Last Updated : 24 May, 2014 02:58 PM

 

Published : 24 May 2014 02:58 PM
Last Updated : 24 May 2014 02:58 PM

பார்வையற்றவர்களுக்காக ஒரு பத்திரிகை

வாசித்தல் ஒரு சுகமான அனுபவம். அந்த அனுபவத்தைச் சாத்தியமாக்க எண்ணிக்கையில் அடங்காத பத்திரிகைகள் வெளிவந்த வண்ணமாகவே உள்ளன. ஒவ்வொரு நாளும் உலகெங்கிலும் சுவாரசியமான எவ்வளவோ நிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கின்றன. அதை எல்லாம் நாம் வாசிக்க உதவும் வகையில் தருகின்றன பத்திரிகைகள். படிக்கத் தெரிந்தால் போதும் பரவசமூட்ட பல பத்திரிகைகளும், இதழ்களும் காத்திருக்கின்றன. ஆனால் இவை எல்லாமே பார்வையுள்ளவர்களுக்கானதாகவே உள்ளனவே, பார்வையற்றோருக்கும் பத்திரிகை வேண்டுமே என நினைத்தார் மும்பையைச் சேர்ந்த இளம்பெண் உபாஸனா மகதி. அவரது எண்ணத்தைச் செயல்படுத்தியால் உருவானதே ஒயிட் பிரிண்ட் என்னும் பத்திரிகை. இது முழுக்க முழுக்க பிரெய்லி முறையில் உருவாக்கப்பட்ட பத்திரிகை. இந்தியாவில் பிரெய்லி முறையில் வெளிவரும் முதல் ஆங்கிலப் பத்திரிகை இது.

மும்பையில் உள்ள ஜெய்ஹிந்த் கல்லூரியில் பட்டம் பெற்றார் உபாஸனா மகதி. தொடர்ந்து கனடா சென்று ஒரு படிப்பையும் முடித்து மும்பைக்குத் திரும்பினார். பின்னர் எல்லோரையும் போலவே இவருக்கும் அடுத்து என்ன செய்யலாம் என்ற கேள்வி எழுந்தது. முதலில் மக்கள் தொடர்பு நிறுவனம் ஒன்றில் பணியில் சேர்ந்தார். ஆனால் வழக்கமான வேலைகள் மீது இவருக்குப் பெரிய பிடிப்பில்லை. வித்தியாசமான ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதற்கான யோசனையில் ஆழ்ந்தார் உபாஸனா. அப்போதுதான் அவருக்குப் பார்வையற்றோருக்கான பத்திரிகை தொடங்க வேண்டுமெனத் தோன்றியுள்ளது. அது தொடர்பாக 3 மாதங்கள் தீவிரத் தேடலில் ஈடுபட்டார். இதன் விளைவாக வேலையை உதறினார். பத்திரிகை தொடங்கும் திட்டத்தைச் செயல்படுத்த முனைந்தார்.

மும்பையில் உள்ள பார்வையற்றோருக்கான தேசிய அமைப்பை உபாஸனா மகதி தொடர்புகொண்டார். அவர்களும் மகதியின் திட்டத்திற்குத் தங்களால் ஆன உதவிகளைச் செய்வதாக உறுதியளித்தனர். பிரெய்லி முறையில் பத்திரிகையை அச்சடிக்கத் தேவைப்படும் தொழில்நுட்ப உதவிகளை அவர்கள் அளித்துள்ளனர். மகதியும் சாதாரணமாகத் தட்டச்சு செய்யும் சொற்களை பிரெய்லி முறையில் மாற்றித் தரும் மென்பொருள் பற்றிக் கற்றறிந்துள்ளார். இதைத் தொடர்ந்து பார்வையற்றோர் பலருடன் அவர் உரையாடியுள்ளார். தங்களுக்கான லைஃப்ஸ்டைல் பத்திரிகை இருந்தால் நல்லது எனக் கூறியுள்ளனர்.

2013 மே மாதம் ஒயிட் பிரிண்ட் பத்திரிகை வெளியானது. இதில் லைஃப்ஸ்டைல், பொழுதுபோக்கு, அரசியல் போன்ற விஷயங்களைத் தாங்கிவரும் கட்டுரைகள் இடம்பெறுகின்றன. பார்வையற்றோர் தங்கள் அபிப்பிராயங்களையும் கருத்துகளையும் கதைகளையும் பகிர்ந்துகொள்கிறார்கள். அவர்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான குரலையும் இப்பத்திரிகையில் ஒலிக்கவிடுகிறார்கள்.

உணவு, இசை, அரசியல், சினிமா, கேட்ஜெட் போன்றவையுடன் பர்கா தத்தின் பத்தி ஒன்றும் இப்பத்திரிகையில் இடம்பெறுகிறது. இவை அனைத்தும் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளன எனத் தெரிவிக்கிறார் உபாஸனா மகதி. இதழில் வெளிவரும் வெற்றிக் கதைகளும் சிறுகதைகளும் உணர்வுபூர்வமாகவும் உற்சாகம் அளிப்பதாகவும் உள்ளதாக வாசகர்கள் சொல்கிறார்கள் என மகிழ்ச்சியுடன் மகதி கூறுகிறார்.

ஒயிட் பிரிண்ட் பத்திரிகை பணியில் ஆறு பேர் கொண்ட குழு ஈடுபட்டுவருகிறது. இது போக வெளியில் இருந்து பலர் பங்களித்துவருகின்றனர். 64 பக்கங்களைக் கொண்ட இதன் விலை ரூ.30. நாடு முழுவதிலிருந்தும் சந்தாதாரர்கள் சேர்ந்துவருகிறார்கள். இப்போது வெற்றியடைந்துள்ள உபாஸனாவின் பயணம் எளிதானதாக அமையவில்லை. பத்திரிகையின் தலைப்பைத் தேர்ந்தெடுக்கவே 8 மாதங்கள் ஆகியுள்ளன. பதிவு செய்ய முற்பட்டபோது இரு முறை நிராகரிக்கப்பட்டுள்ளது மூன்றாம் முறையே பத்திரிகையைப் பதிவு செய்ய முடிந்துள்ளது. பொருளாதாரம் தான் மிகப் பெரிய பிரச்சினையாக இருந்துள்ளது. ஏனெனில் பத்திரிகை முழுவதுமே எழுத்துக்களால் ஆனது. விளம்பரங்கள்கூட எழுத்துகளை மட்டுமே கொண்டிருக்கும். இதனால் விளம்பரம் வாங்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது அவருக்கு. ஆனாலும் விடாமுயற்சியுடன் தொடர்ந்து அலைந்ததில் வெற்றி அவருக்கு வசப்பட்டது.

சந்தாதாரர்களிடம் பத்திரிகையைக் கொண்டு சேர்ப்பதில் கடும் சவால் அவருக்கு இருந்தது. அவற்றையும் எதிர்கொண்டு ஜெயித்தார். 20 பிரதிகள்தாம் முதலில் விற்றுள்ளது. அதிலிருந்து 300 பிரதிகள் வரை வளர்த்தெடுத்துள்ளார். வாசகர்களிடமிருந்து வரும் பாராட்டுக் கடிதங்கள் மட்டுமே உபஸனா மகதியை உற்சாகப்படுத்துகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x