Published : 26 Nov 2019 10:49 AM
Last Updated : 26 Nov 2019 10:49 AM

அறிவியல் இதழியல்: ‘நேச்சர்' - ஆய்வு இதழியலின் உச்சம்!

1900-ல் இருந்து ‘நேச்சர்’ இதழில் வெளியான 88,000 ஆய்வுக் கட்டுரைகளை துறைக்கு ஒரு வண்ணமாகவும், தனித் தனி புள்ளிகளாகவும் கொண்டு இந்த அமைப்பு உருவாகப்பட்டிருக்கிறது. ஒரு கட்டுரையை (புள்ளி) மற்றொரு கட்டுரை மேற்கோள் காட்டியிருந்தால், அவை இணைக்கப்பட்டிருக்கின்றன. எத்தனை முறை மேற்கோள் காட்டப்பட்டிருக்கின்றன என்பதைப் பொறுத்து புள்ளியின் அளவு பெரிதாக இருக்கிறது. மிகச் சிக்கலான இந்த அமைப்பு, நேச்சரின் பல்துறை ஆய்வுக் களனை விளக்குகிறது.

சு. அருண் பிரசாத்

சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள புறக்கோள்கள் (exoplanet) பற்றிய தொடக்க கட்ட ஆராய்ச்சிகள் 1995-ல் வெளியாகின. சூரியனைப் போன்ற நட்சத்திரத்தை, புறக்கோள் ஒன்று சுற்றி வருவதாக அந்த ஆய்வு கூறியது.

இந்தக் கண்டுபிடிப்புக்குத்தான் மைகெல் மேயர், டிடியர் க்விலோஸ், ஜிம் பீபிள்ஸ் ஆகியோருக்கு 2019-ம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய மதிப்புமிக்க ஆராய்ச்சிகளை உலகுக்கு அளிக்கும் ‘நேச்சர்' ஆய்விதழ், கடந்த 150 ஆண்டுகளாக அறிவியலைக் கொண்டாடி வருகிறது.

உலக வரலாற்றில் 1869-ம் ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்தது. அரசியல், கலை & இலக்கியம், அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் போக்கையே மாற்றிய நிகழ்வுகளும், மாபெரும் ஆளுமைகளாகப் பிற்காலத்தில் விளங்கிய பலர் பிறந்ததும் இந்த ஆண்டில்தான்.

‘நேச்சர்' இதழ் பிறந்ததும் இப்போதுதான். கோபர்நிகஸ், கலீலியோ, நியூட்டன் உள்ளிட்ட அறிவியலாளர்களின் பங்களிப்பால் மறுமலர்ச்சி காலத்தில் (16,17-ம் நூற்றாண்டுகள்) நவீன அறிவியலில் மிகப் பெரிய பாய்ச்சல் நிகழ்ந்தது. இதன் தொடர்ச்சியாகவும், தொழிற்புரட்சியின் விளைவாகவும் 19-ம் நூற்றாண்டில் அறிவியலில் பல்வேறு புதிய துறைகள் தோன்றி, ஆழமான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் அறிவியல், கணிதம் ஆகிய துறைகளில் நிகழ்ந்த மகத்தான முன்னேற்றங்கள் பெரும்பாலும் ஜெர்மன், பிரெஞ்சு மொழி ஆய்விதழ்களில்தான் வெளியிடப்பட்டன.

இயற்கை ஆய்விதழ்

தொழிற்புரட்சியின் விளைவால், 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொழில்நுட்பத்தில் பிரிட்டன் மிகப் பெரிய அளவில் முன்னேறிக் கொண்டிருந்தது. நியூட்டன், ஃபாரடேவில் தொடங்கி டார்வினின் தொடக்கக் கால ஆய்வுகள்வரை வெளியான பிரிட்டிஷ் ராயல் சொசைட்டியின் ஆய்விதழ்களே அன்றைக்கு மதிப்பு வாய்ந்தவையாக விளங்கின. இந்த நிலையில், 1850 முதல் 1860-க்குள் அறிவியல் ஆய்விதழ்களில் எண்ணிக்கை இரு மடங்கானது. அறிவியல் உலகத்துடன் பொதுமக்களை இணைப்பதற்கு, ‘அறிவியல் செய்திகளை’ வெளியிடும் முயற்சியே ஆய்விதழ்கள் என்று அந்த இதழ்களின் ஆசிரியர்கள் கருதத் தொடங்கினார்கள்.

இந்தப் பின்னணியில்தான், லண்டன் இம்பீரியல் கல்லூரியில் பேராசிரியராக இருந்த அறிவியலாளர் நார்மன் லாக்யெர், 1869 நவம்பர் 4 அன்று ‘நேச்சர்' ஆய்விதழைத் தொடங்கி, முதல் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். பியரி ஜான்ஸென் என்ற பிரெஞ்சு அறிவியலாளருடன் இணைந்து ஹீலியம் வாயுவைக் கண்டறிந்த பெருமையைப் பெற்றவர் லாக்யெர். வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்தின் கவிதை வரி ஒன்றிலிருந்து இதழின் தலைப்பான ‘நேச்சர்' என்ற பெயரை லாக்யெர் எடுத்திருந்தார்.

