இந்தியாவைச் சுற்றும் ‘சைக்கிள்’ சுந்தர்!

இந்தியாவைச் சுற்றும் ‘சைக்கிள்’ சுந்தர்!
Updated on
1 min read

ச.ச.சிவசங்கர்

இந்தியாவில் ஊர் ஊராகச் சுற்ற வேண்டும் என்றால், இளைஞர்கள் கார், பைக் என்ற இரண்டு வாகனங்களைத் தான் தேர்வுசெய்கிறார்கள்.

ஆனால், வேலூரைச் சேர்ந்த சுந்தர் இதில் மாறுபடுகிறார். பழைய சைக்கிளில் இந்தியாவைச் சுற்றப் புறப்பட்டிருக்கிறார். பொழுதுபோக்குவதற்காக ஊர் சுற்ற இவர் கிளம்பவில்லை. சுற்றுச்சூழல், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக இந்தப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்.

எப்போது சைக்கிளில் பயணம் மேற்கொள்வது என்றாலும் சுந்தருக்கு அலாதிப் பிரியம். இதற்கு முன் பலமுறை இப்படிப் பயணம் செய்திருக்கிறார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு வேலூரிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கிய சுந்தர், கேரளத்துக்குச் சென்றுவிட்டு நாகர்கோவில் வழியாக மதுரை, திருச்சி, ஆந்திரத்துக்குச் செல்லும் வழியில் சென்னைக்கு வந்தார். சைக்கிள் பயணம் என்பதால், அதிநவீன சைக்கிளாக இருக்கும் என்று பார்த்தால், அதுவும் இல்லை. 1980-களில் அறிமுகமான பழைய சைக்கிளில்தான் சுந்தர் வந்தார்.

எப்படி இந்தப் பயண ஆசை ஏற்பட்டது என்று சுந்தரிடம் கேட்டோம். “பள்ளிக்கூடம் வரைதான் நான் படிச்சிருக்கேன். வேலைக்குப் போன பிறகு சைக்கிளில் பல இடங்களுக்குச் செல்லத் தொடங்கினேன். மாதத்தில் பாதி நாட்கள் வேலைக்குச் செல்வது, மீதி நாட்கள் பயணம் செய்வதை வழக்கமாக்கிக்கொண்டேன்.

தொடக்கத்தில் பக்கத்திலிருக்கும் ஏலகிரி மலை, வேலூர், கிருஷ்ணகிரிவரை சைக்கிளில் போய்விட்டுத் திரும்புவேன். பிறகு, பாண்டிச்சேரி, கோவா என என்னுடைய சைக்கிள் பயணம் விரிவடைந்தது” என்கிறார் சுந்தர்.

தனது சைக்கிள் பயணத்தில்150 நாட்களில் 13,500 கி.மீ. தொலைவுக்கு இந்தியாவைச் சுற்றிவர முடிவு செய்துள்ளார் சுந்தர். செல்லும் இடங்களில் எல்லாம் பெட்ரோல் பங்க்கைப் போன்று கிடைக்கும் இடங்களிலேயே தங்கிக்கொள்கிறார்.

விழிப்புணர்வுக்காக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் நண்பர்களின் உதவியையும் பெற்றுக்கொள்கிறார். தற்போது பெங்களூருவில் பிளம்பராக வேலை செய்துவரும் சுந்தர், முந்தைய பயணங்களில் கிடைத்த அனுபவங்களைப் பயன் தரும் வகையில் செலவிட விரும்பினார். ஆகவே, பல தரப்பட்ட மக்களைச் சந்திக்கும்போது தனது அனுபவங்களின் அடிப்படையில் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என்ற எண்ணம் இவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

“எதிர்காலத்துல சமூகத்துக்குத் தேவையான ரெண்டு விஷயம் சுற்றுச்சூழலும் குழந்தைகளும்தான். இப்போ சுற்றுச்சூழல் மாசு அதிகமாயிடுச்சு.

அதே மாதிரி ‘சைல்டு அப்யூ’ஸும் சமூகத்துல அதிகமாயிடுச்சு. இதைப் பற்றி என்னைப் போன்ற இளைஞர்களும் பிறரும் ஆழ்ந்து யோசிக்கணும்னு நினைச்சேன். அதுக்காகத்தான் இந்தப் பயணத்துல ஆங்காங்கே நண்பர்கள் உதவியோட இந்த விழிப்புணர்வைத் தொடங்கிருக்கிறேன்” என்று பொறுப்பாகப் பேசுகிறார் சுந்தர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in