Published : 22 Nov 2019 13:27 pm

Updated : 22 Nov 2019 14:51 pm

 

Published : 22 Nov 2019 01:27 PM
Last Updated : 22 Nov 2019 02:51 PM

திரை வெளிச்சம்: நடிகர் சங்கத்தைப் பறிகொடுத்தது யார்?

south-indian-actors-association

இந்திய அளவில் பெரிதாக மதிக்கப்படும் திரையுலக அமைப்புகளில் ஒன்று தென்னிந்திய நடிகர் சங்கம். அதற்குள் நடந்த யுத்தத்தால், துடிப்புடன் செயல்பட்டுவந்த நிர்வாகக் குழு, சங்க நிர்வாகிகளுக்கான தேர்தலையும் நடத்தி முடித்தது.

வாக்குகள் எண்ணப்படும் முன், அதை நிறுத்திவைத்து உத்தரவிட்டது நீதிமன்றம். நீதி மன்ற நடவடிக்கையின் பரபரப்பு அடங்கும் முன்பு, தனி அதிகாரி ஒருவரை நடிகர் சங்கத்துக்கு தமிழக அரசு நியமித்துள்ளது. இதனால், பலரும் அதிர்ச்சியடைந்தாலும், உள்ளுக்குள் நடந்த சண்டைகளுக்கு இது தேவைதான் என்கிறார்கள் திரையுலகினர்.


ஏனென்றால், அரை நூற்றாண்டு கடந்துவிட்ட சங்கத்தில் இதற்குமுன் எவ்வளவோ சண்டைகள் நடந்திருந்தாலும், அது அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்றதில்லை. அப்படியிருக்க, நடிகர் சங்கத்தைப் பறிகொடுத்துவிட்ட துக்கத்துடன் அணிபிரிந்து நிற்கும் இரு தரப்பினருமே தற்போது புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். இது தற்காலிகப் பறிகொடுத்தல்தான் என்றாலும், பாரம்பரியம்மிக்க இந்தச் சங்கம் விவகாரம் சந்திக்கு வந்துவிட்டதற்கு யார்தான் காரணம்?

நடிகர்களின் கூடாரம்

ஒரு காலத்தில் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிப் படங்களின் படப்பிடிப்புமே சென்னையில்தான் நடந்தது. இதர மொழிப் படங்களின் தலைநகரமாகவும் சென்னையே திகழ்ந்தது. அப்போது தென்னிந்திய நடிகர் சங்கம்தான் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தது. இதில் ரஜினி, கமல் மட்டுமல்லாது சிரஞ்சீவி, மோகன்லால், புனித் ராஜ்குமார் என அனைத்து மொழித் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரும் உறுப்பினராக இருக்கிறார்கள்.

முன்னணி நடிகர்கள் மட்டுமன்றி பல்வேறு நாடக நடிகர்களும் இருக்கிறார்கள். இதனால், நலிந்த நடிகர்களுக்குப் பல்வேறு உதவிகள் வழங்கும் விதமாகவும் சங்கம் செயல்பட்டு வந்தது. மேலும், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ஒரு கலை நிகழ்ச்சி நடைபெற்றால் அனைத்து மொழி நடிகர்களும் கலந்துகொள்வார்கள். அதன் உரிமங்களை விற்றாலே பல கோடி வருமானம் வரும். இதனை நிர்வாகிப்பதில் தொடங்கிய யுத்தம் தான் இப்போது தமிழக அரசு உள்ளே நுழையக் காரணமாகியிருக்கிறது என்று நம்மிடம் உள்ளம் திறந்து உரைக்கிறார்கள் செயற்குழுவில் அங்கம் வகித்த பல மூத்த உறுப்பினர்கள்.

ஒரு சின்ன பிளாஷ் பேக்

நடிகர் நாசர் தலைமையேற்றவுடன், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். நடிகர் சங்க நிலத்தை மீட்டு அதில் நடிகர் சங்க கட்டிடம் கட்ட பிரம்மாண்டமாக பூமி பூஜையும் போட்டார்கள். இதற்குப் பிறகு கட்டிடப் பணிகளின் பணத் தேவைக்காகக் கலை நிகழ்ச்சிகள், கிரிக்கெட் போட்டிகள் என நடத்தினார்கள். இதில் தான் பிரச்சினையே தொடங்கியது. சமீபத்தில் மலேசியாவில் நட்சத்திர கலை விழா நடத்தினார்கள்.

அந்தச் சமயத்தில் விஷால் தனது நண்பர்களுக்குச் சில பொறுப்புகளைக் கொடுத்து நிர்வகிக்கக் கேட்டுக்கொண்டிருக்கிறார். இதில் ‘நாம் எவ்வளவு வேலை பார்த்தோம்; ஆனால் நமக்கு எந்தப் பொறுப்பும் கொடுக்கவில்லையே’ எனத் துடிப்புடன் செயல்பட்ட பல உறுப்பினர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் விஷாலிடம் சண்டையிட்டார்கள். அங்கே பற்றியது முதல் நெருப்பு என்று தெரிய வருகிறது.

