Published : 24 Nov 2019 10:00 AM
Last Updated : 24 Nov 2019 10:00 AM

வானவில் பெண்கள்: வாழ்வது இவர்களின் உரிமை

யுகன்

திருநங்கைகளின் வாழ்க்கைத்தரமும் அவர்களுக்கான அங்கீகாரமும் சமூகத்தில் ஏறுமுகத்தில் இருப்பதைப் பட்டவர்த்தனமாகப் புரியவைத்தது சென்னை, பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் அண்மையில் நடந்த ‘வெற்றிப் பாதையில் திருநங்கைகள் 2019’ விழா.

தங்களது கோரிக்கைகளை விழாவில் முன்வைத்தார் ‘சகோதரன்’ அமைப்பின் பொது மேலாளர் ஜெயா. திருநங்கைகளைக் கருணை உள்ளத்தோடு சமூகமும் அரசும் அணுக வேண்டிய தேவை இருப்பதை அவருடைய பேச்சு உணர்த்தியது. ஒட்டுமொத்தத் திருநங்கை சமூகத்துக்கும் கருணை அடிப்படையிலான உதவியை அரசு செய்ய வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பில் அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை உறுதிசெய்ய வேண்டும் உள்ளிட்டவை அவர்களது முதன்மை கோரிக்கைகள். “எங்கள் கோரிக்கைகளைச் சொல்வதற்குத்தான் கலை நிகழ்ச்சிகளும் திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி எனும் இனிப்பும் தேவைப்படுகிறது. இந்தச் சமூகத்தில்தான் நாங்கள் வாழ்கிறோம். பெண்களுக்கு எதிரான வன்முறைக்கும் நாங்கள் போராடுகிறோம். வெள்ளம் வந்தபோது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எங்களால் முடிந்த உதவிகளைச் செய்தோம். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்திலும் நாங்கள் திரண்டோம். வாழ்வது எங்களின் உரிமை; சமூகம் எங்களின் கடமை” என்றார் ஜெயா.

“பொதுச் சமூகத்தில் பல நல்ல விஷயங்களைச் செய்துவரும் அரிமா உறுப்பினர்கள், இன்னர்வீல் அமைப்பினர், மருத்துவர்கள், சட்டத் துறை நிபுணர்கள், பத்திரிகையாளர்கள், ஊடகம், காவல் துறை உயர் அதிகாரிகள் இப்படிப் பலரையும் ஒருங்கிணைப்பதற்கு உதவுவதற்குத்தான் இப்படியான விழாவை ஆண்டுக்கு ஒருமுறை நடத்துகிறோம். பலரும் நினைப்பதுபோல திருநங்கை அழகிகளை சமூகத்தில் நடமாடவைப்பது மட்டுமே எங்களுடைய நோக்கம் அல்ல. நர்சிங், சட்டம், உயர்கல்வி போன்றவற்றைப் படித்துவரும் திருநங்கைகளையும் உயர் பதவிகளில் பணிபுரியும் திருநங்கைகளையும் பொதுச் சமூகத்தின் முன்நிறுத்துவதற்கே விழாக்களைப் பயன்படுத்திக்கொள்கிறோம்’’ என்றார் இந்தியன் ‘டிரான்ஸ்ஜென்டர் இனிசியேட்டிவ்’ அமைப்பின் நிறுவனர் திருநங்கை சுதா.

முன்நகர்த்திய பின்னணிகளுக்குப் பரிசு

திருநங்கைகளுக்குக் கல்வி, மருத்துவம் ஆகியவற்றுடன் சமூகநலத் திட்டங்களைச் செயல்படுத்திவரும் தமிழக அரசுக்கு நன்றி கூறவும், பல துறைகளிலும் சாதித்துவரும் திருநங்கைகளை அடையாளப்படுத்தவும், பொதுச் சமூகத்தில் இருப்பவர்கள் மாற்றுப் பாலினச் சிறுபான்மையினருக்கு செய்துவரும் நன்மைகளைக் குறிப்பிட்டு அவர்களைப் பாராட்டவும் இந்த விழாவைத் திருநங்கைகள் பயன்படுத்திக்கொண்டனர். நடிகைகள் குமாரி சச்சு, வெண்ணிற ஆடை நிர்மலா, அம்பிகா, கவுதமி ஆகியோர் திருநங்கைகள் நடத்திய கலை நிகழ்ச்சிகளை ரசித்துப் பாராட்டினார்கள்.

திருநங்கைகளைத் தன்னுடைய அபாரமான திறமையால் ஒளிப்படம் எடுத்து உலக அரங்கில் அறிமுகப்படுத்தும் ஒளிப்படக் கலைஞர் ராமகிருஷ்ணன், எய்ட்ஸ் விழிப்புணர்வு, திருநங்கைகள் குறித்த புரிதலைப் பள்ளி, கல்லூரிகளில் ஏற்படுத்திவரும் பள்ளிச் சிறுமி ஆராதனா, மாற்றுப் பாலினத்தவர் குறித்த புரிதலை சமூகத்தில் ஏற்படுத்தும் பத்திரிகையாளர் வா.ரவிக்குமார் ஆகியோருக்கு தமிழ்நாடு மாநில லீகல் சர்வீஸ் அத்தாரிட்டியின் டெபுடி செக்ரட்டரி நீதிபதி டி.ஜெய ‘பிகைன்ட் த சக்ஸஸ்’ விருது வழங்கி கவுரவித்தார். “மாற்றுப் பாலினத்தவருக்கான சட்ட உரிமைகளையும் ஆலோசனைகளையும் வழங்குவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். நீங்கள் எங்களை அணுகினால் உங்களுக்கான சட்டபூர்வமான ஆலோசனைகளைப் பெறலாம்” என்று நம்பிக்கையும் தந்தார்.

தாயைத் தவிக்கவிடாத திருநங்கை

விழாவில் ஆட்டோ ஓட்டும் திருநங்கை வைஷ்ணவி சோதனைகளை எதிர்கொண்டு தான் சாதித்துவரும் கதையைச் சொன்னபோது ஆரவாரமான அந்த அரங்கம் அமைதியானது. ஷைனா பானு பேசியபோது உறைந்தே போனது. சிறிய உணவு விடுதி நடத்தும் ஷைனா பானுவுக்கு உடன் பிறந்த சகோதரர்கள் மூவர். ஆனாலும், அவருடைய தாய் மெகபூபா பானு இருப்பது இவருடன்தான். “எங்க மக்க, மனுசா இவள ஏத்துக்கல. இவள ஒதுக்க எம்மனசு ஏத்துக்கல. அதான் இவகூடவே தங்கிட்டேன்” என்று தழுதழுத்த குரலில் மெகபூபா பேசியது கண்ணீரை வரவைத்தது.

பாரம்பரியமான உடை, நவீன உடை அலங்காரங்களில் பல்வேறு கட்டமாக நடத்தப்பட்ட திருநங்கை அழகிப் போட்டியில் ரெய்ஸா முதலிடத்தையும் மடோனா இரண்டாம் இடத்தையும் சிட்டு கார்த்திகா மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். சமூகத்தால் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளப்படாதவர்கள் தங்கள் இருப்பை வெளிப்படுத்த சில நேரம் இதுபோன்ற விழாக்களும் தேவையாகத்தான் இருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x