Published : 21 Nov 2019 12:47 PM
Last Updated : 21 Nov 2019 12:47 PM

உட்பொருள் அறிவோம் 37: சிருஷ்டியின் ஏழு தளங்கள்

சிருஷ்டி - படைப்பு - பல பரிமாணங்கள் கொண்டவை. இதைப் பல தளங்களாகப் பிரித்திருக்கிறார்கள். மூன்றாக, ஏழாக, பதினேழாகக் கூடப் பிரித்திருக்கிறார்கள். நம் புரிதலின் வசதிக்காக இதை ஏழு தளங்களாகப் பார்ப்போம்.

முதல் தளம் - இது ஆதித் தளம். அனைத்துத் தளங்களுக்கும் பிறப்பிடம் இது. இதில் ஒன்றும் இல்லை. உருக்கொள்ளாத சக்தி தன்னில் அமைதியாக நிலைகொண்டிருக்கும் தளம் இது. அனுபவம் இல்லை; அனுபவிப்பவனும் இல்லை. அகிலம் இல்லை. பிரக்ஞை இல்லை. ‘நான்’ இல்லை. அது மட்டும் இருக்கிறது. அது, தன்னில் காலமற்று, இடமற்று நிலைகொண்டிருக்கிறது.

இரண்டாம் தளம் - ‘அது’ இரண்டாகப் பிரிகிறது. ‘நான்’ பிறக்கிறது. நானும் அதுவும் இருக்கிறது. அனுபவத்தின் அடிநாதமாக ‘அது’ இருக்கிறது. வேறெதுவும் இல்லை. அனுபவிப்பவன் - அனுபவம் என்று இரண்டாகப் பிரிந்திருந்தாலும் அனுபவத்தின் உள்ளடக்கம் ஏதும் இல்லை. சுத்த அறிவுணர்வுத் தளம் இது. ‘இதயம்’ என்று நாம் சொல்லும் மையத்தில் இந்தத் தளம் வேர்கொண்டிருக்கிறது.

மூன்றாவது தளம் - இரண்டாவது தளம் மீண்டும் பிரிவு கொள்கிறது. சுயஉணர்வு பிறக்கிறது. சாட்சி பூதமாக ‘நான்’ உணர்வு நிலைகொண்டிருக்கிறது. ‘நான்’ அனுபவிப்பாளனாக இருக்கிறேன் என்ற அறிவு இந்தத் தளத்தில் இயக்கம் கொள்கிறது. நெற்றியில் இரு புருவங்களுக்கு மத்தியில் இந்தத் தளம் மையம் கொண்டிருக்கிறது. இங்குதான் ‘நான்’ தனியொரு உயிர் என்னும் உணர்வு பிறக்கிறது.

காலம் இடம் என்னும் பிரிவினை

இந்த முதல் மூன்று தளங்களும் உலக அனுபவத்துக்கு அடித்தளக் கட்டமைப்பாகச் செயல்படுகின்றன. உலகத்தின் ஆதாரம் இந்த மூன்று தளங்கள். நான்காவது தளம் - இங்குதான் காலம்-இடம் என்னும் பிரிவு முதன்முறையாகத் தோன்றுகிறது. இது அடிவயிற்றில் வேர்கொண்டிருக்கும் தளம். கூட்டு மனத்தின் உள்ளடக்கமான நினைவுப் பதிவுகள் இங்கு சேகரமாகியிருக்கின்றன. அதன் விளைவாகச் சரித்திரம் என்னும் காலவெளி இங்கு நீட்சி கொள்கிறது. புராணங்கள், அவற்றின் பிம்பங்கள், கதைகள், இங்கேதான் தோற்றம் கொள்கின்றன. காலத்தின் பிம்பங்கள் இங்கே தேங்கிக் கிடக்கின்றன. கலாச்சாரங்களில் விளைநிலம் இது;

கருத்துருவங்களின் பிறப்பிடம். கூட்டுமனத்தின் சிந்தனை, உணர்ச்சிகள், உணர்வு நிலைகள் இங்கே இயக்கம் கொள்கின்றன. இருமை நிலை, தனிமனித அனுபவம், அதன் விளைவான துன்பம், அனைத்தும் இங்கேதான் பிறக்கின்றன. பொய்யும் மெய்யும் பிரிகின்றன. சுத்த அறிவுணர்வு அடக்கிவைக்கப்படுவதால் உருவாகும் தளம் இது. அடுத்துவரும் மூன்று தளங்கள் தனிமனித அனுபவத் தளங்கள். அவற்றின் விளைநிலம் இந்தத் தளம்.

