Published : 02 Dec 2019 02:08 PM
Last Updated : 02 Dec 2019 02:08 PM

தீவிரமாகும் பொருளாதார மந்தநிலை?

முனைவர்.சௌ.புஷ்பராஜ்,

பொருளியல் பேராசிரியர்

s_pushparaj@hotmail.com

கடந்த வாரம் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டு ஜிடிபி வளர்ச்சி விகிதம் வெளியானது. எதிர்பார்த்தது போலவே மிக மோசமாக 4.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்தியா முழுவதுமே விற்பனை சரிவு, உற்பத்தி வீழ்ச்சி, வேலையிழப்பு, ஆலைமூடல், ஆட்குறைப்பு உள்ளிட்ட பொருளாதாரம் சார்ந்த அன்றாட நிகழ்வுகளைத்தான் ஆழ்ந்த கலக்கத்துடன் மக்கள் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அரசு எதற்கும் கலங்காமல் 5 டிரில்லியன் (லட்சம் கோடி) டாலர் பொருளாதார இலக்கை 2024-க்குள் எட்டுவோம் என மேடைக்கு மேடை கூறிக்கொண்டிருக்கிறது. (தற்போதைய பொருளாதார அளவு 2.6 டிரில்லியன் டாலர்). இதன்படி அடுத்த 5 வருடத்துக்குள் இந்தியப் பொருளாதாரம் இருமடங்காக வேண்டும். சராசரி தனிநபர் வருமானமும் இருமடங்காக வேண்டும். கடந்த 70 வருடங்களில் எட்ட முடியாத பொருளாதார வளர்ச்சியை இந்தியப் பொருளாதாரம் தற்போது எட்டியுள்ளது எனவும், இந்தியப் பொருளாதாரம் உலக நாடுகள் அனைத்தையும் முந்தி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது எனவும் கூறி வருகிறது.

நடைமுறையில் இந்தியப் பொருளாதாரத்தின் அளவு 5-வது இடத்திலிருந்து 7-வதாக சரிந்துள்ளதாக உலக வங்கி அறிக்கை தெரிவிக்கிறது. சமீபத்தில் அரசு தனது சாதனையை நிரூபிக்கவும் மிகைப்படுத்தவும் உருவாக்கிய புதிய தேசிய வருமானக் கணக்கீட்டின் அடிப்படையான வளர்ச்சி விகிதம் கூட 5.8 சதவீதமாக சரிந்துள்ளது அரசின் அதிகார பூர்வமான புள்ளிவிபரங்கள் மூலமாக தெரிகின்றது.

இதுவரை அமைதி காத்துவந்த உற்பத்தியாளர்கள், வங்கியாளர்கள் உள்ளிட்ட பலதரப்பினரும் கூட தனிப்பட்ட முறையில் அவநம்பிக்கையில் ஆழ்ந்துள்ளனர் என்பதை, அவர்கள் போதுமான அளவுக்கு வரி சலுகைகளையும் மற்ற உதவிகளையும் அரசு செய்ய வேண்டும் என்று கேட்பதிலிருந்து உணரலாம்.

மக்களின் பொருளாதாரம் குறித்த அவநம்பிக்கைகளை RBI-ன் ஆராய்ச்சி முடிவுகளும் உறுதிசெய்கின்றன. ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கினர் தற்போதைய வாழ்க்கை தரத்தைப் பேணுவதைக்கூட சவாலாக எண்ணுவதாகத் தெரிவிக்கின்றனர்.

அரசு சில வேளைகளில் மறுப்பது அல்லது சில நேரங்களில் கண்டு கொள்ளாமலிருப்பது என காட்டிக்கொண்டாலும், மக்களின் கருத்துகளை புறக்கணிக்க முடியவில்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில் சமீபத்தில் அரசு வங்கிகள் இணைப்பு, கார்ப்பரேட் வரியை 30% லிருந்து 22 % ஆக குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் பொருளாதாரச் சரிவுகளைச் சீர்செய்ய எடுக்கப்பட்டதாகவும், விரைவில் பொருளாதாரம் மந்தநிலையிலிருந்து மீளும் எனவும் தெரிவித்துவருகிறது.

