Published : 10 Aug 2015 11:04 AM
Last Updated : 10 Aug 2015 11:04 AM

செயலிக்கு மாறத்துடிக்கும் நிறுவனங்கள்

விசிட்டிங் கார்டை வைத்து மட்டும் தொழில் தொடங்கி வென்றவர்கள் ஏராளம். ஆனால் இப்போது தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மாறாவிட்டால் வாடிக்கையாளர்கள் வெளியேறும் அளவுக்கு மொத்த சந்தையும் அவர்கள் கையில் இருக்கிறது.

சில வருடங்களுக்கு முன்பு இணையதளம் ஆரம்பிப்பதையே பெரிய வேலையாக நிறுவனங்கள் கருதின. இப்போது இணையதளத்தை தாண்டி ஒவ்வொரு நிறுவனமும் நேரடியாக செயலி(ஆப்) மூலம் வாடிக்கையாளர்களுடன் இணையவே விரும்புகிறார்கள். இப்போது இணையதளமே வேண்டாம் செயலியே போதும் என்று சொல்லும் நிறுவனங்களும் வந்துவிட்டன.

சில மாதங்களுக்கு முன்பு மிந்திரா நிறுவனம் தன்னுடைய இணையதளத்தை மூடிவிட்டு, செயலியில் மட்டுமே செயல்படப்போவதாக தெரிவித்தது. இதேபோல கடந்த ஆகஸ்ட் முதல் ஓலா நிறுவனம் செயலி மூலம் மட்டுமே முன்பதிவு என்று அறிவித்துவிட்டது. இன்னும் சில முன்னணி நிறுவனங்கள் விரைவில் செயலியில் மட்டுமே செயல்பட முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. தவிர பெரும்பாலான நிறுவனங்கள் இணையதள விற்பனையை காட்டிலும் செயலி மூலம் விற்பனை செய்யவே விரும்புகின்றன. அதையே பிரதானப்படுத்தி வருகின்றன.

ஏன் செயலி?

செயலியை பிரதானப்படுத்த என்ன காரணம். ஓலா போன்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் சேவை மையத்தை வைத்து, போன் மூலம் வரும் கால்களை கேட்டறிந்து, பிஸினஸ் வருவதை விட ஒரே கிளிக்-ல் வியாபாரமும் நடக்கும் நிர்வாக செலவுகளை அவர்களால் குறைக்க முடியும்.

அடுத்து கம்யூட்டரை ஆன் செய்து, இணையத்தில் தேடி பொருட்களை வாங்குவதற்குள் வாடிக்கையாளர்களின் மனது மாறிவிடலாம். செயலி என்பது கையில் இருப்பது. எப்போதும் தொடர்பிலே இருப்பதால் வாடிக்கையாளர்களை யோசிக்க வைக்காமல் பொருட்களை வாங்க வைக்க முடியும்.

அடுத்து டேட்டா. செயலி மூலம் வாடிக்கையாளர் வசிக்கும் இடம், மொபைல் எண் உள்ளிட்ட தகவல்கள் கிடைக்கும். இந்த தகவல்களை வைத்து யாருக்கு என்ன தேவை என்பதைத் தெளிவாகக் குறிவைத்து வியாபாரத்தை வளர்க்கலாம். இலக்கு தெரியாமல் அம்பு வீசுவதை விட தெரிந்து அடிக்கலாம் என்பது நிறுவனங்களின் கணிப்பு.

முக்கியமான ஸ்மார்ட்போன்களின் வீச்சு. ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. வரும் 2030-ம் ஆண்டுக்கு 70 சதவீத இந்தியர்களிடம் ஸ்மார்ட்போன் இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட்போன் பயன்பாடுகள் அதிகரிக்கும் சூழ்நிலையில் வாடிக்கையாளர்களுடன் நேரடியாக தொடர்பில் இல்லை என்றால் வியாபாரம் குறைந்துவிடுமோ என்ற பதற்றம் காரணமாக செயலியை குறி வைத்திருக்கின்றன நிறுவனங்கள்.

பாதக அம்சம்

நிறுவனங்கள் மெல்ல மெல்ல செயலிக்கு மாறுவதற்கு ஆரம்பித்தாலும் மக்கள் பயன்படுத்துகிறார்களா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே? இந்த செயலி இத்தனை லட்சம் டவுன்லோடு என்பது மட்டுமே வெளியே தெரியவரும். ஆனால் டவுன்லோட் செய்யப்படும் அதே வேகத்தில் ’அன்இன்ஸ்டாலும்’ நடக்கிறது என்பது வெளியே தெரியாது.

சென்னையில் உள்ள தொழில் முனைவோரிடம் பேசியபோது சுமார் 30 சதவீதம் வரை அன் இன்ஸ்டால் செய்யப்படுகிறது என்றார். அதாவது ஒரு செயலியை 100 பேர் டவுன்லோட் செய்திருக்கிறார்கள் என்றால் 30 நபர்கள் வரை அதை அன்இன்ஸ்டால் செய்திருப்பார்கள். தவிர குறிப்பிட்ட சதவீத நபர்கள் மட்டுமே அதனை தொடர்ந்து பயன்படுத்துவார்கள் என்றார்.

அன்இன்ஸ்டால் செய்வதற்கு இரண்டு காரணங்கள். முதலாவதாக தினமும் புதியபுதிய செயலிகள் சந்தைக்கு வந்துகொண்டிருக்கின்றன. அடுத்து, செயலியின் அளவு. செயலியில் அளவு அதிகமாக இருக்கும் போது பயனாளர்கள் அதை எளிதாக நீக்கிவிடுவார்கள். அதனால் 3 எம்.பிக்குள் மட்டுமே எங்கள் செயலி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்து எங்கள் வேலையைத் தொடங்கினோம் என்றார்.

அடுத்து போன் அளவு. கம்யூட்டர் மானிட்டர் என்பது பெரும்பாலும் ஒரே அளவாக இருக்கிறது. அதனால் வாடிக்கையாளார்கள் எளிதாக பயன்படுத்த முடியும். ஆனால் ஸ்மார்ட்போன்கள் அப்படி அல்ல. வெவ்வேறு வடிவங்களில் இருப்பதால் வாடிக்கையாளர்களை திருப்திப் படுத்துவது கடினம்.

முழுவதுமாக செயலி என்பது இப்போதைக்கு சில நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றாலும் செயலியே இல்லாமல் எதிர்கால சந்தையை பிடிப்பது கடினம்.

நிறுவனங்களின் வளர்ச்சிக்கு செயலி அவசியம் என்பதை மறுக்க முடியாது. ஆனால் செயலி மட்டும் போதுமா என்பதை காலம்தான் தீர்மானிக்கும்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x