Published : 27 Nov 2019 09:33 AM
Last Updated : 27 Nov 2019 09:33 AM

அறிவியல் மேஜிக்: தானாகக் கொட்டும் தண்ணீர்!

ஒரு பாட்டிலில் உள்ள தண்ணீரைக் கவிழ்க்காமல், அதை டம்ளரில் பிடிக்க முடியுமா? ஒரு சோதனையைச் செய்து பார்ப்போமா?

என்னென்ன தேவை?

# அரை லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில்

#வளைந்த உறிஞ்சுகுழல் (பாக்கெட் குளிர்பானங்களில் பயன்படுத்துவது)

# பலூன்

# டம்ளர்

# தண்ணீர்

எப்படிச் செய்வது?

> அரை லிட்டர் பாட்டிலின் நடுவில் உறிஞ்சுகுழல் செல்லும் அளவுக்கு ஒரு சிறிய துளையை இடுங்கள்.

> வளைந்த உறிஞ்சுகுழலை, அந்தத் துளையின் வழியாக உள்ளே விடுங்கள். வளைந்த பகுதி வெளியே இருக்க வேண்டும்.

> உறிஞ்சுகுழல் அடிப்பகுதியைத் தொட்டுக்கொண்டிருக்க வேண்டும்.

> உறிஞ்சுகுழலைச் செருகிய இடத்தில் இடைவெளி எதுவும் இல்லாத அளவுக்கு சைனா களிமண் அல்லது பசையைக் கொண்டு அடைத்துவிடுங்கள்.

> பிளாஸ்டிக் பாட்டிலில் முக்கால் பாகத்துக்கு மேல் தண்ணீரை ஊற்றிக்கொள்ளுங்கள்.

> பலூனைச் சற்றுப் பெரிதாக ஊதுங்கள். பலூனிலிருந்து காற்று வெளியேறாதபடி அதன் வாய்ப் பகுதிக்கு மேலே இறுக்கமாகப் பிடித்துக்கொள்ளுங்கள்.

> அந்த பலூனின் வாயை பாட்டிலின் வாயில் பொருத்திவிட்டு, கையை எடுத்துவிடுங்கள். கவனம், பலூனை பாட்டிலில் பொருத்தும்வரை காற்று வெளியேறாதவாறு பிடித்துக்கொள்ள வேண்டும்.

> பலூனிலிருந்து கையை எடுத்தவுடனே, உறிஞ்சுகுழல் வழியாகத் தண்ணீர் டம்ளரில் கொட்டுவதைப் பார்க்கலாம்.
பாட்டிலைக் கவிழ்க்காமல் தண்ணீர் உறிஞ்சுகுழல் வழியாக வந்தது எப்படி?

காரணம்

கொள்கலனில் உள்ள ஒரு திரவத்தில் எந்தப் புள்ளியில் ஏற்படும் அழுத்தமும் அந்தத் திரவம் முழுவதும் சமமாகப் பரவும் என்பதே பாஸ்கல் விதி. இந்த விதியின் அடிப்படையில், பலூனுக்குள் இருக்கும் காற்றானது பாட்டிலை நோக்கிச் சென்று, தண்ணீரை அழுத்துகிறது. அந்த அழுத்தமானது தண்ணீர் முழுவதும் சமமாகப் பரவுகிறது. இதனால் பாட்டிலின் மேற்புறத்தில் காற்றழுத்தம் அதிகமாகிறது. அப்போது அந்த அழுத்தமானது பாட்டில் உள்ள தண்ணீரைக் கீழே தள்ளி, உறிஞ்சு குழல் வழியாக வெளியேற்றுகிறது.

பயன்பாடு

ஹைட்ராலிக் கருவிகள், தெளிப்பான்கள் போன்றவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

- மிது கார்த்தி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x