ஆனால், வெறும் சலுகைகளோ அறிவிப்புகளோ மட்டுமே போதும் என்று அரசு நினைப்பது தான் இங்கே பிரச்சினை. அரசு அடிப்படை பிரச்சினையை அடையாளம் காணவில்லை என்பதுதான் சிக்கல். பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசின் கொள்கைகள் மற்றும் அதன் கொள்கை விளக்க வெளியீடுகளிலிருந்து சில உண்மை
களைப் புரிந்துகொள்ள முடிகிறது. நாட்டின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சியை, தொழில் நுட்ப வளர்ச்சி, நீண்டகால முதலீடு போன்ற இலக்குகளோடு ஒப்பிடும்போது ஒரு பிரச்சினையே அல்ல என அரசு உறுதியாக நம்புவதாக தோன்றுகிறது.

தற்போதைய பொருளாதார வீழ்ச்சி ஒரு சில துறை சார்ந்தனவேயொழிய அவை ஒட்டுமொத்த பொருளாதாரப் பிரச்சினையில்லை என்றே கருதுகிறது. உதாரணமாக, ஆட்டோமொபைல் துறையில் கார் மற்றும் பைக் விற்பனை வீழ்ச்சியை செய்தியாளர்கள் சுட்டிக்காட்டிய போது அது ஓலா, உபெர் போன்ற கார் சேவைகளை மக்கள் அதிகமாக உபயோகிக்கத் தொடங்கியதால்தான் என விளக்கம் கூறப்பட்டது.

அதாவது, மக்களின் போக்குவரத்துத் தேவை குறையவில்லை மாறாக சொந்த வாகனங்களை உபயோகப்படுத்துவதற்குப் பதிலாக விலை மலிவான ஓலா, உபெர் வாகன சேவைகளின மூலம் மக்கள் தங்களின் போக்குவரத்துத் தேவைகளை நிவர்த்தி செய்ய ஆரம்பித்து விட்டனர் என்பது இதன் வாதம். இதேபோன்று பார்லே-ஜி பிஸ்கட் நிறுவனம் மூடப்படுவதாக செய்தி வந்த பொழுது, பிரிட் டானியா பிஸ்கட் தேவையை பாருங்கள் என்று கூறப்பட்டதும் இந்த வாதத்தின் அடிப்படையில் தான்.

நிதியமைச்சர் 6 மாதத்தில் இப்பொருளாதாரச் சிக்கல்கள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடும் என்று உறுதியாகக் கூறுகிறார். இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படை மிகவும் வலுவாக உள்ளதாகவும் சிக்கல்கள் நீண்டகாலத்துக்கு நீடிக்காது என அரசின் ஆதரவாளர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர். இதுபோன்ற கோட்பாட்டு நம்பிக்கையில் அரசு இருப்பதால் அனைத்து தரப்பு மக்களின் நலனுக்கு ஏற்ப தேவையான நடவடிக்கைகளை எடுக்க யோசிப்பது கூட இல்லை.

அரசின் மூட நம்பிக்கை

இந்த தொன்மைவாத நம்பிக்கையின்படி, பொருளாதாரம் எப்பொழுதுமே அனைத்துத் தரப்பினருக்கும் நன்மை தரும் நிலையிலேயே இருக்கும். ஒருவேளை இதில் சிக்கல்கள் ஏதும் முளைத்தால் அது தற்காலிகமானது மட்டுமே, மேலும் பிரச்சினைகள் ஒரு சில துறைகள் சார்ந்ததாகவே இருக்கும்.

எனவே அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் ஏதும் இல்லாமலேயே பொருளாதாரச் சிக்கல் சரியாகிவிடும் என்று இந்த கோட்பாடு கூறுகிறது. வெளிப்படையாகச் சொன்னால், மக்களை வதைக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள் அனைத்தும் தானாகவே குறுகிய காலத்தில் சரியாகிவிடும் என்பது ஒரு அலாதியான மூட நம்பிக்கை.

