Published : 25 Nov 2019 12:37 PM
Last Updated : 25 Nov 2019 12:37 PM

டேட்டா எனும் நவீன ஆயுதம்

சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
satheeshkrishnamurthy@gmail.com

மனிதன் பயன்படுத்திவந்த ஆயுதங்கள் பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறாக பரிணாமம் பெற்றுவந்திருக்கின்றன. கற்கள், வில் அம்பு, துப்பாக்கி, விமான தாக்குதல், ஏவுகணை, அணுகுண்டு என்ற வரிசையில் இன்றைய நவீன யுக ஆயுதமாக தகவல் எனப்படும் ‘டேட்டா’ மாறியிருக்கிறது.

டேட்டாவால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். பொருளாதாரம் முதல் அரசியல் வரை அனைத்து துறைகளிலும் டேட்டா எனும் ஆயுதம் அதிதீவிரமாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது. அதனால்தான் ‘டேட்டா சயின்ஸ்’ முன்னணி படிப்பாக மாறியிருக்கிறது. டேட்டா திருடர்கள் உலகுக்கு அச்சுறுத்தலாக மாறிவருகிறார்கள்.

டேட்டாக்களை சேகரிக்க, மார்க்கெட்டிங் பிரமுகர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை, கல்லூரி பேராசிரியர்கள் முதல் சமூக உளவியலாளர்கள் வரை பயன்படுத்தி வந்த உத்தி சர்வே எடுப்பது. ஆய்வில் பங்குபெறுபவர்களிடம் கேள்விகள் கேட்டு அவர்கள் தரும் பதில்களை ஒருங்கிணைத்து ஆய்வு செய்தார்கள்.

ஆனால், இப்போது டேட்டா சேகரிக்கும் முறைகளே முற்றிலுமாக மாறிவிட்டன. மாறி வரும் உலகில் நாம் அன்றாடம் நம்மையும் அறியாமல் விட்டுச்செல்லும் டிஜிட்டல் தடயங்கள் இருக்கையில் எதற்கு சர்வே நடத்தி கேள்வி கேட்டுக்கொண்டு என்கிறார்கள் டிஜிட்டல் துறை நிபுணர்கள். மக்கள் விட்டுச்செல்லும் டிஜிட்டல் தடயங்களை சேகரித்து ஆய்வு செய்வதுதான் இன்றைய டிரெண்ட்.

கூகுளில் நம் தேடல்கள் டேட்டா. இன்டர்நெட்டில் நம் க்ளிக்குகள் டேட்டா. பேசும் மொழி டேட்டா. பதிவாகும் ஒவ்வொரு வார்த்தைகளும் டேட்டா. இவ்வளவு ஏன், நாம் எடுக்கும் புகைப்படங்கள் கூட டேட்டா தான். புகைப்படங்களைக் கொண்டு மனித மனம் பற்றியும் மாறி வரும் குணங்களையும் படம் பிடித்து காட்டலாம் என்கிறார் ‘செத் ஸ்டீஃபன்ஸ்-டேவிடோவிட்ஸ்’.

இவர் ஒரு இன்டர்நெட் டேட்டா எக்ஸ்பர்ட். தினம் இன்டர் நெட்டில் பயணிக்கும் மக்களின் டிஜிட்டல் பாதைகளைக் கண்காணிப்பவர். முக்கியமாக ‘கூகுளி’ல் மக்கள் தேடும் விஷயங்களை பிரித்து மேய்ந்து ஆராய்பவர். மனிதர்களின் ஆழ்மனதை, அதிலுள்ள எண்ணங்களை, வேறு யாரிடமும் கூறாத ரகசியங்களை அவர்களிடமிருந்தே கண்டெடுக்க முடியும் என்று கிளம்பியிருக்கிறார் மனிதர். இவர் எழுதியிருக்கும் புத்தகம் ‘Everybody Lies’ இன்டர்நெட் தேடல்கள் மூலம் மனித மனதை ஆய்வு செய்வது பற்றிய சுவாரசியமான புத்தகம். ஆய்வு செய்ய அளவெடுத்து செய்தது போன்ற விஷயம் புகைப்படங்கள் என்கிறார்.

