Published : 19 Nov 2019 11:52 AM
Last Updated : 19 Nov 2019 11:52 AM
கின்னஸ் சாதனைகளுக்கு உலகில் பஞ்சமே கிடையாது. இந்த சாதனையைத்தான் செய்ய வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் கிடையாது. புதுமையாக எதைச் செய்தாலுமே சாதனைதான். நீளமாகத் தாடி வளர்த்தாலும் சாதனை; குள்ளமாக இருந்தாலும் சாதனை. இப்படிக் குண்டக்க மண்டக்க சாதனைகள் கின்னஸில் இடம் பிடிப்பதால், எதையாவது செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கப் பலரும் தவம் கிடக்கிறார்கள். இந்த ஆசைக்கு இந்தியர்களும் விலக்கு அல்ல.
ஒவ்வோர் ஆண்டு இறுதியிலும் கின்னஸ் அமைப்பு வரும் ஆண்டுக்கான கின்னஸ் புத்தகங்களை வெளியிடுவது வாடிக்கை. 2020-ம் ஆண்டுக்கான கின்னஸ் சாதனைப் புத்தகத்தை கின்னஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் புத்தகத்தில் இந்த முறை அதிகபட்சமாக 80 இந்தியர்கள் இடம்பிடித்து அசத்தியுள்ளார்கள். அந்த வகையில் இந்தப் பட்டியலில் இடம்பெற்ற சில இந்திய சாகசக்காரர்களின் சாதனைகளைப் பார்ப்போம்.
இரும்புக் கை ‘மாயாவி’
இரும்புக் கரம் கொண்டவர் எனப் பெயர் பெற்றவர் கேரளத்தைச் சேர்ந்த அபிஷ் பி டொமினிக். இவர் 2017-ம் ஆண்டில் ஒரே நிமிடத்தில் 122 தேங்காய்களைத் தனது கைகளால் உடைத்துத் தூள் கிளப்பினார். இவருடைய சாதனையைப் பார்த்து கின்னஸ் அமைப்பு மிரண்டுபோனது. கடந்த 2 ஆண்டுகளாக டொமினிக்கின் இந்த சாதனையை முறியடிக்க ஒருவரும் வரவில்லை.
ஆ... காட்டு
சிலரின் சாகசத்தைப் பார்த்தாலே மெய்மறந்து வாயைப் பிளந்துவிடுவோம். தமிழகத்தில் சேலத்தைச் சேர்ந்த கராத்தே நடராஜன் என்பவர் வாயைப் பிளந்து காட்டி கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். அதுவும் சாதாரணமாக அல்ல, 650 ஸ்ட்ராக்களைக் கைகளின் உதவி இல்லாமல் தன்னுடைய வாயில் அடைத்து இந்தத் துணிகர சாதனையை அரங்கேற்றினார்.
மாத்தி யோசி
ரூபிக் கியூப்புகளைச் சரியாகச் சேர்ப்பது எவ்வளவு கஷ்டம் என்று அதை சேர்த்துப் பார்ப்பவர்களுக்குத் தெரியும். ஆனால், சென்னையைச் சேர்ந்த பி.கே. ஆறுமுகம் இதை ஊதித் தள்ளிவிடுகிறார். மெர்சலாக சைக்கிளை ஒட்டிக்கொண்டே 1,010 ரூபிக் கியூப்களைச் சேர்த்துள்ளார். இவரைப் போலவே மும்பையைச் சேர்ந்த நிகில், ‘காஸ்டர் போர்’டில் சென்றுகொண்டே 151 ரூபிக் கியூப்களைச் சேர்த்துள்ளார். இந்தப் பாணியில் ரூபிக் கியூப்களைப் பலர் சேர்க்கிறார்கள். ஆனால், வித்தியாசமான முறையில் மேற்கொண்டதால்தான் இவர்கள் சாதிக்க முடிந்தது.
ஓரம் போ...
ஒரு மோட்டார் பைக்கில் எத்தனை பேர் செல்ல முடியும்? மூன்று பேர் போனாலே போலீஸ் பிடித்துக்கொள்ளும். ஆனால், சாதனைக்காக ஒரு மோட்டார் சைக்கிளில் 58 பேர் பயணித்து பிரம்மாண்டமான சாதனையை அரங்கேற்றிக் காட்டினார்கள் இந்திய ராணுவத்தினர்.
கடந்த 2017-ம் ஆண்டில் இந்த அரிய சாதனையை அவர்கள் படைத்துக் காட்டினார்கள். இதில் குறிப்பிடும்படியான விஷயம் என்னவென்றால், 58 பேருமே ஹெல்மெட் அணிந்திருந்ததுதான்.
ஆடிய ஆட்டமென்ன..
கதக் நடன அசைவுகளை ஆடுவது எளிதான காரியமல்ல. அந்த நடனத்தில் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அவர், டெல்லியைச் சேர்ந்த கதக் நடனக் கலைஞரான விகாஷ் குமார். ஒரு நிமிடத்தில் பம்பரம் போல் சுழன்று 120 கதக் நடன அசைவுகளைச் செய்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் கம்பீரமாக இடம்பிடித்துள்ளார் இவர்.
கூந்தல் உள்ள சீமாட்டி
முடியைக் குள்ளமாக வெட்டிக்கொள்வது இன்றைய இளம் பெண்களின் ஃபேஷன். ஆனால், தரையில் புரளும் அளவுக்கு முடி வளர்க்க விரும்பும் பெண்களும் இருக்கவே செய்கிறார்கள். குஜராத்தைச் சேர்ந்த 16 வயதான நீலான்ஷி அந்த ரகம்தான். இவர் தனது தலைமுடியை ஐந்து அடிக்கு வளர்த்துள்ளார். முடியை விரித்துவிட்டால் ஏழு அங்குலத்துக்கு விரிந்து பிரமிக்கவைக்கிறது. அதனால், உலகிலேயே நீளமான கூந்தல் உள்ள பெண் என்ற சிறப்பை கின்னஸ் அமைப்பு நீலான்ஷிக்குக் கொடுத்துள்ளது. இவருடைய சாதனையை யாராவது மு(டி)றியடிக்க முடியுமா?
இவர்களைப் போல் இன்னும் பல இந்தியர்கள் செய்த சாதனைகள் இந்தப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளன. உங்களுக்கும் இதுபோல சாதனை படைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால், முயன்று பாருங்களேன்!
- ரேணுகா