வரலாற்றில் இத்தகைய கருத்தோட்டங்கள் 1930-களில் ஐரோப்பாவில் கோட்பாடுகளாக உருப்பெற்று, பின்னர் அவை மக்களால் பொதுவெளிகளில் தோற்கடிக்கவும் நிராகரிக்கவும்பட்டன. தொன்மை வாதக் கோட்பாடுகளும் அதனடிப்படையிலான கொள்கைத் திட்டங்களும் குறைந்தது 15 ஆண்டுகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அனைத்து தரப்பு மக்களையும் சொல்லொணா துயரத்துக்கு ஆளாக்கியது. பிரச்சினையின் உச்சமான பொருளாதார பெருமந்த காலத்தில் வேலை வேண்டும் தொழிலாளிகள் வேலையின்றியும், வேலை கொடுக்க வேண்டிய தொழிற்சாலைகள் தொழில் இல்லாமல் மூடியும் கிடந்தன.

உடுத்த உடையின்றி பெரும்பகுதி மக்களும், விற்க வழியின்றி தேங்கிக்கிடக்கும் துணிமணிகளும் ஒருங்கே இருந்தன. தொன்மைவாத கொள்கைகள் இதற்கு தீர்வு சொல்ல முடியாமல் திணறியது. அதற்கும் மேலாக பிரச்சினையை மென்மேலும் மோசமடையச் செய்தன என்பது வேதனையிலும் வேதனை. இத்தகைய தொன்மையான, பழமைவாத துயரகோட்பாட்டுக்கு இதே கொள்கை மரபிலிருந்து வளர்ந்த இங்கிலாந்தைச் சார்ந்த பேராசிரியர் ஜான் மேனார்ட் கீன்ஸ் தனது வரலாற்று சிறப்பு மிக்க பொதுக் கோட்பாடு (General Theory - 1936) என்ற தத்துவத்தின் மூலம் ஒரு முடிவு கட்டினார். தனது புத்தகத்தில் நவீன பொருளாதாரம் என்பது நுட்பமான ஏற்பாடு.

அதைப்பற்றிய புரிதல் தொன்மை பொருளாதார அறிஞர்களுக்கு போதுமான அளவுக்கு இல்லையென்றும் அதை யொட்டிய கொள்கைகள் மற்றும் திட்டங்கள் பொருளாதாரத்துக்கு பெருந்தீங்கை விளைவிக்கும் என கூறினார். அந்த தீர்க்கதரிசனம் இன்று நம் கண் முன்னே அரங்கேறி கொண்டிருக்கிறது.

தொன்மை வாதத்தின் முழுநோக்கமும் கவனமும் உற்பத்தி பற்றியதே. எனவே இக்கருத்துகளை உற்பத்தி சார்ந்த கோட்பாடு என்றும் அழைப்பார்கள் (Supply Side Economics). பொருளாதாரத்தில் உற்பத்தி அளவு அதற்கு தகுந்தாற்போல் அதே அளவு தேவையை உருவாக்கிக் கொள்ளும். உற்பத்தியை தொடர்ந்து தேவை தானாகவே உருவா
கும். தேவையை குறித்த அரசின் கொள்கைள் தேவையற்றது என்று தொன்மை வாதம் கருதுகிறது.

உற்பத்தியா? தேவையா?

ஆனால், கீன்ஸ் இந்தக் கருத்தை அடிப்படையிலேயே மறுக்கிறார். அவர் கூற்றின்படி எந்தப் பொருளாதாரத்திலும் தேவைதான் முக்கியப் பிரச்சினையாக இருக்கும். ஏனெனில், பொருளாதாரத்தில் எப்பொழுதும் தேவை உற்பத்தியை விட குறைவாகவே இருக்கும் என்று ஆதாரத்துடன் தனது கோட்பாட்டில் விளக்குகிறார். இந்த குறைவான தேவை, உற்பத்தியில் ஒரு பகுதி சந்தையில் தேங்கிப் போவதற்கு காரணமாக அமைந்துவிடும். அடுத்தடுத்த உற்பத்திச் சங்கிலியில் தேவை படிப்படியாக பொருளாதாரத்தில் குறைந்து கொண்டே போவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று வாதாடுகிறார்.

