்டு, மருத்துவர்கள் கூறிய ஆலோசனைகளைக் கடைப்பிடித்து சுகப் பிரசவத்துக்குக் காத்திருந்த பெண்ணுக்குக் கடைசி நேரத்தில் சிஸேரியன்தான் என்று நெருக்குதல் அளிப்பது ஏன்? மனரீதியாகவும் அது அவர்களை பாதிக்காதா? பிரசவம் என்பது ஒரு நோய் அல்லவே.

மருத்துவமனைகளின் பங்கு

நவீன மருத்துவம் மக்களைக் காப்பாற்றக்கூடியது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இன்றைய சூழலில் சுகப் பிரசவங்கள் பெரிதும் குறைந்துவருவது அச்சத்தை ஏற்படுத்துகிறது. அட்மிட் ஆகி, சிகிச்சை பெற்று, டிஸ்சார்ஜ் ஆவதுவரை அனைத்தும் ‘பேக்கேஜ்’களாக மாறிக்கொண்டிருக்கின்றன. பொதுச்சேவை என்று கருதப்பட்ட மருத்துவச் சேவை பணம் கொழிக்கும் பெரும் தொழிலாக மாறிப்போயிருக்கிறது. இதில் மருத்துவர்களின் பங்களிப்பு என்ன? மருத்துவமனைகள் எதிர்பார்ப்பது என்ன? மாதத்துக்கு இத்தனை சிஸேரியன்கள் என இலக்கு ஏதேனும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா?

இங்கு மக்களிடம் ஏற்பட்டிருக்கும் மற்றொரு மாற்றம் பற்றியும் அவசியம் குறிப்பிட வேண்டும். நாள், நட்சத்திரம், நல்ல நேரம் எல்லாம் பார்த்துத் தங்கள் சந்ததிகள் இந்த உலகுக்கு வர வேண்டும் என்ற ஆசை. அதற்காகவே சிஸேரியன்களை ஆதரிப்பது, அதற்கு மருத்துவமனைகளும் ஒத்து ஊதுகின்ற நிலைமை. நல்ல நேரத்தில் பிறக்கும் அத்தனை குழந்தைகளும் எந்த இடர்ப்பாடுகளையும் தங்கள் வாழ்க்கையில் சந்திக்காமல் வளர்ந்து, வாழ்ந்துவிடப் போகிறார்களா?

கொசுறு!

சில வருடங்களுக்கு முன் செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூர் அருகேயுள்ள ஒரு சிறிய கிராமத்தில் சில மாதங்கள் தங்கி, வேலை செய்ய வேண்டியிருந்தது. அது தலித் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஒரு சின்ன ஊர். அந்த ஊர் மருத்துவச்சி ஒருவரைச் சந்தித்துப் பேசியபோது ஆச்சரியமான பல விஷயங்களைக் கேட்க முடிந்தது. அந்தப் பெண் ஐம்பது வயதைக் கடந்தவர். தன் அனுபவத்தில் அவர் கிட்டத்தட்ட 600 பிரசவங்கள் பார்த்திருக்கிறார். அத்தனை பிரசவங்களும் எந்தச் சிக்கலும் இல்லாத நார்மல் டெலிவரி!

ஒருவேளை அவர் மிகைப்படுத்திக் கூறுகிறாரோ என்ற சந்தேகத்தில் சம்பந்தப்பட்ட பெண்கள் பலரையும் நான் சந்தித்துப் பேசினேன். அவர் கூறியது முற்றிலும் உண்மை என்பது தெளிவானது. அனைத்து வசதிகளும் நிரம்பிய மருத்துவமனைகளால் சாதிக்க முடியாததை ஒரு கிராமத்து மருத்துவச்சியால் எப்படி நிகழ்த்த முடிந்தது?

கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: asixjeeko@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x