Published : 20 Nov 2019 11:22 AM
Last Updated : 20 Nov 2019 11:22 AM

கதை: தேன்சிட்டு தேடிய பதில்

முந்தைய நாள் இரவில் பனி பெய்திருந்தது. தோட்டத்துச் செடியில் வழக்கத்துக்கு மாறாக அதிக அரும்புகள் துளிர்த்திருந்ததைக் கவனித்்தது தேன்சிட்டு.

மரக்கிளையில் தொங்கிக்கொண்டிருந்த கூட்டிலிருந்து வெளியே எட்டிப் பார்த்தது. சூரியனின் முதல் கீற்று கழுத்தில் பட்டு மயில் கழுத்தைப்போல மின்னியது.

சட்டெனப் பறந்து சென்ற தேன்சிட்டு செடியை அடைந்தது. வெளிச்சம் வந்ததும் செடிகளிலுள்ள மொட்டுகள் வேகமாகத் திறந்துகொண்டன. அப்படியானல் இன்று அதிகமாகத் தேன் கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்தது.

காற்றில் படபடத்து இறகசைத்த படியே நீளமான அலகால் பூவை நெருங்க முயற்சி செய்தது. ஆனால், அதற்குச் செடி சம்மதிக்கவில்லை.

“தேன் குடிக்கத்தானே வந்திருக்கிறாய்? முதலில் நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல். அப்போதுதான் பூக்களில் தேன் குடிக்கச் சம்மதிப்பேன். இல்லை என்றால் தேன் தரமாட்டேன்” என்றது செடி.

இதைக் கேட்ட தேன்சிட்டு பயந்துவிட்டது. அது செடியின் கேள்விக்கு பதில் சொல்ல முயற்சி செய்வதாக ஒப்புக்கொண்டது.

“தினமும் அழகான பூக்களைப் பெற்றெடுக்கும் பூஞ்செடியே, ஒருபோதும் என்னை விரட்டியடித்து விடாதே. கேள்வி என்னவென்று தெரிந்தால் அதற்கான பதில் சொல்லிவிட்டுத் தேனை உறிஞ்சிக்கொள்கிறேன்.”

“பூக்கள் பல நிறங்களில் இருப்பதற்கு என்ன காரணம்? அதே நேரத்தில் சில பூக்கள் வாசனையாகவும் இருக்கின்றன. ஏன்?”

“பல வண்ணப் பூக்களைப் பார்த்திருக்கிறேன். வாசம் தரும் பூக்களையும் அறிவேன். ஆனால்…” ஏதோ சொல்லத் தயங்கியது தேன்சிட்டு.

“ஆனால் என்ன?”

“கேள்வி எளிதாக இருக்கும் என்று நினைத்தேன். எவ்வளவோ யோசித்துப் பார்த்தும் உன் கேள்விக்கான பதில் கிடைக்கவில்லை. கொஞ்சம் அவகாசம் தர முடியுமா? நாளை வரும்போது சரியான பதிலைச் சொல்லிவிடுகிறேன்.”

“அதெல்லாம் முடியாது. சரியான பதில் கிடைக்காமல் தேன் சேகரிக்க அனுமதியில்லை” என்று கண்டிப்பாகச் சொன்னது செடி.

தேன்சிட்டு அங்கிருந்து பறந்தது. தோட்டம் முழுவதும் பதில் கிடைக்குமா என்று தேடிப் பார்த்தது. நேரத்தை வீணாகச் செலவிட்டு ஏமாற்றம்தான் மிஞ்சியது. தேன்சிட்டுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

ஒரு வண்ணத்துப்பூச்சிகூட இல்லை. அவை எங்கு சென்றுவிட்டன? தோட்டத்தில் சுற்றிச் சுற்றி வருவதில் பயனில்லை என்று நினைத்த தேன்சிட்டு, வெளியே பறந்தது.

மலையடிவாரத்தில் உள்ள ஏரிக்கரையில் ஒரு கொக்கைச் சந்தித்தது. அதன் உடலமைப்பும் மஞ்சள் அலகும் அழகாக இருந்தன.

