Published : 25 Nov 2019 12:24 PM
Last Updated : 25 Nov 2019 12:24 PM

நவீனத்தின் நாயகன் 02: தாத்தா கையை வெச்சா!

எஸ்.எல்.வி. மூர்த்தி
slvmoorthy@gmail.com

யாரும் காலெடுத்துவைக்கத் தயங்கும் புத்தம் புதிய துறைகளில் நுழையும் துணிச்சல், கனவுகளை நனவாக்கும் வெறி, எத்தனை முறை விழுந்தாலும் இலக்கைத் தொடரும் விடாமுயற்சி, அசுரத்தனமான உழைப்பு – இவை அத்தனையும் ஈலான் மஸ்க்கின் ரத்தத்தில் ஊறிய குணங்கள். தன் அம்மாவழித் தாத்தாவிடமிருந்து பெற்றவை, கற்றவை. ஆகவே, பேரனைச் சந்திக்கும் முன், தாத்தாவோடு ஒரு ஹலோ.

அமெரிக்காவின் மக்கள் தொகை 33 கோடி. இந்தியாவின் 137 கோடியில் சுமார் கால் பங்கு. ஒரு முக்கிய வித்தியாசம் – நம் நாட்டில் ஏகதேசம் எல்லோரும், ``பாரதநாடு பழம்பெரும் நாடு, நாமதன் புதல்வர்.” அமெரிக்கா புலம் பெயர்ந்தோர் தேசம். ஏழில் ஒருவர் அயல்நாடுகளில் பிறந்தவர். விஞ்ஞான மேதைகள் ஐன்ஸ்டீன், சுப்ரமணியன் சந்திரசேகர், கூகுள் நிறுவனர் செர்கி பிரின், சி.இ.ஓ. சுந்தர் பிச்சை, டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவரத்திலோவா, நடிகர்கள் ஆர்னார்ட் ஷ்வாஸ்நேகர், ஆட்ரே ஹெப்பர்ன், ``பீட்டில்ஸ்” ஜான் லெனன் என நீளும் பட்டியல் அமெரிக்க வளர்ச்சியின் தூண்கள்.

சொந்த நாட்டிலிருந்து ஓடிவந்து அமெரிக்காவில் புதுவாழ்வு தொடங்குவதை ஆரம்பித்து வைத்தவர்கள் இங்கிலாந்து நாட்டுக்காரர்கள். பதினாறாம் நூற்றாண்டில் இங்கிலாந்து அரசர் எட்டாம் ஹென்றி, போப் ஆண்டவரின் தலைமையை ஏற்க மறுத்தார். ``ஆங்கிலிக்க திருச்சபை” (Anglical Church) என்னும் போட்டி அமைப்பு தொடங்கினார். இதே காலகட்டத்தில் புரொட்டஸ்டன்ட் பிரிவும் உருவானது. யூத இனத்தவர்களும், கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களும் பாதுகாப்பான புகலிடம் தேடினார்கள்.

1492 – ல் கிறிஸ்டோபர் கொலம்பஸ்கண்டுபிடித்த அமெரிக்கா, புதுவாழ்வு தொடங்கும் வாய்ப்புகளை இவர்களுக்கு தந்தது. வந்தார்கள்; விரைவில் சிறுதுளி பெருவெள்ளமானது. ஒண்டவந்த ஒட்டகமான பிரிட்டன் 1607 – ல், தங்கள் ஆட்சிக்கு உட்பட்ட 13 காலனிகளை நிறுவினார்கள். 1783 – ல் எழுந்தது அமெரிக்கப் புரட்சி, கவிழ்ந்தது பிரிட்டிஷ் ஆட்சி. ஆனாலும், அண்டைய கனடா நாட்டில் பிரிட்டிஷ் கொடி பட்டொளி வீசிப் பறந்தது.

