Published : 01 Dec 2019 11:00 AM
Last Updated : 01 Dec 2019 11:00 AM

இனி எல்லாம் நலமே 34: அம்மாவிடமிருந்து குழந்தைக்கு HIV தொற்றுமா?

நோய்களைப் பற்றியும் அவை தொற்றும்விதம் குறித்தும் அறிவியல்பூர்வமான உண்மைகளைவிட கட்டுக்கதைகளையும் கற்பிதங்களையும் சிலர் நம்பிக்கொண்டிருப்பார்கள். அதை மாற்றி மக்களிடையே நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தத்தான் சில நாட்கள் அனுசரிக்கப்படுகின்றன. அந்த வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் ஒன்றாம் நாள் உலக எய்ட்ஸ் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

பாதுகாப்பற்ற உடல் உறவு மூலமாகவே பெரும்பாலானோருக்கு HIV தொற்று ஏற்படுகிறது. தொற்று பரவாமல் இருக்க மூன்று முறைகளைக் கடைப்பிடிக்கலாம்.

1. Abstinence – அதாவது திருமணத்துக்கு முன் உடலுறவைத் தவிர்த்தல். பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழல் இது. காதலனோ ஆண் நண்பரோ திருமணத்துக்கு முன் உடலுறவை வற்புறுத்தும்போது உறவின் பிணைப்பாலும், உறவை இழந்துவிடுவோமோ என்ற பயத்தாலும் பெண்கள் அதற்குச் சம்மதிக்கக்கூடும். ஆணுக்கு HIV தொற்று இருந்தால் அவருடன் பாதுகாப்பற்ற உடலுறவு கொள்ளும்போது, பெண்ணுக்கும் HIV தொற்று பரவக்கூடும்.

2. இரண்டாவது, துணைவருக்கு நம்பகமானவராக இருத்தல். ஆணோ பெண்ணோ ஒருவருடன் மட்டுமே உறவில் ஈடுபடுபவராக இருத்தல் அவசியம்.

3. பலவீனமாக உணரும் பெண்கள், தங்கள் கணவருக்கு வேறு பாலியல் உறவுகள் இருக்கக்கூடும் என்ற சந்தேகம் இருந்தால், தங்கள் துணைவரை கட்டாயம் ஆணுறை அணியச்செய்ய வேண்டும்.

தற்காப்பு அவசியம்

ஏன் HIV தொற்று குறித்து அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்றால், HIV தொற்று பெண்ணை மட்டும் பாதிப்பதில்லை. அவள் பெற்றெடுக்கும் குழந்தைகளுக்கும் தொற்று பரவக்கூடும். எவ்வித தற்காப்பு முயற்சிகளும் மேற்கொள்ளாதபோது 30லிருந்து 40 சதவீதம் பரவக்கூடும். HIV தொற்றுள்ள பெண் சில மருத்துவ முறைகளைப் பின்பற்றுவதன்மூலம், தாயிடமிருந்து சேய்க்கு HIV தொற்றும் அபாயத்தை ஒரு சதவீதமாகக் குறைக்கலாம். ஆனாலும், தொற்றில்லாத குழந்தை பிறக்காது என்று நூறு சதவீதம் அடித்துச் சொல்லிவிட முடியாது.

HIV தொற்றுள்ள பெண் குழந்தை பெற்றுக்கொள்ளலாமா என்றால் அது அவளுடைய தனிப்பட்ட உரிமை, விருப்பம். பெண்களில் சிலருக்கு தங்களுக்கு HIV தொற்று இருப்பதே தெரியாமல் இருக்கலாம். அதனால்தான் கர்ப்பமுற்ற எல்லாப் பெண்களுக்கும் HIV தொற்றுக்கான பரிசோதனையை ஏன் செய்துகொள்ள வேண்டும் என்று கவுன்சலிங் கொடுக்கிறோம். அவர்கள் சரி என்று சொன்னால்தான் பரிசோதனை செய்ய முடியும்.

ஆனால், கிருமி இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளாமல் விட்டு, பின்பு தெரியவந்தால் எந்தவிதத் தற்காப்பு முயற்சிகளும் எடுத்துக்கொள்ளாத நிலையில், தாயிடமிருந்து குழந்தைக்குத் தொற்று பரவ சாத்தியம் அதிகம். அதனால்தான் அனைத்து மருத்துவமனைகளிலும் HIV கிருமித் தொற்றுக்கான பரிசோதனையை கட்டாயம் செய்துகொள்ள பரிந்துரைக்கின்றனர். தாய்க்கும் சேய்க்குமான மருத்துவ கவனிப்புக்கு மட்டுமல்லாது, டாக்டர் உட்பட அனைத்து மருத்துவ பணியாளர்களும் அப்போதுதான் தகுந்த தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்க முடியும். ஏனெனில் மருத்துவத் துறையினருக்கும் தங்கள் உடலைக் கிருமித் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் உரிமை இருக்கிறது.

தொற்றில்லாத பிரசவம்

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குமுன் HIV தொற்றைத் தன் கர்ப்ப காலத்தில் தெரிந்துகொண்ட பெண் என்னிடம் அழுதுகொண்டே வந்தார். “எங்கள் குடும்பத்தில் மற்றவர்களுக்கு டெலிவரி பார்த்த டாக்டர் எனக்குப் பார்க்க மறுக்கிறார். எனக்கு HIV தொற்று வந்ததில் என் தவறு என்ன?” என்றார்.