ஆய்விதழ் ஆளுமைகள்

மிகச் சிக்கலான அறிவியல் கண்டுபிடிப்புகளை, ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் அறிவியலாளர்களுக்கு, அவற்றின் அறிவியலை விளக்குவதற்கான ஒரு களமாகவும் அறிவியல் கோட்பாடுகளை எளிய மக்களும் விளங்கிக்கொள்ளும் சீரிய மொழியில் வழங்குவதாகவும் அறிவியல் ஆய்விதழ்கள் அமைந்தன. அறிவியலாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஒரு பாலமாக ஆய்விதழ்கள் பரிணாமம் பெற்றன.

ஆராய்ச்சி அறிவியலாளர்களே அறிவியல் ஆய்விதழ்களின் முதன்மை வாசகர்களாக இருந்தாலும், முக்கியமான ஆய்வுக் கட்டுரைகளின் சுருக்கம், மற்ற சிறு கட்டுரைகள் ஆகியவை வேறு துறைகளின் அறிவியலாளர்களுக்கும் தேர்ந்த வாசகர்களுக்கும் புரியும் வகையில் வழங்கப்படுகின்றன. பல்வேறு அறிவியல் துறைகளில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் வளர்ச்சி, முதன்மை ஆய்வுகளின் முடிவு உள்ளிட்டவை ‘நேச்ச'ரில் வெளிடப்படுகின்றன.

இவை மிகவும் திட்டவட்டமாக, பல்வேறு அறிவியலாளர்களால் மதிப்பிடப்பட்டு பரிசீலிக்கப்படுகின்றன. சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளில் 8 சதவீதத்துக்கும் குறைவான கட்டுரைகளே அச்சுக்குச் செல்கின்றன; இந்த இதழில் வெளியாகும் கட்டுரைகள் அன்று முதல் இன்றுவரை சர்வதேச அளவில் மதிக்கப்படுகின்றன. 1932-ல் ஜேம்ஸ் சாட்விக், நியூட்ரான் துகளின் இருப்பைக் கண்டறிந்து வெளியிட்டது உள்பட, 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இயற்பியலில் நிகழ்ந்த முக்கியத்துவம் வாய்ந்த, அறிவியலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திய முன்னேற்றங்கள் பலவும் ‘நேச்சர்' இதழில் முதலில் வெளியிடப்பட்டவையே.

‘நேச்ச'ரின் எதிர்காலம்

இன்றைய காலகட்டத்தில் அறிவியல் துறைகளுக்கு இடையிலான எல்லைகள் வேகமாகக் குறுகிக் கொண்டிருக்கின்றன; பல துறைகள் ஒன்றோடொன்று இணைந்துகொண்டும் வருகின்றன. மரபார்ந்த அறிவியல் துறைகளில் மட்டும் கவனத்தைக் குவிக்காமல் சமூக அறிவியல், மருத்துவ ஆய்வு, பயன்பாட்டு அறிவியல், பொறியியல் உள்ளிட்ட துறைகளிலும் கவனம் செலுத்தப்போவதாக 150-ம் ஆண்டுச் சிறப்பிதழின் தலையங்கம் கூறுகிறது. ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு மேம்பட்ட ஒத்துழைப்பையும், கட்டுரைகள் வெளியிடப்படும் விதத்தில் மாற்றங்களையும் முன்னெடுப்போம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஓர் ஆண்டில் 850 அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள், 3,000 செய்திக் கட்டுரைகள், கருத்து, பகுப்பாய்வுக் கட்டுரைகள் ஆகியவற்றை வெளியிடும் ‘நேச்சர்' இதழின் இணையதளப் பார்வையாளர்களின் எண்ணிக்கை சுமார் 40 லட்சம்.

நேச்சரின் தற்போதைய ஆசிரியரான மரபணுவியலாளர் மக்தலேனா ஸ்கிப்பர், இதழின் 150 ஆண்டு கால வரலாற்றில் முதல் பெண் ஆசிரியர் என்பது இந்தக் கொண்டாட்டத்தின் மற்றொரு சிறப்பு!

அறிவியலின் கொண்டாட்டம்

நேச்சரின் 150-ம் ஆண்டுச் சிறப்பிதழ் பாதுகாக்கப்பட வேண்டிய அறிவியல் ஆவணமாக வெளியாகி இருக்கிறது: நேச்சரின் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றி இதில் விவாதிக்கப்பட்டுள்ளது; துகள்களின் அலைத் தன்மை, நியூட்ரான் கண்டுபிடிப்பு, டி.என்.ஏ. வடிவம், ஓசோன் குறைபாடு, படியாக்கம் (குளோனிங்) என அறிவியலில் மிகப் பெரும் பாய்ச்சல்களை நிகழ்த்திய 10 தனித்துவ ஆய்வுக் கட்டுரைகள் பட்டியலிடப்பட்டுள்ளன; அறிவியலில் கடந்த 150 ஆண்டுகளில் கற்றுக்கொள்ளப்பட்ட பாடங்கள் என்ற தலைப்பில் சிறப்புக் கட்டுரைகள்; இதழ் உருவாகும் விதம் பற்றிய பின்னணித் தகவல்கள் போன்றவையும் இதில் இடம்பெற்றுள்ளன. இவற்றுடன், 1896 நவம்பர் 4 அன்று வெளியான ‘நேச்சர்' முதல் இதழின் மென்வடிவம் பதிவேற்றப்பட்டிருக்கிறது.

இந்தச் சுட்டியில் அவற்றைப் படிக்கலாம்: http://bit.ly/Nature150

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x