ஜனவரி 24,1848. ஜான் மார்ஷல் என்னும் 38 வயதுத் தச்சுக் கலைஞர். தொட்டவை அத்தனையும் தோல்வி. வறுமை. கொலோமா (Coloma) என்னும் இடத்தில், ஜான் ஸட்டர் என்பவரோடு சேர்ந்து சிறிய மரம் அறுக்கும் ஆலை தொடங்கினார். ஆலையின் அருகே ஒரு சிறிய கால்வாய். மனச் சலிப்பு. என்ன செய்வதென்று தெரியாமல், சலசலத்து ஓடும் தண்ணீரைப் பார்த்துக்கொண்டிருந்தார். அங்கே ஏதோ பளபளப்பு. கீழே இறங்கினார். கொஞ்சம் தண்ணீரைக் கையில் எடுத்தார். கையில் பொன்னிறத் துகள்கள். ஜான் ஸட்டரிடம் போனார்.

துகள்களைப் பரிசோதனை செய்தார்கள். 23 கேரட்! 96 சதவிகிதச் சொக்கத் தங்கம். சேதி காட்டுத்தீயாகப் பரவியது. 1848 – 1855 காலகட்டத்தில் அமெரிக்காவின் பிற மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும், மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் கலிபோர்னியா வந்தார்கள்.

ஏரியா முழுக்கத் தோண்டினார்கள். பலர் கோடீஸ்வரர்களானார்கள். இன்னும் பலர் இருந்ததையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்தார்கள். இந்தச் சம்பவம் “கலிபோர்னியா தங்கவேட்டை” (California Gold Rush) என்று அழைக்கப்படுகிறது. ஈலான் மஸ்க்கின் முன்னோர்களான ஹால்டெமன் (Haldeman) குடும்பமும் இங்கிலாந்திலிருந்து இப்போது அமெரிக்காவுக்கு வந்திருக்கலாம்.

1900. ஜான் ஹால்டெமன் இந்த வம்சாவளியில் வந்தவர். தன் மனைவி அல்மேடாவுடன் மினிசோட்டா மாநிலத்தில் வசித்துவந்தார். இந்த மாநிலம், அமெரிக்கா - கனடா நாடுகளின் எல்லையில் இருக்கிறது. ஜானுக்குச் சர்க்கரை நோய் வந்தது. அப்போது அது உயிர்க்கொல்லி நோய். டாக்டர்கள் ஆறு மாதங்கள் மட்டுமே
அவர் உயிரோடு இருப்பார் என்று கெடு வைத்தார்கள்.

அல்மேடா இரும்புப் பெண்மணி. எமதூதனே வந்து கணவருக்கு நாள் குறித்தாலும் ஏற்றுக்கொள்ளமாட்டார். “கைரோப்ராக்டிக்” (Chiroproctic) என்னும் நாட்டு வைத்தியத்தால் நோயைக் குணப்படுத்தலாம் என்று கேள்விப்பட்டார். இது நம் ஊர் மர்ம வைத்தியம் போல. முதுகெலும்பில் தடவி, நரம்புகளை ஆசுவாசப்படுத்தும் லோக்கல் மருத்துவம். கல்லூரியில் சேர்ந்தார். பட்டம் பெற்றார்.

முதல் சிகிச்சை கணவருக்கு. இத்தோடு, இனிப்புகளுக்கும் தடை. ஆறு மாதக்கெடு வந்தது. போனது. இரண்டு வருடங்கள். மகன் ஜாஷுவா பிறந்தான். அல்மேடாவுக்குக் கைரோப்ராக்டிக் மீதிருந்த நம்பிக்கை உறுதிப்பட்டது. 1907. ஜான் குடும்பம் அண்டைய கனடா நாட்டில், சஸ்க்காச்சுவான் (Saskatchewan) மாநிலத்தில் இருக்கும் ரெகினா (Regina) நகரத்தில் குடியேறினார்கள்.