நான் அந்தப் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்தேன். ஆனால், அதற்குப் பிறகு எனக்குத் தொடர்ந்து ஒரு வாரம் இருமல் இருந்தது. HIV தொற்று, சிகிச்சை, தற்காப்பு போன்றவை குறித்து பலருக்கும் தெரிந்திராத காலகட்டம் அது.

இந்த 25 ஆண்டுகளில் HIV தொற்றுள்ள ஆயிரம் பெண்களுக்குப் பிரசவம் பார்த்துள்ளேன். நான் பிரசவம் பார்த்தவர்களில் பெரும்பாலானோருக்கு HIV தொற்றில்லா குழந்தை பிறப்பதை உறுதிசெய்துள்ளேன். HIV தொற்றுள்ள பெண், குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்துவிட்ட நிலையில், குழந்தைக்கு HIV தொற்றும் அபாயத்தை வெகுவாகக் குறைப்பதற்கான வழிமுறைகள் உள்ளன.

HIV-க்காக ஏற்கெனவே ART மருந்துகள் எடுத்துக் கொண்டிருக்கும் பெண்கள் அதை நிறுத்த வேண்டாம். ஆனால், ஏற்கெனவே சாப்பிட்டுக்கொண்டிருக்கும் மருந்துகளில் கர்ப்ப காலத்தில் எவற்றைத் தொடரலாம், எவற்றை மாற்றலாம் என்று மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

தொற்று இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு ART மருந்துகள் எடுக்க வேண்டிய நிலையில் இல்லாதவர்கள், கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதத்தில் HIV தொற்றுக்காக எந்த மருந்தும் எடுத்துக்கொள்ள வேண்டாம். பொதுவான உடல்நலத்தை எந்தவிதமான பாதிப்பும் இல்லாதவாறு, வேறு தொற்றுகள் வராதவாறு ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

பிறகு ART மருந்துவ முறையில் நன்கு தேர்ச்சிபெற்ற மருத்துவரின் ஆலோசனைப்படி ART சிகிச்சையை ஆரம்பிக்கலாம். ஒருவேளை கர்ப்ப காலத்தில் எந்தப் பரிசோதனையையும் செய்யாமலேயே எட்டு மாதங்கள் கடந்துவிட்டது என்றால் அதற்கும் ஒரு மாத்திரை உண்டு. ஏனென்றால், தாயிடமிருந்து சேய்க்கு இரண்டு நேரங்களில்தான் தொற்று அதிகம் பரவக்கூடும்.

தாய்ப்பாலைத் தவிர்க்கலாம்

HIV தொற்றுள்ள பெண்ணுக்குப் பிரசவ முறைகளும் தாய்ப்பால் அளிப்பது போன்றவையும் மற்ற சாதாரண பிரசவங்களில் இருந்து மாறுபடும். இவர்களுக்கு இயல்பான பிரசவம் சாத்தியம் என்றாலும் பனிக்குடம் உடைந்து பிரசவம் ஆகும்வரை ஒவ்வொரு மணி நேரத்துக்கும் தாயிடமிருந்து குழந்தைக்கு HIV தொற்றுவதற்கான சாத்தியம் இரண்டு சதவீதம் கூடிக்கொண்டே போகிறது.

அறுவை சிகிச்சை மூலமாக பனிக்குடம் உடைவதற்கு முன்பாகவே குழந்தையை வெளியே எடுக்கும்போது தாயிடமிருந்து சேய்க்கு HIV தொற்று பரவக்கூடிய சாத்தியம் 30-லிருந்து ஐந்து சதவீதத்துக்குக் குறையும்.

குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்தே தீருவேன் என்று நினைக்கும் தாய்மார்கள் தாய்ப்பாலை மட்டுமே கொடுக்க வேண்டும். தாய்ப்பால் தவிர தண்ணீர்கூடக் கொடுக்கக் கூடாது. ஏனென்றால், தாய்ப்பாலுடன் வேறு உணவையும் கொடுக்கும்போது ஏற்படக்கூடிய சில விளைவுகளால் தாய்ப்பால் மூலம் HIV தொற்று குழந்தைக்குப் பரவக்கூடிய ஆபத்து இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தாய்ப்பாலையே தவிர்ப்பது இன்னொரு முறை.

ART மருந்து எடுத்துக்கொள்வது, அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெறுவது, தாய்ப்பால் கொடுப்பதைத் தவிர்ப்பது போன்றவற்றைச் செய்வதன்மூலம் தாயிடமிருந்து சேய்க்கு HIV தொற்று பரவக்கூடிய அபாயம் 30லிருந்து 1 – 2 சதவீதமாகக் குறைகிறது. அதாவது இந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் HIV தொற்றுள்ள 100 பெண்களில் ஒருவரின் குழந்தைக்குத்தான் HIV தொற்றும் அபாயம் உள்ளது.

நாம் தெரிந்துகொள்ளவேண்டியவை:

1. HIV தொற்று என்றால் உடனே மனமுடைந்துவிடக் கூடாது.

2. குழந்தை தேவையா என்பதை யோசித்து முடிவெடுக்க வேண்டும். வேண்டும் என்றால் எந்தவிதமான மருத்துவ முறைகளைப் பின்பற்றி குழந்தைக்கு HIV தொற்றுவதற்கான ஆபத்தைக் குறைக்கலாம் என்பது குறித்த அனைத்துத் தகவல்களையும் தெரிந்துகொள்வதோடு சரியாகவும் கடைபிடிக்க வேண்டும்.

(நலம் நாடுவோம்)
- அமுதா ஹரி, மகப்பேறு மருத்துவர்.
தொடர்புக்கு: mithrasfoundation@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x