Published : 21 Nov 2019 12:48 PM
Last Updated : 21 Nov 2019 12:48 PM

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 102: நினைவால் மீட்டப்படும்

காமத்தின்மேல் அருளாளர்க்கு என்ன கண்டனம்? அது இயல்பானதே அல்லவா? ‘உலகம் பெருக, உயிர்கள் வருக’ என்று வழி திறந்துவிடுகிற வேலை இல்லையா என்றால், கண்டனம் காமத்தின் மேல் இல்லை; காமத்தின் கதிகொள்ளாத கொந்தளிப்பின்மேல் மட்டும்தான். காமம் கற்றுக் கொடுக்கும் நூல்கள்கூட எழுதப்பட்டிருக்கின்றன.

காமம் கற்றுக்கொடுக்கும் நூல் என்றதும் நம் ஆட்கள் வாத்சாயனரையும் அவர்தம் காமசூத்திரத்தையும் கொண்டுவந்துவிடுவார்கள். முப்பால் நூலாகிய திருக்குறளின் மூன்றாம் பாலாகிய காமத்துப் பால் வாத்சாயனக் காமசூத்திரத்தின் மொழிபெயர்ப்பே / தழுவலே என்று கண்ணற்ற கருத்துகள் சொல்லத் தொடங்கிவிடுவார்கள்—இரண்டையும் படிக்கா மலே. இப்படியெல்லாம் குட்டை குழப்புவார்கள் என்று தெரிந்தோ என்னவோ உரை ஆசிரியர் பரிப்பெருமாள் கீழ்க்கண்ட குறளுக்கு உரை எழுதுகையில் இழுத்து வைத்துக்கொண்டு சில பேசுகிறார்.

ஊடல், உணர்தல், புணர்தல், இவைகாமம்
கூடியார் பெற்ற பயன். (குறள் 1109)

ஊடல் கொள்வதும், ஊடல் அளவுகடந்து சண்டையாகிவிடாமல் அதைச் சரி செய்துகொள்வதும், பிறகு கூடிக்களிப்பதும் இவைதாம் காதல்வயப்பட்டவர்கள் காணும் பயன்கள். இதற்குப் பரிப்பெருமாளார் விரிவுரை எழுதுகிறார்: புணர்ச்சி என்று சொன்னதோடு விட்டு விட்டாரே வள்ளுவர்? வடநூல் ஆசிரியர்போல விரித்து எழுதவில்லையே என்று கேட்போர்க்கு: வடநூல் ஆசிரியர் சொல்வது என்ன?

புணர்ச்சியின் அளவை நீட்டித்துக்கொள்ளும் வழிகள், காலம், வேகம், காமத் தொழில்நுட்பங்களையே வடநூல் ஆசிரியர் பேசுகிறார்; ஆனால் தென்னூல் மரபின் திருவள்ளுவரோ, அன்பினாலே உண்டாகும் இன்பநிலை பற்றியே பேசுகிறார். மலரினும் மெல்லிது அல்லவா காமம்? உயிர் தளிர்க்கத் தீண்டுவதல்லவா காமம்? உயிர்ப் பண்பைச் சொல்லிக்கொடுக்காமல் உடல் நுட்பம் மட்டும் சொல்லிக் கொடுத்து அந்தக் கலை விளங்கவா?

காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே; நினைப்பின்
முதைச்சுவல் கலித்த முற்றா இளம்புல்
மூதுஆ தைவந்து ஆங்கு
விருந்தே காமம் பெருந் தேளோயே. (குறுந்தொகை 204)

மேற்படிக் குறுந்தொகைப் பாட்டை எழுதியவர் மிளைப்பெருங் கந்தனார். காமம் கொண்டு நிலைதடுமாறிய தலைவனிடம் தோழன் சொல்கிறான்: பெருந்தோளா! காமம் என்றால் என்னவென்றே தெரியாமல் ஆளாளுக்கு என்னென்னவோ சொல்கிறார்கள். காமம் என்பது பேயும் இல்லை; நோயும் இல்லை. இப்படி வைத்துக்கொள்ளலாம். மேட்டு நிலத்தில் முற்றாத இளம்புல் முளைத்துக் கிடக்கிறது; அதைப் பார்க்கும் முதிய பசு அதைத் தின்ன ஆர்வம் கொள்கிறது; ஆனால் புல்லைப் பிடுங்கித் தின்னப் பல்லும் இன்றி வலுவும் இன்றி, நாவினால் நக்கியே புல்லைத் தின்ற இன்பத்தை நினைவில் மீட்டிக்கொள்கிறதல்லவா? அவ்வளவுதான் காமமும். அது உடம்பினால் மீட்டிக்கொள்வது என்பதைக் காட்டிலும் நினைவினால் மீட்டிக்கொள்வது.

அறிவு ஆளவேண்டும்

ஆர்வத்தின் அளவே இன்பத்தின் அளவு. எனில் காமத்தின் கட்டுப்பாட்டு மையம் உடம்பு அன்று; அறிவு. அறிவை ஆளத் தெரிந்தவர்கள்

காமத்தையும் ஆள்கிறார்கள்; ஆள வேண்டும்.
பார்க்கின்ற மாதரைப் பாராது அகன்றுபோய்
ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல்மூட்டிப்
பார்க்கின்ற கண்ஆசை பாழ்பட மூலத்தே
சேர்க்கின்ற யோகி சிவயோகி தானே. (திருமந்திரம் 1937)

வரிவிழிகொண்டு சுழிய எறிந்து மாமயில்போல் மாதர் போவது கண்டு, மனது பொறாமல் அவர் பிறகு ஓடித் தேடிய மாமுதல் சேர வழங்கும் ஆசையை அறிவினால் மடைமாற்றுக; மாதரிடத்தில் செல்லும் மனத்தை மாதேவரிடத்தில் செலுத்துக; மூலக் கனலை மூட்டி ஓக அடுப்பை ஏற்றுக.

காமம் குறித்த அறிவாளர் கருத்துத்தான் அருளாளர் கருத்தும். அரிதின் முயன்று தொகுத்த அறிவைக் காமம் விரயமாக்குகிறது; ஆகவே காமத்தைப் பொருளாகக் கொள்ளாமல் அறிவையே பொருளாகக் கொள்க.

(அறிவில் நிலைப்போம்)
- கரு.ஆறுமுகத்தமிழன், தொடர்புக்கு : arumugatamilan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x