Published : 18 Nov 2019 01:17 PM
Last Updated : 18 Nov 2019 01:17 PM

நவீனத்தின் நாயகன் 01: கனவு வியாபாரி

2040 – ஆம் ஆண்டு. உலக வீதிகளில் பெட்ரோல், டீசலில் ஓடும் கார்கள், பஸ்கள், லாரிகள், வேன்கள் ஒன்று கூட இல்லை. பெட்ரோல் பம்ப்கள் இல்லை. மாசு கணிசமாகக் குறைந்து, ஆரோக்கியம் சுவாசக் காற்று.

தெருக்களெல்லாம் இரவைப் பகலாக்கும் ஒளிவெள்ளம். குடிசைகளில் கூட ஏர் கண்டிஷனர்கள், வகை வகையான மின் கருவிகள். எல்லா அரசுகளும் மின்சக்தியை இலவசமாகத் தருகின்றன. தமிழகத்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் தட்டுப்பாடே இல்லாத மின்சாரம். மழை பொய்த்தாலும் மின்வெட்டு இல்லை.

சென்னை கோயம்பேடு, மதுரை மாட்டுத்தாவணி, திருச்சி சென்ட்ரல், சேலம் எம்.ஜி.ஆர், தஞ்சாவூர் நியூ, நாகர்கோவில் கிறிஸ்டோபர் ஆகிய பஸ் நிலையங்கள் இப்போது ராக்கெட் போக்குவரத்து நிலையங்களாகிவிட்டன. ஏராளமானோர் செவ்வாய் கிரகத்துக்குக்குடி பெயர்ந்துவிட்டார்கள். அங்கே நடக்கும் திருமணங்கள், பிறந்த நாள் விழாக்கள், காது குத்தல், பூப்பு நீராட்டு வைபவங்களுக்கு உற்றமும், சுற்றமுமாய்ப் பூமிக்காரர்களின் பயணங்கள்.

சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் தங்கள் நெல்லை மாவட்டக் கிராமங்களிலிருந்து தினமும் சென்னைக்கு வந்து வேலை பார்த்துவிட்டு ஊருக்குத் திரும்பிப்போய்க் குடும்பத்தோடு ஜாலியாக நேரம் செலவிடுகிறார்கள். அவர்கள் பயன்படுத்துவது, மணிக்கு 700 மைல் வேகத்தோடு செயல்படும் ஹைப்பர்லூப் (Hyperloop) என்னும் போக்குவரத்து வசதி.

இவை, மாயாஜாலக் கதைகளா அல்லது மரை கழன்ற ஒருவரின் மயக்கப் பயணங்களா? கடந்த 20 வருடங்களாக, ஈலான் மஸ்க் (Elon Musk) ஒவ்வொரு பிசினஸைத் தொடங்கும்போதும் உலகம் கை கொட்டிச் சிரித்து வருகிறது. மஸ்க்குக்கு மட்டுமல்ல, காலத்தை முந்தைய முயற்சிகள் செய்யும் முன்னோடிகள் எல்லோருக்கும், மக்களின் முதல் மரியாதை இதுதான்.

``உலகின் முதல் தத்துவஞானி” என்று போற்றப்படுபவர் கிரேக்கத்து சாக்ரட்டீஸ்.

``உன்னையே நீ அறிவாய். இந்த உபதேசத்தின் உண்மைகளை அறிவதற்குத்தான், என் உயிரினும் இனியவர்களே, உங்களை அழைக்கிறேன். அறிவு, அகிலத்தின் எந்த மூலையில் இருந்தாலும், அதைத் தேடிப் பெறுவதற்காக உங்களை அழைக்கிறேன்'' என்று ஏதென்ஸ் நகரத்து இளைஞர்களுக்குச் சிந்திக்கக் கற்றுக்கொடுத்தவருக்கு அரசு கொடுத்த பரிசு என்ன தெரியுமா? ஒரு கோப்பை விஷம்!

கலீலியோ. 1564 முதல் 1642 வரை வாழ்ந்த மா மேதை. வானியல், இயற்பியல், கணிதம், எஞ்சினீரிங் ஆகிய பல துறைகளில் ஜொலித்த சகலகலா வல்லவர். பூமியை மையமாக வைத்துச் சூரியனும், பிற கிரகங்களும் சுழல்கின்றன என்பது அன்றைய மத நம்பிக்கை. சூரியன் தான் மையப்புள்ளி என்னும் கோட்பாட்டைக் கலீலியோ நிரூபித்தார். கத்தோலிக்கத் திருச்சபை அவரை வீட்டுக் காவலில் வைத்தது. அவை அவருடைய இறுதி நாட்களாயின.

