Published : 18 Nov 2019 01:17 PM
Last Updated : 18 Nov 2019 01:17 PM

அரசின் கடைசி துருப்பு சீட்டு?

இந்தியா பொருளாதார மந்த நிலையிலிருந்து எப்போது மீளும் என்கிற விவாதம்தான் கடந்த சில மாதங்களாக ஊடகங்களில் முக்கிய செய்தியாக இருந்து வருகின்றது. இரண்டாவது காலாண்டில் வாகன விற்பனை தொடர் சரிவு, முக்கிய துறை வளர்ச்சி பாதிப்பு, கட்டுமானம் மற்றும் உட்கட்டமைப்பில் குறைந்துபோன முதலீடுகள் ஆகிய காரணங்கள் பொருளாதார வளர்ச்சியை வெகுவாக குறைத்துள்ளது.

சமீபத்தில் எஸ்பிஐ அதன் ஆய்வறிக்கையில் நாட்டின் மொத்த உள்நாட்டு வளர்ச்சி (ஜிடிபி) நடப்பு நிதி ஆண்டில் 5 சதவீதமாக இருக்கும் என்று கணிக் கிறது. ஆராய்ச்சி அறிக்கை ஏற்கெனவே இதை 6.1% சதவீதமாக இருக்கும் என்று கணித்திருந்த நிலையில், அதை 5% ஆக குறைத்துள்ளது சற்றே கவனிக்க வேண்டிய விஷயம். பொதுவாக நுகர்வு அதிகரிக்கும்போது தேவைகள் பெருகும்; உற்பத்தி அதிகரிக்கும்; இதனால் பொருளாதார வளர்ச்சி சக்கரம் வேகமாக சுழலும். தற்போது உள்ள சூழ்நிலையில் தனியார் மற்றும் அரசு முதலீடுகள் உடனடியாக ஏற்பட்டு நுகர்வு அதிகரித்து மந்தநிலை போகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அரசின் தொடர் முயற்சியாக வங்கித் துறை சீரமைப்பு, ஜிஎஸ்டி அமலாக்கம், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான சலுகைகள், கம்பெனி வரி குறைத்தல், ஏற்றுமதி ஊக்கங்கள் போன்றவை வரவேற்கத்தக்கது. இருப்பினும், தற்போதைக்கு சந்தையில் இவை எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. எனவே, தனிநபர் வருமான வரியைக் குறைக்கும் பட்சத்தில் நுகர்வு உடனடியாக அதிகரிக்கும் என்பது பெரும்பாலானோரின் கருத்தாக வெளிப்படுகிறது.

அமெரிக்காவின் ஆர்தர் லேஃபர்(Arthur Lafer) என்கிற பொருளாதார மேதையின் அறிவுரைப்படி, 1980-களில் ரீகன் அதிபராக இருக்கும்போது தனிநபர் வரிகளை வெகுவாகக் குறைத்து அதன் மூலம் அமெரிக்காவில் அப்போது இருந்த மந்த நிலை நீங்கி ஏற்பட்ட வளர்ச்சி உலக பிரசித்தி பெற்றது.

நேரடி மற்றும் மறைமுக வரிவசூல் கடந்த சில மாதங்களாகவே மறைமுக வரியான ஜிஎஸ்டி வரி வசூல் மாத இலக்கான ஒரு லட்சம் கோடியை அடைய முடியாமல் திண்டாடி வருகிறது. இதனால் ஆண்டு இலக்கை அடைய முடியாததுடன் மாநிலங்களின் பங்கைக் கொடுப்பதிலும் சுணக்கம் ஏற்படுகிறது. 2019 -20 ஆம் நிதியாண்டு மத்திய அரசின் நேரடி வரி வருவாய் இலக்கான ரூ.13.35 லட்சம் கோடியில் சுமார் ரூ.5.5 லட்சம் கோடி தான் செப்டம்பர் மாதம் வரை வசூலாகியுள்ளது.

நிதிப் பற்றாக்குறை காரணமாக அரசு ஏற்கெனவே திட்டமிட்ட செலவுகளையும், முதலீடுகளையும், நலத்திட்டங்களையும் செய்ய முடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் கூடுதல் வருவாய் ஈட்டுதல் அரசுக்கு மிக முக்கியமான கடமையாகிறது. கருப்புப் பணத்தை மீட்கும் முயற்சியில் இந்த அரசு ஆரம்ப முதலே செயல்பட்டு வருவதால் தாமாக முன்வந்து வருமான வரி செலுத்தும் பொது மன்னிப்பு திட்டத்தை (Amnesty scheme) அறிவிக்க வாய்ப்பிருக்கிறது.