ஜாஷுவாவின் ஏழாம் வயதில் அப்பா மரணம். அவர் வாழ்க்கையைப் பல வருடங்கள் நீட்டித்த மருத்துவத்தில் அம்மா மகனுக்கு ஈடுபாட்டை ஏற்படுத்தினார். ஜாஷுவா கைரோப்ராக்டிக் துறையில் பட்டம் வாங்கினார். இது வருமானம் தரும் முழுநேரத் தொழிலாக இருக்கவில்லை. ஆகவே, விவசாயத்தில் ஈடுபட்டார். படிப்படியாக வளர்ச்சி. விரைவில் அவர் வசம் 5,000 ஏக்கர்கள் நிலம். கை நிறையப் பணம்.

அமெரிக்காவில் ``மாபெரும் பொருளாதார வீழ்ச்சி” (Great Depression). வங்கிகள் திவால். ஒன்றரைக் கோடிப் பேர் வேலை இழந்தார்கள். அண்டை நாடான கனடாவிலும் தாக்கம் வந்தது. வங்கியில் வாங்கிய கடனை ஜாஷுவாவால் திருப்பித்தர முடியவில்லை. அவர்கள் நிலத்தைப் பறிமுதல் செய்தார்கள். நேற்றைய நாட்டாமை நடுத்தெருவில்.
ஜாஷுவா போலி கவுரவம் பார்ப்பவரல்ல. கட்டிடத் தொழிலாளி, பண்ணைகளில் கால்நடை மேய்ப்பவர், ஜல்லிக்கட்டில் காளையை அடக்குபவர் எனக் கிடைத்த வேலைகளுக்
கெல்லாம் போனார். கடைசியில், அம்மா அடித்தளம் போட்ட கைரோப்ராக்டிக் மருத்துவம் கைகொடுத்தது.

கனடா நாட்டின் முதல் கைரோப்ராக்டிக் மருத்துவரானார். நூறு சதவிகித உழைப்பு. அவர் ராசிக்கரங்களின் புகழ் பரவியது. சொந்தமாகக் குட்டி விமானம் வாங்கி, கனடா முழுவதும் பயணித்துச் சிகிச்சை தரும் வளர்ச்சி. அந்த விமானத்தை அவரே ஓட்டினார். கனடா அரசாங்கமும், ராணுவமும், கைரோப்ராக்டிக் துறையை மருத்துவமாகவே அங்கீகரிக்கவில்லை. இதற்காக ``அகில உலக கைரோப்ராக்டிக் சங்கம்” (International Chiroproctic Association) தொடங்கினார்.

அங்கீகாரத்துக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தார். கைரோப்ராக்டிக் கல்லூரி ஆரம்பித்து, பாடத்திட்ட வடிவமைப்பு, ஆசிரியர்கள் தேர்வு என அத்தனையிலும் கணிசப் பங்களிப்பு. ஆமாம், தாத்தா கையை வெச்சா அது தப்பாப் போகவில்லே. தொட்டவை அனைத்தும் துலங்கின. தொழில் வெற்றி, செல்வாக்கு, கைகளில் பணம் – மனதில் தூங்கிய அரசியல் உணர்வுகளைத் தூண்டிவிட்டன. விவசாயத்தில் தனக்கும், லட்சக்கணக்கானோருக்கும் வந்த வீழ்ச்சிக்குக் காரணம், அரசாங்கத்தின் கையாலாகாத்தனம் என்று நம்பினார். மனதில் தீவிரமான அரசியல் கொள்கைகள் பிறந்தன.