ஹென்றி ஃபோர்ட் (1863 – 1947) அனுபவமும் இப்படித்தான். தாமஸ் ஆல்வா எடிசனின் கம்பெனியில் வேலை பார்த்தார். வேலை முடிந்து வீடு திரும்பியவுடன், வெளி உலகை மறப்பார். கார், கார், கார் தான் உயிர்மூச்சு. ``நேரத்தை வீணடிக்கிறாய்” என்று அப்பாவும், ``லைஃபை என்ஜாய் பண்ணத் தெரியாதவன்” என்று நண்பர்களும் கேலி செய்தார்கள். ஹென்றி காதில் போட்டுக்கொள்ளவேயில்லை. இத்தனை முயற்சிக்குப் பின், பெட்ரோலால் இயங்கும் காரை கண்டுபிடித்தார். மாமேதை எடிசன் கூட இந்தக் கண்டுபிடிப்பை ஆதரிக்கவில்லை. முதலீடு செய்ய மறுத்துவிட்டார்.

காந்திஜிக்கே இந்த நிலை வந்ததே? சகல வல்லமை கொண்ட பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக அவர் அறவழிப் போராட்டத்தைக் கைகளில் எடுத்தபோது, வின்ஸ்டன் சர்ச்சிலின் அமில வார்த்தைகள், ``இந்த அரை நிர்வாணப் பக்கிரியின் கொள்கைகள் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டும், நசுக்கப்பட வேண்டும்.”

இத்தகைய மன வலிகள் பலவற்றை அனுபவித்தவர் ஆப்பிள் கம்பெனியின் ஸ்டீவ் ஜாப்ஸ். இதனால்தானோ, என்னமோ, 1997 – இல் அவர் ஆப்பிள் கம்ப்யூட்டர்களுக்கு வெளியிட்ட விளம்பரம், இருபதாம் நூற்றாண்டின் பதினேழு பல்வேறு துறை முன்னோடிகளுக்கு சல்யூட் அடிக்கிறது. இவர்களில் சிலர்: காந்திஜி, (அமெரிக்காவின் கறுப்பர் இனப் போராளி) மார்ட்டின் லூதர் கிங், தாமஸ் ஆல்வா எடிசன், (விஞ்ஞான மேதை) ஆல்பர்ட் ஐன்ஸ்டின், (குத்துச்சண்டை வீரர்) முகம்மது அலி, (சினிமா இயக்குநர்) ஆல்ஃப்ரெட் ஹிட்ச்ஹாக், (ஓவியர்) பிக்காஸோ, (ஆகாய விமானம் கண்டுபிடித்த) ஃப்ராங்க் லாய்ட் ரைட்.

“இந்த விளம்பரம் கிறுக்கர்களுக்காக, சமுதாயத்தோடு ஒத்துப்போகாதவர்களுக்காக, கலகக்காரர்களுக்காக, விஷமக்காரர்களுக்காக, உலகின் எந்த நியதியோடும் பொருந்தாதவர்களுக்காக…. வித்தியாசக் கண்ணோட்டம் கொண்டவர்களுக்காக. இவர்கள் தங்களைக் கட்டுப்படுத்தும் எந்தச் சட்டத்தையும் விரும்பாதவர்கள். இவர்களை நீங்கள் மேற்கோள் காட்டலாம், எதிர்த்து வாதாடலாம், போற்றலாம், தூற்றலாம். நீங்கள் செய்யமுடியாதது ஒன்றே ஒன்றுதான் – இவர்களைப் புறக்கணிப்பது. ஏனென்றால், இவர்கள் உலகை மாற்றுகிறார்கள், மனித சமுதாயத்தை முன்னேற்றும் உந்துசக்திகளாக இருக்கிறார்கள்.

(இந்த ஒரு நிமிட விளம்பரத்தைப் பார்க்க இங்கே கிளிக்கவும், https://www.youtube.com/watch?v=cFEarBzelBs) இத்தகைய ஒரு கிறுக்கர், சமுதாயத்தோடு ஒத்துப்போகாதவர், கலகக்காரர், விஷமக்காரர், உலகின் எந்த நியதியோடும் பொருந்தாதவர், வித்தியாசக் கண்ணோட்டம் கொண்டவர் ஈலான் மஸ்க்.

பிசினஸ்மேன்கள் வரிசையில், ஸ்டீவ் ஜாப்ஸூம், மஸ்க் போலவே வித்தியாசமானவர். ஆனால், இருவருக்கும் ஒரு முக்கிய வித்தியாசம். ஜாப்ஸ் செல்போன் பயன்படுத்தலில் புதுமைகள் கொண்டுவந்து, உலகை டிஜிட்டல் மயமாக மாற்றி, அனைவர் வாழ்க்கையையும் சுகானுபவமாக்கினார். வருடா வருடம் கோடிக்கணக்கில் விற்பனையாகும் ஐ ஃபோன்கள் சுற்றுப்புறச் சூழலை எப்படிப் பாதிக்கும், பழைய மாடல்களை எப்படிச் சுழற்சி செய்யவேண்டும் என்று அவர் சிந்தித்ததே கிடையாது.