பிரிந்த கூட்டணி; தொடங்கிய யுத்தம்

நடிகர் சங்க கட்டிட நிதிக்காக கார்த்தி- விஷால் இணைந்து நடிப்பதாக இருந்த ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா' படம் கைவிடப்பட்டது. அந்தப் படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், கார்த்தி – விஷால் இருவர் மீதும் அவர் கடும் அதிருப்தியில் இருந்ததாகக் கூறுகிறார்கள்.

இதனால் விஷால் அணியில் எழுந்த சண்டையை அவர் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டதாகச் சொல்கிறார்கள் இன்னும் சில உறுப்பினர்கள். ‘இதனால் விஷால் பேரில் அதிருப்தி கொண்டிருந்தவர்களைத் தன் வசமாக்கி, புதிய அணியை உருவாக்கினார் என்பதுதான் நிஜம்’ என்கிறார் மற்றொரு மூத்த உறுப்பினர். ‘ஏற்கெனவே நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டிருந்த ராதாரவியும் இதுதான் சமயமென்று தன்னுடைய ஆதரவாளர்களை ஐசரி கணேஷ் அணிக்கு ஆதரவாகச் செயல்பட வைத்தார்’ என்கிறார் அதே உறுப்பினர்.

இதன்மூலம் இரண்டு அணியாகப் பிரிந்து தேர்தலைச் சந்தித்தனர் அண்ணன் தம்பிகளாகப் பிணைந்திருந்த நடிகர் சங்கத்தினர். சங்கத் தேர்தல் முடிந்து வாக்குகளை எண்ணுவது தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் இருக்கிறது. இதனிடையே, நடிகர் சங்கத்தில் எந்தவொரு பணியுமே நடைபெறவில்லை என்று பதிவுத்துறையில் உதவி ஐ.ஜி ஆக இருந்து வரும் கீதா என்பவரைச் சிறப்பு அதிகாரியாக நியமித்ததும் இரு தரப்புக்குமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

சிந்திக்காத நடிகர்கள்

தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற மிகப் பெரிய சாம்ராஜ்ஜியத்தை நமது யுத்தத்தால் அரசிடம் கொடுத்துவிட்டு, விறுவிறுப்பாக நடந்துவந்த பணிகளை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டோமே என்று உள்காயம் பட்டவர்களைப்போல் தவித்துக் கொண்டிருக்கிறார்களாம்.

இந்தத் தவிப்பு ஒரு பக்கம் இருக்க, ‘விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை சிறிதுமின்றி, நாசர் - ஐசரி கணேஷ் ஆகிய இரண்டு அணிகளுமே ஒருவர் மீது ஒருவர் குற்றம் மட்டுமே சுமத்திக்கொண்டு காலம் கடத்திக்கொண்டு இருக்கிறார்கள்’ எனப் புலம்புகிறார் மற்றுமொரு மூத்த உறுப்பினர். இதுவொருபுறம் இருக்க, ‘விஷால் அணியை முன்மொழிந்த கமல்ஹாசனாவது இரண்டு அணிகளை அழைத்து என்ன பிரச்சினை என்று ஆலோசனை சொல்லியிருக்கலாம். ரஜினி தலையிட்டு அறிவுரை கூறியிருக்கலாம்.

ஆனால், அவர்களோ படங்களில் பிஸியாகி பணத்திலும் அரசியல் செய்வதிலும் குறியாக இருக்கிறார்கள். இப்படி இரு முன்னணி நடிகர்களும் கண்டுகொள்ளாத நிலையில்தான் சங்கத்தைத் தற்காலிகமாக எடுத்து நடத்த வேண்டிய வாய்ப்பை அரசுக்கு இவர்களே கொடுத்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை.

நடிகர் சங்கக் கட்டிடம் முழுமையாகக் கட்டி முடித்துவிட்டால், அதை எழுப்பியது யார் எனும் புகழை யார் சொந்தம் கொண்டாடுவது என்பதில் தொடங்கி சங்கத்துக்குள் ஈகோ வெடித்திருக்கிறது. முக்கியமாக சங்கக் கட்டிடத்தின் மூலம் கிடைக்கப்போகும் வருமானத்தைக் கையாள்வது, சங்கத்தின் மூலம் கலை நிகழ்ச்சிகள் நடத்தினால் அதன் தொலைக்காட்சி உரிமம் விற்பனை, டிக்கெட் விற்பனை ஆகியவற்றைக் கையாள்வது உள்ளிட்ட முடிவுகளை எடுப்பதும் நிர்வகிப்பதும் எதிர்காலத்தில் தங்க முட்டையிடும் வாத்துபோல் ஆகிவிடும் என்பதை அறிந்தே இந்தக் குழாயடிச் சண்டை எனத் தெரியவருகிறது.

திரை வெளிச்சம்நடிகர் சங்கம்திரையுலக அமைப்புகள்தென்னிந்திய நடிகர் சங்கம்நடிகர்களின் கூடாரம்பிரிந்த கூட்டணிஐசரி கணேஷ்சங்கத் தேர்தல்சிந்திக்காத நடிகர்கள்தொலைக்காட்சி உரிமம்டிக்கெட் விற்பனை

You May Like

More From This Category

More From this Author