Published : 02 Dec 2019 01:25 PM
Last Updated : 02 Dec 2019 01:25 PM

அலசல்: உணவே விஷமாய்...

உணவுப் பொருட்களின் தரம் குறித்த சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக இருக்கிறது. நாடு முழுவதும் வெவ்வேறு மாநிலங்களிலிருந்து 1,06,459 உணவுப் பொருட்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்ட நிலையில், அவற்றில் 3,900 பொருட்கள் உண்பதற்கு தகுதியற்றவை என்று தெரியவந்துள்ளது.

பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், குறிப்பிட்ட நான்கு மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் பாதுகாப்பற்ற பொருட்கள் புழங்குவதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. தமிழ்நாடு அதில் முதல் இடத்தில் இருக்கிறது. அடுத்தடுத்த இடங்களில் அஸ்ஸாம், ஜார்கண்ட், வங்காளம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

பால், இறைச்சி, பிரட், பிஸ்கட், பேக் செய்யப்பட்ட நொறுக்குத் தீனிகள் என தமிழகத்தில் இருந்து பரிசோதிக்கப்பட்ட 5,730 பொருட்களில், 728 பொருட்கள் பாதுகாப்பற்றவையாக இருந்துள்ளன. இது மொத்த எண்ணிக்கையில் 12.7 சதவீதம் ஆகும்.

இதுசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பொருட்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டது. எனில், அன்றாடம் புழக்கத்தில் இருக்கும் கோடிக்கணக்கிலான பொருட்களின் நிலை?
இது ஒருபுறம் என்றால் டெல்லி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் விநியோகிக்கப்படும் தண்ணீரை சோதித்தபோது அவை மிக மோசமாக மாசு அடைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

காற்று மாசுபாடு போன்ற சூழலியல் பிரச்சினைகள், அரசும் மக்களும் சேர்ந்து பொறுப்பேற்க வேண்டியவை. ஆனால், குடிநீர், உணவுப் பொருட்கள் சார்ந்து மக்கள் தங்கள் அளவில் என்ன தீர்வை நடைமுறைப்படுத்த முடியும்? இங்குதான் ஒரு அரசின் செயல்பாடு சார்ந்து பேச வேண்டியதாகிறது. அடிப்படை வாழ்க்கைத் தரத்தை தன் குடிமக்களுக்கு உருவாக்கித் தருவது ஒரு அரசின் குறைந்தபட்ச கடமை. சுத்தமான குடிநீர் இல்லை; உணவு இல்லை எனில் ஒரு நாடாக அரசின் பங்களிப்புதான் என்ன? வெளிநாடுகளில் உணவுப் பொருட்கள் சார்ந்து மிகக் கடுமையான தரக்கட்டுப்பாட்டு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

அதையும் மீறி, பாதுகாப்பற்ற பொருட்கள் விற்கப்படுவது கண்டுபிடிக்கப்படுமாயின் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஆனால், இங்கு ஊடகங்களில் செய்தி வரும் சமயத்தில் மட்டும், அரசு நடவடிக்கை எடுப்பதுபோல் செயல்படுகிறது. மக்களும் நம்மால் என்ன செய்ய முடியும் என்ற நிலைக்கு வந்துவிட்டனர்.

தற்போது மக்களின் உணவு முறை வேகமாக மாறிவருகிறது. பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை அன்றாடம் உட்கொள்ளும் கலாச்சாரத்துக்கு மாறி வந்துள்ளோம். 2025-ம் ஆண்டில் விற்பனையாகும் பொருட்களில் ரூ.72 லட்சம் கோடி மதிப்பிலான உணவுகள் பதப்படுத்தப்பட்டவையாக இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அத்தகைய உணவுப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களின் பெருக்கம் சமீபத்திய காலங்களில் பல மடங்கு அதிகரித்து உள்ளது. விற்பனையை அதிகரிப்பதற்காக புதிய புதிய ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. கேன்சர் போன்ற நோய்கள் தற்போது அதிகமாகி வருகின்றன. இவ்வாறு உணவு கலாச்சாரம் மாறி வருகிற சூழலில், உணவுப் பொருட்கள் தயாரிப்பு சார்ந்து முறையான தர அளவுகளை உருவாக்குவது அவசியம்.

ஹோட்டல்களில் இன்னமும் அஜினமோட்டா போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்கள் மிகச் சாதாரணமாக புழக்கத்தில் இருக்கின்றன. எனில் நாம் உருவாக்கும் தர நிர்ணயம் எந்த அளவு நம்பத் தகுந்தவை? தர அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்டு இருக்கும் பொருட்களே தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கையில், தரமற்றவை என்ன மாதிரியான பாதிப்பை உருவாக்கும். உணவே விஷமாய் மாறிவிட்ட காலத்தில் வாழ்கிறோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x