Published : 01 Dec 2019 10:59 AM
Last Updated : 01 Dec 2019 10:59 AM

டிசம்பர்-1: உலக எய்ட்ஸ் நாள் - தமிழுக்கு வீழ்ச்சியில்லை! 

மூன்று வயதில் மகளும் வயிற்றில் ஐந்து மாதக் குழந்தையும் இருக்கும்போது தனக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது தெரியவந்தால் ஒரு பெண் என்ன செய்வார்? நகரத்திலிருந்து கிராமத்துக்கு வாக்கப்பட்டுப்போன தமிழும் சாகத்தான் முடிவெடுத்தார். ஆனால், மருத்துவமனை கொடுத்த பரிசோதனை முடிவு தமிழின் முடிவை மாற்றியமைத்தது.

திருச்சி லால்குடியை அடுத்த மாந்துறை கிராமத்தைப் பூர்விகமாகக்கொண்டவர் தமிழ். அப்பா உதவிப் பேராசிரியர்; அம்மா அரசு ஊழியர். அம்மாவுக்கு சென்னையில் வேலை என்பதால் குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது. அம்மா இறந்துவிட, நகர வாழ்க்கையும் படிப்புமாக இருந்த தமிழுக்குக் கோடை விடுமுறை நாட்கள் வசந்தத்தைக் கூட்டின.

பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வெழுதிவிட்டு கிராமத்துக்குச் சென்றவரை வரவேற்கக் காதல் காத்திருந்தது. தூரத்து உறவினர் ஒருவர் மீது தமிழுக்குக் காதல் மலர, விஷயமறிந்ததும் தந்தை கண்டித்தார். வேரில் வெந்நீர் ஊற்றினாலும் செழித்து வளர்வதுதானே காதல் பயிரின் இயல்பு. பருவமும் அறியாமையும் போட்டிப்போட வீட்டைவிட்டு வெளியேறினார் தமிழ்.

திருமணப் பரிசு

18 வயது நிறைவடையாத மகளைத் தன்னிடம் ஒப்படைக்கும்படி தமிழின் தந்தை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சில மாதங்கள் சென்னை அவ்வை இல்லத்தில் தங்கவைக்கப்பட்ட தமிழ், 18 வயது நிறைவடைந்ததும் காதலனைக் கரம்பிடித்தார். காதலியாக இருந்த தமிழ் மனைவியான பிறகுதான் கணவரின் இன்னொரு முகமும் எதார்த்த வாழ்க்கையின் குரூரமும் புரியத் தொடங்கியது. கணவருக்குத் திருமணம் தாண்டிய உறவு இருப்பது தெரியவந்தபோது கையில் மகள் இருந்தாள். கல்லானாலும் கணவன் என்று சொல்லி வளர்க்கப்பட்டதால் அனைத் தையும் பொறுத்துக்கொண்டார்.

அடுத்தடுத்து மூன்று கருச் சிதைவுகளுக்குப் பிறகு மீண்டும் கருவுற்றார். தன் உடம்பில் ஏதோ மாற்றம் ஏற்படுவதை தமிழ் உணர்ந்தார். பரிசோதனைக்காகச் சென்ற மருத்துவரிடம் தனக்கு எச்.ஐ.வி. பரிசோதனை செய்யச் சொன்னபோது மருத்துவரே அதிர்ந்தார். “நான் ப்ளஸ் டூ படிச்சபோது எய்ட்ஸ் தினத் தைப் பத்தி ஸ்கூல்ல சொன்ன தகவல்கள் நினைவுக்கு வந்தன. அது ஆட்கொல்லி நோய்னு எலும்புக்கூடு வரைஞ்சு விளம்பரம் பண்ணியிருந்தது மூளைக்குள்ள மின்னுச்சு.

என் புருஷனைப் பத்திதான் எனக்குத் தெரியுமே. அதான் ஒரு சந்தேகத்துல டெஸ்ட் எடுக்க நினைத்தேன்” எனச் சிரிக்கிறார் தமிழ். ஆனால், அவரது சிரிப்பை அந்தப் பரிசோதனை முடிவு துடைத்தெறிந்தது.

