Published : 03 Dec 2019 12:22 PM
Last Updated : 03 Dec 2019 12:22 PM

எங்கேயும் எப்போதும் 08: நெருப்பை அணைக்கும் ஒலி?

ஹாலாஸ்யன் 

தீபாவளிக் கோலாகலம் முடிந்தபின் வெடிக்காத வெடிகளைப் பொறுக்கி, குவியலாகப் பற்றவைத்து வெடிக்கிறதா என்று பார்ப்போம். சிறிது நேரத்தில் ஏதேனும் ஒன்று பட்டென்று வெடிக்கும். ஆனால், வெடித்த பின்னர் காகிதக் குவியலில் எரிந்துகொண்டிருந்த நெருப்பு கிட்டத்தட்ட அணைந்துவிடும். தீப்பிடிக்கும் பொருட்கள் நிறைந்த வெடி வெடிக்கையில், காகிதக் குவியலின் நெருப்பு இன்னமும் கொழுந்துவிட்டுதானே எரிய வேண்டும். ஆனால், ஏன் இப்படி அணைந்து போகிறது?

அணையும் நெருப்பு

முதலில் நெருப்பின் அறிவியலைப் பார்ப்போம். தீ உண்டாவதற்கும் தொடர்ந்து எரிவதற்கும் எரிபொருள், ஆக்ஸிஜன், வெப்பநிலை ஆகிய மூன்றும் சரியான அளவில் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றைப் புழக்கத்தில் உள்ள தீயணைப்புக் கருவிகள் கட்டுப்படுத்திவிட்டால் நெருப்பு அணைந்துவிடும். சிவப்பு நிற உருளைத் தீயணைப்புக் கருவிகள் பெரும்பாலும் கரியமில வாயுவை வெளியேற்றி ஆக்ஸிஜனுடனான நெருப்பின் இணைப்பைத் துண்டிக்கின்றன; அதன்மூலம் தீயை அணைக்கின்றன.

இப்போது காகிதக் குவியல் வெடித்ததற்கு வருவோம். வெடி வெடிக்கையில் சுற்றியிருக்கும் காற்று அதிர்கிறது. அந்த அதிர்வுதான் காற்றில் பயணித்து நம் காதுகளுக்கு ஒலியாக வந்துசேர்கிறது. ஆனால், அதிரும்போது அது எரிபொருளையும் ஆக்ஸிஜன் வாயுவையும் சேரவிடாமல் பிரிக்கிறது. அப்படியெனில் ஒலியால் நெருப்பை அணைக்க முடியும்தானே. ஆம்! ஒலியின் பண்புகளின் மூலம் இது சாத்தியம்தான். ஆனால், பத்துப் பேர் நெருப்பைச் சுற்றி நின்று கத்தினால், நெருப்பு அணையுமா என்று கேட்டால், இல்லை!

புது தீயணைப்புக் கருவிகள்

உயர் அதிர்வெண் கொண்ட ஒலிக்குத் தீயணைக்கும் திறன் குறைவு. நெஞ்செலும்பு அதிர ஒலிக்கிற, குறைவான அதிர்வெண் கொண்ட, அடித்தொனி ஒலிக்கு (Bass) இந்தத் தீயணைக்கும் திறன் அதிகம். காரணம், அதிர்வெண் குறையும்போது அதன் அலைநீளம் அதிகரிக்கும். அப்படியென்றால், அதிகத் தொலைவுக்கு எரிபொருளையும் ஆக்ஸிஜனையும் இவற்றால் பிரித்து வைக்க முடியும்.

குறிப்பாக, 30 முதல் 60 ஹெர்ட்ஸ் வரையிலான ஒலிக்கு இந்தத் திறன் அதிகம் என ஆய்வில் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வை நீட்டித்து, தீயைக் கட்டுப்படுத்தும் பொருளை மீண்டும் நிரப்பத் தேவையற்ற புதிய வகை தீயணைப்புக் கருவிகளை உருவாக்க முடியும். காட்டுத்தீயின்போது மனிதரால் நெருங்கவே முடியாத இடங்களில், ட்ரோன் (Drone) மூலம் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர இந்த முறை உதவும்.

(தொடரும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு:
yes.eye.we.yea@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x