‘டெக்னோக்ரஸி” (Technocracy) என்னும் அமைப்பு தொடங்கினார். மக்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளுக்கு நாட்டை ஆளும் திறமை கிடையாது. எனவே, தொழில்நுட்ப வல்லுநர்களை மட்டுமே ஆட்சி பீடத்தில் அமர்த்த வேண்டும். அப்போதுதான், அறிவியல் முன்னேற்றங்களின் பலன்களால் சாமானியர்களின் வாழ்க்கைத்தரம் உயரும் என்னும் சித்தாந்தம். இது மக்களாட்சிக்கு உலை வைக்கும் கொள்கை. ஆகவே, கனடா அரசு “டெக்னோக்ரஸி”யைத் தடை செய்தது. அஞ்சாநெஞ்சர் தொடர்ந்து தன் கருத்துகளை வெளியிட்டார். எங்கே மக்கள் பிரச்சினைகள் வந்தாலும், முன்னின்று போராட்டங்கள் நடத்தினார். பல வழக்குகளை எதிர்கொண்டார்.

தனிமனிதப் போராட்டம் பயன் தராது என்று தெரிந்தது. சொந்தக் கட்சி தொடங்கினார். தொண்டர்கள் யாரும் வரக்காணோம், ‘‘ஸோஷியல் கிரெடிட்” என்னும் கட்சியில் சேர்ந்தார். உள்ளூர் கவுன்சில் முதல் பாராளுமன்றம் வரையிலான பல்வேறு தேர்தல்களிலும் போட்டியிட்டார். அத்தனையிலும் தோல்வி. கனடா நாடு சோஷலிசப் பாதையில் போகிறது. இது அழிவுப்பாதை என்று நினைத்தார். அரசையும், கம்யூனிஸ்ட்களையும் கடுமையாக விமர்சித்தார். விளைவு - கம்பி எண்ணினார்.

இந்தக் காலகட்டத்தில், அவருக்கு மனைவி ‘‘வின்’’, மகன், மகள், இரட்டைக் குழந்தைகளான மகள்கள் ‘‘மே” (Maye), ”கே” (Kaye). நாட்கள் ஓட, ஓட, ஜாஷுவாவுக்குக் கனடா நாட்டின் மீது வெறுப்பு வந்தது. 1950. மனைவியோடும், குழந்தைகளோடும் தென்னாப்பிரிக்கா போக முடிவெடுத்தார். பல காரணங்கள் – கனடாவின் குளிருக்கு மாறாக, அங்கே இருந்த இளஞ் சூட்டுப் பருவநிலை, குறைந்த செலவு வாழ்க்கை.

தென்னாப்பிரிக்காவின் தலைநகரான பிரெட் டோரியா (Pretoria) – வுக்கு வந்தார்கள். தினமும் 175 நோயாளிகள் வருமளவுக்குத் தொழிலில் உயர்ந்தார். தென்னாப்பிரிக்கா வருவதற்கு ஜாஷுவாவுக்குத் தொல்பொருள் ஆராய்ச்சியில் இருந்த ஈடுபாடும் இன்னொரு காரணம். தென்னாப்பிரிக்காவில், காலஹாரி (Kalahari) என்னும் பாலைவனம் இருக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் இருந்த ஒரு மாநகரம் இங்கே புதையுண்டு இருப்பதாகப் பல அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் சொல்கிறார்கள். ஜோஷூவா தன் விமானத்தில் இங்கே 12 முறை விசிட் அடித்திருக்கிறார்.

குடும்பத்தில் நெருக்கம் அதிகம். ஆகவே, தனியாகவே போக மாட்டார். மனைவி, குழந்தைகள் துணையோடுதான். விமானத்தில் கோளாறு வந்து, ஒட்டுமொத்தக் குடும்பமும் தவித்த அனுபவங்கள் பல. 1974. ஜாஷூவா வயது 72. நண்பர் ஒருவரோடு விமானத்தைச் சோதனை ஓட்டத்துக்கு எடுத்துப் போனார். விமானம் மின்சாரக் கம்பியில் மாட்டிக்
கொண்டது. தரையில் மோதியது. இருவரும் மரணம். வாழ்க்கையின் ஒவ்வொரு விநாடியையும் சாகசமாக ரசித்தவருக்கு முடிவிலும் த்ரில்!

(புதியதோர் உலகம் செய்வோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x