‘ப்ரவுன்’ மற்றும் ‘பர்க்லி’ பல்கலைக்கழக கம்ப்யூட்டர் விஞ்ஞானிகள் செய்த வித்தியாசமான ஆய்வு ஒன்றிலிருந்து தொடங்குவோம். அமெரிக்காவில் பள்ளி இறுதி நாளன்று மாணவர்கள் புகைப்படம் எடுத்து அதை ஆல்பமாக்கும் வழக்கம் உண்டு. இதை இயர்புக் என்கிறார்கள்.

அப்படி இன்டர்நெட்டில் போஸ்ட் செய்யப்பட்டிருந்த 949 பள்ளிக்கூட இயர்புக்குகளை சேகரித்தார்கள் ஆய்வாளர்கள். 1905 முதல் 2013ஆம் ஆண்டு வரையிலான இயர்புக்குகள். அதிலிருந்த அத்தனை முகங்களையும் காலவரிசைப்படி அடுக்கி ஆராய்ந்தனர். அவை என்ன சொன்னது? அதை எளிதாக புரிய வைக்க உங்களை ஒன்று கேட்கிறேன்.

உங்கள் வீட்டிலுள்ள பழைய புகைப்படங்களை எடுங்கள். உங்கள் தாத்தா பாட்டியின் கல்யாண போட்டோ, உங்கள் அப்பா அம்மாவின் கல்யாண போட்டோ உங்கள் பழைய போட்டோ, உங்கள் குழந்தைகளின் போட்டோ அனைத்தையும் காலவரிசைப்படி அடுக்கி வைத்து பாருங்கள். இதுவரை நீங்கள் கவனிக்க தவறிய விஷயம் ஏதேனும் பளிச்சென்று தெரியும்.

உங்கள் தாத்தா பாட்டி எந்த போட்டோ விலாவது சிரிக்கிறார்களா? ஒன்று உம்மென்று இருப்பார்கள். இல்லை யாரோ கத்தியை காட்டி மிரட்டுவது போல் மிரட்சியுடன் நிற்பார்கள். உங்கள் அப்பா அம்மாவும் கூட போட்டோவில் சிரிக்காமல் இருந்தாலும் அட்லீஸ்ட் மிரளாமல் இருப்பார்கள்.

உங்கள் காலேஜ் போட்டோவை பாருங்கள். சிரிக்க வேண்டும் என்பதற்காகவாவது கொஞ்சம் சிரித்திருப்பீர்கள். அடுத்து உங்கள் குழந்தைகள் போட்டோவை பாருங்கள். ஏதோ காமெடி படம் பார்ப்பது போல் சிரித்துக் கொண்டிருப்பார்களே. சாதாரண போட்டோ, அதில் தலைமுறைகளுக்குள் ஏன் இத்தனை வித்தியாசம்?

போட்டோ கண்டுபிடிக்கப்பட்டபோது மக்கள் அதை ஓவியங்களுக்கு நிகராக பார்த்தார்கள். போட்டோவோடு ஒப்பிட்டுப் பார்க்க அப்பொழுது வேறெதுவும் இல்லையே. போட்டோவுக்கு ஈடானது ஓவியங்கள்தானே. அக்காலத்தில் ஒருவர் நின்றோ அமர்ந்தோ இருக்க ஓவியர் அவரை வரைந்து முடிக்கும் வரை ஆடாமல் அசையாமல் இருப்பார்.

ஓவியர் வரைந்து முடிக்கும் வரை சிரித்துக்கொண்டிருக்க முடியாது. முகத்தை அசையாமல் வைத்திருக்க உம்மென்றுதான் இருக்க முடிந்தது. போட்டோ என்ற சமாச்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட போது அதற்கு நின்றவர்கள் ஓவியத்துக்கு நிற்பது போல் முகத்தை இறுக்கிக் கொண்டு நின்றனர். அதனாலேயே அக்கால பிளாக் அண்ட் ஒயிட் போட்டோக்களில் அனைவரும் சிரிக்காமல் சீரியஸாக நின்று போஸ் கொடுத்தனர். கொடுத்தனர் என்ன கொடுத்தனர், நாமும் அப்படித்தான் நின்று போஸ் கொடுத்தோம்.