தனிமனித அனுபவத் தளங்கள்

ஐந்தாவது தளம் - தனிமனித ஆளுமையின் சிந்தனைத் தளம் இது. உறவுகள், பிரிவு, துயரம், தேடல், சமூகக் கட்டமைப்பு, இவையெல்லாம் இங்கேதான் இயக்கம் கொள்கின்றன. பகுத்தறிவு, கருத்துக்கள், நாடு, மதம், மொழி, இனம் என்னும் பிரிவுகள் இங்கே தோன்றுகின்றன. மனித மூளையின் முன்பகுதியில் (Neocortex) இந்தத் தளம் மையம் கொண்டு இயங்குகிறது. இங்குதான் நான் ஓர் இந்தியனாக, அமெரிக்கனாக, ஐரோப்பியனாக இருக்கிறேன்.

ஆறாவது தளம் - தனிமனித ஆளுமையின் உணர்ச்சித் தளம் இது. மனித மூளையின் நடுப்பகுதியில் (Midbrain or Limbic System) இது இயக்கம் கொள்கிறது. உணர்ச்சிப் பின்னல்களின் சிக்கல்கள் காரணமாகப் பின்மூளையில் (Brainstem) இருந்து முன்பகுதிக்குச் செல்லும் தகவல்களை இது தடுக்கிறது. மனச்சிக்கல் உண்டாகிறது. சிந்தனைச் சிக்கல் நிறைந்ததாகிறது. இங்கே நான் கோபக்காரனாக, சாந்தஸ்வரூபியாக அல்லது பயந்தாங்கொள்ளியாக இருக்கிறேன். அறிவுணர்வு சிதைந்து அதனால் ஏற்படும் மனநலக்குறைபாடு, மன உளைச்சல்கள், மன நோய்கள், இவற்றின் பிறப்பிடம் இது. உளவியல் பரிசீலனைக்கு உள்ளாகும் தளம் இதுதான்.

மனச்சிறை இது. மனித விடுதலைக்கான ஏக்கம் இங்கேதான் பிறக்கிறது. சொல்ல முடியாத வேதனையின் காரணமாக, நான் ஏன் பிறந்தேன், ஏன் இப்படி இங்கு அவதிப்படுகிறேன், நான் யார், என்ற கேள்விகள் இங்கேதான் பிறக்கின்றன. ஏழாவது தளம் - இதுதான் பௌதிகத் தளம். உடல் இங்கேதான் இருந்து இயங்குகிறது. இங்கே நான் ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கிறேன். பின்மூளை (Brainstem) இந்தத் தளத்தின் இயக்க மையம். நாம் தூக்கத்திலோ, மயக்க நிலையிலோ ஆழ்ந்துபோகும்போது, நம் சுவாசம், இதயத் துடிப்பு, நரம்பு மண்டலம் அகியவற்றின் இயக்கத்தைத் தொடர்ந்து கண்காணிப்பது பின்மூளையில்தான் நடக்கிறது.

மனித அனுபவத்தின் வெளித்தெரியக் கூடிய பகுதி இது. புலன்களால் நாம் காணும் உலகம் இது. பிறப்பு-இறப்பு என்னும் சுழற்சி இங்கேதான் நிகழ்கிறது. இந்த ஏழு தளங்கள் அகிலத்தின் அமைப்பிலும் தனிமனித அனுபவக் கட்டமைப்பிலும் இருந்து இயங்குகின்றன. நாம் ஒவ்வொருவரும் இந்த ஏழு தளங்களிலும் இயங்குகிறோம். ஆனால் கடைசி மூன்று தளங்களில் மட்டும்தான் அறிவுபூர்வமாக நம்மை உணர்கிறோம்.

ஏழாவது தளத்தில் தன்னை அனுபவம் கொள்ளும் மனிதன், படிப்படியாகத் தன்னை இனம் கண்டுகொண்டு, அறிவுணர்வை வளர்த்துக்கொண்டு, ஒவ்வொரு தளமாக மேலேறி. முதல் தளமான ஆதித்தளத்தைச் சென்றடைவதுதான் மனித வாழ்வின் பயன்.

ஆதித்தளத்தில் தொடங்கி, ஒவ்வொரு தளமாகக் கீழிறங்கித் தனிமனித உருக்கொண்டு, கடைசியில் பிறப்பு-இறப்பு நிகழும் தளத்தில் பிறப்பெடுத்து, பின் மீண்டும் ஒவ்வொரு தளமாக மேலேறிச் சென்று ஆதித்தளத்தைச் அடையும் சுழல்பாதைதான் வாழ்வின் மகத்துவம்.

(சிருஷ்டியின் கதை தொடரும்)
- சிந்துகுமாரன், தொடர்புக்கு: sindhukumaran2019@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x