முடிவை மாற்றிய முடிவு

தமிழுக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது உறுதியானது. வயிற்றில் கரு ஐந்து மாதங்களைக் கடந்துவிட்டதால் எதுவும் செய்ய முடியவில்லை. மூன்று வயது மகளுக்கு ஏதாவது கொடுத்துவிட்டுத் தானும் விஷமருந்திச் சாகலாம் என நினைத்தார். ஆனால், மகளைப் பரிசோதிக்காமல் முடிவெடுப்பது நல்லதல்ல என மகளையும் கணவரையும் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றார். சூறையாடப்பட்ட தமிழின் வாழ்க்கையில் முதல் நம்பிக்கை விதையை ஊன்றியது மகளின் பரிசோதனை முடிவு. “என் பொண்ணுக்கு எச்.ஐ.வி. இல்லைன்னு தெரிஞ்சதும்தான் வாழ்க்கை மேல லேசா நம்பிக்கை வந்தது. நாம இருக்கிற வரைக்கும் அந்தக் குழந்தையை நல்லவிதமா வளர்க்கணும்னு நினைச்சேன்” என்கிறார் தமிழ்.

வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்படாமல் இருக்க சிகிச்சை எடுத்துக் கொண்டார். இதற்கிடையில் தமிழின் கணவர் படுத்தபடுக்கையாகிவிட, இரண்டாவது மகள் பிறந்தாள். குழந்தை பிறந்த 11-வது நாளில் கணவர் இறந்துவிட, அவர் இறந்த இரண்டு வாரங்களுக்குள் குழந்தையும் இறந்தது. இந்த இறப்புகளை நினைத்து அழக்கூடத் தெம்பில்லாமல் உடைந்துபோனார் தமிழ். அதற்குள் தமிழுக்கு எய்ட்ஸ் என்பது அரசல் புரசலாக ஊருக்குள் பரவியது. நமக்கேன் வம்பு எனச் சிலர் கதவடைக்க, இன்னும் சிலரோ வெளிப்படையாகவே நிராகரித்தனர்.

பாலூட்டாமல் இருந்ததால்தான் குழந்தை இறந்துவிட்டது என்ற குற்றவுணர்வு ஒரு பக்கமும் சிகிச்சைக்காக வாங்கி இருந்த கடன் தொகை மற்றொரு பக்கமும் வாட்ட, வாழ்க்கை சூனியமாகிவிட்டதென நினைத்தார் தமிழ். குடியிருந்த வீட்டைக் காலிசெய்யச் சொன்னார்கள். மகளை இனி பள்ளிக்கு வர வேண்டாம் எனப் பள்ளி நிர்வாகம் சொன்னது. மீளவும் வழியின்றி துயரங்களால் சூழப்பட்டார் தமிழ்.

பார்வை புதிது

எந்த முயற்சியும் செய்யாமல் வீழ்வதைவிட வாழ்வோடு போரிட்டுப் பார்க்கலாம் என நினைத்தார். திருச்சியில் செயல்பட்டுவந்த ‘அன்பாலயம்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை அணுகினார். அங்கேதான் எய்ட்ஸ் குறித்த தெளிவான பார்வையும் தான் பயணம் செய்ய வேண்டிய பாதையும் தமிழுக்குப் புலனானது. “அங்கே எனக்கு ஆலோசனையோடு வேலையும் கிடைத்தது. மகளை வேறு பள்ளியில் சேர்க்க அந்த நிறுவனம்தான் உதவியது” என்று சில வரிகளில் முடித்துக்கொண்டாலும் அந்த நாட்களில் தமிழ் செய்த பயணம் நெடியது. களப் பணிகள் அவரது பார்வையை விசாலமாக்கின.

தொண்டு நிறுவனப் பணிகளோடு மாதந்தோறும் தாம்பரம் சானடோரியத்தில் உள்ள மருத்துவமனைக்கு மாத்திரைகள் வாங்க வருவார். அப்படிச் செல்லும்போது திருச்சியைச் சேர்ந்த எச்.ஐ.வி. பாசிட்டிவ் நபர்களின் அறிமுகமும் அவருக்குக் கிடைத்தது. எச்.ஐ.வி. தொற்றுடன் வாழ்கிறவர்களுக்காகச் செயல்பட்ட அமைப்பு தன் கிளையை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த நினைத்தது. தன் சிகிச்சைப் பயணத்தில் கிடைத்த நண்பர்களைக் கொண்டு அந்தக் கிளையை திருச்சியில் தொடங்க தமிழ் நினைத்தார்.

ஆனால், பலரும் அதற்கு முன்வரவில்லை. பின்னால் இருந்து செயல்படுகிறோம்; பெயரைச் சேர்க்கத் தேவையில்லை என்பதுதான் பலரது பதிலாக இருந்தது. ஆனால், அவர்களிடம் பேசி, சமாதானப்படுத்தினார். ‘திருச்சி மாவட்ட எச்.ஐ.வி.யுடன் வாழ்வோர் கூட்டமைப்பு’ 2003-ல் தொடங்கப்பட்டது. அப்போது 48 பேர் மட்டுமே பதிவுசெய்திருந்தனர். இப்போது அது 8,500-ஆக உயர்ந்திருக்கிறது. எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என இவ்வளவு பேர் தயக்கமின்றித் தங்களை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்காக மகிழ்வதா இல்லை எச்.ஐ.வி. தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறித்து வருந்துவதா எனத் தெரியவில்லை.