தலைமுறை இடைவெளி

இது காலப்போக்கில் மாறத் தொடங்கியது. போட்டோ கம்பெனிகள் தங்கள் விளம்பரங்களில் பல்லைக் காட்டி சிரித்தபடி இருக்கும் மாடல்களை காண்பிக்க கொஞ்சத்துக்கு கொஞ்சம் மக்கள் போட்டோக்களில் சிரிக்கத் தொடங்கினார்கள். ‘கோடக்’ போன்ற கம்பெனிகள் போட்டோக்களை மகிழ்ச்சித் தருணங்களாக மார்க்கெட்டிங் செய்தன.

வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களை ஞாபக பொக்கிஷங்கள் ஆக்குங்கள் என்று விளம்பரப்படுத்தின. இன்று உங்கள் குழந்தைகள் போட்டோ எடுக்கும் முன் ‘சே சீஸ்’ என்று சொல்லி போட்டோ எடுப்பதை பார்த்திருப்பீர்கள். ‘சீஸ்’ என்ற வார்த்தையை கூறும்போது பற்கள் தெரியும் அளவுக்கு உதடுகள் விரிகின்றன. போட்டோ எடுக்கும் போது பிரமாதமாய் சிரிப்பது போல் தெரிகிறது. போட்டோக்களிலுள்ள தலைமுறை இடைவெளிக்கான காரணம் இதுவே!

மார்க்கெட்டிங், விளம்பரம் போன்றவைகளால் என்ன பயன் என்று இனி யாராவது கேட்டால் அவரை கேமிராவால் தள்ளி போட்டோவால் இரண்டு அடி கொடுங்கள். மார்க்கெட்டிங் என்ற ஒன்று மட்டும் இல்லாதிருந்தால் இன்று வரை நாம் அனைவரும் போட்டோக்களில் உம்மென்ற சிலைகள் போல்தான் நின்றுகொண்டிருப்போம்.
சீஸ் சொல்லி சிரிப்பதை விடுங்கள்.

உலகப் பொருளாதாரம், உள்நாட்டு வளர்ச்சி போன்ற சீரியஸான மேட்டர்களில் கூட புகைப்படங்களின் பங்களிப்பு புதைந்துகிடக்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும். ஒரு நாட்டின் பொருளாதார நிலையை அந்நாட்டின் புகைப்படங்கள் மூலம் தெரிந்துகொள்ள முடியும் என்கிறார்கள் ‘வெர்னான் ஹெண்டர்ஸன்’, ‘ஆடம் ஸ்டோரிகார்ட்’, ‘டேவிட் வீல்’ ஆகிய பொருளாதார நிபுணர்கள். உலக நாடுகள் பலவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு சரியாக மதிப்பிடப்படுவதில்லை.

சில நாடுகள் வெட்கமில்லாமல் பொய்யாய் அள்ளிவிடுகின்றன. அந்நாடுகளின் பொருளாதார செயல்கள் சரிவர தெரிவதில்லை. இதை ஓரளவுக்கேனும் சரியாய் மதிப்பிட இந்த நிபுணர்கள் பரிந்துரைக்கும் வழி புகைப்படங்கள். அதுவும் இரவு நேரத்து புகைப்படங்கள். இரவு நேரத்தில் ஒரு நாட்டில் எந்த அளவுக்கு வெளிச்சம் இருக்கிறது என்பதை பார்த்தால் போதும், அவர்களின் பொருளாதார நிலை தெரிந்துவிடும் என்கிறார்கள்.

மின்சார பயன்பாடு

உலகின் ஏழ்மையான நாடுகளில் வசிப்பவர்களில் பலர் மின்சார கட்டணம் செலுத்தக்கூட முடியாமல் வாழ்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் தங்கள் பொருளாதார நிலைக்கேற்ப மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர். உங்கள் வீட்டு வாசலில் நீங்கள் விடிய விடிய பல்பை எரிய விட்டு தூங்குகிறீர்கள். உங்களால் அந்த கட்டணத்தை கட்ட முடியும் என்பதால். சிலர் இரவு படுக்க போகும் முன் அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு படுக்கின்றனர்.

