Published : 30 Nov 2019 10:46 AM
Last Updated : 30 Nov 2019 10:46 AM

ஏல வீட்டை எப்படி வாங்குவது?

வங்கி மூலம் ஏலத்துக்கு வரும் வீடுகளை, இடைத்தரகர்கள் மட்டுமின்றி, சாதாரண வாடிக்கையாளர்களும் வாங்க முடியும். இந்த வீடுகள் வாங்குவதில் சிலருக்குத் தயக்கம் இருக்கும். ஆனால் ஏல வீட்டை வாங்குவதில் பல நன்மைகள் உள்ளன. உதாரணமாக சந்தை மதிப்பைவிட, ஏலத்துக்குவரும் வீட்டின் விலை 20 முதல் 30 சதவீதம் குறைவாக இருக்கும். இதனால், குறைந்த விலையில் வீட்டை வாங்கிட முடியும். சரி, இம்மாதிரியான வீட்டை வாங்குவது எப்படி?

நேரடியாக ஏலத்தில் பங்கேற்க முடியாதவர்கள், மின்னணு ஏலம் எனப்படும் ‘e-auction’ முறையிலும், வங்கி விடும் ஏலத்தில் பங்கேற்று சொத்துகளை வாங்க முடியும்.

வங்கிகள் மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் பெரும்பாலானவை எந்தவித வில்லங்கமும் இல்லாமல் இருக்கும். ஆனால், வரி செலுத்தாமல் இருப்பது, நில உரிமையில் சிக்கல் போன்ற காரணங்களால், சில சொத்துகள் சிக்கலை உள்ளடக்கியதாகவும் இருக்கும். எனவே ஒரு சொத்து அல்லது வீட்டை ஏலத்தில் எடுக்கும் முன்பாக, அதனைப் பற்றிய முழுமையான பின்னணித் தகவல்களை தெரிந்துகொண்ட பிறகே அதனை வாங்க வேண்டும்.

வங்கி ஏலத்துக்கு வரும் சொத்துகளை வாங்குவதற்கு முன்பாக முதலீட்டார்கள் மேற்கொள்ள வேண்டிய சில பொதுவான நடவடிக்கைகளும் உள்ளன. அதாவது, குறிப்பிட்ட அந்தச் சொத்தில் வில்லங்கம் உள்ளதா என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

பின்னர், அந்த வீடு அல்லது சொத்து அமைந்துள்ள இடம், வாங்குபவருக்கு ஏற்றதாக இருக்குமா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். விலை குறைவாக இருக்கிறதே என்பதற்காக, வெகு தொலைவில் அமைந்துள்ள ஒரு சொத்தை வாங்குவது அசௌகரியங்களை ஏற்படுத்தும். சந்தை மதிப்பைவிட, ஏலத்துக்கு வரும் சொத்தின் மதிப்பு எவ்வளவு குறைவாக இருக்கிறது என்பதைக் கணக்கிட வேண்டும். ஏனென்றால், சில வீடுகளின் கடன் மதிப்பு அதிகமாக இருக்கும்பட்சத்தில், அவற்றை வாங்குவது முதலீட்டாளருக்கு லாபகரமானதாக இருக்காது.

ரியல் எஸ்டேட் துறையில் ஏற்றத்தாழ்வு ஏற்படும் கால கட்டத்தில் சொத்துகளின் மதிப்பு சற்றே வீழ்வது வாடிக்கையான நிகழ்வு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்கள், இடைத் தரகர்கள் ஆகியோரைவிட அதிக விலை கொடுத்தே சாதாரண முதலீட்டாளர்கள் சொத்தை ஏலம் எடுக்க வேண்டும் என்பதால், சொத்தின் உண்மையான மதிப்பை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சியால் வீடுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. சில ஆண்டுகளுக்குப் பின்னர் தேவைக்கும் கட்டுமானத்துக்கும் இடையிலான விகிதம் சரியும்போது, ஏலத்துக்கு வரும் சொத்துகளின் எண்ணிக்கையும் பெருமளவு உயரலாம். அந்தக் காலகட்டத்தில், பல சொத்துகளின் மதிப்பு சந்தை மதிப்பைவிட மிகக் குறைவாக இருக்கலாம். எனவே, அதுபோன்ற காலகட்டம்வரை, வங்கி மூலம் ஏலத்துக்குவரும் சொத்துகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் கூடுதல் கவனம் செலுத்தி, தங்களின் பணத்துக்கு பங்கம் வராமல் பார்த்துக்கொள்வதே புத்திசாலித்தனம்.

- அனில்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x