Published : 30 Nov 2019 10:46 AM
Last Updated : 30 Nov 2019 10:46 AM

வீட்டுக்குக் காப்பீடு அவசியமா?

வங்கியில் கடன் வாங்கிதான் நம்மில் பலரும் சொந்த வீட்டுக் கனவை நனவாக்குகிறோம். அப்படிக் கடன் வாங்கி வீடு வாங்கும்போது மாதந்தோறும் வங்கிக்குத் தவணை (இ.எம்.ஐ.) செலுத்தவேண்டியதிருக்கும். இப்படிக் கட்டிக்கொண்டுவரும்போது நமக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் நாம் வாங்கிய கடனை அடைப்பது தர்மசங்கடமாகிவிடும். இந்த இடத்தில்தான் காப்பீடு நமக்கு உதவும்.

உங்களால் கட்ட முடியாதபோது எஞ்சிய பணத்தை வழங்கும்படி மனைவியையும், வாரிசுகளையும் வங்கிகள் நெருக்கும். பணத்தைச் செலுத்த முடியவில்லை என்றால் வங்கிகள் வீட்டை ஜப்தி செய்துவிடும். அப்போது அவர்கள் நடுத்தெருவுக்கு வரும் சூழ்நிலை ஏற்படலாம் இல்லையா? இதைத் தவிர்க்க வீட்டுக்கும், வாங்கிய கடனுக்கும் காப்பீடு எடுத்துக்கொண்டால், அது நிச்சயம் பாதுகாப்பாக இருக்கும். எனவே வீட்டுக்கான காப்பீடு மிகவும் அவசியம்.

கடன் வாங்கியவருக்கு அசம்பாவிதம் ஏற்பட்டால் மட்டுமே காப்பீட்டுப் பணம் கிடைக்கும் என்று நினைத்துவிடாதீர்கள். புயல், மழை, வெள்ளம், நிலநடுக்கம், தீ விபத்து, தீவிரவாதத் தாக்குதல் போன்ற பிரச்சினைகளில் வீடு பாதிக்கப்பட்டாலும் மொத்தக் குடும்பமும் இடிந்து போய்விடும் அல்லவா? ஆனால், வீட்டுக்குக் காப்பீடு எடுத்திருந்தால், அந்தப் பிரச்சினையே இல்லை. இந்தப் பாதிப்புகளுக்கும் காப்பீட்டுப் பணம் கைகொடுக்கும்.

வீட்டுக்கான காப்பீடு என்றால் மிகவும் அதிகமாக இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். உதராணமாக ஒருவர், சுமார் 20 லட்சம் ரூபாய் வீட்டுக் கடனாக வாங்குகிறார் என்று வைத்துக்கொள்வோமே. அவர் 15 ஆண்டுகளுக்கு வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துகிறார் என வைத்துக்கொண்டால், இந்தக் கடன் தொகைக்குக் காப்பீடு எடுத்தால் ஆண்டுக்குச் சுமார் 7 ஆயிரம் ரூபாய் முதல் 8 ஆயிரம் ரூபாய்வரை பிரீமியம் கட்ட வேண்டியிருக்கும்.

இதை மாதமாகவோ, மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ, ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ, ஓராண்டுக்கு ஒரு முறையோ செலுத்த வசதி உள்ளது. ஒரே சமயத்தில் மொத்தமாகக் காப்பீடு எடுத்துக்கொள்ளவும் செய்யலாம். அப்படி மொத்தமாகக் காப்பீடு செலுத்தும்போது இடையில் பிரிமீயம் செலுத்தத் தேவையில்லை. ஒட்டுமொத்தமாக பிரீமியம் செலுத்தும்போது தள்ளுபடியும் கிடைக்கும். அது மட்டுமல்ல, சம்பளதாரர்கள் கட்டும் காப்பீடு பிரீமியத்துக்கு வரிச் சலுகை பெற்றுக்கொள்ளவும் முடியும்.

தொடர்ந்து வீட்டுக்கான காப்பீடு பிரீமியம் செலுத்திவருகிறோம்; வீடு வாங்கியவருக்கு அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. வீட்டுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று வைத்துக் கொள்வோமே.. அப்படியானால், நாம் கட்டிய மொத்தப் பணமும் வீணாகிவிட்டதே என்றுதானே நினைப்பீர்கள். இதற்கும் இப்போது வீட்டுக்கான காப்பீடுகளில் தீர்வு காணப்பட்டிருக்கிறது.

காப்பீடு பணத்தைத் திரும்பப் பெறும் வசதி, காப்பீடு பணத்தைத் திரும்பப் பெற முடியாத வசதி என இரு பிரிவுகளில் இப்போது வீட்டுக்கான காப்பீடுகள் வழங்கப்படுகின்றன. காப்பீடு பணத்தைத் திரும்பப் பெறும் வசதியைத் தேர்வு செய்தால் போதும். வீட்டை வாங்கியவருக்கு அசம்பாவிதமும், வீட்டுக்குப் பாதிப்பும் ஏற்படவில்லையென்றால், காப்பீடு எடுத்த காலத்துக்குப் பிறகு கட்டிய பிரீமியத் தொகையைத் திரும்பப் பெற்றுவிடலாம். அதற்கு வட்டி, போனஸ் தொகையையும் காப்பீட்டு நிறுவனங்கள் கொடுக்கின்றன.

இதில் உள்ள ஒரு பிரச்சினை என்னவென்றால், இந்த வசதியில் செலுத்தப்படும் பிரீமியம் தொகை கொஞ்சம் அதிகம். இதற்காக மாதந்தோறும் கணிசமான பணத்தை ஒதுக்க வேண்டியிருக்கும். அதிக வருவாய் ஈட்டுபவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. குறைந்த வருவாயில் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு அதிகத் தொகை ஒதுக்குவது கூடுதல் சுமையாக இருக்கும். வீட்டுக்கும் கடனுக்கும் பாதுகாப்பு இருந்தால் மட்டும் போதும் என்று நினைப்பவர்களுக்கு முதல் வகைதான் நல்ல தேர்வாக இருக்கும்.

இப்போதெல்லாம் பெரும்பாலான வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள், கடன் கொடுக்கும்போது வீட்டுக்கும் கடனுக்கும் சேர்த்துக் காப்பீடு எடுத்துவிடுகிறார்கள். சில வங்கிகள், நிறுவனங்கள் அந்தத் தொகையைக் கடனோடு சேர்த்துவிடுவதும் உண்டு. இன்னும் சில வங்கிகள் அதற்கான பிரீமியத்தைத் தனியாக வசூலிக்கவும் செய்கின்றன. காப்பீடு எடுக்கும்போது அதைப் பற்றி ஒரு முறை தீர விசாரித்துக்கொள்ளுங்கள்.

எது எப்படி இருந்தாலும், வீட்டுக்கும், வாங்கிய கடனுக்கும் காப்பீடு மிகவும் அவசியம். அதை முறையாக எடுத்துக்கொண்டால் சொந்த வீட்டுக்குப் பங்கம் வந்தாலும் பயமில்லாமல் இருக்கலாம்.வீட்டுக்கான காப்பீடு பிரீமியம் செலுத்தி வருகிறோம்; வீடு வாங்கியவருக்கு அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. வீட்டுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று வைத்துக்கொள்வோமே.. அப்படியானால், நாம் கட்டிய மொத்தப் பணமும் வீணாகிவிட்டதே என்றுதானே நினைப்பீர்கள்.

- மிது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x