காரணம் அவர்களால் இரவு முழுவதும் தீவட்டி போல் எரிய ஆகும் செலவை கட்ட முடியாதென்பதால். ஆனால், பணக்காரர்களின் வீடுகள் முழுவதும் ஜகஜோதியாக விதவிதமான லைட்டுகளால் ஒளிரும். அவர்களுக்கு அந்த எக்ஸ்ட்ரா மின்சார கட்டணம் ஒரு பொருட்டே இல்லை என்பதால். இது வீடுகளுக்கு மட்டுமல்ல, தெருக்களுக்கும் ஏன், மொத்த நாட்டுக்கும் பொருந்தும்தானே.

ஆய்வாளர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது பூமியிலிருந்து பார்க்கும் உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அண்டசராசரத்திலிருந்து பார்த்தால்? அமெரிக்க சாட்டிலைட்கள் தினமும் பூமியை பதினான்கு முறை சுழன்று வருகின்றன. இவை வெறுமனே பிரதஷ்னம் செய்வதோடு நின்றுவிடுவதில்லை, போகும் வழியில் பூமியின் ஒவ்வொரு அங்குலத்தையும் போட்டோ எடுத்து அனுப்புகின்றன.

இதில் பூமியை இரவில் எடுக்கும் போட்டோக்களும் அடங்கும். அப்படி இரவில் எடுக்கும் புகைப்படங்களில் ஒவ்வொரு நாடுகளின் மேற்பரப்பிலும் பதிவாகும் வெளிச்ச அளவைக் கொண்டு ஒவ்வொரு நாட்டின் பொருளாதார நிலையை அளவிட முடியும் என்கிறார்கள். தங்கள் ஆய்வுகளை ‘American Economic Review’ என்ற ஜர்னலில் ‘Measuring Economic Growth From Outer Space’ என்ற கட்டுரையில் விவரமாக விளக்கியிருக்கிறார்கள்.

சாட்டிலைட் படத்தின் ஒவ்வொரு பிக்சலும் பூமியின் ஒரு சதுர கிலோமீட்டருக்கு சற்று குறைவான இடத்தை குறிக்கும். பூமியில் அந்த இடம் பிரகாசமாக இருந்தால் போட்டோவில் பிக்சல் பிரகாசமாக இருக்கும். மொத்த உள்நாட்டு உற்பத்தி கூடி தனிநபர் வருமானம் உயரும் போது அந்நாட்டு மக்கள் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு அதிகரிக்கும்.

அதனால் அந்நாடு மேலிருந்து பார்க்கும் போது மற்ற நாடுகளை விட பளிச்சென்று தெரியும்! வெளிச்ச அளவை டேட்டாவாய் பாவித்து பொருளாதார நிலைமையை கணக்கிடுவது துல்லியமாக இருக்காதுதான். ஆனால் நாடுகள் அளிக்கும் பொருளாதார டேட்டாவோடு அந்நாட்டின் வெளிச்ச அளவை சேர்த்து பார்க்கும் போது இன்னமும் கூட அந்நாடுகளின் பொருளாதார நிலையை புரிந்துகொள்ளலாம் என்கிறார்கள்.

இது ஒரு உதாரணம் மட்டுமே. டேட்டா ஆய்வு என்பது கடல் போன்றது. அதில் பலரும் முக்குளித்து பெரும் கோடீஸ்வரர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். அதேசமயம், டேட்டாவைப் பயன்படுத்துவதில் பல சர்ச்சைகளும் உள்ளன. அந்நிய நிறுவனங்கள் உள்நாட்டு மக்களின் தகவல்களை எங்கே சேமிக்கின்றன, எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதெல்லாம் பெரும் சர்ச்சையாக மாறிவருகிறது.

டிஜிட்டல் உலகில் உலாவரும் டேட்டாக்களின் நம்பகத்தன்மையும் பெரும் கேள்விக்குறியாகியிருக்கிறது. ஆனால், இந்த நவீன யுகத்தில் மனிதன் கையில் எடுத்திருக்கிற மிகப்பெரும் ஆயுதம் ‘டேட்டா’ என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஏனெனில், டேட்டா நிபுணர்கள் நம்மை பற்றி நாம் தெரிந்துவைத்திருப்பதை விட அதிகமாகவே தெரிந்துகொள்கிறார்கள். அதை நம் மீதே பயன்படுத்தவும் செய்கிறார்கள். நமக்குத் தெரியாமலேயே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x