குறைந்துகொண்டே செல்லும் தேவைக்கான காரணங்களாக அவர் கூறுவதில் இரண்டு முக்கிய காரணிகள் உண்டு. ஒன்று, மக்களிடையே கூடிக்கொண்டே செல்லும் வருமான ஏற்றத்தாழ்வுகள். மற்றது, விற்பனையை தொடர்ந்து செய்ய இயலாமல் தேங்கிப்போன உற்பத்தியே உற்பத்தியை முடக்குவது, மந்தமான பொருளாதாரச் சூழலால் புதிய முதலீடுகள் செய்வதை தவிர்ப்பது போன்றவை. மிக முக்கியமாக, பொருளாதார அடுக்குகளில் அதிக வருமானம் பெறும் பணக்காரர்கள், தங்களை விடவும் குறைந்த வருமானம் பெறும் ஏழைகளைக் காட்டிலும் குறைவாகவே செலவு செய்வார்கள்.

ஆனால், இதை யாரும் நம்புவதில்லை. எனவேதான், பணக்கார்களின் வருமானத்தைக் காட்டிலும் ஏழைகளின் வருமானம் அதிகத் தேவையை உருவாக்கும் என்பதையும் இவர்கள் உணரவில்லை. ஏழைகளைக் காட்டிலும் அதிகமாக உயரும் பணக்காரர்களின் வருமானம் குறைவான தேவையையே உருவாக்கும். வருவாய் ஏற்ற தாழ்வு அதிகரிக்கிறது என்றால் பணக்காரர்களின் வருமானம் ஏழைகளின் வருமானத்தை விட அதிகமாக உயர்கிறது என்று பொருள்.

சராசரியாக ஏழைகளின் வருவாய் 2 சதவீதம் வளர்ச்சியடைகிறது என்றால், பணக்காரர்களின் வருமானம் 12 சதவீதம் வளர்ச்சியடைகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் மிகப்பெரும் 1 சதவீத பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு, ஒட்டு மொத்த மதிப்பில் 57 சதவீதத்திலிருந்து கடந்த நான்கு வருடத்தில் 73 சதவீதமாக அதிகரித்துள்ளது. கிராமப்புற வேலைவாய்ப்பும், அமைப்புசாரா தொழில் வேலைவாய்ப்பும் வீழ்ச்சியடைந்துள்ளன என்று தேசிய மாதிரி சர்வே ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சமீப காலமாக கிராமப்புற தொழிலாளர் வருமானம் 5 –7 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணங்கள், கிராமப்புறங்களில் நிலவும் வேலையின்மை, வருவாய் வீழ்ச்சி, நகர்ப்புறங்களில் குறைந்து வரும் வேலைவாய்ப்பு, நிரந்தரமற்ற தற்காலிக வேலைக் கலாச்சாரம், சீரழிந்த சிறு மற்றும் குறுந்தொழில்கள் போன்றவைதான். இதனால் நாட்டின் தேவை பெருமளவில் வீழ்ச்சிகண்டிருக்கிறது.

தேசிய புள்ளியில் மாதிரி கணக்கெடுப்பு அறிக்கை (NSSO)யில் தனியார் செலவு வருடத்துக்கு 3.1 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சியடைவதாக தெரிவித்திருப்பதே இதற்கு சான்று. இதன்மூலம் உற்பத்தி தேவை இரண்டுக்கும் இடையிலான இடைவெளி எந்த அளவுக்கு பிரச்சினைகளை உருவாக்குகிறது என்பது தெளிவாகிறது. இதன் சில உதாரணங்கள்தான் ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட், பிஸ்கட் கம்பெனிகளே தவிர, அவை மட்டும்தான் சிக்கலில் உள்ளன என்பது அர்த்தமல்ல.