தங்க மன்னிப்பு திட்டம்

பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு தங்க மன்னிப்பு திட்டம் குறித்த தகவல் ஒன்று சமீபத்தில் வந்தது. கணக்கில் வராத தங்கத்துக்கு வரி செலுத்தி சரி செய்து கொள்ளும் திட்டம் ஒன்று இருப்பதாக தகவல்கள் கசிந்தன. ரசீது இல்லாமல் இருக்கும் தங்கம் கருப்பு பணத்தில் வாங்கப்பட்டதாக கருதி அதன் மதிப்பில் குறிப்பிட்ட வரியை செலுத்தும் பட்சத்தில் மன்னிப்பு திட்டத்தில் அடங்கும் என்று கூறப்பட்டது. குறிப்பிட்ட அளவுக்கு மேல் தங்கம் வைத்திருப்பவர்கள் இந்தத் திட்டத்தை பயன்படுத்தி பொது மன்னிப்பின்கீழ் தண்டனையில் இருந்து விடுபடலாம் என்று கூறப்பட்டது. ஆனால் மத்திய அரசு இதுபோன்ற திட்டம் எதுவும் இல்லை என்று உறுதிபட அறிவித்துள்ளது.

இந்தியாவும் தங்கமும்

மற்ற நாடுகளில் தங்கம், வைரம், பிளாட்டினம் போன்ற உயர்மதிப்பு உலோகங்கள் அதன் மதிப்புக்காகவும் சேமிப்புக்காகவும் முதலீடு செய்யப்படுகிறது. ஆனால் இந்தியாவில் தாலிக்கு தங்கம், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் ஆபரண அன்பளிப்பு, பண்டிகை காலங்களில் தங்கம் வாங்குதல் என்று நம் பாரம்பரியம், கலாசாரம் மற்றும் வாழ்க்கை முறையோடு ஒன்றிக்காணப்படுகிறது. இந்தியாவில் ஒரு சாமானியனின் கடைசி காப்பரணாக தங்கம் விளங்குகிறது. பழங்காலம் தொட்டு தங்கம் ஒரு இயற்கையான சேமிப்பு சொத்தாக கருதப்பட்டு வருகிறது.

வருமான வரி சோதனை

இந்தியாவில் வாழும் தனிநபர், வரி செலுத்த அவசியம் இல்லாத வரம்புக்குள் தன்னிடம் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என வருமான வரித்துறை வரம்பு நிர்ணயித்துள்ளது. அதன்படி திருமணமான பெண்கள் அதிகபட்சமாக 500 கிராம் தங்கமும், மணமாகாத பெண்கள் 250 கிராம் தங்கமும் வைத்திருக்கலாம். ஆண்கள் 100 கிராம் வரை தங்கம் வைத்திருக்கலாம். வருமான வரித்துறை சோதனையின்போது கணக்கில் காட்டாத, வரிசெலுத்தாத தங்க இருப்பு கண்டுபிடிக்கப்பட்டால், அந்தக் கூடுதல் தங்கத்துக்கு வரி விதிக்கப்படும். இதன் மூலம் மத்திய அரசும் குறிப்பிட்ட அளவு தங்கம் தேவையானதுதான் என நினைப்பதோடு, இந்தியர்களுக்கு தங்கம் இன்றியமையாத முதலீடு என்பதையும் உணர்த்துகிறது.

ரசீது இல்லாமல் இருக்கும் தங்கம் கணக்கில் காட்டப்படாத சொத்தாகக் கருதப்பட்டு வரிசெலுத்த வேண்டும் என்பது போன்ற புதிய சட்டங்கள் மக்களுக்கு அரசின் மேல் அவநம்பிக்கை மற்றும் வெறுப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கணக்கில் காட்டப்படாத தங்கம் இருக்கிறது என்று தெரிந்தாலும் இது போன்ற திட்டத்தை சரியான முறையில் வரையறுத்து, அனுபவபூர்வமான வகையில் செயல்படுவது மிக அவசியம். ஏற்கெனவே உள்ள பண மதிப்பு நீக்க அனுபவங்களை வைத்து புதிய திட்டத்திற்கு வியூகம் அமைக்கும் போது உரிய பலன் கிடைக்கும்.

