Published : 03 Dec 2019 01:03 PM
Last Updated : 03 Dec 2019 01:03 PM

இளைஞர் முகம்: இசையால் மயக்கும் விழியாள்!

ரமேஷ் கணேசன்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது பிள்ளையார்தாங்கல் கிராமம். பசுமையான பூமியான இக்கிராமத்தில் அதை ரசிக்க முடியாமல் போன ஒரு பெண்ணின் குரல் அனைவரையும் கட்டிப்போட்டு ஈர்த்து வருகிறது!

இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஷண்முகப்பிரியா என்ற இளம் பெண்தான் இசையால் மயக்கும் காந்தக் குரலுக்குச் சொந்தக்காரர். பிறவியிலேயே பார்வையில்லாதவர். திருச்சியில் மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்துவந்த இவர், தாயைப் பிரிந்து இருக்க முடியாமல் பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு ஊருக்குத் திரும்பியவர்.

வீட்டில் பொழுதுபோக்குக்காக ஷண்முகப்பிரியா தொலைக்காட்சிகளில் வரும் திரைப்பாடல்களைப் பாட ஆரம்பித்தார். மனதுக்குள் பாடிப்பாடி சுத்த ராகத்தோடு பாடக் கற்றுக்கொண்ட ஷண்முகப்பிரியா, ஒரு கட்டத்தில் மிக அழகாகப் பாட ஆரம்பித்துவிட்டார்.

பாடல்களை அழகாகவும் வார்த்தை மாறாமல் எப்படிப் பாடக் கற்றுக்கொண்டார்? “என்னுடைய அம்மாவுக்கு 80-களில் வந்த பாடல்களைக் கேட்பது என்றால் ரொம்பப் பிடிக்கும். அவருக்குப் பிடித்த பாடல்களைப் பாடச் சொல்லி என்னைக் கேட்பார்.

அப்படி நான் பாடும்போது அந்தப் பாடல்களை மெமரி கார்டில் பதிவுசெய்துகொள்வேன். பிறகு அந்தப் பாடலைத் திரும்ப திரும்பகேட்பேன். அந்தப் பாடலின் ஒரிஜினலையும் கேட்பேன். ஏதாவது தவறு இருந்தால், சரி செய்து அதை மனத்தில் ஏற்றிக்கொள்வேன். இப்படித்தான் பாடல்களை அழகாகவும் தவறு இல்லாமலும் பாடக் கற்றுக்கொண்டேன்” என்கிறார் ஷண்முகப்பிரியா.

பாடல்கள் அத்துப்படியானதால், பொழுபோக்காகப் பாடிய ஷண்முகப்பிரியா தனக்கு பிடிக்கும் போதெல்லாம் பாடத் தொடங்கினார். இவர் பாடியதைக் கேட்ட அவருடைய உறவினர், அப்பாடலின் ஒன்றரை நிமிட வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவேற்றினார். அந்தப் பாடல் பலரது கவனத்தையும் ஈர்த்தது. இதனால், அந்த ஊரில் ஷண்முகப்பிரியாவின் பாடலுக்கு ரசிகர்கள்கூட உருவாகிவிட்டார்கள்.

சங்கீதம் கற்காவிட்டாலும், கேள்வி ஞானத்தை வைத்துப் பாடல்களை அச்சு பிசகாமல் பாடும் ஷண்முகப்பிரியாவுக்கு இளையராஜா, எஸ்.பி. பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம், சைலஜா, பி.சுசிலா என்றால் உயிர். 80-களில் வந்த எந்தப் பாடலையும் என்னால் பாட முடியும் என்று ஷண்முகப்பிரியா பேசும்போது, அவருடைய முகத்தில் அத்தனை பெருமை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x