கொக்கிடம் செடியின் கேள்விக்குப் பதில் சொல்லுமாறு கேட்டது தேன்சிட்டு.

“கவலைப்படாதே, உதவுகிறேன். நான் திரும்பி வரும்வரை இங்கேயே காத்திரு” என்று சொல்லிவிட்டுப் பறந்து சென்றது கொக்கு.

தனது நண்பனான மாட்டைச் சந்தித்தது. மாட்டுக் கொட்டகையில் படுத்திருந்த மாடு, காரணத்தைக் கேட்டறிந்தது.

தேன்சிட்டிடம் செடி கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லும்படிக் கேட்டது கொக்கு.

“பதில் எனக்குத் தெரியாதே. ஆனாலும் உன் மூலமாகத் தேன்சிட்டுக்கு உதவி செய்ய விரும்புகிறேன்” என்ற மாடு, பருத்திக்கொட்டையும் புண்ணாக்கும் கலந்து வைத்துக்கொண்டிருந்த வரதனைச் சந்தித்தது.

“உதவி கேட்டு வந்திருக்கிறேன். சிறிய தேன்சிட்டிடம் செடி சில கேள்விகள் கேட்டதாம். கொக்கு அதற்கான பதில் தேடி என்னிடம் வந்திருக்கிறது. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன்” என்று ஆர்வமாகக் கேட்டது மாடு.

மாட்டின் கழுத்துப் பகுதியில் தடவிக் கொடுத்த வரதன், “நான் படித்திருந்தாலும் இந்தக் கேள்விக்குப் பதில் தெரியலையே. ஆனாலும் உனக்கு நிச்சயம் உதவுறேன். கொஞ்ச நேரம் காத்திரு. இதோ வந்துவிடுகிறேன்” என்றவர், தனது மகன் படிக்கும் பள்ளிக்குச் சென்றார்.

வகுப்பறைக்கு வெளியே காத்திருந்தார் வரதன். அப்போது கரும்பலகையில் பூக்களை வரைந்து விளக்கிக்கொண்டிருந்தார் ஆசிரியர். அடடா! நாம் தேடிவந்த பதிலைத்தான் ஆசிரியர் விளக்குகிறார் என்று நினைத்த வரதன், உற்றுக் கவனிக்க ஆரம்பித்தார்.

“பூச்சிகளால்தான் தாவரங்களில் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது. அதனால் பகலில் பூச்சிகளையும் பறவைகளையும் ஈர்ப்பதற்காக, தாவரங்கள் கண்கவர் வண்ணங்களில் பூக்கின்றன. இரவு நேரத்தில் பூச்சிகளைக் கவர்வதற்காக வெள்ளை நிறத்தில் தாவரங்கள் பூக்கின்றன. அதோடு நறுமணத்தையும் வெளியிடுகின்றன” என்று பாடம் நடத்தி முடித்தார் ஆசிரியர்.

பதிலைக் கேட்டுக்கொண்ட வரதன் வீடு திரும்பினார். மாட்டிடம் விளக்கத்தைச் சொன்னார். மாடு மகிழ்ச்சியுடன் கொக்கை அழைத்தது. அது நன்றி சொல்லிவிட்டு, தேன்சிட்டிடம் பதிலைச் சொன்னது.

தேன்சிட்டின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கொக்குக்கும் மாட்டுக்கும் வரதனுக்கும் ஆசிரியருக்கும் நன்றியைத் தெரிவித்துக்குகொண்டு, செடியை நோக்கிப் பறந்தது.

தேன்சிட்டின் மகிழ்ச்சியிலிருந்தே பதில் தெரிந்துவிட்டது என்பதை அறிந்துகொண்டது செடி. “தேன்சிட்டே, வெற்றி பெற்று விட்டாய். பூக்கள் எல்லாம் இன்னும் நன்றாக மலர்ந்துள்ளன. இன்று முதல் உனக்குத் தேன் தந்த பிறகுதான் மற்ற வண்டுகளையும் பூச்சிகளையும் அனுமதிப்பேன்” என்று சொல்லி ஆனந்தமாக அசைந்தது செடி.

- கொ.மா.கோ. இளங்கோ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x