Published : 20 Nov 2019 11:22 AM
Last Updated : 20 Nov 2019 11:22 AM

டிங்குவிடம் கேளுங்கள்: காய்ச்சல் இருக்கும்போது ஐஸ்க்ரீம் சாப்பிடலாமா?

காய்ச்சலின்போது ஐஸ்க்ரீம் சாப்பிடலாமா, டிங்கு?

–ஆர். ஹரிஹரன், 8-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, சமயபுரம்.

நோய்த்தொற்றுக் கிருமிகள் (வைரஸ்) உடலுக்குள் நுழையும்போது அதை எதிர்ப்பதற்காக உடலின் வெப்பநிலை உயர்கிறது. இதைத்தான் நாம் காய்ச்சல் என்கிறோம். ஐஸ்க்ரீம் சாப்பிடுவதால் காய்ச்சல் வருவதில்லை. நோய்த்தொற்றுக் கிருமிகளால்தான் காய்ச்சல் வருகிறது. காய்ச்சல் வந்த பிறகு அதிகக் குளிர்ச்சியான ஐஸ்க்ரீம், குளிர்பானம், பழச்சாறு போன்றவற்றைச் சாப்பிடும்போது, நோய் குணமாக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால்தான் காய்ச்சல், சளி பிடித்திருக்கும்போது ஐஸ்க்ரீம் சாப்பிட வேண்டாம் என்கிறார்கள். விரைவாக நோயைக் குணப்படுத்திக்கொண்டு, பிறகு ஐஸ்க்ரீம் சாப்பிடலாமே, ஹரிஹரன்!

டார்ச் ஒளி சுவரில் படும்போது நம் கண்களுக்குத் தெரிகிறது. ஆனால், வானத்தை நோக்கி டார்ச் ஒளியைப் பாய்ச்சும்போது நம் கண்களுக்குத் தெரிவதில்லையே ஏன், டிங்கு?

– ம. சரனேஷ்வரன், 9-ம் வகுப்பு, கேந்திரிய வித்யாலயா பள்ளி, மதுரை.

டார்ச் மூலம் வரும் ஒளி 100 மீட்டர் தூரம் வரை செல்லக் கூடியதாக உருவாக்கப்பட்டிருக்கிறது. குறைந்த தூரத்தில் நின்றுகொண்டு சுவரில் டார்ச் ஒளியைப் பாய்ச்சும்போது, அது நம் கண்களுக்குப் புலப்படுகிறது. வானம் என்பது எல்லையற்றது. குறிப்பிட்ட தூரம்வரை காற்று மண்டலம். பிறகு வெற்றிடம். தரையில் நின்றுகொண்டு டார்ச் அடித்தால் 100 மீட்டர் உயரத்துக்கு மட்டுமே ஒளி செல்லும். அது சுவரைப் போல் எதிலும் பட்டுப் பிரதிபலிக்காது. அதனால்தான் அது நம் கண்களுக்குத் தெரிவதில்லை, சரனேஷ்வரன்.

உலகை மாற்றி அமைத்த அறிவியல் நூல்கள் எவ்வளவு இருக்கும், டிங்கு?

– மீ.மரு. பேரறிவாளன், 6-ம் வகுப்பு, அரசு நடுநிலைப் பள்ளி, கொடையூர், கரூர்.

உலகை மாற்றி அமைத்த அறிவியல் நூல்கள் என்றால் ஏராளமாக இருக்கின்றன. அறிவியலில் ஒவ்வோர் அடியும் மிகவும் முக்கியமானது. எல்லாக் காலத்துக்கும் மிக முக்கியமான உலகை மாற்றி அமைத்த அறிவியல் நூல்களின் பட்டியலில் டார்வினின் பீகிள் பயணம், டார்வினின் உயிரினங்களின் தோற்றம், ஐசக் நியூட்டனின் இயற்கைத் தத்துவத்தில் கணிதக் கோட்பாடுகள் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும். கலிலியோ, கோப்பர்நிகஸ், அரிஸ்டாட்டில், ஐன்ஸ்டைன் என்று அந்த வரிசைத் தொடரும், பேரறிவாளன்.

கால்பந்து விளையாட்டில் சிவப்பு, மஞ்சள் அட்டைகள் எதற்காகக் காட்டப்படுகின்றன, டிங்கு?

– சி. பிரசன்ன வெங்கடேஷ், 9-ம் வகுப்பு, ஸ்ரீ வாகீச வித்யாச்ரம் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீரங்கம், திருச்சி.

1966-ம் ஆண்டு உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியில் இங்கிலாந்துக்கும் அர்ஜென்டினாவுக்கும் இடையே கால் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் நடுவர் கொடுத்த முடிவைப் பிறரால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. நடுவர் எடுக்கும் முடிவுகள் தெளிவாக விளையாட்டு வீரர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் சட்டென்று புரியும் விதத்தில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

1970-ம் ஆண்டு மெக்சிகோவில் நடைபெற்ற உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகளில் மஞ்சள், சிவப்பு அட்டைகள் நடைமுறைக்கு வந்தன. மஞ்சள் அட்டை என்றால் எச்சரிக்கை என்றும் சிவப்பு அட்டை என்றால் வெளியேற்றம் என்று அர்த்தமாகக்கொள்ளப்பட்டது. இந்தத் தண்டனை அட்டைகள் பிற விளையாட்டுகளுக்கும் பரவின, பிரசன்ன வெங்கடேஷ்.

ஒரே உலகமாக இருக்கும்போது எல்லா நாடுகளுக்கும் இரவும் பகலும் ஒன்றாகத்தானே வர வேண்டும், டிங்கு?

– ஸ்ரீவித்யா, 5-ம் வகுப்பு, மழலையர் ஆரம்பப் பள்ளி, பாளையங்கோட்டை.

ஒரே பூமியாக இருந்தாலும் அது உருண்டையாக இருக்கிறது. தன்னைத் தானே சுற்றிக்கொண்டு, சூரியனையும் சுற்றி வருகிறது. ஒரு பெரிய பந்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் ஒரு பகுதியில் டார்ச் ஒளியைப் பாய்ச்சுங்கள். ஒளி விழும் பகுதி வெளிச்சமாக இருக்கும். பந்தின் பின்புறம் வெளிச்சம் கிடைக்காமல் இருளாக இருக்கும் அல்லவா? அதேபோல்தான் பூமி உருண்டையின் ஒரு பக்கத்தில் ஒரு நாடு இருக்கிறது. மற்றொரு பக்கத்தில் வேறு ஒரு நாடு இருக்கிறது. பூமி தன்னைத்தானே சுற்றும்போது சூரியனின் கதிர்கள் ஒரு பக்கத்தில்தான் விழுகின்றன. மறுபக்கத்தில் இருளாக இருக்கிறது. அதனால்தான் சூரியன் ஒளி படும் நாடுகளில் பகலாகவும் சூரிய ஒளி படாத நாடுகளில் இரவாகவும் இருக்கிறது, ஸ்ரீவித்யா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x