வருமான வரி பொதுமன்னிப்பு திட்டங்கள் கருப்பு பணத்தை வெளிக்கொண்டு வரவும் வரி கட்டும் வாய்ப்பை பயன்படுத்த தவறியவர்களுக்காகவும் இந்தியாவில் பலமுறை தாமாக முன்வந்து வரி செலுத்தும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமானவை:

1951 VDS தியாகி திட்டம், 1965 இரட்டை வரி செலுத்தும் திட்டம், 1975 VDS திட்டம், 1985 பொதுமன்னிப்பு திட்டம், 1997 VDIS திட்டம்: இத்திட்டத்தில் ஏராளமானோர் தங்களது கணக்கில் காட்டப்படாத சொத்தின் மீது வரியை செலுத்தி வாய்ப்பை பயன்படுத்தினர். ஆனால் இந்த திட்டத்தின் குறையாக கருதப்படுவது பலர் தங்களது தங்கம், வைரம் போன்றவற்றின் வாங்கிய விலையை உபயோகித்து திட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்தி 6% மட்டுமே வரி வரி செலுத்தினர் என்பதுதான்.

இதையடுத்து 2015-ல்வெளிநாட்டு கருப்புபண மீட்புத் திட்டமும், 2016-ல் IDS வருமானம் அறிவிக்கும் திட்டமும் கொண்டுவரப்பட்டன. 2016 வருமானம் அறிவிப்பு திட்டத்தின் மூலம் அரசு ரூ.65 ஆயிரம் கோடி அளவிலான சொத்துகளை வரி நடைமுறைக்குள் கொண்டுவந்தது. தண்டனைக்கு ஆளாவோம் என்று பயந்து பெரும்பாலானோர் தங்களின் மறைக்கப்பட்ட வருமானத்தைத் தெரிவிக்காமல் இருந்துவருகின்றனர். இதுபோன்ற பொது மன்னிப்பு திட்டத்தின்கீழ் இவர்கள் துணிந்து தங்களின் வருமானத்தைப் பதிவு செய்வார்கள் என்று அரசு எதிர்பார்க்கிறது.

அதேசமயம், இத்தகைய பொதுமன்னிப்பு திட்டங்கள் சரியாக வரி செலுத்திக்கொண்டு இருப்பவர்களை ஏளனம் செய்வதாக சிலர் நீதிமன்றத்தை நாடினர். ஆனால், ஏதோ ஒரு காரணத்தினால் முன்னாளில் வரியை செலுத்தாமல் கருப்பு சொத்துக்கான வரி, வட்டி மற்றும் அபராதம் ஆகியவற்றை அதிக அளவில் செலுத்திதண்டனைக்கு ஆளாகாமல் இருக்கும் வாய்ப்பாக இருப்பதால் இத்தகைய திட்டங்கள் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்படுகின்றன. இதில்தங்கம், ரியல் எஸ்டேட் ஆகிய சொத்துகளும் அடக்கம்.

இத்தகைய வருமானவரி பொதுமன்னிப்பு திட்டம் இந்தியாவில் மட்டுமல்ல மற்ற நாடுகளிலும் பல முறை அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிஅடைந்துள்ளது. உதாரணமாக ஆஸ்திரேலியா பெல்ஜியம், கனடா, ஜெர்மனி, கிரீஸ், பாகிஸ்தான் , இத்தாலி அமெரிக்கா உட்பட்ட அனைத்து நாடுகளும் தாமாக முன்வந்து வரி செலுத்தும் பொதுமன்னிப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளனர்.

வரி செலுத்துவோரின் எண்ணிக்கை எந்த அளவுக்கு அதிகரிக்கிறதோ, அந்த அளவுக்குவரி குறைப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பொருளாதார மந்தநிலையை சரிசெய்ய தற்போது அரசுக்கு இருக்கும் ஒரே வழி, தனிநபர் வருமான வரி குறைப்பு ஒன்றுதான். ஆனால், ஏற்கெனவே வருவாய் இழப்பைச் சந்தித்துவரும் அரசு இதை எப்படி செய்யப் போகிறது என்பதுதான் புரியாமல் இருக்கிறது.

அதற்கான தீர்வாகவே வருமானம் அறிவிக்கும் திட்டம் பார்க்கப்படுகிறது. பொருளாதார அதிரடி அறிவிப்புகளுக்கு இந்திய மக்கள் ஏற்கெனவே பழக்கப்பட்டு விட்டதால், வரும் நாட்களில் வருமானவரி சம்பந்தப்பட்ட அதிரடி திட்டங்களுக்கு ஒத்துழைக்க தயாராகவே இருப்பார்கள். வரும் நாட்கள் வளர்ச்சி மிகுந்த நாட்களே என்பதில் உறுதியாய் இருப்போம்.

- ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்,
karthikeyan.auditor@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x