Published : 25 Nov 2019 12:29 PM
Last Updated : 25 Nov 2019 12:29 PM

பொருளாதாரம் கீழே; பங்குச் சந்தை மேலே!

2021-ல் அதிசயம் நிகழ்கிறதோ இல்லையோ, 2019-ல் அதிசயம் நடந்துகொண்டிருக்கிறது. எங்கு திரும்பினாலும் பொருளாதார மந்த நிலை பற்றிய பேச்சு. மிகக் குறைவான வளர்ச்சி விகித கணிப்புகள், நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் நிலை, பாதாளத்தில் நுகர்வு, உற்பத்தி துறையின் வீழ்ச்சி, கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியாத புதிய முதலீடுகள்.

இப்படியிருக்கிறது பொருளாதாரத்தின் நிலை. ஆனால், பங்குச் சந்தை மட்டும் மாதம் ஒரு புதிய உச்சத்தை எட்டுகிறது. எப்படி? இந்த நிதி ஆண்டின் செப்டம்பர் காலாண்டு முடிவுகளும் அவ்வளவு மோசமாக இல்லை. எதிர்பார்த்ததை விட நல்ல லாபத்தையே பெரும்பாலான நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.

சொல்லப் போனால் பொருளாதாரத்துக்கும் பங்குச் சந்தைக்கும் பெரிய அளவில் தொடர்பு இருப்பதில்லை. அன்றாட செய்திகள், சர்வதேச நிகழ்வுகள், அரசியல் விவகாரங்கள், அந்நிய முதலீட்டாளர்களின் செயல்பாடுகள், ஆகியவற்றை அடியொற்றியே பங்குச் சந்தை இயங்குகிறது.

எனவேதான் அரசும் பங்குச் சந்தை வீழ்ச்சி சமயங்களிலெல்லாம் அதைப் பற்றி பெரிதாகக் கவலைப்பட்டது கிடையாது. பங்குச் சந்தை ஏன் ஏறுகிறது, ஏன் திடீரென்று சரிகிறது என்பதே எளிதில் புரிந்துகொள்ள முடியாத புதிர்தான். எல்லாமே எண்களின் விளையாட்டு. வர்த்தகமும், முதலீடுகளுமே பங்குச் சந்தையைத் தீர்மானிக்கின்றன.

எனவேதான் நாட்டின் பொருளாதாரம் மிகப் பெரும் கேள்விக்குறியாக தொக்கி நிற்கும்போதும் பங்குச் சந்தை 41 ஆயிரத்தைத் தொடும் நிலையில் உற்சாகமாக உள்ளது. அந்நிய முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் தொடர்ச்சியாக முதலீடு செய்துகொண்டே இருக்கிறார்கள்.

ஆனால், பேரியல் பொருளாதார புள்ளிவிவரங்கள் மோசமாக உள்ள நிலையிலும் பங்குச் சந்தை இப்படி சரவெடியாக உயர்வது பலருக்கு மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக முதலீட்டாளர்கள் பலரும் இந்த ஏற்றத்தை எப்படி எடுத்துக்கொள்வது என்ற குழப்பத்திலேயே இருக்கின்றனர்.

பங்குச் சந்தையின் இந்த முரண்பாடான ஏற்றத்துக்கு காரணங்கள் என்னென்ன என்று பார்க்கும்போது நிறுவன வரி குறைப்பு, பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை, அமெரிக்க-சீன வர்த்தகப் போரில் எதிர்பார்க்கப்படும் சுமுகமான தீர்வு உள்ளிட்டவையே உள்ளன. நிறுவன வரி குறைப்பினால் முன்னணி நிறுவனங்கள் குறிப்பாக லார்ஜ் கேப்பங்குகளைக் கொண்ட நிறுவனங்கள் ஆதாயம் அடைந்துள்ளன.

இதனால் இந்தப் பங்குகளின் வர்த்தக செயல்பாடுகள் சிறப்பாகவே இருக்கின்றன. இதுவும் பங்குச் சந்தையின் ஏற்றத்துக்கு மிக முக்கிய காரணம். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு வர்த்தகம் பங்குச் சந்தையின் ஏற்றத்துக்கு அதிக பங்கு வகித்திருக்கிறது என்றால் மிகையில்லை.

ஆர்சிலர்மிட்டல்-எஸ்ஸார் ஸ்டீல் இணைப்புக்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, ரிலையன்ஸ் ஜியோ தனி டிஜிட்டல் நிறுவனமாக உருவாகும் என்ற அறிவிப்பு, தொடர்ந்து வங்கிகள், மற்றும் நிதி சேவை நிறுவனங்கள் பெரிய அளவில் எந்தவித எதிர்மறை செய்திகளிலும் சிக்காததால் இத்துறை பங்குகளும் சிறப்பாகவே செயலாற்றிவருகின்றன.

அதேபோல் நிறுவனங்களின் செப்டம்பர் காலாண்டு முடிவுகளும் பெரிய அளவில் ஏமாற்றமளிக்கவில்லை. அரசும் தொடர்ச்சியாக வட்டி குறைப்பு, வரி குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டே இருக்கிறது. இதனால், தற்போது பொருளாதாரத்தில் நிலவும் மந்த நிலை விரைவில் விலகுவதற்கான வாய்ப்பு இருப்பதாக முதலீட்டாளர்கள் நம்புகின்றனர். பங்குச் சந்தையின் மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கை வலுவாக இருக்கும்வரை ஏற்றமடைவது தொடரலாம்.

ஆனால், பங்குச் சந்தையின் தற்போதைய செயல்பாடுகள் அனைத்துமே எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையின் மீது இயங்குபவை என்பதையும் தெளிவாகக் காட்டுகிறது. பொருளாதாரம் பெரிய அளவில் நெருக்கடிக்குள்ளாகும்போது பங்குச் சந்தை அதற்கு மாறாக ஏற்றமடையுமா என்றால் சாத்தியம் மிக மிகக் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏனெனில் பங்குச் சந்தை முதலீட்டுக்கான அடித்தளத்தில் பொருளாதாரத்தின் வீழ்ச்சி தாக்கத்தை ஏற்படுத்தினால் பங்குச் சந்தை ஆட்டம் காணும் வாய்ப்பு அதிகம். நாட்டில் உள்ள கட்டமைப்பு குறைபாடுகள், அரசின் நிதிப் பற்றாக்குறை, மக்களின் தேவை மற்றும் உற்பத்திக்கு இடையிலான மிகப்பெரும் இடைவெளி ஆகியவை மோசமானால் அதன் விளைவை பங்குச் சந்தை எதிர்கொள்ளத்தான் வேண்டியிருக்கும்.

முக்கிய துறைகளின் உற்பத்தி வெகுவாகக் குறைந்திருக்கிறது. 5 சதவீத வளர்ச்சியையே தாங்க முடியாமல் பீதியான இந்தியச் சந்தை 5-க்கும் குறைவாக 4.7%, 4.2% போன்ற ஜிடிபி கணிப்புகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறதோ தெரியவில்லை. இத்தகைய மோசமான நிலையில் இருக்கும் பொருளாதாரம் மீண்டும் பழையபடி ஏற்றம் கண்டு பங்குச் சந்தையின் வளர்ச்சியோடு கைகோர்க்குமா என்பது போகப் போகத்தான் தெரியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x