Published : 30 Nov 2019 10:35 AM
Last Updated : 30 Nov 2019 10:35 AM

வெள்ளம், புயல் சேதத்திலிருந்து பராமரிப்பது எப்படி?

பருவமழைக் காலத்தில் ஏற்படக்கூடிய வெள்ளம், புயல் போன்ற பாதிப்பால் பயிர்ச் சேதம் ஏற்படலாம். மழைக் காலத்தில் வெப்பநிலை குறைந்து காற்றில் ஈரப்பதம் அதிகமாவதால் பூச்சி, நோய் தாக்கம் பயிர்களில் அதிகம் தென்படும். அதனால், பருவமழைச் சேதத்தில் இருந்து காய்கறிகள், பழமரங்கள், செடிகளைப் பாதுகாக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்ககைள் குறித்து தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை விளக்கியுள்ளது.

தோட்டங்களைக் களைகள் இன்றியும் காய்ந்த இலை தழைகள் இன்றியும் பராமரிப்பதன் மூலம் பூச்சி, நோய் தாக்குதலைக் குறைக்கலாம். இனக்கவர்ச்சி பொறி ஏக்கருக்கு 15 என வைத்து ஆண் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். இரவு நேரத்தில் ஒரு விளக்குப் பொறியை வைத்துப் பெண் அவை பூச்சிகளைக் கவர்ந்து அழிப்பதன் மூலம் அவை முட்டையிட்டுப் பெருகுவதைத் தவிர்க்க முடியும். காய்கறிப் பயிர்ச் சாகுபடி செய்த நிலத்தில் உரிய வடிகால் வசதி செய்வது அவசியமானது.

தக்காளி, கத்தரி, மிளகாய், கொடிவகைக் காய்கள் ஆகியவற்றுக்கு முறையாக மண் அணைப்பதன் மூலம் நீர் தேக்கத்தால் வேர்கள் அழுகுவதைத் தவிர்க்கலாம். காய்கறிப் பயிர்கள் நடவுக்குத் திறந்த வெளியில் நாற்றாங்கால் அமைப்பதைத் தவிர்த்துக் குழித்தட்டு முறையில் பாதுகாக்கப்பட்ட நிழல் வலைக் குடில்களில் நாற்றுகளை உற்பத்தி செய்யலாம்.

டிரைக்கோடெர்மா விரிடி என்ற நன்மை தரும் நுண்ணுயிரியை மக்கிய தொழு உரத்துடன் கலந்து பயிர்களுக்கு இடுவதன் மூலம் வாடல் நோய்களின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தலாம். சூடோமோனாஸ் பூஞ்சாண உயிரியல் கொல்லியை இலையில் தெளிக்க வேண்டும். இதன் மூலம் பூச்சி, நோய்த் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும்.

வாழைக்கு...

காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் இடங்களில் வாழை மரங்களைச் சுற்றி மண் அனைத்தும், சவுக்கு, யூகலிப்டஸ் குச்சிகள், கயிறுகள் மூலம் முட்டுக் கொடுத்தும் சாய்வதைத் தவிர்க்கலாம். வாழைத்தார் உறைகளைக் கொண்டு வாழைத்தார்களை மூடுவதன் மூலம் மழைநீர் நேரடியாகக் காய்களில் பட்டு ஏற்படுத்தும் பாதிப்பு, நோய்களிலிருந்து பாதுகாக்கலாம். வாழைத் தோப்பைச் சுற்றி வாய்க்கால் எடுத்து மழைநீர் தேங்காமல் வெளியேற வடிகால் வசதி செய்ய வேண்டும். காற்றால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கீழ்மட்ட இலைகளை அகற்றிவிட்டு மரத்தின் அடியில் மண் கொண்டு அணைக்க வேண்டும்.

மரங்களுக்கு...

90 சதவீத்துக்கும் மேல் முதிர்ந்த தார்களை அறுவடை செய்தல் வேண்டும். மா, பலா மற்றும் முந்திரி போன்ற பல்லாண்டுப் பயிர்களைப் பொறுத்தவரை காற்று மரங்களின் ஊடே புகுந்து இலகுவாக செல்லும் வகையில் பக்கக் கிளைகளையும் அதிகப்படியான இலைகளை கவாத்து செய்து மரம் வேரோடு சாய்வதை தடுக்கலாம்.

நிழல் தரும் மரங்களில் தேவையற்ற கிளைகளைப் பருவ மழைக்கு முன்னரே கவாத்து செய்வதன் மூலம் நல்ல காற்றோட்டமான வசதியை ஏற்படுத்தி மலைத்தோட்டப் பயிர்களான காபி, மிளகு, டீ, ஆரஞ்சு போன்றவற்றில் ஏற்படக்கூடிய நோய்களைத் தவிர்க்கலாம்.

கவாத்தின்போது வெட்டப்பட்ட பகுதியில் காப்பர் ஆக்சி குளோரைடு 300 கிராம் 1 லிட்டர் நீரில் கலந்து தடவி பூச்சி, நோய் ஊடுருவுவதைத் தவிர்க்க வேண்டும். தோப்புகளுக்கு நீர் பாய்ச்சுவதை இரண்டு நாட்களுக்கு முன்பே நிறுத்திவிடுவதன் மூலம் வேர்ப்பகுதி இறுகி மரம் காற்றில் சாயாமல் தடுக்கலாம். தோட்டங்களில் காய்ந்த நோய்வாய்ப்பட்ட செடிகளையும் களைகளையும் அகற்ற வேண்டும்.

அடிமரத்தைச் சுற்றி மண் அணைக்க வேண்டும். 1 முதல் 3 வயதுள்ள கன்றுகளை ஒட்டுச் செடிகளை முட்டுக் கொடுத்து நிலை நிறுத்திக்கொள்ளலாம். முட்டுக் கொடுப்பதற்கு பச்சைக் குச்சிகளை பயன்படுத்துவது சிறந்தது. பசுமைக்குடில், நிழல்வலைக்குடிலின் அடிப்பாகம் பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். பசுமைக்குடிலின் உட்பகுதியில் காற்று உட்புகா வண்ணம் கதவுகள், ஜன்னல்கள் மூடியிருக்க வேண்டும்.

அருகிலுள்ள பெரிய மரங்களில் கிளைகளை அகற்றி விடவேண்டும். பசுமை, நிழல்வலைக் கூடங்களைச் சுற்றி சவுக்கு போன்ற காற்றின் வேகத்தைக் குறைக்கக்கூடிய மரங்களை உயிர்வேலியாக அமைப்பதன் மூலம் காற்றின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கலாம்.

- ஒய். ஆண்டனி செல்வராஜ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x