பிரச்சினையின் ஆழத்தைப் பாருங்கள்

முதலீட்டார்களுக்கான அரசு சலுகைகள், தொடர்ந்து 5-வது முறை குறைக்கப்பட்ட ரிசர்வ் வங்கி வட்டிவீதம் ஆகியவற்றுக்குப் பின்பும் எதிர்பார்த்த அளவுக்கு புதிய முதலீடுகள் வரவில்லை. ஒருபக்கம் உற்பத்தி ஆலைகளின் மூடல் செய்திகள் தினம் தினம் வந்த வண்ணம் உள்ளன. இவை உணர்த்துவது யாதெனில் உற்பத்தியாளர்களுக்கு பொருளாதாரம் குறித்த அவநம்பிக்கை ஆழமாக வேரூன்றி வருகிறது என்பதுதான். இந்த அவநம்பிக்கைக்கான காரணம் உற்பத்திக்கு நிகரான தேவை சந்தையில் இல்லை என்பதே.

சுருக்கமாகக் கூறினால் இன்றைய பொருளாதாரத்தின் முக்கியப் பிரச்சினை குறைவான தேவை, மிகையான உற்பத்தி என்ற சூழ்நிலை தான். இது தற்காலிகமான பிரச்சினை அல்ல. அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் பிரச்சினை நிச்சயமற்ற நீண்டகால பிரச்சினை. இதை சரிசெய்ய தனியார் முதலீட்டை எதிர்பார்த்து காத்திருப்பது இலவுகாத்த கிளியின் நிலையை போன்றது. அரசின் ஆக்கபூர்வமான தலையீடு இல்லாமல் இதை சரி செய்ய முடியாது. தற்காலிக பேச்சுகளுக்கு முடிவுகட்ட வெறுமனே விடுக்கப்படும் அறிவிப்புகளால் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது.

அரசு முதலீடு மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் தீர்க்கமான கொள்கைளை உருவாக்கிட வேண்டும். முதலீடுகளை அதிகரிக்க சிறப்பு முதலீட்டு வங்கிகள் உருவாக்கப்படுவது மிகவும் அவசியம். இப்போதைய வங்கிகள் முதலீட்டு வங்கிகளுக்கு மாற்று அல்ல. மேலும் வருவாய் ஏற்றத்தாழ்வுகளை குறைக்க அரசின் வரிக் கொள்கைகளை மறுபரிசீலனை செய்து சமூக திட்டங்களை அதிகரிக்க வேண்டும். ஆனால், அதற்கு அரசின் தற்போதைய கோட்பாடுகள் மற்றும் அதன் அடிப்படையிலான விலைவாசி, நிதி பற்றாக்குறை கட்டுப்பாடு உள்ளிட்ட கொள்கைகள் அனுமதிக்குமா என்பது சந்தேகம்தான்.

தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைகளை சரியான முறையில் அணுகத் தவறினால், பொருளாதார நெருக்கடியையும், வீழ்ச்சியையும் அதைத் தொடர்ந்த பெரும் மந்தத்தையும் நிச்சயம் எதிர்கொள்ள வேண்டி வரும். இதை உணரத் தவறினால் இந்திய சமூகம் பொருளாதாரத்தில் மிகப்பெரிய சீரழிவை சந்திக்க நேரிடும். வேகமாக வளரும் நாடு என்ற பெருமை தலைகீழாக மாறிவிடும். அத்தகைய நிலை ஏற்படாமலிருக்க பிரச்சினையின் அடிப்படையை ஆழமாகப் பார்த்து அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசு இத்தகைய கோட்பாட்டு மாற்றத்துக்கு தயாராக வேண்டும். தொன்மை வாதத்தை உதறித் தள்ள வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x