ஆனால், இவர்கள் இப்படித் தங்களை வெளிப்படுத்திக்கொண்டு சமூகத்துடன் உரையாடுவதும் மாற்றத்தை ஏற்படுத்தும். அதைக் குறிக்கும் விதமாக Community make the diference என்பதை இந்த ஆண்டுக்கான எய்ட்ஸ் நாள் கருப்பொருளாக ஐ.நா. அறிவித்திருக்கிறது.

தொடரும் புறக்கணிப்பு

“எங்கள் அமைப்பு இருபாலருக்குமானது. எய்ட்ஸ் குறித்த அடிப்படைத் தகவல்களில் தொடங்கி ஆலோசனை வழங்குவதுடன் கவுன்சலிங்கும் தருகிறோம். கைவிடப்பட்ட பெண்களுக்கான சட்ட உதவியையும் வழங்குகிறோம்” என்று சொல்லும் தமிழ், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து பல திட்டங்களில் பணிபுரிந்திருக்கிறார். எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் ஆற்றிய பணிகளுக்காக ‘சிறந்த சாதனையாளர்’ விருதைத் தமிழக அரசிடமிருந்து இரு முறை பெற்றிருக்கிறார்.

“இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை இப்போது இல்லை. மக்களிடையே ஓரளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. எய்ட்ஸ் என்பது ஆட்கொல்லி நோயல்ல என்ற தெளிவும் பரவலாகிவருகிறது. முறையான சிகிச்சையோடு தொடர்ந்து மாத்திரைகள் சாப்பிட்டுவந்தால் வாழ்நாளை நீட்டிக்கலாம்” என்று சொல்லும் தமிழ், எச்.ஐ.வி. பாதித்தோரை ஒதுக்கிவைக்கும் நிலை முற்றிலும் ஒழிந்துவிடவில்லை என்கிறார். “இப்போதும் பலருக்கு வீடு தருவதில்லை, வேலை தருவதில்லை. அறுவை சிகிச்சை மறுக்கப்படுகிறது. பிரசவத்துக்கு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதில்லை.

படித்தவர்களே இப்படிச் செய்தால் எதுவும் தெரியாத மக்களை என்ன சொல்ல முடியும்?” எனக் கேட்கும் தமிழ், எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர்காக்கும் ‘ஏ.ஆர்.டி’ மாத்திரைகளுடன் சத்துமாவையும் ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களையும் அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார். “எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட கிராமப்புறப் பெண்களுக்கு உழவர் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெற உதவுகிறோம். பெரும்பாலானோர் ஏழைகளாக இருப்பதால் ஊட்டச்சத்து நிறைந்த உணவைச் சாப்பிட முடிவதில்லை. வலியோடு நாட்களைக் கடத்தும் அவர்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியானால் நல்லது” என்கிறார்.

தவிர்த்தால் தடுக்கலாம்

சிலவற்றில் முன்னெச்சரிக்கையோடும் கவனத்துடனும் இருந்தால் வாழ்நாள் முழுவதும் வேதனைப்படத் தேவை யில்லை என்கிறார் தமிழ். “பாதுக்காப்பற்ற உடலுறவு, சுத்திகரிக்கப்படாத ஊசிகள், அம்மாவிடம் இருந்து குழந்தைக்கு, ரத்த தானம், உறுப்பு தானம் போன்றவற்றின் மூலம் எச்.ஐ.வி. தொற்று ஏற்படுகிறது. பாதுகாப்பற்ற உடலுறவு மூலம்தான் அதிக எண்ணிக்கையில் எச்.ஐ.வி. தொற்று ஏற்படுகிறது என்பதால் குறைந்தபட்சம் அதிலாவது நாம் கவனமாக இருக்க வேண்டும்” என்று சொல்லும் தமிழ், தடைகளைத் தாண்டி ஓடிக்கொண்டே இருக்கிறார், தன்னைப் போன்றவர்களின் கைகளையும் கோத்துக்கொண்டு.

அன்று மூன்று வயதான மகள் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று கேட்டால், “மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கிறார்” எனப் புன்னகைக்கிறார் தமிழ். இந்தப் பதில்தான் தமிழ் அடைந்திருக்கும் உயரம். தமிழுக்கு வீழ்ச்சியில்லை!

- பிருந்தா சீனிவாசன் | படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x