மஸ்க்? இவர் உயிர்மூச்சே, சுற்றுப்புறச் சூழல்தான்; கம்பெனி லாபத்துக்குக் கடைசி இடம். பெட்ரோல் டீசல் இல்லாமல் முழுக்க முழுக்க பேட்டரியால் ஓடும் அவருடைய டெஸ்லா (Tesla) கார்களின் எண்ணிக்கை 7,20,000–க்கும் அதிகம். இன்னொரு ஆச்சரியம், ஓட்டுநர் இல்லாமல் செயற்கை நுண்ணறிவால் (Artificial Intelligence) இந்தக் கார்களை ரோடுகளில் ஓட்டலாம். (இந்தியாவில் இப்போது ஒரு டெஸ்லா கார் கூட இல்லை. 2015 – ஆம் ஆண்டு பிரதமர் மோடி டெஸ்லாவின் அமெரிக்க ஃபாக்டரிக்கு விசிட் அடித்தார். மஸ்க்குடன் பேச்சுவார்த்தை. இந்தியாவில் தொழிற்சாலை தொடங்குமாறு கேட்டுக்கொண்டார். 125 சதவிகித இறக்குமதி வரி, காரில் 30 சதவிகிதம் இந்திய பாகங்களைப் பயன்படுத்தவேண்டும் என்னும் நிபந்தனைகளால், மஸ்க் தயங்குகிறார்.)

மஸ்க்கின் Solar City நிறுவனம் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் சூரியத் தகடுகள் (Solar Panels) உற்பத்தி செய்கிறது. சுமார் 35 சதவிகித அமெரிக்கக் குடும்பங்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்துகிறார்கள். மஸ்க்கின் SpaceX நிறுவனத்தின் இலக்கு செவ்வாய் கிரகத்தில் மக்களைக் குடியேற்றம் செய்வது. 2010 – இல் தொடங்கிய இந்த நிறுவனம் இதுவரை 82 ராக்கெட்களை வெற்றிகரமாக விண்ணுக்குச் செலுத்தியிருக்கிறார்கள். ராக்கெட்களைத் திரும்பி வரச்செய்து, மறுபடி செலுத்தும் ஒரே நிறுவனம் SpaceX தான்.

பாதாளக் குழாய்கள் போட்டு, 700 மைல் வேகத்தில் பயணிக்கும் ரெயில்களை இயக்குவது ஹைப்பர்லூப் என்னும் ஈலான் மஸ்க்கின் புதிய முயற்சி. ஆரம்ப கால முயற்சிகள் அவர் கனவுகள் பலிக்கும் என்று சொல்கின்றன. மரங்கள் நடுவது, பிளாஸ்டிக்கைத் தவிர்ப்பது, கரிப்புகையைக் குறைப்பது எனக் கம்பெனிகளும், அரசாங்கங்களும் மேல்பூச்சு வேலைகள் செய்யும்போது, மஸ்க் பிரச்சினைகளின் ஆணிவேருக்கே போகிறார்.

பெட்ரோல், டீசல் போன்ற இயற்கை வளங்களைப் பாதுகாப்பது, சூரிய சக்தியைப் பயன்படுத்துவது, மக்கள் தொகைப் பெருக்கத்தால் பூமியில் வரும் தட்டுப்பாடுகளைத் தீர்க்கச் செவ்வாய் கிரகத்தில் குடியேற்றுவது, போக்குவரத்து நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைப்பது என பிசினஸைச் சொந்த லாபம் பார்க்கும் கருவியாக அல்லாமல், சமுதாயப் பிரச்சினைகள் தீர்க்கும் ஆயுதமாகப் பார்க்கிறார். இவர் சொல்லும் தீர்வுகள் யாருக்குமே தோன்றாத புத்தம் புதிய பாதைகள். பிசினஸ் உலகுக்கு மஸ்க் ஒரு அதிசயப் பிறவி.

தென்னாப்பிரிக்காவில் பிறந்து, கனடாவுக்கு ஓடிப்போய், இன்று அமெரிக்காவில் வாழும் இந்த 48 வயது மனிதரின் வாழ்க்கைப் பாதை ராஜபாட்டையல்ல. பெற்றோரின் விவாகரத்து, தந்தையின் கொடுமை, சக மாணவர்களின் வன்முறைத் தாக்குதல், தன் சொந்தக் கம்பெனிகளிலிருந்தே துரத்தப்படுதல், மகன் மரணம், இரண்டு திருமணத் தோல்விகள், உயிரைக் கேள்விக்குறியாக்கி ஆறு மாதங்கள் படுக்கையில் தள்ளிய மலேரியா நோய், உலகின் பரிகாசம் எனப் பல நெருப்பாறுகளை நீந்திவந்த பயணம்.

ஐ பாட், ஐ ஃபோன் ஆகியவற்றை உருவாக்குவதில் ஸ்டீவ் ஜாப்ஸோடு தோள் கொடுத்து உழைத்த டோனி ஃபெடல் (Tony Fadell) சொல்கிறார், ``ஈலான் மஸ்க்கின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தபின், சாதிக்கும் வெறி வராதவர்கள் யாருமே இருக்கமுடியாது.”

இதோ, உங்களுக்கும் அந்த உற்சாக டானிக்!

(புதியதோர் உலகம் செய்வோம்!)
- எஸ்.எல்.வி. மூர்த்தி
slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x